சுஜாதா பற்றி…

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெயமோகன்,

இந்த இணைப்பை இப்போதுதான் வாசித்தேன். http://www.saravanakumaran.com/2010/09/blog-post_04.html . சுஜாதாவைப்பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் சுஜாதா இருந்தபோதே வைத்திருக்கலாம் என்று இணையத்தில் அவ்வப்போது வாசிக்கிறேன்.

ஆரம்பத்தில் நீங்கள் சுஜாதா இருந்தபோது அவரை வணிக எழுத்தாளர் என்று திட்டிவிட்டு இறந்ததுமே இலக்கியமேதை என்று கொண்டாடினீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உலவியது. சாரு நிவேதிதா அவ்வாறுதான் செய்தார் என்பதற்கு என்னிடம் பல பக்கங்களுக்கு ஆதாரம் உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணன் கூட ஒரு சொல்லும் சொன்னதில்லை. இப்போது நீங்கள் சுஜாதாவை அவர் உயிரோடு இருந்தபோது கொண்டாடிவிட்டு இப்போது திட்டுகிறீர்கள், இதை அப்போதே செய்திருக்கலாமே என்கிறார்கள்

உண்மையிலேயே குழம்பிப்போய் கேட்கிறேன். நீங்கள் அவரிடம் கொண்டிருந்த உறவு என்ன?

சண்முகம்,மதுரை

அன்புள்ள சண்முகம்,

எப்போதுமே சிக்கலான கேள்விகளை நீங்களே கேட்கிறீர்கள். நல்லது.

நீங்கள் சொன்ன வாதங்கள் அனைத்துக்கும் உள்ள விளக்கம் ஒன்றுதான். இலக்கியவிமர்சனம் என்ற ஒன்று இருப்பதே நம்முடைய மக்களுக்கு தெரியவில்லை. இதைப்பற்றி நான் ஏற்கனவே எழுதியபோது ஒரு நண்பர் எழுதியிருந்தார், தமிழகத்தில் பிளஸ்டு பாடம்வரை ஒரு இலக்கிய விமர்சனக் கட்டுரைகூட பாடமாக இல்லை என்று. அதாவது இலக்கியவிமர்சனம் என்ற ஒரு துறை இருப்பதே தெரியாமல் நம்முடைய மாணவர்கள் பிளஸ் டூ வரை படிக்கிறார்கள். அதன்பின் அவர்கள் முறைப்படி எதையும் கற்பதில்லை. அனேகமாக நேரடியாக இணையம்.

இந்தப்பின்னணியில் பார்க்கும்போது அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்றை பிடித்திருக்கிறது – பிடிக்கவில்லை என்ற இருமுனைகளில் நின்றே அவர்களால் பார்க்கமுடிகிறது. பிடித்திருந்தால் பிடித்ததற்காக கடைசிவரை வாதாடுவதும் பிடிக்காததை ஒற்றை வரியில் நிராகரிப்பதும் அவர்களின் இயல்பாக இருக்கிறது. நிறைகுறை நோக்கும் பார்வையே இருப்பதில்லை.

மிக எளிமையாகப்பார்த்தால் இலக்கிய விமர்சனத்தின் அடிப்படைகள் மூன்றுதான். 1. படைப்பின், படைப்பாளியின் நிறைகுறைகளை ஆராய்ந்து முன்வைத்தல் 2. இலக்கிய மரபில் படைப்பின் இடத்தை தீர்மானித்தல் 3. மேலும் மேலும் சிறந்த படைப்புக்கான தேடலை தக்கவைத்துக்கொள்ளுதல்.

இந்த அடிப்படையிலேயே என்னுடைய எல்லா இலக்கிய விமர்சனங்களையும் செய்திருக்கிறேன். நான் தமிழின் உச்சகட்ட சாதனையாளராக நினைக்கும் அசோகமித்திரனின் படைப்புக்களைப்பற்றிய என் கட்டுரைகளை வாசித்தாலே இது புரியும். அவரது ஆக்கங்களின் உச்சங்கள், அவரது சாதனைகள் ஆகியவற்றுடன் அவரது பலவீனங்கள், அவரது எல்லைகள் ஆகியவற்றையும் விவாதித்து அவரது இலக்கிய இடத்தை வரையறை செய்து அவரில் இருந்து மேலே செல்லும் சாத்தியத்தை நோக்கி பேசும் கட்டுரை அது. அதுவே என் பாணி. பெரும்பாலும் எல்லா இலக்கிய விமர்சகர்களும் செய்வது அதையே.

