பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 5
கர்ணன் தனக்குப்பின்னால் “மூத்தவரே” என முனகிய குண்டாசியை திரும்பி நோக்காமல் சலிப்புடன் நடக்க சிவதர் அருகே வந்தபடி “உள்ளுணர்வுகளின் காற்றால் அலைக்கழிக்கப்படும் இறகு” என்றார். கர்ணன் சினத்துடன் திரும்பி “அதையும் அணிகொண்டுதான் சொல்ல வேண்டுமா?” என்றான். சிவதர் சிரித்து “எப்படி தவிர்ப்பது? நாமனைவரும் வாழ்வது ஒரு பெருங்காவியத்தின் உள்ளே அல்லவா?” என்றார். புருவம் சுருக்கி “என்ன காவியம்?” என்றான் கர்ணன்.
“நம்மனைவரின் வாழ்வையும் எங்கோ இருந்து கிருஷ்ணத்வைபாயன மகாவியாசர் ஒரு முடிவற்ற பெருங்காவியமாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் சூதர்கள். ஆகவே நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அவர் முன்னரே எழுதிக்கொண்டிருப்பதுதான்” என்றார் சிவதர். “உளறல்” என்று கர்ணன் கையசைத்தான். “சூதர்களுக்கு மாயங்களை அமைப்பதே வேலை. அவர்களின் வீண்சொற்கள் நம் சித்தங்களிலும் சிக்கிக்கொள்கின்றன.”
“இல்லை, நான் அதை உண்மை என்றே நம்புகிறேன். அவர் நாளை எழுதப்போகிறாரா நேற்றே எழுதிவிட்டாரா என்பதெல்லாம் முதன்மையான வினாக்கள் அல்ல. ஆனால் இவையனைத்தும் அக்காவியத்தின் நிகழ்வுகள் என்பதில் ஐயமில்லை. அதன் பல்லாயிரம் இயல்தகவுகளின் சிடுக்குகளில் உள்ளன நம் வாழ்க்கையின் வினாக்களும் விடைகளும்.”
“காவியங்களில் வாழ்வதெனும் கற்பனை ஷத்ரியர்களுக்கு மட்டும்தான் என நினைத்தேன்” என்றான் கர்ணன். “இல்லை அரசே, காவியம் கற்ற அனைவருக்குமே அந்த உளமயக்கு உள்ளது. காவியங்களில் நான் இருக்கப்போவதில்லை. இதோ ஒற்றைமுகத்தின் ஓராயிரம் வடிவமென எழுந்துள்ள இவர்களிலும் எவர் எஞ்சுவார்கள் என அறியேன். நீங்கள் இருப்பீர்கள். உங்கள் தோழர்களும் எதிரிகளும் இருப்பார்கள்.”
“ஏனென்றால் காவிய ஆசிரியன் வாழ்க்கையை பெரும்போர்க்களமென்று எண்ணுகிறான். அதில் நீங்களெல்லாம் பெருந்தேர்வீரர்கள். உங்களைக்கொண்டே அவை எழுதப்படும். உங்கள் தேர் ஊர்ந்துசெல்லும் வழியின் சிற்றுயிர்களே பிற மானுடர்கள்” என்ற சிவதர் புன்னகைத்து “உயர்ந்தோர் மாட்டு உயிர்க்கும் உலகை இளமையிலேயே நாங்கள் அறிந்துகொள்கிறோம்” என்றார்.
கர்ணன் “இது என்ன பேச்சு? வீண்…” என கையை அசைத்தான். “ஆனால் இத்தகைய எண்ணங்களை நாம் அனைவரும் விரும்புகிறோம். ஓர் இடர் எழுகையில் உரிய தீர்வுக்குச் செல்வதைவிட பொருத்தமான ஒப்புமையை அல்லது அணிச்சொல்லை அடைவதைப்பற்றித்தான் நாம் கவலை கொள்கிறோம். கிடைத்ததும் வென்றுவிட்டதாக எண்ணி உவகையில் துள்ளுகிறோம்.” திரும்பி குண்டாசி இருந்த இடத்தை நோக்கிய கர்ணன் “இந்தக் குடிகாரமூடனும் காவியங்களுக்குள் சென்று விழுந்ததை எண்ணினால்தான் வியப்பாக இருக்கிறது” என்றான்.
