‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 53

பகுதி ஏழு – நச்சாடல் 2

மகதத்தின் பெருங்கலத்தின் அகல்முகப்பில் இழுபட்டு அதிர்ந்து கொண்டிருந்த பாய்வடங்களைப் பற்றியபடி நின்று கரை மரப்பெருக்கை நோக்கிக் கொண்டிருந்தான் கர்ணன். அவன் ஆடை பறந்தெழுந்து வடமொன்றில் சுற்றிக் கொண்டு துடித்தது. அதை மெல்ல எடுத்து திரும்ப அவன் தோள்மேல் வைத்த முதிய  குகன் தீர்க்கன் “மேலும் மேலும் என மக்கள் பெருகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் அரசே. யமுனைக்கரை பாதைகள் அனைத்தும் தேங்கி நின்றுகொண்டிருக்கின்றன” என்றார். விழிவிலக்காது கர்ணன் ஆமென தலையசைத்தான்.

யமுனை சற்று வளைய அதன் மறுபக்க கரையில் எறும்புநிரைபோல் செறிந்த மக்களை காணமுடிந்தது. அவர்களின் கூட்டுப்பேரோசை தேனீக்களின் ரீங்காரமென கேட்டது. தீர்க்கன் “இந்திரகீலம் நெருங்குகிறது” என்றார். கர்ணன் விழிதிருப்பி அவரை நோக்க “அது ஒரு சிறியகுன்று. அதன்மேல் கிழக்கு நோக்கி நின்றிருக்கும் இந்திரனின் பெருஞ்சிலை அமைந்திருக்கிறது” என்றார். அவர் சுட்டிக்காட்டிய திசையில் மரக்கூட்டங்களுக்கு மேல் பறவைகள் எழுந்து கலைந்து சுழன்றுகொண்டிருந்தன. அங்கு மனிதத்திரள் நிறைந்திருப்பதை உணரமுடிந்தது. மரக்கூட்டங்களுக்குமேல் பரவிய காலைச் செவ்வொளியில் ஒவ்வொரு பறவையும் ஒருகணம் அனலென பற்றியெரிந்து சிறகுத் தழலசைத்து மீண்டும் பறவை என்றாகியது.

பச்சை விளிம்புக்கு மேல் சிவந்த கல்லால் ஆன நீட்சி ஒன்று எழக்கண்டான். “அதுதான்” என்றார் முதிய குகன். “இந்திரனின் மின்னற்படை. மறுகையில் அமுதகலசம் உள்ளது. ஒருகால் முன்னால் வைத்து நின்றிருக்க கீழே ஐராவதம் செதுக்கப்பட்டுள்ளது.” இடக்கையால் மீசையை நீவி அதன் நுனி முறுக்கை சுட்டு விரலால் சுழற்றி சுழித்தபடி விழிதூக்கி நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். கல்லில் நிலைத்த கணம். வடிவில் சிக்கிய ஒளி. இரு விரல்களால் மின்படையை தாமரை மலரென ஏந்தியிருந்தான் விண்ணவர்க்கரசன். இந்திரனின் தழலணிமணிமுடி எழுந்ததும் படகில் இருந்த அத்தனை குகர்களும் அதை நோக்கி உரத்த குரலில் “விண்ணவர்கோன் வாழ்க! முகிலரசு வாழ்க!” என்று கூச்சலிட்டனர்.

சிலர் வடங்களில் தொற்றி மேலேறி பாய்களைப்பற்றி அமர்ந்து சில்லையிலாடும் பறவையென காற்றில் ஊசலாடியபடி நோக்கினர். மேலும் உச்சிக்குச் சென்ற ஒருவன் “அங்கு எறும்புகள் போல் மக்கள் செறிந்திருக்கிறார்கள். சிலையில் பீடமே விழிகளுக்கு தென்படவில்லை” என்றான். இந்திரனின் விழித்த மலர்விழிகள். அருட்சொல் நிலைத்த உதடுகள். சரப்பொளி அணிந்த விரிமார்பும் தோள்களும் எழுந்தன. தீர்க்கன் “சற்று வடத்தில் தொற்றி ஏறினால் மட்டுமே வலக்கையில் இருக்கும் அமுதகலசத்தை பார்க்க முடியும் அரசே” என்றார்.

