முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற கவிதை ‘ஒரு பொன்னானிக்காரனின் மனோராஜ்யம் [ஒரு பொன்னானிக்காரனின் பகற்கனவு] அவரை பொன்னானிக்காரனாக மட்டுமே முன்னிறுத்துகிறது.
கோவிந்தன் பெரும்பாலும் வாழ்ந்தது சென்னையில் உள்ள ஹாரீஸ்சாலையில் இருந்த அவரது இல்லத்தில். எம்.என்.ராய்க்கு நெருக்கமானவராக இருந்தார். ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியை தென்னகத்தில் செயல்படச்செய்தார். மலையாளத்தில் நவீனத்துவசிந்தனைகள் வேரூன்ற உழைத்தார். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு பொன்னானிக்காரக் கவிஞர்.
கேரளம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள பொன்னானி பலவகையிலும் முக்கியமான ஊர். அங்குதான் மாப்பிள்ளைக்கலவரம் என்னும் புகழ்பெற்ற மதப்போர் மையம்கொண்டு நடந்தது. அருகேதான் கேரளக்கலைகளின் மையமான கலாமண்டலம் உள்ளது. வள்ளத்தோளின் நிலம்.அப்பகுதியே பாரதப்புழா என்னும் ஆற்றின் படுகை. பசுமையே எங்கும். இன்றும் புராதனமான ‘தறவாட்டு வீடுகள்’ நிறைந்த இடம். படப்பிடிப்புகளுக்காக அடிக்கடிச் செல்வோம். கோவிந்தனை நினைவுறாமல் அங்கே செல்ல என்னால் முடியாது.
எழுத்தாளனை அவன் வாழும் சூழலில் இருந்து பிரிக்கமுடியாது என்பது மலையாள இதழாளர்களின் நம்பிக்கை. மலையாளத்தில் என்னைப்பற்றி எழுதப்பட்ட எல்லா கட்டுரைகளிலும் பார்வதிபுரம் இருக்கும். மாத்ருபூமி நாளிதழ் என் பேட்டி ஒன்றை வெளியிடவிரும்பியபோது பேட்டி எடுக்கும் நிருபர் விஸ்வநாதனும் புகைப்படக்கலைஞர் மதுராஜும் வந்து நாகர்கோயிலில் தங்கி இரண்டுநாட்கள் என்னை படமெடுத்தனர்.
மதுராஜ் புகழ்பெற்ற புகைப்படநிபுணர். வடகேரளத்தில் எண்டோசல்ஃபான் பூச்சிமருந்தை வானிலிருந்து முந்திரித்தோட்டங்களில் வீசியதன் விளைவாக உருவான அழிவுகளை ஆவணப்படுத்தியமைக்காக பிரேம் பாட்டியா விருதுபெற்றவர்.
பேட்டி ஒருபக்கம். இன்னொருபக்கம் புகைப்படம் நானறியாமல். “இரண்டுவகை படங்கள்தான்சார் வேண்டும். ஒன்று உங்கள் உணர்ச்சிகர முகபாவனை. அதுகூட ஏதோ ஒரு முகபாவனை அல்ல, எது சரியாக உங்களைக் காட்டுகிறதோ அது. நீங்கள் வாழுமிடத்தைக் காட்டும் ஒரே ஒரு நல்ல ஃப்ரேம்” என்றார்.
வெளியே சென்று படமெடுக்கவேண்டும் என்று மதுராஜ் சொன்னபோது அருகே உள்ள வேளிமலையடிவாரத்திற்குச் சென்றோம். நான் ஒருநாளில் இருமுறை அங்கேதான் நடைப்பயிற்சிக்குச் செல்கிறேன். ஊரிலிருந்தால் அந்த மலையடிவாரப்பாதையை ஒருமுறையேனும் பார்க்காமலிருக்கமாட்டேன்.
நான் நிலக்காட்சிகள் மேல் கொண்ட மோகத்தால் ஊரூராகச் செல்பவன். ஆனால் நுட்பமாகப் பார்த்தால் என் எழுத்திலுள்ள இயற்கைக்காட்சிகளில் பெரும்பகுதி இந்த ஒரே மலையடிவாரத்திருந்து வந்திருப்பதைக் காணமுடியும். பெரும்பாலான காலைவர்ணனைகள் இங்கிருந்தே தொடங்குவதை நானே உணர்ந்திருக்கிறேன்
“அப்ப நிறையபேர் எடுத்திருப்பாங்களே” என்று மதுராஜ் தயங்கினார். “இல்லை, யாருமே இதுரை எடுத்ததில்லை. பத்து வருஷம் முன்னாடி சைதன்யா எடுத்த படங்கள் மட்டும்தான்” என்றேன். “இல்லை, இங்கே உள்ள பத்திரிகைகள். ஆங்கிலப்பத்திரிகைகள்…” என்றார். நான் சிரித்துவிட்டேன். “இங்குள்ள ஆங்கிலப்பத்திரிகைகள் எதுவும் என்னைப்பற்றிய பாஸிட்டிவான செய்திகள் எதையும் இதுவரை வெளியிட்டதில்லை” என்றேன்.
வாய்திறந்து நின்றபின் விஸ்வநாதன் “ஏன்?” என்றார். “இங்குள்ள பண்பாட்டுச்சூழல் அது. இவர்களுக்கு இதெல்லாம் முக்கியமல்ல. என்னைப்பற்றியல்ல எவரைப்பற்றியும் எதுவும் பதிவானதில்லை” என்றேன். “ஒருபுகைப்படம் கூடவா எடுக்கமாட்டார்கள்?” என்று புலம்பிக்கொண்டே வந்தார் விஸ்வநாதன்.
“இந்தியா டுடே அந்தகாலத்தில் சில படங்களை எடுத்திருக்கிறது,அவ்வளவுதான். மற்றபடி நான் என் நண்பர்களை அனுப்பி மூத்த எழுத்தாளர்களைப் படம் எடுக்கிறேன். ஆவணப்படங்களும் தயாரிக்கிறோம். சமீபத்தில் சாகித்ய அக்காதமி விருபெற்ற ஆ.மாதவன் வரை நாங்கள் எடுத்தபடங்களைத்தான் பத்திரிகைகள் பயன்படுத்திக்கொள்கின்றன” என்றேன்.
மதுராஜ் எடுத்தபடங்களில் சில மாத்ருபூமி இதழில் என் நீண்ட பேட்டியுடன் வெளியாயின. மிச்சம் அவர்களின் படக்களஞ்சியத்திலிருக்கும். அவை மாத்ருபூமிக்குச் சொந்தமானவை. வெளியான புகைப்படங்களை மட்டும் நான் வாங்கிக்கொண்டேன்.
பேட்டி வெளியானபோது என் நண்பர்களனைவருமே ஒருவகையில் பரவசம் கொண்டனர். அவர்களுக்கும் நன்கு அறிமுகமான வேளிமலைப் பின்புலம். இங்குள்ள மழைக்கால ஈரம்கூட படங்களில் இருந்தது. கணியாகுளம் ஊர் முகங்கள்.
நான் ஒருமாதம் கழித்துப்பார்க்கையில் என் வாழ்க்கையின் ஒரு துண்டு போல தெரிகின்றன இப்படங்கள்.