“கற்கும் நூல்களில் இருந்தே நமது மொழி அமைகிறது அரசே. இதோ இப்பெரும் ஏரியும் கோட்டையும் அதற்கப்பாலுள்ள அரண்மனைத் தொகையும் அனைத்துமே ஒப்புமைகளாகவும் உருவகங்களாகவும் சொல்லணிகளாகவும் என் கண்களுக்கு தென்படுகின்றன” என்றார் சிவதர். “சொல்லப்போனால் நானேகூட உங்களுடன் சேர்க்கப்பட்ட ஓர் அணியசைச் சொல் மட்டுமே.” கர்ணன் சிரித்து “ஆம், எளிய சொற்றொடரில் எண்ணம் எடுப்பதற்கே உளப்பழக்கம் அற்றவராகிவிட்டோம்” என்றான்.
ஏரிமேல் நாரைகள் வெண்தாமரை மலர்த்தொகை போல கொத்தாக நீந்திச்சென்றன. அவற்றின் கால்கள் நீருக்குள் துழாவுவதை பார்க்கமுடியவில்லை. ஆகவே அவை ஒழுக்கில் இழுத்துச் செல்லப்படுவதுபோல் தோன்றின. சிவதர் சிரித்து “அவையும் அணிகளாக பொருள்கொள்கின்றன என் நெஞ்சில்” என்றார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன் புன்னகையுடன். “நாம் வேறென்ன பேசிக்கொள்ளமுடியும்?”
“பராசரரின் புராணமாலிகையில் வரும் உவமை. உள்ளம் என்பது அன்னத்தின் கால். அது இயங்குவதை அன்னம் அறியாது.” கர்ணன் நகைத்து “ஆம்” என்றான். சிவதர் “இப்போது சிந்துநாட்டரசர் செய்ய வேண்டியதென்ன என்று அவரிடம் சொல்ல வேண்டியதில்லை” என்றார். “அவர் எந்நேரமும் துரியோதனருடன் இருக்கவேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும்.”
கர்ணன் “எந்நேரமும் என்றால்…?” என்றான். “எந்நேரமும்” என்று சிவதர் அழுத்தினார். “ஒரு தருணத்தில்கூட பாஞ்சாலத்து அரசி துரியோதனரை தனிப்பட்ட முறையில் சந்திக்கலாகாது. அவர்களிடையே ஒரு சொல்லாடல்கூட நிகழலாகாது.” கர்ணன் ஏதோ சொல்லவந்தபின் தலையசைத்தான். “சொல் எனும் நாகப்பல்…” என சிவதர் தலையை அசைத்தார்.
கர்ணன் புருவம் சுருங்கி நோக்க “அரசே, இங்கிருந்து சென்று மீள்வது வரை விழிப்பிலும் துயிலிலும் அரசர் துரியோதனர் அருகே ஜயத்ரதர் இருப்பாரென்றால் கணிகர் சொன்ன அத்தருணத்தைக் கடந்து இங்கு மீள முடியும்” என்றார் சிவதர். கர்ணன் அவர் கண்களை சிறிதுநேரம் நோக்கியபின் “ஆம், உண்மை” என்றான். பின்பு முகம்விரிய நகைத்து “ஜயத்ரதன் ஒன்றையும் தவறவிடமாட்டான். ஏனென்றால் அவன் இன்னொரு அரசநாகம்” என்றான். சிவதர் இப்போது புரிந்துகொண்டு “ஆம்” என நகைத்தார்.