கர்ணன் இல்லை என்பது போல் கையை அசைத்தான். உள்ளிருந்து படிகளில் விரைந்தேறி வந்த ஜராசந்தன் “இந்திரகீலம் தெரியுமென்றார்களே?” என்றான். “தெரிகிறது” என்றான் கர்ணன். “எங்கே?” என்று கேட்ட மறுகணமே பார்த்து “ஆ… எவ்வளவு பெரிய சிலை!” என்றான் ஜராசந்தன். பரபரப்புடன் சென்று இருவடங்களைப்பற்றி கொடிமேல் வெட்டுக்கிளி ஏறுவதுபோல் எழுந்து பாய் இழுபட தளர்ந்து இழுபட்ட கயிறுகளில் வலைச்சிலந்தி என அசைந்தபடி நின்று “மாபெரும் சிலை! வஜ்ரம். அமுதகலசம். அருள்விழிகள்!” என்றான். குனிந்து “அங்கரே, பாய்வடத்தில் ஏறும் பயிற்சி தங்களுக்கில்லையா? வருக!” என்றான். கர்ணன் புன்னகையுடன் விரும்பவில்லை என்று தலையசைத்தான்.

“பெருஞ்சிலை! ஆனால் அதன் புன்னகை எனக்கே ஆனதென அணுகிவருகிறது” என்றான் ஜராசந்தன். அனைத்து பாய்களும் புடைத்து காற்றின் திசைகளுக்கேற்ப திசைமாறி படகை நீருக்குள் சற்றே சாய்த்து அலைச்சிறகொன்று சீறி எழ விரையச் செய்தன. உச்சிக்கொடி துடிதுடிக்கும் ஓசையை கேட்க முடிந்தது. சிலை மெல்ல திரும்ப மகரக்குழையணிந்த நீண்ட காதுகளும், பின்பக்கக் குழல்கற்றையலைகளும் தெரிந்தன. “அங்கே கிழக்கே இருந்து இந்திரப்பிரஸ்தத்துக்குள் நுழையும் சாலை உள்ளது. அது வண்டிகளாலும் அத்திரிகளாலும் புரவிகளாலும் முற்றிலும் நிறைந்து தேங்கியிருக்கிறது” என்றான் ஜராசந்தன்.

தீர்க்கன் மேலே நோக்கி “இந்திரனுக்கு பூசைகள் முடிந்து அங்குள நாகர்குல மூத்தோருக்கு காணிக்கை அளித்த பின்னரே நகர் நுழையவேண்டுமென்பது மரபு” என்றார். “ஆம், அங்கு முகில் என வேள்விப்புகை எழுந்து கொண்டிருக்கிறது” என்றான் ஜராசந்தன். படகு சிலையைக் கடந்து போக இந்திரனுக்கு அப்பால் அதிரும் இளநீல வட்டத்துக்குச் சுற்றும் நெருப்பலைகள் கொதிக்க விண்முகில்கள் எரிந்து கொண்டிருக்க கதிரவன் தெரிந்தான். கர்ணன் திரும்பி ஒளியோனையும் இந்திரனையும் ஒற்றைச்சித்திரமென நோக்கிக் கொண்டிருந்தான். மெல்ல சிலை ஒரு நிழல்வடிவாயிற்று. சிறுத்து உதிர்வதுபோல் கீழிறங்கி சூரிய வட்டத்திற்கு அடியில் எங்கோ மறைந்தது.

பாய்வடத்தைப் பற்றி படகில் இறங்கிய ஜராசந்தன் “எத்தனை பெரிய சிலை!” என்றான். கர்ணன் மீசையை நீவியபடி “பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசொன்றின் தலைவர் நீங்கள். சிலை நோக்க வடம் பற்றி ஏறும் சிறுவனல்ல” என்றான். “யார் சொன்னார்கள்? அங்கரே, கங்கையில் செல்லும் கலங்களை நோக்கி மரங்கள் மீது ஏறியமர்ந்து கூச்சலிடும் மலைச்சிறுவன் நான். நீங்கள் அறியமாட்டீர்கள், என் அன்னை ஜரையின் காட்டிலிருந்து நான் இன்னும் நகர் புகவே இல்லை” என்றான்.

