அன்பார்ந்த ஜெயமோகன் ,
வணக்கம். கல்யாணம் கட்டி கொடுக்கிற வயதில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு (என் வயது 53) ஏதோ வாசகர் சந்திப்பாம், இவர் போறாராம், சரியான ஜெய மோகன் பித்து பிடித்து அலையுது! என்ற என் மனைவியின் முணுமுணுப்பிக்கிடையே இதை இரவு 11 மணிக்கு எழுதுகிறேன். அது ஏன் இந்த வயசுலே புதிய வாசகர் என உங்கள் புருவங்கள் சிவாஜி பாணியில் உயர்வது என்னால் உணர முடிகிறது. காரணம்… ஏதோ காரணம் இல்லாத காரணத்தால் உங்கள் நூல்களைத் தொடாமலே விலகிய காலம் இருந்தது. நீங்களே உங்கள் கீதை உரையிலே சொல்லியது போல ஒரு தருணம் வந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன் தற்செயலாக நூலகத்திலிருந்து கிடைத்த “சங்க சித்திரங்கள்” என்ற நூல்!.. “டக்” கென்று ஒரு திறப்பு திறந்து கொண்டது. ஒரு திறப்பு அல்ல. பழைய புராண படங்களில் வருவது போல வைகுண்டவாசனைக் காட்டும் முன் பல கதவுகள் படார் , படார் என திறக்குமே அது போல பல திறப்புகள். சட்டாம்பி ஸ்வாமிகள், நாராயணகுரு, நடராஜகுரு ,குரு நித்யா என ஒரு திறப்பு! அதன் வழி Autobiography of Absolutist, Love and Blessings, Athmobavathesam என ஒரு “திறப்பு”!… அது வழி காரி டேவிஸ், Oliver Sacks, Spears, என ஆளுமைகளின் அறிமுகம்.
இயல்பாகவே நான் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும், பித்து பிடித்து அலையும் நபர். காட்டு யானைக்கு கரும்பு காட்டை கை காட்டி விட்ட கதை தான் ! அதிலிருந்து , ஏழாம் உலகம், அறம் ,இவர்கள் இருந்தார்கள் , சு .ரா .ஒரு நினைவோடை லோகிததாஸ், மாதவன், ரப்பர், இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், உண்மை சார்ந்த உரையாடல், முன்சுவடுகள், எழதும் கலை, விஷ்ணு புரம், என வீட்டில் எங்கெங்கு நோக்கினும் சக்தியடா என்பது போல எங்கும் உங்கள் நூல்கள். அது மட்டுமல்ல தினம் தினம் இணையத்தில் 3 – 4 மணி நேரம் உங்கள் தளத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து கழுத்து, முதுகுவலியும். ஏனெனில் இழந்து போன காலங்களை சரி செய்து கொள்ள வேண்டுமல்லவா? (அது தான் என் மனைவியின் முணு முணுப்புக்கு காரணம்)
உங்கள் கரங்கள் நீண்டு தொடாத துறைகளே இல்லை. கூறாத கூரான கருத்துக்களே இல்லை. ஓவியத்தைப் பற்றி விவேகானந்தர் கூறியது, அயன் ரான்ட் பற்றி, நவீன வேளாண்மை பற்றிய கறாரான விமர்சனம் என்று! எப்படி சார், உங்களது ஹைபோதலமிஸ் கொள்ளளவு மட்டும் உலகளவாய் உள்ளது ? Simply Hats Off U சார்! பி .எ .கிருஷ்ணன் சார் கூட நீங்கள் படிக்கும் வேகத்தைப் பார்த்து ஒரு மடலில் பெருமையாக சொல்லியிருப்பார் . சு.ரா. கூறுவதாக கூறுவீ ர்கள். ஒரு எழுத்தாளரை சந்திக்கும் முன் அவர் எழுதிய படைப்புகளை படித்திட வேண்டும் என ! ஆசான் நாராயணகுரு கூட்டிய உலக சமய மாநாட்டில் “அறிதலுக்கான – அறிவிப்புக்களுக்கான ” ஒரு சந்திப்பு என்று அறிவிப்பார். என்னை பொறுத்தவரை இது “அறிதலுகாண “சந்திப்பாகவே உணர்கிறேன் . காவல் கோட்டம், அம்மா வந்தாள், என ஒவ்வொரு நாவல்களையும் உங்கள் விமர்சனங்களையும் பார்த்துக் கொண்டு படிக்கும் போது அது கட்டும் களையே வேறதான் .
