பரப்பியம்

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட நாள் யோசித்த பிறகு இன்று ஓர் அவசர உணர்வுடன் எழுதுகிறேன். இன்று ஃபேஸ் புக்கிலும்கூட பெருந்தேவி இதைக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். நீங்களும் உங்கள் வலைத்தளத்தில் மீண்டும் “பரப்பிலக்கியம்” குறித்து ஒரு கட்டுரையை தரவேற்றியுள்ளீர்கள்.

நீங்கள் பாபுலர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக “பரப்பு” என்ற வேர்ச்சொல்லை பயன்படுத்தி எழுதுவதை மிகுந்த மனச்சங்கடத்துடன் வெகுநாட்களாக கவனித்து வந்தேன். அதை நீங்களாக உருவாக்கினீர்களா, வேறெதும் சொல்லாடல் களத்திலிருந்து எடுத்தாள்கிறீர்களா என்று தெரியவில்லை. இப்போது அந்த பயன்பாடு பரவலாகி வரும் சாத்தியத்தை பார்க்கிறேன். என்னுடைய பணிவான வேண்டுகோள் நீங்கள் இந்தப் பயன்பாட்டைக் கைவிட வேண்டும் என்பதுதான். அதற்கான காரணத்தைக் கீழே கூறுகிறேன்.

பரப்பு என்ற சொல் ஒரு புள்ளியிலிருந்து விளிம்புகளை நோக்கிப் பரவுவதை குறிக்கிறது. இது செவ்வியல் கலைகளுக்கு வேண்டுமானால் சாத்தியம். வெகுஜன கலைகள், அதாவது பாபுலர் என்பது, பல புள்ளிகளிலிருந்து திரள்வதாகும். எனவே திரட்டிய கலைகள், திரட்டிய இயக்கம் என்று வேண்டுமானால் நீங்கள் குறிப்பிடலாம். இதைத்தவிர இசையைப் பொறுத்தவரை “ஜனரஞ்சக இசை” என்ற ஒரு அழகிய சொல்லாக்கம் தமிழில் இருந்தது. “மக்கள் மகிழ்விசை” என்று கூட தூயத் தமிழ்ப் படுத்தலாம். ஆனால் பரப்பிசை என்பது முற்றிலும் அழகற்ற சொல்லாகவும், ஏதோ ஒரு திணிப்பு வேலை போலவும் தொனிக்கிறது. திரை இசை போன்றவை தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் பல இடங்களுக்கும் பரவுவது இப்பயன்பாட்டை வாசகர் மனதில் நியாயப் படுத்தலாம். ஆனால் நாம் கவனப்படுத்த வேண்டியது அந்த இசையின் வேர்களைத் தான். அந்த வேர்கள் பல புள்ளிகளிலிருந்து திரண்டவை.

அரசியல் இயக்கங்களைப் பொறுத்தவரை “பரப்பிய இயக்கம்” என்கிறீர்கள். இதில் நீங்கள் propaganda என்ற அம்சத்தை மட்டும் கணக்கில் கொள்கிறீர்கள். Propaganda Secretary தான் கொள்கை பரப்புச் செயலாளர். ஆனால் வெகுஜன மக்கள் இயக்கங்கள் என்பவை பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஒற்றைக் குறியின்கீழ் திரண்டு நிற்பவை. பல முனைகளில், தளங்களில் தங்கள் வேர்களைக் கொண்டவை. நேரம் கிடைக்கும்போது, நீங்கள் ஏற்கனவே கண்ணுறவில்லையென்றால், Ernesto Laclau-வின் Populist Reason என்ற தெளிவான அரசியல் பாலபாடம் போன்ற சமீபத்திய நூலை சாத்தியமும் விருப்பமுமிருந்தால் வாசித்துப் பாருங்கள். பல விஷயங்களை அது தெளிவுபடுத்தும் ஆற்றலுள்ளதாக எனக்குப் படுகிறது. சுருங்கக் கூறின் அரசியலானாலும் சரி, இலக்கியமானாலும் சரி, இசை, சினிமா பிற கலைகள் சார்ந்தும் சரி, popular என்பதை “வெகுஜன” என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். “பரப்பு” என்ற வேர்ச்சொல்லை பயன்படுத்துவது தவறான புரிதலுக்கே இட்டுச்செல்லும் எனக் கருதுகிறேன்.

