நீலச்சிலை

 

161

ஜெ,

வெண்முரசு நாவல்கள் அனைத்தையும் வாங்கியவன் நான். ஒரு நாவலுக்கு படங்கள் அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து. மேலும் உங்கள் நாவல்கள் என்பவை மொழிவழியாக உருவாக்கும் படங்கள். அவைகளை வண்ணங்களின் படங்கள் இல்லாமலாக்கிவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் நீலம் நாவலை மட்டும் கடைக்குச் சென்று செம்பதிப்பாக வாங்கினேன். அதன்பின் வெவ்வேறு நண்பர்களுக்காக இரு நூல்கள் வாங்கினேன். என்னைப்பொறுத்தவரை உங்கள் நாவல்களில் மட்டும் அல்ல தமிழிலேயே கூட நீலம்தான் முதன்மையான நாவல். நாவல் என்று அல்ல தமிழில் வெளிவந்த நூல்களிலேயே அதுதான் எல்லாவகையிலும் அழகானது. எல்லா வகையிலும் மேன்மையானது. அதன் கட்டமைப்பு அச்சு,தாள் எல்லாமே அற்புதமானவை என்றுதான்சொல்வென் . எத்தனை பார்த்தாலும் தீராத தயாரிப்பு

படைப்பு என்னும் வகையில் நீங்கள் மிக மிக உச்சநிலையில் இருந்தபோது எழுதியது என்பதை ஒவ்வொரு வரியிலும் பார்க்கலாம். சுத்தமாக அர்த்தமே இல்லாமல் பித்துப் பிடித்து எழுதியது என்றும் தெரிகிறது. ஆனால் அமைப்பு தொகுப்ம்பு அதன் உள்ளே இருக்கும் ஒழுங்கும் எல்லாமே மிகமிக நேர்த்தியாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை போலிருக்கின்றன. அதன் ஒவ்வொரு வரியும் பல அர்த்தங்கள் கொண்டு செறிவாக இருக்கிறது.

நீலத்தின் குறியீடுகளில் மரபான குறியீடுகளும் புத்தம்புதிய குறியீடுகளும் நிறைந்துள்ளன. மரபான குறியீடுகளான பூதனை போன்றவை புதிய அர்த்தங்களில் உள்ளன. பூதனையை பூமியாகப் பார்க்கும்போது பிரமிப்பே ஏற்படுகிறது.அதேபோல கம்சனின் வாள்மேல் வந்து அமரும் அந்தச் சின்னக்குருவி புதிய குறியீடு. ஒரு பழமையான காவியத்தையோ நவீனக்கவிதையையோ போல பலமுறை தொட்டுத்தொட்டு வாசித்துதான் இதையறியமுடியும். நான் அவ்வப்போது கைபோன போக்கிலே எடுத்து கொஞ்சம் வாசித்துவிட்டு பிரமிப்புடன் வைத்துவிடுகிறேன்.

இந்த மொழியைப்பற்றிச் சொல்லித்தீராது. ஆழ்வார்கவிதைகளையே உரைநடையாக வாசிப்பதுபோல சிலசமயம் தோன்றுகிறது. ஆனால் செய்யுளுக்குரிய அணிகள் எல்லாம் இல்லாமல் நவீன உரைநடையாகவும் தெரிகிறது. வரிகளை தொட்டுத்தொட்டு வாசிக்கவேண்டியிருக்கிறது. வரிகளில் இருக்கும் தாளம் சட்டென்று மாறுவதை ஒரு அற்புதமான அனுபவமாகவே நினைக்கிறேன். தூயதமிழில் ஒரு நாவலை எழுதமுடியும் என்பதே இன்றையசூழலில் பெரிய ஆச்சரியம்.

நான் வைணவன் அல்ல. ஆஸ்திகனும் அல்ல.தமிழில் ஈடுபாடுகொண்ட வாசகன் மட்டும்தான். ராதையின் கதையை நான் அழியாக்காதலின் கதை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரு மனமயக்கத்தின் கதை என்றுகூடச் சொல்லலாம். காதல் என்ற அந்த இலட்சியத்தை மொழியிலே சொல்லமுடிந்திருக்கிறது. மதுவுண்டு மயங்கியதுபோல ஒரு அனுபவம். தீராத வாசிப்பு.

அந்த மயக்கம் ஓவியருக்கும் இருந்திருக்கிறது. பல ஓவியங்கள் கனவுபோல விரிகின்றன. எப்போதுமிருக்கும் நீலமும் சிவப்பும் கலந்த அந்தக்கலவைதான் நீலம் நாவல். நீலம் கண்ணன். ராதை சிவப்பு. காதலின் இருநிறங்கள். ஒரு புத்தகம் ஒரு அழகான கலைப்பொருள் போல ஆவதை இன்றுதான் பார்க்கிறேன். ஒரு தெய்வச்சிலை போலத் தோன்றுகிறது என் மேஜையில் இருக்கும் நீலம்.

என்னால் எழுதமுடியவில்லை. வெறும் புகழ்மொழிகளைத்தான் எழுதியிருக்கிறேன். விமர்சனக்கருத்துக்களாக எழுத என்னால் முடியாது. அப்படிப்பட்ட வாசிப்பு இதற்கு அளிக்கப்படமுடியாது. இது கரைபவர்களுக்கான நாவல்.

வணக்கங்கள் ஜெ

அருண் குருநாதன்

மறுபிரசுரம்/ Jan 27, 2016 

நீலம் மலர்கள்

நீலம் யாருக்காக?

நீலம் வரைபடம்

கிருஷ்ண சிம்மம்

நீலமும் இந்திய மெய்யியலும்

குழலிசை

சிம்மதரிசனம்

இணையும் கண்ணிகளின் வலை

குருதியின் ஞானம்

ராதையின் உள்ளம்

 

==============================

நீலம் மலர்ந்த நாட்கள் 3

நீலம் மலர்ந்த நாட்கள் 2

நீலம் மலர்ந்த நாட்கள் 1

 

============================

 

நீலம் கடிதங்கள்

முந்தைய கட்டுரைசிங்கை நாவல்பட்டறை- குறிப்புகள்
அடுத்த கட்டுரைஅஸ்வமுகி