“ஆனால் இதெல்லாம் தேவையற்ற முன்னெச்சரிக்கைகள் என்றே என் உள்ளம் சொல்கிறது” என்றான் கர்ணன். சிவதர் “நாம் செய்யக்கூடுவது இது ஒன்றே. இதை மீறி அடுத்த காயை தெய்வங்கள் நகர்த்தக்கூடும்” என்றார். கர்ணன் சினத்துடன் திரும்பி “சிறந்த வழியொன்றை சொல்கிறீர்கள். அதன் பிறகு அதை நீங்களே தோற்கடிக்கிறீர்கள்” என்றான். “அது சிறந்த வழிதான். ஆனால் தெய்வங்களை தடுக்கும் வழி அல்ல. அதைத்தான் சொன்னேன்” என்றார் சிவதர். “இனி தாங்கள் எதுவும் சொல்லவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டு கர்ணன் மறுபக்கமாக திரும்பிக்கொண்டான்.
மறுகரையில் நாட்டப்பட்டிருந்த மூங்கில்மேல் சிந்துநாட்டின் கரடிக்கொடி பறந்துகொண்டிருப்பதை பார்த்தான். அவனை நோக்கி ஓடிவந்த சிந்துநாட்டு காவலர்தலைவன் தலைவணங்கி “அரசர் நீர்விளையாடுகிறார் அங்கநாட்டரசே” என்றான். கர்ணன் “சிந்துநாட்டரசரை ஓர் அலுவலுக்காக பார்க்க வந்தேன்” என்றான். அவன் தயங்கி “எவரையும் அருகணையவிடவேண்டாம் என எனக்கு ஆணை” என்றான். “நான் அழைத்ததாக சொல்” என்றான் கர்ணன். சிவதர் “வேண்டாம், நாங்களே சொல்லிக்கொள்கிறோம்” என முன்னால் சென்றார்.
“நான் வந்திருக்கலாகாதென உணர்கிறேன் சிவதரே” என்றான் கர்ணன். “எளிய செய்தி. அதைச்சொல்ல நானே ஏரிக்கரைவரை வரவேண்டுமா?” சிவதர் “இல்லை, இக்களியாட்டத்தை தாங்கள் காண்கிறீர்கள் என பீமசேனர் உணரவேண்டும். அங்கு சென்று காத்திருப்போம். நாம் காத்திருப்பது அக்களியாட்டத்தை முடித்து வைக்கும்” என்றார்.
“ஜயத்ரதர் மேலேறி வந்ததும் அவரிடம் தனியாக அவர் இந்திரப்பிரஸ்தத்திற்கு துரியோதனருடன் துணையாகச் செல்லவேண்டும் என்று கோருங்கள். நாம் சொல்வதென்ன என்பதை தொலைவில் நின்று நோக்குகையிலேயே இளைய பாண்டவர் உணர்ந்து கொள்வார். அந்தச் செய்தியுடன் அவர் இந்நகர்விட்டு நீங்க வேண்டும்.”
“இது எதுவும் எனக்குப் புரியவில்லை” என்றான் கர்ணன். “பீமசேனர் நுட்பமானவர். அவர் இங்கு வந்திருக்கும் பாஞ்சால அரசியின் வாயும் செவியும் விழியும்” என்றார் சிவதர். “நீங்கள் ஜயத்ரதருக்கு எத்தனை நெருக்கமென அவர்கள் அறிந்தாகவேண்டும். நீங்கள் அவரே என அரசி எண்ணவேண்டும்.”