தயவுசெய்து பரிசீலிக்கவும்

அன்புடன்
ராஜன் குறை

அன்புள்ள ராஜன் குறை

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

பரப்பு, பரப்பியம் என்ற சொற்கள் சோவியத் கலைச்சொல்லாக்கம். பாப்புலர், பாப்புலிசம் என்பதற்கான சொற்கள் அவை.

என்னைப்பொறுத்தவரை ஒரு கொள்கை வைத்திருக்கிறேன். ஏற்கனவே ஒரு கலைச்சொல் புழக்கத்தில் இருக்குமென்றால் அவற்றை அப்படியே பயன்படுத்துவது. ஏனென்றால் நமக்கு மூன்று தளங்களில் கலைச்சொல்லாக்கம் நடைபெறுகிறது. 1. சிற்றிதழ் 2 கல்வித்துறை 3 சோவியத் நூல்கள். இவற்றுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. ஆகவே ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தாமலேயே இருக்கின்றன. உருவாக்கப்பட்ட கலைச்சொற்களை கூடுமானவரை பயன்படுத்துவதே நல்லது என்பது என் எண்ணம்

கலைச்சொற்களும் சொற்களே. எல்லா சொற்களுக்கும் இடுகுறித்தன்மை உண்டு. ஒரு காலகட்டத்தில் ஒருவகை பொருள்கோடலில் ஒரு கலைச்சொல் உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்த அறிவுத்துறையின் வளர்ச்சி காரணமாக அந்த கலைச்சொல்லுக்குரிய பொருள் மாறுபடும்போது சொல்லை மாற்றும் வழக்கம் மேல்நாட்டு அறிவுப்புலத்தில் இல்லை. பொருள்மாறுபாடுகளுடன் அச்சொல்லையே பயன்படுத்துவார்கள். அச்சொல்லின் இடுகுறித்தன்மையால் அச்சொல்லே நீடிக்கும்.

அபூர்வமாக சில சொற்கள் முற்றாக பொருள்மாற்றம் அடையும். உதாரணமாக நெரேஷன் என்ற சொல் நெடுங்காலம் கதைசொல்லுதல் , எடுத்துரைப்பு என்றே பொருள்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு மொழியியலில் உபரி அர்த்தம் வந்தபோது மொழிபு என்ற சொல் கல்வித்துறையாளர்களால் உருவாக்கப்பட்டது. மொழிபியல், மொழிபுவாதம் என்றெல்லாம் விரிவாக்கம்செய்ய ஏற்ற சொல் அது. ஆகவே அச்சொல்லை ஏற்கலாமென எனக்குப் பட்டது

பரப்பு என்ற சொல் பாப் [pop ] என்ற சொல்லுக்கு நிகரானது. வெகுஜனத்தன்மை, அனைத்தையும் உள்ளடக்கி விரியும் தன்மை , பொதுவான ஒன்றை நோக்கிச்செல்லும் தன்மை என்ற பொருள் அதற்கு உள்ளது. அது முழுக்க முழுக்க பாப்புலர் கல்ச்சரை குறிக்க பயன்படுத்தப்படும் சொல்.பரப்புதல் என்ற பொருள் மட்டும் அல்ல பரவுதல், பரப்பை உள்ளடக்கிக்கொள்ளுதல் என்ற பொருளும் அச்சொல்லுக்கு உண்டு.

அதிலிருந்து பாப்புலிசம் என்றசொல். அதை இயம் [இசம் என்பதை இயமாக ஆக்கும் மரபுப்படி. மார்க்ஸியம் போல] சேர்த்து பரப்பியம் என்ற மொழியாக்கம் அளிக்கப்பட்டது. நாட்டார்கலைகள் பரப்பியக்கலை அல்ல. அவை நாட்டார்கலைகளே.

வெகுஜன என்ற சொல்லை பொருளை குறிப்பிட பயன்படுத்தலாமே ஒழிய கலைச்சொல்லாக அல்ல. வெகுஜனவாதம் வெகுஜனவியல் என்றெல்லாம் அச்சொல் விரிய வாய்ப்புள்ளதா என்று தெரியவில்லை .

இத்துறையில் எது பரவலாக, அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ அச்சொல்லை கையாளவே விருப்பம். ஏனென்றால் நான் ஊடக ஆய்வாளன் அல்ல.