“காட்டில் பயின்றதா இக்கொடி பற்றி ஏறும் கலை?” என்றான் கர்ணன். “ஆம். எப்படி அறிந்தீர்?” என்று தன் தொடையை தட்டி ஜராசந்தன் நகைத்தான். “என் உடலின் எடையைக் காண்பவர்கள் இத்தனை விரைவாக நான் வடங்களில் ஏறமுடியும் என்று எண்ணமாட்டார்கள். என்னை காட்டில் மஞ்சள்தேள் என்பார்கள். என் கைகள் கொடுக்குகளைப்போல. ஒற்றைக்கையாலும் பற்றி என்னால் ஏற முடியும்.” தழைந்திருந்த வடமொன்றில் மெல்ல சாய்ந்தபடி “தீர்க்கரே, இன்னும் எத்தனை நேரம் ஆகும் நாம் இந்திரப்பிரஸ்தத்தை அணுக?” என்றான் கர்ணன். “அதோ, தொலைவில் இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்குன்றின் மேல் எழுந்த மலராலயம் தெரிகிறது” என்றார் தீர்க்கர்.

“எங்கே? எங்கே?” என்று எழுந்த ஜராசந்தன் பார்த்தான். கண்கூச “வெயில் அடர்ந்திருக்கிறது” என்று கண்களை மூடிக்கொண்டான். சாய்வெயில் ஒளிரும்பட்டுத்திரையென அனைத்தையும் மூடியிருந்தது. கைகளில் வழிந்த நீரை மேலாடையால் துடைத்தபடி திரும்பி “ஒளியே காட்சியை மறைப்பது விந்தை அல்லவா?” என்றான். கர்ணன் “மறைப்பது ஒளி அல்ல. அவ்வொளியில் சுடர்விடும் பொருளற்ற தூசுகளே திரையாகின்றன” என்றான்.

“நாம் ஏதாவது மெய்ப்பொருள் நுணுகி பேசிக் கொண்டிருக்கிறோமா என்ன?” என்று கேட்ட ஜராசந்தன் உரக்க நகைத்து “அரசவைக்கு வந்தபின் இதை கற்றுக்கொண்டேன். என் அந்தண அமைச்சர்கள் அனைவருக்கும் இவ்வழக்கமுண்டு. காணும் எதையும் ஒரு சிந்தனையின் பகுதியாக மாற்றுவார்கள். ஒரு கருத்தாக மாற்றுவார்கள். அது எளிய ஆடல் என்று கற்றுக்கொள்வது வரை அவை என்பதே எனக்கு அச்சமூட்டும் போர்க்களமாக தெரிந்தது” என்றான். கர்ணன் “அந்த உளப்பழக்கத்திலிருந்து அரசர்கள் எவரும் விடுபடமுடியாது” என்றான்.

“எங்கே தெரிகிறது?” என்று மீண்டும் ஜராசந்தன் கண்மேல் கைகளை வைத்து கூர்ந்து பார்த்தான். “தெரிகிறது” என்றான் கர்ணன். “ஒரு கல்மலர்.” இளைய குகன் பரன் “சிவந்த கற்களால் ஆனது” என்றான். தொலைவில் சிறிய குமிழ்போல் தெரிந்த ஆலயம் படகின் அசைவிற்கேற்ப வானத்தில் ஊசலாடியது. ஜராசந்தன் “ஆம், கண்டுகொண்டேன்!” என்றான். “இத்தனை தொலைவிற்கு தெரிகிறது என்றால் அது மாபெரும் வடிவம்கொண்டது.”  தீர்க்கன் “அரசே, அது பன்னிரண்டு அடுக்குகள் கொண்ட மலர்வடிவ கட்டடம். அதன் ஒவ்வொரு அடுக்குக்கும் சுற்றுப்பிராகாரங்கள் உள்ளன. நடுவே இந்திரனின் கருவறையைச் சுற்றிலும் எட்டு வசுக்களின் ஆலயங்கள். பதினொரு ருத்ரர்கள், நூற்றியெட்டு ஆதித்யர்கள், ஆயிரத்தெட்டு தைத்யர்கள், பத்தாயிரத்தெட்டு தானவர்கள் அங்கே கோவில் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

ஜராசந்தன் “பத்தாயிரத்தெட்டு தானவர்களா? அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் மலர்வைத்து பூசை செய்யவே பெரும்படை தேவையாகுமே?” என்றான். திரும்பி “விண்ணை இப்படி தெய்வங்களால் நிறைத்துவிட்டுச்சென்ற மூதாதையரை எண்ணினால் சில தருணங்களில் சினம் எழுகிறது. ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லாத தருணங்களில் அது சரியே என்று தோன்றுகிறது. வேறெப்படி இங்கே சலிப்பில்லாமல் வாழ்வது?” என்றான். கர்ணன் “ஆம், ஒவ்வொரு பகடைக்குமொரு தெய்வம் உண்டு. ஒவ்வொரு பகடைக்களத்திற்கும் வெவ்வேறு தெய்வங்கள்” என்றான்.