அவர்கள் அணுகும்தோறும் மேற்குக்கரையில் ஏரிநீர்ப்பரப்பு கொந்தளித்துக் கொண்டிருப்பதை காணமுடிந்தது. “மீன்கூட்டம் கரையணைந்தது போல” என்றார் சிவதர். அதையே கர்ணனும் எண்ணிக் கொண்டிருந்தான். பல்லாயிரம் மீன்கள் கரையணைந்து துள்ளி விழுந்து வால்சுழற்றி அறைந்து சிறகுகளை வீசிஎழுவதுபோல அப்பகுதியே கொப்பளித்து அலைபாய்ந்தது. அங்கு மட்டும் சுழல் காற்றுகள் ஏரி மேல் படர்ந்தது போல. அல்லது மேலிருந்து பெரும் பாறைகள் அங்கே உதிர்வது போல. அங்கே எழுந்த கூச்சல்களும் சிரிப்பொலிகளும் எதிர்ப்பக்கமிருந்த கரிய பெருங்கோட்டையில் மோதி திரும்பவந்தன. காற்றில் சிதறி காதருகே சில சிதர்கள் ஒலித்துப்பறந்தன.
கரையிலிருந்து கூட்டங்கூட்டமாக இளைய கௌரவர்கள் நீரில் பாய்ந்தனர். நீர் வெடித்து பளிங்குச்சில்லுகளாக பரவி உருவான நீலவாய் அவர்களை அள்ளி விழுங்கியது. நீர்ப்பரப்பை பிளந்து பிறந்து வந்து தலைசிலுப்பி வாயில் அள்ளிய ஒளியை உமிழ்ந்து கூச்சலிட்டனர். நீரின் அலைவிளிம்பிலிருந்து ஆமைக்கூட்டங்கள்போல கரைநோக்கி தவழ்ந்தேறி எழுந்து கரைமேல் ஓடினர். நீரில் பீமன் நீந்திக்கொண்டிருப்பதை தொலைவிலிருந்தே அவன் கண்டான். அவனைச் சூழ்ந்து சென்ற இளையகௌரவர்கள் அவன் தோள்மேல் ஏறியும் கடந்து தாவிக்குதித்தும் அவன் முதுகின்மேல் மிதித்து எம்பிவிழுந்தும் கூச்சலிட்டு நகைத்துக் கொண்டிருந்தனர்.
கர்ணன் “அவனே இவர்களுக்கு சரியான விளையாட்டுத் தோழன்” என்றான். “ஆம், நானும் அதைத்தான் நினைத்தேன். பிறிதெவரும் சலிக்காமல் இம்மைந்தருடன் இத்தனைநேரம் ஆடமுடியாது. அவர் இவர்களில் ஒருவர்.” அவர்கள் கரையை அடைந்ததும் ஜயத்ரதனின் அணுக்கர் சுப்ரர் அருகே வந்து தலைவணங்கினார். “நாங்கள் சிந்துநாட்டு அரசரிடம் சில சொற்கள் பேச விரும்புகிறோம். அரண்மனைக்குச் சென்றோம். அவர் இங்கிருப்பதாக சொன்னார் அமைச்சர். இன்றியமையாத மந்தணம் என்பதனால் இங்கே வந்துவிட்டோம்” என்றார் சிவதர்.
“அவர் அதோ நீர்கொண்டாடிக் கொண்டிருக்கிறார்” என்றார் சுப்ரர். அப்போதுதான் ஜயத்ரதனும் கௌரவர்களுடன் இணைந்து பீமனுடன் களியாடிக் கொண்டிருப்பதை கர்ணன் கண்டான். “அவர்களுடன் கலந்துவிட்டார்” என்றார் சிவதர். “ஆம், அவர் விழைந்ததும் அதுவே” என்றான் கர்ணன். சுப்ரர் புன்னகைசெய்தார்.
கர்ணனைக் கண்ட சுஜாதன் நீரிலிருந்து கொப்பளித்தெழுந்து கைகளை நீட்டி “மூத்தவரே” என்று கூவியபடி மீண்டும் நீரில் விழுந்து மறைந்தான். “பெரிய தந்தையே” என அவனைப்போலவே எம்பியபடி லக்ஷ்மணன் கூவினான். “பெரீந்தையே! பெரீந்தையே!” என்று நூற்றுக்கணக்கான சிறுதொண்டைகள் கூச்சலிட்டன.
