வெண்முரசும் பண்பாடும்

18

அன்பின் ஜெ எம்.,

வெண்முரசும் தனித்தமிழும் பதிவு பற்றி திரு ஆர். மாணிக்கவாசகம் எழுதியுள்ள கடிதத்தை நானும் வழிமொழிகிறேன்.

பழந் தமிழை தொல் தமிழை அதன் அத்தனை வளமான சொல்லாட்சிகளுடனும்,பண்பாட்டு அடையாளங்களுடனும்  மீட்டுக்கொண்டு வந்து நம் முன் படையலாக்கிக்கொண்டிருக்கும் காரணத்தினாலேயே வெண்முரசை நான் என் சென்னியில் சூடிக்கொள்கிறேன். அதன் கதை ஓட்டம் பாத்திர மனநுட்பங்கள் உள்மடிப்புக்கள் இவற்றிலெல்லாமும் பாவி மனம் பறி போனாலும் வெண்முரசின் தமிழே என்னைப் பரவசச்சிலிர்ப்புக்கு ஆளாக்கி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

கொற்றவை காப்பியத்தில் பதச்சோறாக இருந்த அந்தப்போக்கு இங்கே திகட்டத் திகட்ட உண்டாட்டாக நம்மை முழுக்காட்டி வருகிறது. தொல் தமிழை அதன் வளமைகளோடு இன்றைய தலைமுறைக்குக் கடத்துவதன் வழி என்றோ நம்மில் தொலைந்தும் கலைந்தும் போன மொழி என்ற அடையாளத்தை,மந்திரம் போல் சொல்வன்மையால் மீட்டெடுத்துக்கொண்டுவருகிறது வெண்முரசு.

மதுரை காமராசர் பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு சு வேங்கடராமனுடன் [ அவர்,உங்களுக்கும் நன்கு தெரிந்தவரே,அவரைப்பற்றித் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டதும் உண்டு ] அண்மையில் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் இருவரும் இதையேதான் பகிர்ந்து கொண்டோம்.,’’எப்படிப்பட்ட அருமையான பழந்தமிழ்ச்சொல்வளம்’’ என்றார் அவர்.

இன்றைய நவீன இலக்கிய களத்தில் -அதிலும் தமிழ்நிலத்தில் நிகழாத ஒருகதைப்புலத்தில்- பழந்தமிழை மீட்டெடுத்து அதன் நுட்பங்களை , எழிலார்ந்த சொல்லாட்சிகளை – அவற்றின் அடிப்படையில் உங்கள் படைப்புத் திறனால் கட்டமைக்கப்படும் புதிய சொல்லாட்சிகளையும் [தன்னேற்பு மணம் என்பது போல] சேர்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் காலம் கரைக்காத மகோன்னதப்பணியை வெண்முரசு செய்து வருகிறது.

சங்கத்துக்குப்பின் காலம் காணாமல் அடித்து விட்ட ஒன்றை நீங்கள் தேடித் தேடி அளித்துக்கொண்டிருக்கிறீர்கள்…நான் மட்டும் இப்போது பணியில் இருந்திருந்தால் ஆர்வமுள்ள மாணவக்குழுவையோ ஆய்வாளர்களையோ[ காசுக்கு ஆய்வேடு எழுதி வாங்கும் கூட்டத்தை நான் இங்கே குறிப்பிடவில்லை] ஒருங்கிணைத்து வெண்முரசின் அரிய சொற்களை LEXICON ஆக்கப் பணித்திருப்பேன்,அதற்கு வழிகாட்டி அதன் அடிப்படையில் ஆய்வு செய்ய உதவியும் இருப்பேன்.

நானாக மட்டுமே அதில் ஈடுபட முடியாமல் என் வயதின் தளர்ச்சியும் பிற பணிச்சுமைகளும் என்னைத் தடுக்கின்றன.எனினும் வருங்காலத்தில் எவரேனும் அதைச்செய்யக்கூடும் என்ற ஆழ்ந்த உள்ளார்ந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

எம் ஏ சுசீலா

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வெண்முரசு குறித்த மாணிக்கவாசகம் அவர்களின் கடிதத்தை வாசித்தேன். நானும் அதையே சொல்லவிரும்பியிருந்தேன்

இலக்கியமென்பது ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை அவரே ஏதேனும் வகையில் படைப்பது என்னும் எண்ணம் நம்மிடம் உள்ளது. அது புத்திலக்கியத்தின் ஒரு பகுதி மட்டுமே. புத்தியம் என்னும் எழுத்துவகையில் அதற்கு ஒரு இடமுள்ளது.

இலக்கியமென்பது தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடு மட்டும் அல்ல, ஒரு நிலத்தின் பண்பாட்டின் ஒட்டுமொத்த மானுடநினைவுத்தொகுப்பின் பதிவும் மறுஆக்கமும் எல்லாம் ஆகும். பண்பாட்டு உட்குறிப்புகளினாலேயே எல்லா நல்ல ஆக்கங்களும் அமைகின்றன அந்த உட்குறிப்புகள் மாற்றமடைந்துள்ளவகையும் அவை ஒன்றுடனொன்று கொண்டுள்ள புதிய இணைப்பும்தான் இலக்கியங்களின் அடித்தளமாக அமைகின்றன

வெண்முரசு மகாபாரதத்தை மறுஆக்கம்செய்யும்போது இருநிலைகளில் பண்பாட்டுத்தொகுப்பையும் மறுஆக்கத்தையும் செய்துகொண்டே செல்கிறது. ஒன்று இதன் மொழி. தூயதமிழ். புதியசொல்லாட்சிகளும் பழந்தமிழ் சொல்லாட்சிகளும் உரியமுறையில் இணைந்து எழுகின்றன