ஜெ

மதிப்புக்குரிய ஜெ.,
“பரப்பிய” என்ற சொல்லை நீங்கள் popular,populist என்ற அர்த்தங்களில் பயன்படுத்துகிறீர்கள். இந்த சொல் குறித்து என் கருத்துக்கள்:

1. populist என்ற சொல் சற்று இகழ்ச்சி பொதிந்தது. Popular அப்படியல்ல. நாம் ஏன் pop என்ற வார்த்தை வரும் இடத்திலெல்லாம் “பரப்பிய” என்ற சொல்லை இட வேண்டும்? ஆங்கிலத்துக்கு நேர்ப்பொருள் தருமாறு (மட்டுமே) சொற்களை அமைத்தால் காலப்போக்கில் நவீன தமிழ்ச்சொல்லாக்கம் ஆங்கிலத்துக்கு அடிமையாகிவிடாதா? (“தட்டையான” என்ற சொல் மற்றொரு உதாரணம்! “நீர்வீழ்ச்சி” – பெரும் அவமானம்!).
சங்க இலக்கியத்தில் தேடினால் நிச்சயம் இதைவிட நல்ல சொல்லை நாம் பொருத்த முடியும். உதாரணம் : ” கதலி” என்ற சொல் (ஏற்கனவே சொல்லியிருந்தாலும் :)) கதலி என்ற சொல் வாழையைக் குறிக்கும். அதிலிருந்து “கதலிமலடு” போன்ற கிளைச்சொல்லை அமைப்பது எளிது. சற்று கவித்துவமானதும் கூட. நவீன யுகத்தில் “கதல்” என்ற சொல்லை “disposable” (one time usable) என்ற சொல்லுக்கு நேராக பயன்படுத்தலாம்- “கதற்று” “கதற்றினேன்” ” கதலு” “கதலாதே” “ஒரு முத்தத்தோடு என்னை கதலிவிட்டாயே காதலி!”

“one time usable” “two time usable” “Few time usable” – ஓர்பய(ன்)கதல், ஈர்பய-கதை, சின்முறைக் கதல் – என்று விரிக்கமுடியும். (புணர்ச்சி இலக்கணம் சரியா? பிழையிருந்தால் மன்னிக்கவும்)

2. புதிய சொல் செவிக்கின்பம் தரவேண்டும். காலத்தோடு இசையவேண்டும். உதாரணாம் : “காதல்” – வட இந்திய, கன்னட நண்பர்கள் கூட “பியார்” “ப்ரீத்தி”யை விட இந்தச் சொல் இனிமையாக இருக்கிறது என்று உணர்த்தியிருக்கிறார்கள் (தெலுங்கு நண்பர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்)
“பரப்பிய” (என்) செவிக்கு இன்பம் தரவில்லை. கேட்டவுடன் இது ஏதோ ஒரு ஆங்கிலச்சொல்லின் “தட்டையான”(!) தமிழாக்கம் என்று தெரிந்துவிடுகிறது.
எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் “நிறைஞர்” என்ற சொல் அறிமுகமாயிற்று. கேட்டவுடன் மனதில் தமிழுணர்ச்சி பீறிட்டது . மிக மிக அரிதாகவே பயன்படுத்தவேண்டும் என்ற அளவுக்கு சொல்லில் ஒரு சான்றாண்மை இருக்கிறது. (முனைவர் இளங்கோவன் தளத்தில் கண்டதாக நினைவு)

3. சொல் வாய்க்கு எளிதாக இருக்கவேண்டும். நீங்கள் சூழலியல் என்பதை சூழியல் என்று சுருக்கியது அருமை. சொல்லில் பாதி நெடிலாக இருந்தால் உச்சரிக்க எளிது.