இலக்கியவிமர்சனம் என்ற துறையில் அறிமுகமில்லாதவர்கள் குறைகள் சொல்லப்பட்டதுமே அதை ஒரு ‘தாக்குதல்’ என்றும் ‘வசை’ என்றும் எடுத்துக்கொள்கிறார்கள். மனக்கொந்தளிப்பை அடைகிறார்கள். ஒப்புநோக்க தமிழின் இலக்கிய விமர்சகர்களில் நான் தான் மென்மையாகவும் சமநிலையுடனும் பேசுகிறேன். காரணம் இப்போது நான் பலதரப்பட்ட வாசகர்களை நோக்கிப் பேசவேண்டியிருக்கிறது. என் முன்னோடிகளான இலக்கிய விமர்சகர்கள், உதாரணமாக வெங்கட் சாமிநாதன், சிறிய ஆனால் தீவிரமான ஒரு சூழலை எதிர்கொண்டு பேசியமையால் கடுமையாகவே தங்கள் தரப்பைச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் சொல்லும் பல அடிப்படைக்கருத்துக்கள் தமிழின் இலக்கிய விமரிசனத்தளத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மிகவிரிவாக பேசப்பட்டுவிட்டவை. ஆனால் பொதுவான வாசகர்கள் அவற்றை பலசமயம் என் மூலம்தான் கேள்விப்படுகிறார்கள். ஆகவேதான் ‘என்னது பட்டுக்கோட்டை பிரபாகர் இலக்கியவாதி இல்லையா? என்ன அநியாயம்!’ என்று கொதிப்படைகிறார்கள். அவர்களில் ஒரு சிறு தரப்பு தொடர்ந்த வாசிப்பு மூலம் மேலே செல்லக்கூடும். அவர்களை எண்ணி நானும் பொறுமையாக மீண்டும் மீண்டும் அடிப்படைகளைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன்.

மலையாளத்தில் எம்.கிருஷ்ணன் நாயர் என்ற இலக்கிய விமர்சகர் பொதுவாசகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக இருந்தார். தன்னை ஓர் இலக்கிய இதழாளர் என்றே அவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஓயாமல் இலக்கியத்தின் அடிபப்டைப்பாடங்களை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். அத்தகைய ஒருவரின் இடைவெளி தமிழில் இப்போது உள்ளது என்று படுகிறது.

சுஜாதாவுக்கு வருகிறேன். வேறு எந்த எழுத்தாளரையும் எப்படி விமரிசிப்பேனோ அதே அளவுகோலையே சுஜாதாவுக்கும் வைத்திருக்கிறேன். என்னுடையது ஒருபக்கம் என் ரசனையை முன்வைக்கும் ரசனை விமர்சனம். என் ரசனை என்பது எனக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியமரபிலும் உள்ள விரிவான வாசிப்பு மூலம் உருவானது என்பதனால் அது இன்றைய இலக்கியத்தை இதுவரையிலான மாபெரும் இலக்கியபாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து அளக்கும் முறையும்கூட. எந்த ஒரு நவீன இலக்கியத்தையும் அளக்கும் அளவுகோல்களை அதுவரையிலான இலக்கியமரபில் உள்ள பேரிலக்கியங்களே உருவாக்குகின்றன.

அதேசமயம் இவை தீர்ப்புகள் அல்ல. எந்த விமர்சனமும் வாசிப்பே. பல்வேறு வாசிப்புகளுக்கு இடையேயான முரணியக்கம் மூலமே ஒரு சமூகம் ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை எப்படி வாசிக்கிறது என்பது தெளிவாகும். என் கருத்துக்களை மறுப்பவர்கள் தங்கள் தரப்பை தங்கள் வாசிப்பின் ஆழம் மூலம் வீச்சு மூலம் நிறுவிக்கொள்ள முயல்வதே சரியாகும்.

சுஜாதா நான் எழுதவந்தபோது இலக்கியச்சூழலில் ஒரு போலியான எழுத்தாளராக, அற்பக் கேளிக்கையாளராக மட்டுமே பார்க்கப்பட்டார். நானறிந்தவரை ஒரு விமர்சகராக அவரது இலக்கிய முக்கியத்துவத்தை நான் தான் முதலில் பேசினேன். நடுத்தர வர்க்கத்தின் சித்திரத்தை முன்வைக்கும் அவரது சிறுகதைகளில் பல முக்கியமானவை என்றும்,அவரது மொழிநடையில் உள்ள இடைவெளிகளும் அவரது சித்தரிப்புகளில் உள்ள புதியபடிமங்களும் முக்கியமான இலக்கியப்பங்களிப்புகளே என்றும் குறிப்பிட்டேன். அதற்காக கடுமையாக விமர்சிக்கவும்பட்டேன்.