“மண்ணில் இருந்து உதிர்ந்துபோன சருகுகளால் நிறைந்தது வானம் என்று ஒரு சூதன் என் அவையில் பாடினான்” என்றான் ஜராசந்தன். “தென்னிலத்துப் பாவாணன். இளிவரல்பாடல் மட்டுமே பாடுபவன்” என்றான். கர்ணன் “அப்படியென்றால் உண்மையை மட்டுமே பாடுபவன்” என்றான். ஜராசந்தன் உரக்க நகைத்து “ஆம், உண்மை” என்றான். “என் தோள்களைப்பார்த்து அவன் என்ன சொன்னான் தெரியுமா?” என்றான். “என்ன?” என்றான் கர்ணன். விழிகள் மட்டுமே புன்னகைக்க “ஒவ்வொரு நாளும் எடைதூக்கி நான் செய்யும் பயிற்சியில் எடையை ஏற்றுகிறேன், இறக்குவதில்லை. என்மேல் பெரும்பாறை ஏறி அமர்ந்திருக்கிறது” என்றான்.

கர்ணன் சிரித்தான். ஜராசந்தன் மீண்டும் ஆலயத்தை நோக்கி “எத்தகைய மாபெரும் ஆலயம் அங்கரே! இன்று பிறிதொன்றும் செய்வதற்கில்லை. மாலை அவ்வாலயத்தை முற்றிலும் சுற்றிவந்து ஒவ்வொரு சிற்பத்தையும் பார்த்து மகிழ்வதொன்றே வேலை” என்றான். கர்ணன் “நான் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரின் அழைப்புக்காக வரவில்லை. அஸ்தினபுரி அரசரின் துணைவனாகவே வந்தேன்” என்றான்.

ஜராசந்தன் விழிகள் சற்று மாறுபட “தங்களுக்கு அழைப்பில்லையா?” என்றான். “முறைமையழைப்பு உண்டு. அது அங்கநாட்டுக்கு சென்றிருக்கிறது” என்றான் கர்ணன். ஏதோ சொல்ல வாயெடுத்தபின் அதைக் கடந்து தன் மெல்லிய மீசை மயிரை கைகளால் பற்றி முறுக்கியபடி ஜராசந்தன் “தங்களைப் பார்த்தபின் நான் விழையும் முதன்மைப் பொருள் ஒன்றே அங்கரே. தாங்கள் கொண்டிருப்பதுபோல் கரிய ஒளிமிக்க கூர்மீசை. இப்பிறவியில் எனக்கு அப்படி ஒன்று அமையப்போவதில்லை என்றும் அறிவேன்” என்றான்.

கர்ணன் அவன் முகத்தைப் பார்த்து “ஆம், நீங்கள் பீதர்களைப் போல செம்மஞ்சள் நிற உருவம் கொண்டவர். மெழுகுச்சிலைபோன்ற முகம்” என்றான். “என் அன்னையின் காட்டிலென்றால் மான்வால் முடியால் ஒரு மீசை செய்து சூடிக்கொள்ளத் தயங்கமாட்டேன்” என்றான் ஜராசந்தன். “இங்கே அரசர்கள் அமைச்சர்கள் சொல்லும் மாறுதோற்றங்களையே அணியவேண்டும்…”

இந்திரப்பிரஸ்தத்தின் நகரெல்லை தொடங்குவதைக் காட்டும் காவல் கோபுரம் மரங்களுக்கு அப்பால் சுட்டுவிரல் என எழுந்து வந்தது. பதினெட்டு அடுக்குகள் கொண்ட அதன் உச்சியில் தேன்மெழுகு பூசப்பட்ட குவைக்கூரை கவிந்திருந்தது. முதல்மாடத்தில் நான்கு பெருமுரசுகள் காலை இளவெயிலில் மின்னும் செந்நிறத் தோல்வட்டங்களுடன் காளான்கள் போல் பூத்திருந்தன. அருகே வெண்ணுடையும் பொன்னிறத்தலைப்பாகையும் அணிந்த கோல்காரர்கள் காத்திருந்தனர். கீழே குட்டியானையின் துதிக்கை போன்ற கொம்புகளை ஏந்தியபடி கொம்பூதிகள் நின்றிருக்க அதன் கீழடுக்குகளில் உப்பரிகை கைப்பிடிகளைப்பற்றியபடி வில்லேந்திய வீரர்கள் ஆற்றில் பெருகிச் சென்றுகொண்டிருந்த கலங்களை நோக்கிக்கொண்டிருந்தனர்.

