அன்புள்ள ஜெ ,
“புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை” பதிவு படித்தேன். வாசித்தப்பின் மிகுந்த புத்துணர்ச்சி. ஏன் என்று தெரியவில்லை. இலக்கிய வாசிப்பின் தொடக்க நிலையில் நிற்கிறேன். இதுவரை உங்களின் படைப்புகளில் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்”, “புல்வெளி தேசம் “, “நலம் – சிலவிவாதங்கள்”, “சிலுவையின் பெயரால்”, “அறம் சிறுகதைகள் ” படித்துள்ளேன். இது உங்களுக்கு சாதரணமாக தெரியலாம் ஆனால் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மன உலகை திறந்தது.
போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, பெரும் கனவுகள் கனவுகளாக மட்டுமே மாறிவிடுமோ என்ற அச்சம். உங்களிடம் நிறைய பேச வேண்டும், ஒரு குழந்தை போன்று உங்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். இன்றே கனவு காண ஆரம்பித்துவிட்டேன் .
இலக்கியம், சினிமா தவிர்த்து உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க உள்ளேன். என்னுடைய “SLR” கேமராவில் உங்களை படம் பிடிக்க ஆசை. உங்களை மட்டும் தான். Candid Potrait Shots. உண்மையை சொன்னால் இதுவரை நான் பார்த்த உங்களின் புகைபடங்கள் – புத்தக பின் அட்டையில் இருக்குமே அனைத்துமே amaterurish shots தான். உங்களின் ஒரு நல்ல portrait composition எடுக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்.
—
பிரவீன் பிரசன்னா
அன்புள்ள பிரவீன்
வருக
படம் எடுக்கலாம். ஆனால் போஸ் எல்லாம் கொடுக்கமுடியாது.சரியா?>
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் சில வருடங்களாக உங்கள் பதிவுகளை படித்து கொண்டு வருகிறேன், ஆனால் இன்று தான் உங்கள் அறிமுக பக்கத்தை படிக்கும் ஆர்வம் வந்தது. இது ”சென்ற காலங்கள்” என்ற பதிவை படித்த தால் வந்து இருக்கலாம்.
எனக்கு தெரிந்த வரை இவ்வளவு நீண்ட தெளிவான அனைத்து உறவுகளையும் அவர்கள் விவரங்களையும் கொண்ட முதல் அறிமுக பக்கம் உங்களுடையது தான். இது போன்று என்னால் என்னுடய குடும்ப விவரங்களை எழுத முடியுமா? இன்றே முயற்சி செய்ய முடிவு எடுத்து உள்ளேன். (முதலில் காகிதத்திலாவது). உண்மையில் யாரும் இது போன்று எழுதுவது இல்லை என்றெ நினைக்கின்றென். இதை படித்தவுடன் எனக்கு தோண்றியது “ இது தான் நம்மை அறிமுக படித்திகெள்ளும் முறையாக இருக்க வேண்டும். இந்த தெளிவு பிறக்க உதவிய உங்களுக்கு நன்றி.
அன்புடன்.
உமாசங்கர்.
அன்புள்ள உமாசங்கர்
அறிமுகம் என்பது முழுமையாக இருக்கவேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் நான் சொந்தவாழ்க்கையைப்பற்றியும் விரிவாகவே எழுதியவன்
ஜெ
அன்புள்ள ஜெ சார்
ஊட்டிகூட்டத்திற்கும் ஈரோடு கூட்டத்திற்கும் வரவேண்டுமென ஆசைப்பட்டேன். நான் கல்லூரிமாணவன். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசிக்கிறேன். நான் முதலில் வாசித்தது காடு. அதன்பிறகு இரவு. இரவு நாவலை பிடிஎஃப் ஆக வாசித்தேன். காடு வாசித்தபின் நான் அதுவரை வாசித்தது போதாது என்று நினைத்தேன். அதன்முன் வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு, கடல்புரத்தில், கம்பாநதி, அசோகமித்திரனின் மானசரோவர், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை ஜானகிராமனின் மோகமுள், அம்மாவந்தாள் ஆகியவை நான் படித்த நல்ல நாவல்கள்.
அவற்றிலிருந்து என்ன வேறுபடுகிறது என்று பார்த்தேன். அவை கதையை ஓடவைக்கின்றன. என்ன நடக்கிறது என்று வாசிக்கமுடிகிறது. இவை அந்தந்த வரிகளில் உக்கார வைக்கின்றன. அந்தவரியைக் கடந்து அடுத்தவரிக்குப்போகவேண்டும். மொத்தமாக வாசித்தபின் எல்லாவற்றையும் நினைத்து எடுத்து ஒன்றாக ஆக்கவேண்டும். அதன்பிறகுதான் நாவல் நம் மனசுக்குள் நீடிக்கிறது. ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.மனதை சொல்வதிலுள்ள நுட்பமும் மனநாடகங்களை நேரடியாகவே மொழியில் சொல்லும் கவித்துவமும் எல்லாம் சேர்ந்து கடந்துபோகமுடியாத உலகமாக இதை ஆக்குகின்றன
அதன்பின்னர்தான் வெண்முரசு வாசித்தேன். மழைப்பாடலைத் தாண்டிவிட்டேன்..வெண்முரசு நீங்கள் எழுதுவதில் ஓர் உச்சம். அதை வாசித்து முழுமையாக்கவே முடியாது. காடு நாவலையே நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதிலுள்ள சங்க இலக்கிய அனுபவத்தை தனியாக கவனிக்கவேண்டு. வெண்முரசு முழுக்க பொயட்டிக் இமேஜ்களின் தொகுப்பு. அவற்றை பற்றி நான் என் வகுப்பில் சொன்னேன் [நான் ஆங்கில இலக்கியம் முதுகலை படிக்கிறேன்] உங்களை சந்திக்க ஆசை. மேமாதம் முடிந்தபின் நீங்கள் எங்கெ சந்திப்புவைத்தாலும் வந்துவிடுவேன்
சுரேஷ்குமார்
அன்புள்ள சுரேஷ்குமார்
அடுத்த சந்திப்பில் பார்ப்போம்.. என் படைப்புகளில் வெண்முரசு அதுவரை அடைந்தவற்றின் மொத்தம் என நானும் நினைக்கிறேன்
ஜெ