கரைகளில் நின்றிருந்த அத்தனை இளையகௌரவரும் கர்ணனை நோக்கி கைவிரித்து கூச்சலிட்டபடி ஓடிவந்தனர். “பெரீந்தையே! நான் நீரில் குதித்தேன்… நான் யானைபோல நீரில் குதித்தேன்! பெரீந்தையே!” எவரும் ஆடை அணிந்திருக்கவில்லை. முன்னால் வந்த மூவர் கர்ணனை முட்டித்தள்ள கர்ணன் அவர்களை அவ்விசையாலேயே பற்றி சுழன்று நின்று சிரித்தபடி சிவதரிடம் “மீன்கள் போலவே முட்டுகிறார்கள் சிவதரே” என்றான்.
மேலும் மேலும் அவர்கள் வந்து அவனை முட்ட அவர்களைச் சுழற்றி திருப்பி நீரை நோக்கி விசிறினான். தவளைகள் போல காற்றில் கைவிரித்து பறந்துசென்று அவர்கள் நீரில் உதிர்ந்தனர். பிற இளையவர் “என்னையும்! என்னையும்! பெரீந்தையே என்னையும்!” என்று கூச்சலிட்டபடி அவன் மேல் பற்றி தொற்றி ஏறிக்கொண்டனர். அவன் ஒவ்வொருவரையாக தூக்கிச் சுழற்றி நீரில் வீசினான். அதையே ஓர் ஆடலாக எடுத்துக்கொண்டு மேலும் மேலும் என இளையகௌரவர்கள் வந்து கொண்டிருந்தனர்.
நீரில் நீந்திக் கொண்டிருந்த பீமபலன் மல்லாந்து “மூத்தவரே, வாருங்கள்! நீரில் பாயுங்கள்!” என்றான். “இல்லை, நீராட வரவில்லை” என்றான் கர்ணன். “நீராட வராவிட்டாலும் நீராடலாமே” என்றான் நிஷங்கி. அருகே புரண்டு எழுந்த வாலகி “நான் மறுகரை வரை சென்று வந்துவிட்டேன் மூத்தவரே” என்றான்.
துரியோதனனையும் துச்சாதனனையும் தவிர கௌரவர்கள் அத்தனைபேரும் அங்கு நீராடிக்கொண்டிருப்பதை கர்ணன் கண்டான். அத்தனைபேரும் ஏதோ ஒருவகையில் பீமனை மையம் கொண்டே நீர்விளையாடினர். பீமன் அவர்களை நீரில் பற்றி அழுத்தி மேலேறித்தாவினான். அவர்கள் பீமன் மேல் மிதித்தேறி கைவிரித்து துள்ளி ஆற்றில் சுழன்று விழுந்தனர். பீமன் அவர்களை கூட்டமாக இழுத்தபடி கரைவந்து அப்படியே ஒரு மானுடச்செண்டு போல் மேலேறினான்.
“அஹ்ஹஹ்ஹா! அவருக்கு நூறுதலை! அவர் இலங்கையரசர் ராவணப்பிரபு” என்று கைநீட்டி ஊர்ணநாபன் சிரித்தான். பீமன் சுழன்று அவர்களை நாலாபக்கமும் உதிர்த்தபின் ஓடிச்சென்று கைதூக்கி துள்ளி நீரில் விழ அவர்கள் அவனுக்கு மேல் குதித்து ஒவ்வொருவராக விழுந்தனர். ஏரி கொப்பளித்து கரையில் அலைகள் வந்து மோதி மணலை அடர்த்தி நீரில்விழச்செய்தன.
“கொன்றுவிட்டோம்! மூத்தவரை கொன்றுவிட்டோம்” என கைவீசி சிரித்தபடி நாகதத்தன் கூச்சலிட்டான். “கொன்றுவிட்டோம்! கொன்றுவிட்டோம்” என்று உக்ரசேனனும் சத்யசந்தனும் கூவினர். “பெரீந்தை கொன்றோம்! பெரீந்தை கொன்றோம்” என இளையகௌரவர் கிளிக்கூட்டம்போல கூவினர். அப்பால் சென்று எழுந்து பீமன் தலைதூக்கி சிரிக்க “வந்துவிட்டார்! பாதாளத்திலிருந்து வந்துவிட்டார்” என்று கூச்சலிட்டபடி அவனை துரத்திச் சென்றனர் உக்ரசேனனும் சத்யசந்தனும்.