மரக்கூட்டங்களுக்கிடையே சிற்றிடைவெளிகளில் ஒழுக்குமுறியாது பெருகிச் செல்லும் மக்கள் வெள்ளத்தின் வண்ணங்கள் தெரிந்தன. யமுனையின் மறுபக்கக் கரையில் செவ்வெறும்பும் கட்டெறும்பும் கலந்துசெல்லும் நிரைபோல மக்கள் சென்றனர். அவர்களின் ஓசை தேனீக்கூட்டின் ரீங்காரமென கேட்டுக்கொண்டிருந்தது. கர்ணன் குகர்களிடம் “நகர் வந்துவிட்டதா?” என்றான். “ஆம், அணுகிவிட்டோம். இங்கிருந்து ஒருநாழிகை தொலைவில் உள்ளது இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படித்துறை. ஆனால் இங்கிருந்து அதுவரைக்கும் படகுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிச்செறிந்து நின்றுள்ளன” என்றனர்.

“பன்னிரு படித்துறைகள் உள்ளன என்று கேட்டேனே?” என்றான் கர்ணன். “ஆம், அங்கு வரும் எந்தப்படகும் ஒரு நாழிகைக்கு மேல் ஆற்றில் நிற்கலாகாது என்பது அவர்களின் நோக்கம். ஆனால் இன்று பாரதவர்ஷமே படகுகளில் திரண்டு வருகையில் பன்னிரண்டு படித்துறைகளும் என்ன செய்ய இயலும்?” என்றார் அமைச்சர் சுதேவர். இளைய குகன் காமன் உள எழுச்சியுடன் உரக்க “ஆயிரம் துலாக்கோல்களும் அவற்றை இழுக்கும் இரண்டாயிரம் யானைகளும் அங்குள்ளன என்கிறார்கள்” என்றான். “அவை இறக்கும் பொதிகளை சுமந்துசெல்ல ஏழு வண்டிப்பாதைகள் உள்ளன. இத்தருணத்தில் பல்லாயிரம் எருதுகள் அங்கு வண்டிகளை இழுத்துக் கொண்டிருக்கும்.”

ஜராசந்தன் வடத்தின் மேல் நின்று ஆடியபடி “விழிதொடும் தொலைவுக்கு படகுகள் பாய்சுருக்கி நின்றிருக்கின்றன. இன்று உச்சிப்பொழுது தாண்டாமல் நாம் படித்துறையை அணுக முடியாது என்று தோன்றுகிறது” என்றான். “இல்லை அரசே, அங்கு மிக விரைவிலேயே பொதிகளை இறக்கும் முறைகள் உள்ளன” என்றார் அமைச்சர் சுதேவர்.

கர்ணன் அந்த மாளிகையை நோக்கியபடி இருந்தான். படகு அணைய அணைய அது மேலும் விண்சரிவில் துலக்கம் கொண்டது. அதன் செந்நிற இதழ்கள் தெரிந்தன. “எவருக்காக அவ்வடிவில் கட்டியிருக்கிறார்கள்? அதை மலரென்று பார்க்கவேண்டுமென்றால் விண்ணிலிருந்து தேவர்களைப்போல் இறங்கவேண்டும்” என்றான் ஜராசந்தன். “அது இந்திரன் பார்ப்பதற்காக கட்டப்பட்டது என்கிறார்கள் அரசே” என்றான் இளைய குகன். கர்ணன் “அந்நகரே பிறிதொரு மலர் போலிருக்கிறது. அதன் நடுவே சிறிய புல்லிவட்டமென அவ்வாலயம்” என்றான்.

சுதேவர் “துவாரகையைப்போல இதுவும் புரிவடிவப் பெருநகரம். அனைத்துச் சாலைகளும் சுழன்று மையத்தில் அமைந்த இந்திரன் ஆலயத்திற்கு செல்கின்றன. இறுதிச் சுற்றில் இருக்கின்றன அரண்மனைத்தொகுதிகள்” என்றார். “நாங்கள் எட்டுமுறை அங்கு பொதிகள் இறக்கச் சென்றுள்ளோம். இந்நகர் கட்டத்தொடங்கும்போதே நான் ஒருமுறை வந்துள்ளேன்” என்றான் கலத்தலைவன். கர்ணன் நீள்மூச்சுடன் “படகை நிறுத்தவேண்டியதுதான்” என்றான். “ஆம்” என்றான் ஜராசந்தன்.