இன்னொன்று தொல்தமிழ் பண்பாட்டுமரபுகளின் வேர்களை பழங்குடி மரபிலும் அதற்கப்பாலும் தேடி ஒரு பெரிய வலையாக அதை விளக்கும் போக்கு. எட்டுமங்கலங்கள் போன்றவை எழுந்துவந்துள்ள விதம் ஆச்சரியம் அளிக்கிறது

உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கதைமாந்தரின் உளநிகழ்வுகளும் வாசகர்களைக் கவரலாம். இந்தக் கூறுகளை தனியாக எவரேனும் தொகுப்பது நல்லது. இது ஒரு பெரிய பண்பாட்டு அகநினைவுப்புதுக்கல் என எண்ணுகிறேன்

அ.செண்பகமூர்த்தி

 

மதிப்புமிகு ஜெ,

நான் உங்களுக்கு ஏற்கனவே வெண்முரசின் சொற்கள் என்ற தலைப்பில் மின்னஞ்சல் அனுப்பி அதற்க்கு மறுமொழி பெற்றதுடன் இல்லாமல் என் கோரிக்கையை நீங்கள் ஏற்றதும் நினைவில் அழியா ஒன்று. ஆர். மாணிக்கவாசகம் எழுதிய கடிதமும் எம்.ஏ.சுசீலா எழுதிய கடிதமும் படித்த பிறகே இதை எழுத என் மனம் துடித்தது.

வெண்முரசின் பெரும் சிறப்புகளில் ஒன்று அது வாசகனை தமிழ் சொல்லாச்சிகளுடன் மூழ்கடிப்பது. பெரும்பான்மையான வாசகர்களுக்கு அது செருக்கையும் வாசிப்பின்பத்தின் இனிய வழியைத் திறந்து விடுகிறது என்னையும் சேர்த்து. ஆர். மாணிக்கவாசகம் குறிப்பிட்டது போல வெண்முரசு வளர வளர அது முந்தைய நாவல்களில் இருந்த பிறமொழிச் சொற்களையும் களைந்து முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது. எம்.ஏ.சுசீலா அவர்கள் கையாளப்படும் சொற்களுக்காக மாணவர்களைக்கொண்டு ஆய்வு நடத்தலாம் என்கிறார். இந்த இரு கடிதங்களின் மூலம் நான் அறிவது, சொற்களை அனைவரும் அல்லது பலரும் நுண்ணோக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே. எங்கள் விழிகளின்முன்பு இருகாலங்களும் போற்றக்கூடிய மாபெரும் இலக்கியப்படைப்பு களையப்பட்ட பிறமொழிச்சொற்களுடன் மீண்டும் வருவதை உண்மையில் வெண்முரசு காதலனாகிய என்னுடைய எளிய மனம் ஏற்க மறுக்கிறது. வருந்துகிறது. கேலி பகடியாகி மீண்டும் கேலியாகவே வருகிறது (துச்சளை – கர்ணன் – கௌரவர் உரையாடல்களில், பீமன் அஸ்தினபுரி அவையில் தூது உரைக்கையில்). மைந்தர் துயர் புத்திரசோகமாக வருகிறது (பிருஹத்காயர் – ஜயத்ரதன் கதையில்).

தனியாக ஒன்றும் செய்வதில்லை என்று முன்பே கூறிவிட்டீர்கள். உங்களுடைய எழுதும் சூழல் எனக்கு புரிகிறது. அதனிடையில் இதனை நோக்குவதென்பதும் கடினமே. திருத்தி வலையேற்றம் செய்பவர்களிடம் இவ்வாறு பிழை இருந்தால் கூறுவதற்கு வழி இருந்தால் நன்றாக இருக்கும். எந்த வகையில் பார்த்தாலும் இது உங்களுக்கு பணிச்சுமைதான். ஆனாலும் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பது உங்களுக்கே தெரியும். இந்த கடிதத்தை திருப்பி இதே நோக்குக்காக உங்களுக்கு எழுதுவதற்கே நான் பல முறை யோசித்தேன். ஆனால் நாங்கள் கொண்டாடும் இப்படைப்பு இச்சிறு காரணத்திற்காக சிறிதளவேனும் சிறுமை படுத்தப்பட்டால் மனம் தாங்காது. அது ஒன்றே இக்கடிதத்திற்கு தூண்டுதல்.

நன்றிகளுடன்

அரசன்

அன்புள்ள அரசன்

நீங்கள் சொல்வது உண்மை

கூடுமானவரை தூயதமிழ்ச்சொற்களை மட்டுமே கையாளவே எண்ணுகிறேன்

ஆனால் சிலசமயம் சில சொற்களுக்கு கலைச்சொற்களுக்கான முக்கியத்துவம் வந்துவிடும். அவற்றை ஒரே ஒரு இடத்தில் கையாண்டுவிட்டு மொழியாக்கச் சொல்லை கையாளலாம் என எண்ணினேன்
உதாரணம், புத்திரசோகம். துயரங்களில் உச்சம் அதுவே என பின்னர் யக்‌ஷபிரஸ்னத்தில் யக்‌ஷன் சொல்கிறான். அது இந்து மெய்யியலில் ஒரு கலைச்சொல். மைந்தர்துயர் என மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் ஒருமுறை அதை கையாளலாம் என நினைத்தேன்

அதைப்போல தத்துவக்கலைச்சொற்களையும் மூலச்சொல்லை ஒருமுறை கையாண்டிருப்பேன். நான் உத்தேசிப்பது அதை என நுண்வாசகனுக்கு உணர்த்த

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 46
அடுத்த கட்டுரைசென்ற காலங்கள் -கடிதம்