“பெரீந்தை பாதாளம்! பெரீந்தை வந்துவிட்டார்!” என்று கூவினர் இளையவர்கள். பீமனை மகோதரனும் அப்ரமாதியும் ஒருபக்கம் செறுக்க அவன் மூழ்கி மறைந்தான். “பெரீந்தை பாதாளம்!” என்று இளையோர் கூவினர். “பெரீந்தை மீண்டும் கொன்றுவிட்டோம்” என்றான் ஒருவன். “பெரீந்தையே, பாதாளத்திலிருந்து வாருங்கள்” என்று ஒருவன் எம்பிக்குதித்தான்.
கர்ணனிடம் ஓடிவந்து “பெரீந்தையே, அந்தப்பெரீந்தை அவ்வளவு தூரம் செல்கிறார்” என்று ஒரு சிறுவன் சொன்னான். “அவரால் இந்த ஏரியை நான்குமுறை நீந்தமுடியும்” என்றான் அவன் பின்னால் ஓடிவந்த இன்னொரு பொடியன். “அவர் வானில் பறக்கிறார்” என்று ஒரு குழந்தை கூவினான். “அவர் அனுமன்” என்றான் இன்னொரு சிறுவன். “ஆம்” என்றான் கர்ணன்.
பீமன் நீரைப்பிளந்து திரிகளாக முகத்தில் தொங்கிய முடிக்கற்றைகளை நீர் சிதற பின்னால் தள்ளி கூச்சலிட்டு நகைக்க அவர்கள் பீமனை நோக்கி “பெரீந்தையே பெரீந்தையே” என்று கரையில் நின்று துள்ளி குதித்துக்கொண்டிருந்தனர்.
லக்ஷ்மணன் கர்ணன் அருகே வந்து “அத்தனை பேரும் அவரால் பித்துப்பிடித்தவர்களாகிவிட்டார்கள் பெரியதந்தையே. இனி அவர் எளிதில் இங்கிருந்து செல்ல முடியாது. சென்றுவிட்டாரென்றாலும் நெடுநாள் அவரைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார்கள்” என்றான். சுஜாதன் “அவரையே தங்கள் உண்மையான தந்தை என்று ஒருவன் சொன்னான்” என்றான். சிரித்தபடி “ஒருவேளை அது உண்மையாக இருக்கலாம்” என்றான் கர்ணன். அவன் என்ன சொல்கிறான் என்பது புரியாமல் சுஜாதன் “அவரிடம் நீங்கள் இனிமேல் என் தந்தையாக இருங்கள் என்று சம்பு சொன்னபோது பீமசேனர் ஆம் அவ்வாறே என்றார்” என்றான்.
லக்ஷ்மணன் ஓடிச்சென்று நீரில் பாய சுஜாதன் “இதோ நானும்!” என்றபடி அவனைத் தொடர்ந்து ஓடிச்சென்று காற்றில் எம்பி கைவீசியபடி நீரில் பாய்ந்தான். மேலும் சில குழந்தைகள் கர்ணனை நோக்கி வந்து “பெரீந்தையே, நீராட வாருங்கள்! நீராட வாருங்கள்!” என்று கைபற்றி குதித்தன. அவன் அவர்களை அள்ளி நீரில் வீசிவிட்டு “இப்போதல்ல” என்றான். உடனே மேலும் விசிறப்பட ஆவல்கொண்ட இளைய கௌரவர் “பெரீந்தையே, நான் தவளை! பெரீந்தையே, நான் தவளை!” எனக் கூவியபடி ஓடிவந்தனர்.