குகர்கள் பெருங்கூச்சல்களுடன் கயிறுகளில் தொற்றிச் சென்று வடங்களின் முடிச்சுகளை அவிழ்க்க பெரிய சகடங்கள் பிளிறல் ஒலியுடன் சுழன்று நங்கூரங்களை நீரில் இறக்கின. கயிறுகள் தொய்ந்து பாய்கள் அணையும் தழல்கள்போல சுருங்கி கீழிறங்கின. அவற்றை மூங்கில்களின் உதவியால் அலையலையாக சுருட்டி வைக்கத்தொடங்கினர் குகர்கள். படகு முற்றிலும் விசையழிந்து நீரலைகளில் ஏறியும் இறங்கியும் ததும்பி நின்றது.

கர்ணன் “நான் என் படகில் கிளம்புகிறேன் அரசே” என்றான். “எங்கு?” என்றான் ஜராசந்தன். “அஸ்தினபுரியின் படகும் கரையணைந்திருக்காது என்று நினைக்கிறேன். நான் அரசரை சென்றடைந்துவிட முடியும்.” ஜராசந்தன் “ஆம், ஆனால் நீங்கள் மட்டும் ஏன் செல்ல வேண்டும்? நானும் வருகிறேன்” என்றான். திகைப்புடன் “தாங்களா?” என்றான் கர்ணன். “ஆம், அதிலென்ன?” என்று ஜராசந்தன் சொன்னான். “மகதத்தின் அரசனாக அல்ல. தங்கள் அன்பனாக. தாங்கள் அளிக்கப்போகும் நண்பனை சந்திப்பதாக வருகிறேன்.”

கர்ணன் “ஆனால் முறைமை என ஒன்றுள்ளது” என்றான். ஜராசந்தன் “மகதமன்னனின் முறைமைகளை காட்டுச்சிறுவனாகிய ஜராசந்தன் அறிவதில்லை” என்றபடி “விரைவுப்படகை இறக்குக!” என்றான். “என் படகு கீழே நிற்கிறது” என்றான் கர்ணன். “அதில் ஒழுக்கை எதிர்த்து அத்தனை தொலைவுக்கு துடுப்பிட வேண்டுமல்லவா? இது பீதர்நாட்டுப் படகு. நீரைத் தொடாமலேயே பறக்கும் பட்டாம் பூச்சி இது. பாருங்கள்” என்றபடி ஜராசந்தன் கயிறுகளின் வழியாக தாவிச்சென்றான்.

மூன்று குகர்கள் முடிச்சுகளை அவிழ்க்க அவர்களின் கலத்தின் பக்கச்சுவரில் கட்டப்பட்டிருந்த சிறியபடகு இரு வடங்களில் சறுக்கியபடி சென்று நீரைத்தொட்டது. ஒற்றையாக அமரத்தக்க அகலமும் நான்குவாரை நீளமும் சற்றே வளைந்த வெண்ணிற உடலுமாக யானைத்தந்தம் போலிருந்தது. “பீதர் நாட்டின் மென்மரம் ஒன்றால் அமைந்தது. வலுவான கடல்களின் அலையையும் தாங்கும். ஆனால் பத்துவயது சிறுவன் தன் தோளில் எடுத்துவிட முடியும் இப்படகை” என்றான் ஜராசந்தன்.

கயிறுகள் வழியாக தொற்றி இறங்கிய குகர்கள் அப்படகுக்குள் சென்று அதில் நீள வாட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று மூங்கில்களை எடுத்தனர். பெரிய மூங்கிலின் துளையில் அடுத்த மூங்கிலை ஒருவன் செலுத்தினான். ஒன்றினுள் ஒன்றென மூங்கில்களைச் செலுத்தி நீளமான கொடிக்கம்பம் ஒன்றை அமைத்து அதை படகிலிருந்த துளைக்குள் செலுத்தி இறுக்கி அதனுடன் இணைந்த மெல்லிய பட்டுக்கயிறுகளை இழுத்து கொக்கிகளில் கட்டினர். மூன்று சிறு மூட்டைகளாகக் கிடந்த செந்நிறமான பீதர்நாட்டு பட்டுப்பாயை பொதியவிழ்த்து கயிற்றில் கட்டி இழுத்து மேலேற்ற அக்கணமே காற்றை வாங்கி அவை தீக்கனல்போல பற்றி கொழுந்துவிட்டு மேலேறின. புடைத்து கயிறுகளை இழுத்தபடி அவை விம்மியதும் படகு இணைப்புக்கயிறை இழுத்தபடி கன்றுக்குட்டிபோல முன்னே செல்லத்தாவியது.

53

ஜராசந்தன் நகைத்தபடி இணைப்புக் கயிற்றைப் பற்றி நீர்த்துளிபோல சறுக்கி இறங்கி நின்ற பிறகு “வருக அங்கரே!” என்றான். கர்ணன் கயிற்றைப்பற்றி எடையுடன் ஆடியபடி மெல்ல இறங்கி படகை அடைந்தான். படகிலிருந்த குகர்கள் அதன் கொக்கிகளிலிருந்த கயிற்றை விடுவித்தபின் அக்கயிற்றிலிலேயே தொற்றியபடி ஆடி பெருங்கலத்தை நோக்கி சென்று மேலேறத்தொடங்கினர். இணைப்பு விடுபட்டதும் வீசப்பட்டதுபோல தாவி அலைகளில் ஏறி பறக்கத்தொடங்கியது படகு. “உண்மையிலேயே நீரைத்தொடுகிறதா என்று ஐயம் வருகிறது” என்றான் கர்ணன். “உச்சவிரைவை அடையும்போது நீரை தொடாமலும் செல்லும்” என்றான் ஜராசந்தன். “ஓரிரவுக்குள் ராஜகிருகத்திலிருந்து தாம்ரலிப்திக்குச் சென்று திரும்ப முடியும்.”

“நீங்கள் செல்வதுண்டா?” என்றான் கர்ணன். “பலமுறை” என்று ஜராசந்தன் நகைத்தான். “மகதத்திலிருந்து அஸ்தினபுரிக்கு படைகொணர்ந்து சூழ எனக்கு ஐந்துநாழிகை போதும் அங்கரே. இத்தகைய படகுகள் என்னிடம் ஐந்தாயிரத்துக்கு மேல் உள்ளன.” கர்ணன் நகைத்து “படைநுட்பங்களை அஸ்தினபுரியின் முதற்படைத்தலைவனிடம் சொல்கிறீர்கள்” என்றான். “மகதத்துக்கு வாருங்கள். எங்கள் படைத்தலைமையையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றான் ஜராசந்தன்.

அவர்களின் படகு வரிசையாக நின்ற பெருங்கலங்களை தாண்டிச்செல்ல அதிலிருந்தவர்கள் படகுவிளிம்புகளுக்கு ஓடிவந்து அவர்களை பார்த்தனர். முன்னால் நின்ற கலிங்கத்தின் கலநிரைகளுக்கு அப்பால் வங்கப்படகுகள் வரத்தொடங்கின. அதன் பின் மகதத்தின் கலங்கள் வந்தன. தங்கள் அரசரை கொடியிலிருந்து அறிந்துகொண்ட மகதப்படைவீரர்கள் விளிம்புகளுக்கு வந்து நின்று கைகளைத்தூக்கி உரக்க கூச்சலிட்டு வாழ்த்தினர். அவர்களின் குரல்கள் சிதறிப்பரந்த காற்றில் உடைந்த சொற்களாகவே கேட்டன. ஒரு நாவாய் பிளிறியது.

தொலைவில் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியை கர்ணன் பார்த்தான். “அதோ” என்று கைசுட்டினான். “முன்னால் பொன்னிறப்பெருங்கொடி பறப்பது அரசரின் கலம்” என்றான். “ஆம், அதை நான் பார்த்தேன். என்னைப்போல் குகர்களுடன் இருந்து உணவுண்ண அஸ்தினபுரியின் பேரரசரால் முடியுமா என்ன?” என்றான் ஜராசந்தன். கர்ணன் நகைத்தபடி “முடியாது. ஆனால் தன் இளையோருடன் அவர் அமர்ந்து உணவுண்பது அப்படித்தான் இருக்கும்” என்றான். ஜராசந்தன் சிரித்தபடி “ஆம், அதை நான் கேட்டிருக்கிறேன்” என்றான். “அவர்கள் உணவுண்பது காந்தாரத்தின் ஓநாய்களைப் போன்றிருக்கும் என இளிவரல் சூதன் பாடினான்.”