நானும் 2,3 மாதங்களாக “பரப்பியக்கம்” என்ற சொல்லுக்கு மாற்று காண முயற்சி செய்தபடியிருக்கிறேன். சொற்கள் திடீரென்றுதான் பூக்கின்றன எனக்கு. புதுப்பூ பூப்பதற்குள் நீங்கள் “பரப்பிசை”, “பரப்பிலக்கியம்” என்று எனக்குப் பிடிக்காத “பரப்ப”வை பரப்பி நிலைநிறுத்திவிடுவீர்கள் போலிருக்கிறது.
நன்றி

வெங்கட் சி

அன்புள்ள வெங்கட்

நான் பொதுவாக ஒரு சொல் கேட்டதுமே சற்று ஒவ்வாமை அளிக்கிறதே என பார்ப்பதில்லை. ஏனென்றால் அப்படி ஒவ்வாமை அளித்த பல சொற்கள் காதுக்கு பழகிவிட்டன

ஏன் ஒரு சொல்லை மொழியாக்கம் செய்யவேண்டும் என்றால் அச்சொல் குறிக்கும் கருத்துரு ஆங்கிலம் வழியாக நமக்கு வந்தது என்பதனால்தான். நாமே அதை உருவாக்கவில்லை. நாமே உருவாக்கும் கருத்துக்கு நாம் சொல்லை உருவாக்கலாம், பிறவற்றுக்கு மொழியாக்கம்தான் வழி

மேலும் ஒரு பொருளை மொழியாக்கம்செய்வதற்கும் கருத்தை மொழியாக்கம்செய்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு கருத்து இங்கே வரும்போது அந்த கருத்தின் முதல்வடிவை ஒட்டி கலைச்சொல் உருவாக்கம் நிகழ்கிறது. அக்கருத்து வளர்ந்து வளர்ந்து மாறும்போது நாம் சொல்லை மாற்ற முடியாது. அந்தச்சொல்லை சற்று மையம் தவறிய குறியீடாக, இடுகுறித்தன்மையுடன், பயன்படுத்தத்தான் வேண்டும், வேறு வழியில்லை

உதாரணமாக சிறுகதை என்ற சொல். அது இன்று சிறிய கதையை சுட்ட பயன்படுத்தப்படும் சொல் அல்ல. அது ஒரு தனி கலைவடிவை சுட்ட பயன்படுத்தப்படும் சொல்

நீங்கள் சொல்வது சரிதான். பரப்புவாதம் என்ற அச்சொல்லில் ஓர் இகழ்ச்சி ஒலிக்கிறது. ஆனால் பரப்பு என்பதை பாப் என்பதற்கும் பரப்பியம் என்பதை பாப்புலிசம் என்பதற்கும் பயன்படுத்திய சோவியத் மொழிபெயர்ப்பாலர்களுக்கு உண்மையிலேயே கடுமையான ஏளனம் இருந்தது. அப்படித்தான் அச்சொல்லை பயன்படுத்தினார்கள். ஆனல் இகழ்ச்சி இல்லாமலேயே மணவை முஸ்தபா பயன்படுத்தியிருக்கிறார். இன்றைய பொருளில் பரப்புக்கலைகளைச் சொல்ல ஒரு சொல் இருந்தால் ந்ல்லதே. பாப்புலர் என்றசொல்லுக்கு பிரபல, புகழ்பெற்ற என்ற சொற்களே சரியானவை.

இன்னொரு சொல் பொதுவாக ஏற்கப்படுமென்றால் நல்லதுதான். அது எல்லா சொற்களுடனும் இணையக்கூடியதாக இருக்கவேண்டும். இசை இலக்கியம் அனைத்துடனும். இயம் இயல் வாதம் போன்ற ஒட்டுக்களுடன் இணையக்கூடியதாக இருக்கவேண்டும்

ஆளுக்கொரு கலைச்சொல்லை பய்ன்படுத்துவது முறையல்ல. இப்போதுதான் நமக்கு ஊடகவியல் ஆய்வாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். ராஜன்குறை, அ.ராமசாமி, சுந்தர்காளி …. அவர்கள் பேசி முடிவுசெய்து தரட்டும்.

பி.கு

ஆனால் எனக்கொரு பயம் உண்டு. தமிழில் ஒரு விசித்திரம் நிகழ்வதுண்டு. சொல்லாக்கம், சொல் விவாதம் என்றால் மட்டும் எல்லாரும் புகுந்து உற்சாகமாக விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடிப்படை அறிதல் இல்லாதவர்கள். ‘அறிவுபூர்வ’மாகவும் விவாதிக்கவேண்டும், புத்தகம் படிக்கும் வழக்கமும் இருக்கலாகாது என்பதற்கான சிறந்த வழி அது!

ஜெ

முந்தைய கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 2
அடுத்த கட்டுரைபரப்பியம் மீண்டும்