அப்பால் ஏரியில் அவர்கள் நின்றிருக்கும் திசையை நோக்கி பீமன் நீந்திவர கௌரவர்களும் இளையகௌரவர்களும் கூட்டமாக அவனை துரத்திவந்தனர். நீரில் ஒரு சுழி எழுந்து அணுகுவது போலிருந்தது. பீமனின் பெரிய கைகள் நீரை உந்த தலை எழுந்து எழுந்து அமைந்தது. தலையும் இரு கால்களும் மட்டுமே கொண்ட விந்தையான விலங்கொன்று நீர் மேல் நடந்து வருவதுபோல் தோன்றியது. அவனைத் தொடர்ந்து வந்த துஷ்பராஜயன் “விடாதீர்கள்… சூழ்ந்துகொள்ளுங்கள்” என்று கூவினான். விகடிநந்தன் “அவர் கரையேறமாட்டார்… எதிர்ப்பக்கமாக செல்லுங்கள்” என்று கூச்சலிட்டான்.
ஆனால் பீமன் கரையை நோக்கியே வந்தான். கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட கரைச்சரிவை அடைந்ததும் கரையில்நின்ற இளைய கௌரவர்கள் “பிடிக்கிறோம்! பெரீந்தையை பிடிக்கிறோம்” என்று கூவியபடி அவனை நோக்கி ஓடினார்கள். கர்ணனிடம் கன்மதன் “பெரீந்தையே, என் ஆடையை காணவில்லை” என்றான். “நீ ஆடையில்லாமல்தானே இருந்தாய்?” என்றான் கர்ணன். “நான் ஆடையை அங்கே நீரில் விட்டேன்” என்றான் கன்மதன். “பெரீந்தை என்னை இங்கே தொட்டு பாம்புக்குஞ்சே என்கிறார்.”
கர்ணன் தன் மேலாடையை அவனுக்கு அளிக்க அவன் அதை தன் இடையில் சுற்றியபடி “ஆடை இருக்கிறதே! பாம்புக்குஞ்சு இல்லையே!” என்று கூவியபடி பீமனை நோக்கி ஓடினான். பீமன் கரைமேல் ஏறி அவர்கள் ஒவ்வொருவரையாக தூக்கி நீரில் வீசிவிட்டு மேலே வந்தான். கன்மதனின் ஆடையைப் பற்றி இழுக்க அவன் “பாம்புக்குஞ்சு இல்லை! பாம்புக்குஞ்சு இல்லை!” என்று அலறினான். அவனை அப்படியே தூக்கி நீரில் வீசிவிட்டு அவன் கர்ணனை நோக்கி வந்தான்.
அவன் இடையில் அணிந்திருந்த புலித்தோலாடையிலிருந்து சொட்டிய நீர் வெண்கலத்தாலானவைபோல இறுகியிருந்த கெண்டைக்கால்களின் மீதும் முழங்கால் குச்சிமேலும் கணுக்கால்களின் மேலும் வழிந்தது. நீர் வழிந்த தோள்கள் வாழைத்தண்டு போல் மெருகுடன் ஒளிவிட்டன. தலையை சிலுப்பி கூந்தலிலிருந்து நீர்த்துளிகளை உதிர்த்தபடி இருகைகளாலும் நீவி பின்னால் விட்டான். கைகளிலும் தோளிலும் இருந்த நீர்த்துளிகளை தட்டிவிட்டபடி கர்ணனை நோக்கி வந்தான். கர்ணன் அவனைப் பார்த்ததும் அவன் ஏதோ சொல்லவிருக்கிறான் என்று உணர்ந்தவனாக மீசையை நீவியபடி நின்றான்.
அருகே வந்த பீமன் “தங்களை இன்று அரண்மனைக்கு வந்து சந்திப்பதாக இருந்தேன் அங்கரே. ஒரு செய்தி உள்ளது” என்றான். மீசையை நீவியபடி “வருக!” என்றான் கர்ணன். “இல்லை, அது அரசமுறைத்தூது அல்ல என்பதனால் அரண்மனைக்கு வருவதும் முறையல்ல. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்போது தாங்களே தேடி வந்திருக்கிறீர்கள். ஆகவே இதுவே தருணமென தோன்றியது” என்றான் பீமன்.