அதேசமயம் சுஜாதாவின் எழுத்து பெரும்பாலும் தொழில்நுட்பமே என்றும் ஓர் இலக்கிய ஆக்கத்துக்கு பின்னணியாக உள்ள ஆழமான மன எழுச்சி அவரது மிகப்பெரும்பாலான ஆக்கங்களுக்கு பின்னால் இல்லை என்றும் நான் கருதினேன். விதிவிலக்குகள் மிகமிகச்சிலவே. அவரது நாடகங்கள் சில சிறுகதைகளை மட்டுமே அவ்வாறு என்னால் சொல்லமுடிகிறது. அதை அன்றும் இன்றும் முன்வைத்து வருகிறேன்.

என்னுடைய முதல் சிறுகதை தொகுதி 1992ல் வெளிவந்தபோது என் நடையையும் வடிவையும் தீர்மானிக்கும் முன்னோடிகளாக நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரையே குறிப்பிட்டிருந்தேன். அதேசமயம் சுஜாதாவை ‘கலைஞர் அல்ல என்றாலும்’ என்று சொல்லியிருந்தேன். அவ்வாறு சுஜாதாவை சேர்த்துச் சொன்னதைப்பற்றி அன்று தமிழில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

பின்னர் சுஜாதாவை நேரில் சந்தித்தபோது ‘நீங்க சொல்றது உண்மை,எனக்கு எழுத்திலே இமோஷனல் இன்வால்வ்மெண்ட் இல்லை’ என்றார் அவர். அதையே அவர் சுபமங்களா பேட்டியிலும் சொல்லியிருந்தார். அவரது எழுத்துமுறை அப்படிப்பட்டது.

சுஜாதாமீதான என் விமர்சனங்களையும் அவர் மீதான ஈடுபாட்டையும் இன்றுபோல எப்போதுமே சீராக முன்வைத்தே வருகிறேன். இருபது வருடங்கள் பற்பல பக்கங்கள் எழுதியிருக்கிறேன். என்னுடைய அறிவியல்சிறுகதைகள் நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன்.

சுஜாதாவும் என்னைப்பற்றி எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். இளம் எழுத்தாளனாகிய எனக்கு அவர் அளித்த முக்கியத்துவம் மூலம் கவனம் கிடைத்தது என்பது உண்மை. என்னுடைய ரப்பர், திசைகளின் நடுவே, மண், ஆயிரங்கால் மண்டபம் உட்பட எல்லா நூல்களுக்கும் அவரது அளவுகோல்களின்படி சாதகபாதகங்களை கண்டு விமர்சனம் எழுதியிருக்கிறார், அவை பாராட்டும்தன்மை அதிகமாக கொண்டவை என்பதும் உண்மையே.

நானும் சுஜாதாவும் சமகாலத்தில் வாழ்ந்த இரு படைப்பாளிகள். அவரது வழி வேறு, என்னுடையது வேறு. அவர் மிக அபூர்வமாகவே இலக்கிய ஆக்கங்களுக்காக முயன்றார். இன்று நான் வந்திருக்கும் போக்கில் என் பாதையில் எவ்வகையிலும் அவர் இல்லை என்பதை என் ஆக்கங்கள் எவையேனும் ஒன்றை வாசித்த வாசகர் உணர முடியும். சமகாலப்படைப்பாளி என்ற முறையிலும் எனக்கு முன்னோடியாக அமைந்தவர் என்ற முறையிலும் அவர்மீதான சில கருத்துக்களை பதிவுசெய்கிறேன். முழுமையான விமர்சனம் எழுத இப்போது நோக்கமில்லை. காரணம் அவரை விட முக்கியமானவர்களாக நான் எண்ணும் பல எழுத்தாளர்களைப்பற்றி எழுதும் திட்டத்தையே நான் இன்னமும் முழுமைசெய்யவில்லை. வண்ணதாசன், வண்ணநிலவன் உட்பட பலரைப்பற்றியும் எழுதும் எண்ணம் தாண்டி தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது

ஜெ

http://www.jeyamohan.in/?p=8217 மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்

http://www.jeyamohan.in/?p=7587 சுஜாதாவின் அறிவியல்

http://www.jeyamohan.in/?p=7573 சுஜாதாவின் அந்தரங்கம்

http://www.jeyamohan.in/?p=7505 சுஜாதாவை கைவிட்டது எது?

முந்தைய கட்டுரைவாசிப்புக்காக ஒரு தளம்
அடுத்த கட்டுரைஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை