பத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்

1

பத்மஸ்ரீ விருது தொடர்பாக கிட்டத்தட்ட ஆயிரம் கடிதங்கள். கடிதங்கள் எழுதிய அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி. அக்கறையுடன் ஆலோசனை சொன்னவர்கள், வருந்தியவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவரையும் புரிந்துகொள்கிறேன்.

சென்ற சிலநாட்களாக செல்பேசியை எடுக்கவில்லை. மின்னஞ்சல்களுக்கு பதிலும் போடவில்லை. ஒவ்வொருநாளும் ஆயிரம் அழைப்புகள் வரை வந்தன. தேசிய, வட்டார செய்தியூடகங்களின் தெரிந்த , தெரியாத நிருபர்கள் அழைத்துக்கொண்டே இருந்தனர். அழைத்து பதில்பெறாது சினம் கொண்ட நண்பர்களிடம் பொறுத்தருளக் கோருகிறேன். எனக்காக சிபாரிசு செய்தவர்கள் தமிழின் மூன்று முதன்மை ஆளுமைகள். அவர்களிடம் மன்னிப்பு கோரி கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன்.

நான் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டியதை எழுதிவிட்டேன். தனித்தனியாக இதழ்களுக்கும் காட்சியூடகங்களுக்கும் பேட்டிகள் கொடுத்து இதை பெரிய விவாதமாக ஆக்கவேண்டாமென எண்ணினேன். என்னை ஓர் ஊடகப் பிரபலமாக முன்வைப்பதில்லை என்பது என் கொள்கைகளில் ஒன்று.

வரும் பிப்ரவரி மாதம் முழுக்க சந்திப்புகளும் பயணங்களும் இருப்பதனால் வெண்முரசு 20 அத்தியாயங்களாவது முன்னால் சென்றிருக்கவேண்டும் என திட்டமிட்டு நாளுக்கு இரண்டு என எழுதிக்கொண்டிருந்தேன். இந்த ரகளையில் அதை செய்யமுடியுமா என்றே முயன்றேன். எழுதமுடிந்தது. நாவலில் உச்சகட்ட அத்தியாயங்களை, ஜராசந்தன் வரும் பகுதிகளை, இந்நாட்களில்தான் எழுதினேன்.

விருது தொடர்பாக வந்த கடிதங்களில் சில கேள்விகளே திரும்பத்திரும்ப இருந்தன. விருதை ஏற்றுக்கொண்டால் வசைபாடுவார்கள் என்றீர்களே, விருதை மறுத்தபோது மேலும் வசைதானே வருகிறது என்பது ஒன்று. அதை நான் அறிவேன். கீழ்மையை ஒருவர் தன் அடையாளமாக சூடிக்கொண்டால் அதிலிருந்து தப்பவே முடியாது. வெறுப்பு தனக்கான வழிகளை கண்டடையும். இவர்களின் தரம் இவர்களே வகுத்துக்கொண்டது. இவர்கள் அதை மீறமுடியாது.

கலவை வெங்கட் முதலிய இந்துத்துவர்களும் அ.மார்க்ஸ் போன்ற இஸ்லாமித்துவர்களும் குமரேசன் போன்ற கட்சித்துவர்களும் ஞாநி போன்ற கலவைத்துவர்களும் எழுதியவை அனைத்தும் ஏறத்தாழ ஒரே குரலில் இருப்பதை, கலையையும் அதன் தனித்தவழிகளையும் கலைஞனின் தார்மீகத்தையும் அவன் உணர்வுகளையும் கீழே இழுத்துப்போட்டு மிதித்துக் கூத்தாடுவதை நண்பர்கள் காணலாம்.

ஒருவேளை கலைஞன் இந்த அளவுக்கு இழிவு செய்யப்படும் சமூகம் பிறிது இருக்காது. இவ்விழிவுபடுத்தல் என்போல இலக்கியத்தை அடையாளமாகக் கொண்ட அனைவருக்கும்தான். அதை இங்குள்ள அத்தனை எழுத்தாளர்களும் அடைந்துகொண்டுதான் இருப்பார்கள். இவர்களின் அவார்ட்வாப்ஸி நாடகத்துக்கு முரண்பாடாக அமையும் என்பதனால் ஆ.மாதவன் போன்ற ஒரு பெரும்படைப்பாளிக்கு முதியவயதில் சாகித்ய அக்காதமி கிடைத்தபோது ஒரு சம்பிரதாய வாழ்த்துகூட சொல்லாதவர்கள் இவர்கள்.

ஆனால் இவர்களுக்கு ஒரு காரணத்தை நானே கொடுத்துவிடக்கூடாது, இச்சிறுமை நிறைந்த மனங்களுக்கு முன் நான் அந்தரங்கமாக வெட்கக்கூடாது என நினைத்தேன் . இவர்களை பொருட்டாக நினைக்கிறேன் என்பதற்காக அல்ல, பொருட்டாக நினைக்கும் ஒரு நிலை மெல்லிதாகவேனும் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே இம்முடிவு.வேண்டாமென்று சொல்லும்போது வரும் விடுதலையை அறிந்தவர்களே இதைப்புரிந்துகொள்ளமுடியும்

இந்த சிறுமனங்களின் தலைக்குமேல் இவர்கள் எண்ணிப்பார்க்கமுடியாத தொலைவில், கலைஞனின் உயரத்தில் நிற்கவேன்டும், அதுவே வருங்காலப் படைப்பாளிகளுக்குமுன்னுதாரணம் என நினைத்தேன், நிற்கிறேன். அதில் பெருமிதம் கொள்கிறேன்.

வினாக்களில் அடுத்தது, விருதை அது சிபாரிசு செய்யப்படும்போதே மறுத்திருக்கலாமே என. நான் அதை அறிவது அதற்கான காவல்துறை சோதனைகள் நிகழ்ந்தபின் அச்சோதனைகளைச் செய்த நண்பரான உயரதிகாரி வழியாக. அவர் அதை அதிகாரபூர்வமாக எனக்கு தெரிவிக்கமுடியாது. ஆகவே அவரிடம் நான் மறுக்கவும் முடியாது. எனக்கு விருதுதரப்போகிறீர்களாமே என்று அரசிடம் வலியக்கேட்டு எவரும் மறுக்கமுடியாது என்பதை ஊகிக்க பெரிய அறிவுத்திறன் தேவையில்லை.

மேலும் இத்தகைய முடிவுகளை எவரும் உறுதியாக எடுக்கமுடியாது. அதற்கான ஊசலாட்டங்கள் இருக்கும். சிபாரிசு செய்தவர்கள் உட்பட பலரைச் சங்கடப்படுத்துகிறோம் என்பது ஒன்று. இவ்விருதால் என் செயல்பாடுகளுக்கு நீண்டகால நலன்கள் இருக்குமா என்பது இன்னொன்று. நண்பர்களின் உணர்வுகள் முக்கியமாக. இதையெல்லாம் எவரும் எளிதில் கணித்துவிடமுடியாது என் சந்தேகங்களையும் வருத்தங்களையும் முதல்பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.

நம்மிடம் முறையாக அச்செய்தி சொல்லப்படும்போதுதான் ஒன்று அது விளையாட்டு அல்ல, உண்மையாகவே வந்துவிட்டது என்பது உறைக்கிறது. இறுதிமுடிவை எடுத்தாகவேண்டிய கணம் என தெரிகிறது. முடிவு என்பது அந்தக்கணத்தில் சட்டென்று எடுக்கப்படுவதே.சாதாரணமாக மானுடமனம் செயல்படும் விதத்தை அறிந்த எந்த இலக்கியவாசகனும் இதைப்புரிந்துகொள்ளமுடியும். முடிவுகள் எல்லாமே எப்போதும் அப்படித்தான் எழுகின்றன.. அறுதியான நிலைபாடும் அதற்கான தர்க்கமும் என்பது முடிவெடுத்தபின் வருவதுதான்.

ஒருவேளை நான் சொன்ன காரணங்கள்கூட சரியானவையாக இல்லாமலிருக்கலாம். அத்தருணத்து உள்ளுணர்வின் நிலைபாடு அது என்பதே சரியாக இருக்கும். ஈரமண்ணை யானை தொட்டுப்பார்த்து முடிவெடுப்பதுபோல ஒரு தோராயமாக எடுக்கும் முடிவுதான் . எனக்கு ஒன்று தோன்றியது இதை ஏற்றுக்கொண்டால் எங்கேனும் நான் குறுகவேண்டியிருக்குமா என்று மட்டும்தான். எந்த ஒரு ஏற்பும் சற்றுக்குறுகச்செய்கிறது என்பதே உண்மை. அப்படித்தோன்றியது, அவ்வளவுதான்.

பொதுவாக சம்பிரதாயமாக விருதை மறுப்பவர்கள் நேரில் விசாரிக்கையில் விருதை ஏற்பதாகச் சொல்லிவிட்டு அது குடியரசுத்தலைவரால் அறிவிக்கப்பட்டபின் மறுப்பார்கள். நான் அதைச்செய்ய விரும்பவில்லை. இம்மறுப்பை நான் அறிவிக்காவிட்டால் நான் முயன்றதாகவும் தோற்றதாகவும் வசைபாட ஆரம்பித்திருப்பார்கள். ஏற்றுக்கொண்டிருந்தால் விலைபோனதாக பேசியிருப்பார்கள். மறுத்தபோது விளம்பரம்தேடுகிறேன் என பேசுகிறார்கள். ஆகவே அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை.

இலக்கியத்துக்கு அப்பால் நான் சென்ற பல ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பது ஒரு தெளிவான பண்பாட்டு நடவடிக்கை. அதை என் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தியா என்னும் பண்பாட்டு ஒருமையை, இந்துமெய்யியலை அதன் மீதான விமர்சனநோக்குடன் அணுகியறியும் போக்கு அது. அவ்வறிதலையும் உள்ளுணர்வையும் நவீன இலக்கிய-தத்துவக்களத்தில் வைத்து விரிவாக புரிந்துகொள்ளும் ஒரு செயல்பாடு அது.

நம் நவீனப்பிரக்ஞைக்கும் மரபான ஆழ்மனத்துக்கும் நடுவே பலதலைமுறைகளாக அறுந்துவிட்டிருக்கும் ஒரு முக்கியமான கண்ணியை மீட்டெடுக்கும் முயற்சி. அதனூடாக நம் அடையாளங்களை கண்டடையவும், நாம் வெறும் நகல்களாக ஆகாமல் தடுக்கவும் செய்யப்படும் ஒரு முன்னோடிப்பயணம்.பண்பாட்டு அடையாளங்களைத் தொகுக்கும் ஒருசெயல்பாடு. விஷ்ணுபுரமும் கொற்றவையும் வெண்முரசும் அதற்கான படிகள்.

அதை எந்த சமகால அரசியல் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்துவதையும் தவிர்க்கவே விரும்புகிறேன். ஓர் எளிய அரசியல்நிலைப்பாடாக அல்லது சுயமுன்னேற்றத்துக்கான பாதையாக எவரும் அதை புரிந்துகொள்ளக்கூடாது, அது என் ஆளுமையாலும் அர்ப்பணிப்பாலும் அடிக்கோடிடப்படவேண்டும் என்பதனால்தான் நான் இந்நிலைப்பாட்டை எடுத்தேன்.

அப்படி புரிந்துகொள்ளப்படும் பிரச்சாரம் செய்யப்படும் என்னும் ஒரு எண்ணம் இச்செய்தி கசிந்தபோது உருவான அலர் வழியாக எனக்கு கிடைத்தது. வந்துகொண்டே இருக்கும் புதியவாசகர்களில் சிலராவது அப்பிரச்சாரத்தை நம்பக்கூடும் என எண்ணினேன். அதையே தவிர்த்தேன்.

வாழ்நாளெல்லாம் வெறுப்பரசியல், அதன் விளைவான சுயலாபங்களுக்கு அப்பால் சிந்திக்கத் தெரியாமலிருப்பவர்களுக்கு என் அர்ப்பணிப்பை, என் படைப்புகளுக்குப் பின்னாலிருக்கும் அகஎழுச்சியை, வெண்முரசு போன்ற பெரும் ஆக்கத்திற்குப்பின்னால் உள்ள கண்ணீரை புரிந்துகொள்ளமுடியாது.

முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு நிவேதிதா, பா.ராகவன் இருவரும் ஃபோனில் சொன்னார்கள். அது ஒருமுக்கியமான வாதம் என்றே நினைக்கிறேன். ஆனால் வேறுவழியில்லை.

என் நிலைப்பாட்டின் நேர்மை உண்மையான அறியும் ஆர்வம் கொண்டவர்களுக்கு புரியும். அலைகள் அடங்கியபின் அதை கண்கூடாக கண்டுகொண்டும் இருக்கிறேன். என் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். அதுவே என் யோகம்.

என் வாசகர்களுக்கு முன்னதாக நான் விளக்கம் கொடுக்கவேண்டியது நித்ய சைதன்ய யதிக்கு மட்டுமே என்று தோன்றுகிறது. அளித்துவிட்டேன்.

நன்றி

முந்தைய கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் -15
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45