இன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.
நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார்.
உண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை நான் ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.
முழுமகாபாரதத்தையும் நாவலாக எழுதும் வெண்முரசு தொடங்கியபோது அந்தப் பெருமுயற்சியை இந்தியா முழுக்கக் கவனப்படுத்தவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினர்.அதற்கிணையான இலக்கிய முயற்சி மட்டுமல்ல சமானமான ஒரு பண்பாட்டுநடவடிக்கைகூட இன்று உலகமெங்கும் இல்லை.
அதற்காக மீண்டும் பத்மஸ்ரீ விருதுக்கான முயற்சிகளை நண்பர்கள் முன்னெடுத்தனர். உண்மையில் அதை எனக்குத்தெரியாமலேயே செய்திருக்கிறார்கள். பத்மஸ்ரீ விருது அதை இந்தியாவெங்கும் கவனப்படுத்தும் என்று எண்ணினர். மணிரத்னம் உள்ளிட்ட பலர் இதற்காக என்னை பரிந்துரைசெய்திருக்கின்றனர்.
நான் அதை அறிந்தது அம்முயற்சி பரவலாகக் கசிந்து அதற்கு எதிராக எழுந்த கசப்புகள் வழியாகத்தான். என் நேர்மையை அவதூறுசெய்யும் செய்திகள் முன்னாள்நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டபோது அவர்களின் உள்குழு விவாதங்கள் வழியாகவே அதை அறிந்தேன்
நண்பர்களிடம் விசாரித்தபோது இதற்கான முயற்சிகளைப்பற்றி அறிந்துகொண்டேன் . முயற்சிகள் என்றால் என் பங்களிப்பைப்பற்றிய ஒரு விரிவான குறிப்பும் வெண்முரசின் ஐம்பது அத்தியாயங்களின் மொழியாக்கமும்தான். மகாபாரதம் யானைபோல, அதற்கான வழிகளை அதுவே உருவாக்கிக்கொள்ளும். அதை வாசித்த அத்தனைபேரும் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்தனர் என்பதே வழிகளை எளிதாக்கியது.
ஆனால் தமிழ்ச்சூழலில் எழுந்த அவதூறுகளால் கசந்தே இவ்வரசிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் இவ்வரசின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்றும் அறிவித்தேன். அலர்கள் மட்டுப்பட்டன.
சென்றசிலநாட்களுக்கு முன் மாத்ருபூமி மலையாள இதழில் என்னுடைய மிகநீளமான ஒரு தலைப்புப் பேட்டி வந்தது. அதில் வெண்முரசு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருந்தது. அது பத்மஸ்ரீ விருதுக்கு ஒரு காரணம் ஆகியது
திரு சௌகானிடம் நான் விருதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறேன் என அறிவித்தேன். அதிர்ச்சியுடன் “எண்ணிப்பார்த்துதான் சொல்கிறீர்களா?” என்றார். “இது பிரதமர் அளிக்கும் விருது அல்ல. அரசு அளிக்கும் விருது அல்ல. நூறுகோடிபேர் கொண்ட இந்தத்தேசம் அளிக்கும் விருது” என்றார். “ஆம் பிற அனைவரையும் விட நான் அதை அறிவேன். ஆனாலும் நான் ஏற்கமுடியாது. ஏனென்றால் என் கருத்துக்களின் நேர்மை ஐயத்திற்கிடமாவதை விரும்பமாட்டேன்” என்றேன். “நான் வருந்துகிறேன்” என்று சொல்லி அவர் வைத்துவிட்டார்.
நான் மறுக்கும் அடிப்படை இதுதான். என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன். இலக்கியத்தின் அழகியல்மையநோக்குமேல், அதன் மானுடம்தழுவிய ஆன்மிகத்தின்மேல், கம்பன் முதல் காளிதாசன் வரை தாகூர் முதல் ஜெயகாந்தன் வரை நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம். நவீன இந்திய தேசியத்தின்மேல், இந்துமெய்யியல்மேல், என் குருமரபாக வந்த ஞானத்தின்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதிவருகிறேன்.
கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு. இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்
இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.
விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். என் தரப்பைச் சொன்னபோது “இவர்களுக்காகவா இந்த முடிவு? உங்கள் முப்பதாண்டுக்கால இலக்கியப்பங்களிப்பை மிக எளியமுறையிலேனும் இவர்களால் அங்கீகரிக்கமுடிந்திருக்கிறதா? உங்கள் எச்செயலையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? நீங்கள் இப்படி ஒருமுடிவை எடுத்ததை ரகசியமாகக் கொண்டாடுவார்கள். வெளியரங்கில் இதை மேலும் அவதூறுசெய்துதான் எழுதுவார்கள். எந்தக்கருத்தியலாலும் அல்ல, வெறும் பொறாமையால் மட்டுமே செயல்படும் கூட்டம் அது. ஒரு படைப்பை உருப்படியாக எழுதியவனின் சொற்களை மட்டும் நீங்கள் கருத்தில்கொண்டால் போதும்” என்று ஒரு நண்பர் கொதித்தார்.
அதுவும் உண்மையே. ஆனால் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல, அலர் என்பது ஒரு சமூகத்தின் ஒருபகுதியின் கூட்டான குரல். அது கருத்துச்செயல்பாட்டை மறைக்கும் வல்லமை கொண்டது. மேலும் எதிரிகள் அல்ல நண்பர்களென நான் அறிந்தவர்களின் அவதூறும் கொக்கரிப்புகளுமே என்னை பெரிதும் புண்படுத்தியவை.வெண்முரசு என்றுமிருக்கும். இன்று எழுதப்படும் ஒருவரியும் எஞ்சாத காலத்திலும். தமிழ்இலக்கியச் சமூகம் வெண்முரசு போன்ற ஒரு படைப்பு வெளிவரும்போது அதை எப்படி எதிர்கொண்டது என்பது இதன்மூலம் வரலாறாக ஆகட்டும்
என் மனைவிக்கும் மாமனாருக்கும் மாமியாருக்கும் மிகமிக வருத்தம். அண்ணா என்ன சொல்வாரென்றே தெரியவில்லை. மிக எளிய குடியில் கிராமத்தில் பிறந்த ஒருவனுக்கு தேசத்தின் அங்கீகாரம் என்பது அவனுடைய குடும்பத்தின், உறவுக்கிளைகளின் வெற்றியே.நான் அதை மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
அத்தனைக்கும் மேலாக எனக்கும் இதில் பெரும் வருத்தம் உண்டு. நான் இந்தத் தேசத்தை ஒரு பெரிய பண்பாட்டுவெளியாக எண்ணக்கூடியவன். என் பத்தொன்பதாவது வயதுமுதல் வருடம்தோறும் பெருந்தாகத்துடன் இந்நிலத்தில் அலைபவன். இதன் நிலப்பரப்பும் மலைகளும் நதிகளும் விதவிதமான மக்கள்முகங்களும் என்னைப்பொறுத்தவரை தெய்வத்தோற்றங்களே
இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.
****
இறுதியாக
பத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
சில விளக்கங்கள்
1. இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைப்பாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன்.
2. மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.
3. மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணை வரையிலும் இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள்.
4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல.
இதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி
ஜெ