பதேர் பாஞ்சாலி படத்தில் எனது மகளின் வயதை ஒத்த துர்கா ஏன் மணிமாலையை ஒளித்து வைத்தாள் என படம் பார்க்கையில் புரியவில்லை. உங்களை படித்த பின்னே புரிந்தது புரிந்த பின்னர் கண்ணீர் சிந்த வைத்தது (உண்மையிலேயே). இதையெல்லாம் நேரில் தான் சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் அதுவரை என் மண்டையும் மனதும் தாங்காது உடைந்து போய் விடும் என உணர்ந்ததினால் இப்போதே எழுதி விட்டேன் .
அன்புடன்
ஜெகந்நாதன்
அன்புள்ள ஜெகன்னாதன்
Better late than never என்று சொலவடை உண்டு. வருக சந்திப்போம். நாராயணகுருவும் நடராஜகுருவும் நித்யாவும் இருக்கும் இடம் ஊட்டி. அங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி
ஜெ
அன்புள்ள ஜெ சார்
வெண்முரசு வாசகனாக நான் உங்களைச் சந்திக்கவேண்டுமென மிகவும் ஆசைப்பட்டேன். வேலைநிமித்தமாக அந்தத்தேதிகளில் நான் பூனா செல்லவேண்டியிருக்கிறது. அதை நினைத்து மிகவும் வருந்தினேன். உங்களை ஒருமுறை வளசரவாக்கத்தில் சந்திக்கவந்தேன். அப்போது நீங்கள் கிளம்பிச்சென்றுவிட்டீர்கள். நான் உங்களிடம் இருமுறை கைகொடுத்திருக்கிறேன். ஆனால் சந்தித்துப்பேசமுடிந்ததில்லை
அதிகமாக ஏதும் பேசுவதற்கு கிடையாது. நான் வெண்முரசு வாசகன். பூரிசிரவஸுடன் என்னை மிகவும் அடையாளம் கண்டுகொண்டேன். நான் அவனேதான். அவனுடைய எல்லா தயக்கமும் எனக்கு உள்ளது. அதைத்தான் சொல்வேன் என நினைக்கிறேன். அல்லது இரவுநாவலின் நாயகன் கதிர் நான். எனக்கு ஒரு தனிமை உள்ளது. ஆனால் நான் அவனைப்போல தைரியசாலி இல்லை
நான் இரவுநாவல்தான் முதலில் வாசித்தேன். என் அலுவலகத்தில் மூத்ததோழி அதன் பிடிஎஃப் வடிவத்தை எனக்குத்தந்தார்கள். அதன்பின்னர்தான் உங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இரவு ஒரு தொடக்கம்தான் என்று எனக்குத்தெரியும். இரவு நாவலில் இரவு வர்ணனைகள் சிறப்பானவை. ஆனால் கமலா இறந்தபின்னர் வரும் அந்த மனஓட்டங்கள்தான் அதை கிளாஸிக் ஆக்குகின்றன. ஆனால் பின் தொடரும்நிழலின் குரலோ வெண்முரசோ அதையெல்லாம் உள்ளடக்கிய கடல்போல
எல்லாவற்றையும் பேசவேண்டும். நேரம் அமையும் என நினைக்கிறேன். சந்திக்கமுடியாது ஏங்கும் பலபேர் இருப்பார்கள் நானும் அதில் ஒன்று
சத்யநாராயணன்
அன்புள்ள சத்யா
நலம்தானே
மறுமுறை சந்திப்போம். அதற்குள் வெண்முரசு மேலும் வளர்ந்திருக்கும்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நான் மிகுந்த பதற்றதுடன் இந்த கடிதத்தை எழுதுகின்றேன். நான் ஒரு ஆய்வுமாணவன் என்பதால் எனது இணைய இணைப்புக்கும் எனது கணினிக்கும் முழுக்க பல்கலையை சார்ந்துள்ளேன். அதனால் தான் என்னால் உடனே மெயில் அனுப்பமுடியவில்லை, நேற்றே நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு எனது தகவல்களை மின்னஞ்சல் செய்துவிட்டேன். கடந்த நான்கு வருடங்களில் ஒரு நாள் கூட உங்கள் உங்கள் சொல் இல்லாமல் கடந்ததில்லை. எந்த சுழலிலும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற பதற்றம் தான் நேற்றிலிருந்து பற்றிக்கொண்டுள்ளது . உங்களைப் பணிந்து கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் அனுமதிக்க வேண்டுகின்றேன்
ராஜேஷ் கண்ணன்
அன்புள்ள ராஜேஷ்
ஏற்கனவே நாற்பத்தைந்துபேர். முப்பதைந்துபேருக்குத்தான் அங்கே வசதி. சரி, வருக. பார்ப்போம்
ஜெ.