மெல்லிய உளப்பதற்றத்துடன் “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “தாங்களும் இந்திரப்பிரஸ்தத்தின் மங்கலப்பெருவிழாவுக்கு வரவேண்டுமென்பது பேரரசியின் அழைப்பு.” கர்ணன் பொருள்கொள்ளா விழிகளுடன் நோக்க “அரசரோ அரசியோ அல்ல, பேரரசி மட்டுமே தங்களை அழைத்திருக்கிறார்கள்” என்றபின் பீமன் அவன் கண்களை ஒருகணம் மட்டும் பார்த்துவிட்டு பார்வையை தாழ்த்தினான்.
“நன்று” என்றான் கர்ணன் உணர்ச்சியின்றி. “மார்த்திகாவதியின் பிருதையின் அழைப்பு அது. தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லப்பட்டது. தங்களிடம் இதோ அளிக்கப்பட்டுள்ளது” என்றபின் பீமன் தலைவணங்கி விலகிச் சென்றான். அவன் காலடிகள் மண்ணில் அழுந்தி மீள்வதை நோக்கியபடி கர்ணன் அசைவற்று நின்றான். தொலைவில் சித்திரவர்மன் “மூத்தவரே, நாங்கள் மீண்டும் மறுகரை நோக்கி செல்லவிருக்கிறோம்” என்றான். “மூத்தவரே, மறுகரை… வடக்குக்கரை” என்றான் துராதரன். “ஆம், செல்வோம்!” என்று கூவியபடி பீமன் அவர்களை நோக்கி ஓடினான்.
“பெரீந்தையை பிடித்துவிட்டோம்! பெரீந்தையை கொல்லப்போகிறோம்!” என்றபடி இளையகௌரவர்கள் பீமனைத் தொடர்ந்து ஓடினர். எதிரே வந்தவர்கள் அவனை மறித்து அவன்மேல் பாய்ந்தனர். மேலும்மேலும் இளைய கௌரவர்கள் அவன் மேல் கவ்விமூடினர். சில கணங்களிலேயே கௌரவர்களால் முற்றிலும் மறைக்கப்பட்டான். அத்தனை பேரையும் அள்ளியபடி ஓடிச்சென்று எம்பி அவர்களுடன் சேர்ந்தே நீரில் பாய்ந்தான். கூச்சலிட்டபடி அத்தனை பேரும் நீரில் விழுந்தார்கள்.
தலைகளாகச் சிதறி நீர் விட்டு தலைதூக்கி கைவீசி கூவியபடி அவர்கள் அவனைத் துரத்த மூழ்கி நெடுந்தொலைவு சென்று மேலெழுந்தான். கர்ணன் அவர்களை நோக்கியபடி மீசையை முறுக்கியும் கலைத்து நீவி மீண்டும் முறுக்கியும் நின்றான். அவன் குழல்கள் காற்றில் எழுந்தமைந்தன. நீரலைகள் அவன் விழிகளில் தெரிய அவை நீர்மைகொண்டவைபோல தெரிந்தன.
“நாம் செல்வோம்” என்றார் சிவதர். திடுக்கிட்டு மீண்ட கர்ணன் “ஆம்” என்றான். “நாம் இங்கு வந்திருக்கலாகாது” என்றார் சிவதர். “ஏன்?” என்றான் கர்ணன். “இங்கு வந்தது தங்கள் உள்ளத்தை பெருமளவுக்கு மாற்றிவிட்டது” என்றார். “ஆம், சிவதரே, இன்று இப்போது இவ்வாடை அனைத்தையும் களைந்து இவர்களுடன் சேர்ந்து களியாடுவதன்றி நான் விழைவது பிறிதொன்றுமில்லை” என்றான் கர்ணன்.