மகதத்தின் கொடியுடன் அவர்கள் படகு அஸ்தினபுரியின் அரசபெரும்படகை அணுக அதைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த அஸ்தினபுரியின் விரைவுக்காவல்படகுகளில் ஒன்று கொடி படபடக்க அவர்களை நோக்கி வந்தது. அதில் பெரிய தொலைவிற்களுடன் எழுந்து நின்றிருந்த ஐந்து வில்லவர்கள் அம்பை குறி நோக்கினர். அமரமுகப்பில் எழுந்த காவலர்தலைவன் மஞ்சள் கொடியை வீசி யார் என சைகைமொழியில் அவர்களிடம் கேட்டான்.

கர்ணன் தன் மேலாடையை எடுத்துச் சுழற்றி “அங்கநாடு” என்றான். காவல் படகு சற்றே திரும்பி விசையிழக்க அதன் தலைவன் கர்ணனை பார்த்துவிட்டான். தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து அவன் ஊத பிறகாவற்படகுகள் திரும்பி வாழ்த்தொலிகள் காற்றில் நீர்த்துளிகளென சிதறிப்பரக்க அவர்களை நோக்கி வந்தன. அணுகிவந்த முதற்காவல் படகிலிருந்த தலைவன் “அங்கநாட்டரசரை வணங்குகிறேன். தங்களுக்காக அரசர் காத்திருக்கிறார்” என்றான். அதன்பின் ஜராசந்தனைப் பார்த்து அவன் விழிகள் சற்று மாறுபட்டன.

கர்ணனின் படகை சூழ்ந்துகொண்ட காவற்படகுகள் வாழ்த்துக்களை கூவியபடி அவர்களை துரியோதனனின் அரசப்பெரும்படகருகே கொண்டு சென்றன. கர்ணன் “வருக மகதரே” என்றபின் “நூலேணி” என்றான் மேலே நோக்கி. பெரும்படகிலிருந்து நூலேணி சுருளவிழ்ந்து விழுந்து அவர்கள் படகை அடைந்தது. கர்ணன் அதை எடுத்து தன்படகில் கட்டியபடி “வருக!” என்றான். பீதர் படகில் இருந்த மென்பட்டுக் கயிற்றை எடுத்துச் சுருட்டி மேலே வீசினான் ஜராசந்தன். அது புகைச்சுருளென எழுந்து சென்று மேலே விளிம்பில் நின்ற குகனை அடைய அவன் அதை பற்றிக்கொண்டு இழுத்து தூணில் கட்டினான்.

“மேலே செல்வோம் மகதரே” என்று கர்ணன் கைகாட்ட “தாங்கள் அதில் வாருங்கள். எனக்கு இதுவே இன்னும் எளிது” என்றபின் பட்டுநூலைப்பற்றி பறந்தெழுபவன்போல மேலே சென்று படகின் விளிம்பில் தொற்றி ஏறி அகல் முற்றத்தில் நின்றான் ஜராசந்தன். கலத்தின் ஆட்டத்தில் தன்னை ஊசலாட்டிய நூலேணியைப்பற்றி மேலேறிவந்த கர்ணன் உள்ளே கால்வைத்ததும் தன்னை நோக்கி ஓடிவந்த துச்சலனைப் பார்த்து “இளையோனே, அரசர் எங்கிருக்கிறார்?” என்றான். துச்சாதனன் அங்கிருந்தே ஜராசந்தனை பார்த்தபடி வந்தான். “மூத்தவரே, தங்களுக்காக காத்திருக்கிறோம்…” என்றான்

கர்ணன் “அரசர் உள்ளே இருக்கிறாரா?” என்று கேட்டதும் ஜராசந்தனை நோக்கியபடி “ஆம், சற்று பொறுமை இழந்திருக்கிறார்” என்றான். கர்ணன் “இளையோனே, இவர் மகதநாட்டு அரசர் ஜராசந்தர்” என்றதும் திகைத்து விழிவிரிய இதழ்கள் சற்றே திறக்க உறைந்தான். அவன் தோளை ஓங்கி அறைந்து “திகைத்து உயிர் விட்டுவிடுவான் போலிருக்கிறது மூடன்” என்றான் கர்ணன். “இவரை நேற்றிரவு சந்தித்தேன். என் தோழர் அரசரை சந்திக்க வந்துள்ளார்” என்றான். துச்சாதனன் தலைவணங்கி “வருக அரசே! தாங்கள் இந்நகர் புகுந்ததை அஸ்தினபுரியின் நன்னாளென எண்ணுகிறேன்” என்றான்.

முந்தைய கட்டுரைபரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல், சென்னை