அன்புள்ள ஜெ,
என்னுடைய சிந்தனைகள் பெரும்பாலும், இசைக்கும் ஒலிக்குமான வேறுபாடுகளை அறிந்துகொள்வதிலேயே செயல்படுகிறது. என்னுடைய படிப்பனுபவத்திலும், அனுபவத்திலும் நான் அறிந்துகொண்டவைகளை முன்வைத்து மட்டுமே இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். எனது அறிதல் முழுமை அடையவில்லை என்பதையும், அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். இதில் வரும் கருத்துக்கள் பல்வேறு சுயவிமர்சனம், விவாதங்கள், புத்தகங்கள், இணையதளங்கள் சார்ந்து நான் வந்தடைந்த புள்ளிகளே. இந்தக்கடிதத்தில் என்னுடைய தரப்பாக நான் முன்வைப்பதெல்லாம் கலை, இசை, ரசனை, விமரிசனம், தத்துவம் குறித்த என்னுடைய பார்வைகளையே. தவறாக இருந்தால் திருத்தினால் எனது அறிதல் இன்னும் வலுப்படும்.
ஒரு ஒலியை கேட்கும்போது அது நம்மில் ஏற்படுத்தும் மாற்றம் காரணமாக அதை ரசிக்கத்தொடங்குகிறோம். அதனை ஆராயும்போது ஒலியினை அறிதல் நிகழ்கிறது. எனவே சாதாரண ஒலியில் இருந்து இசை நிகழவேண்டும் என்றால் துல்லியமான அறிதல் இல்லாமல் சாத்தியம் ஆவதில்லை. ஒலிகளிலிருந்து இசையை கண்டுகொண்ட தருணம் சுமார் 45000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம். நியாண்டர்தால் காலத்து தந்த புல்லாங்குழல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இசையின் நோக்கமே உணர்வுகளை எழுப்புதல் என்றும், எழும் உணர்வுகளின் வெளிப்பாடே இசையென்றும் இருதரப்புகள் எப்போதுமெ இதில் இருக்கிறது. கோட்பாட்டு ரீதியில் பார்த்தால் ஒலிகள் தூய வெளிப்பாடக மட்டுமே இருக்கிறது. அதில் செம்மையான ஒலிகளை தேர்ந்து, அதனை கூட்டி ஒருங்கமைக்கும்போது இசை உண்டாகிறது. இசை எந்த உணர்வையும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. அதன் காரணமாக சில ஒலிப்படிமங்களை கலாசாரக்குழுக்கள், கலைஞர்களின் குழுக்கள், கலைரசிகர்களின் குழுக்கள் உருவாக்கிவைத்திருக்கின்றன. உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டிய சமயத்தில், இசை, வார்த்தைகளை சேர்த்துக்கொள்கிறது. இன்னும் வெளிப்படையாக எனும்போது நடனமும், நாடகமும் பயன்படுகின்றது. அப்போது இசை பின்னுக்குப்போய், மற்ற கலையை முன்னுக்கு வைக்கிறது.
ஒலிகளுக்கு உளவியல் ரீதியான சில பயன்பாடுகள் இருக்கின்றன. நாட்டார் சடங்குகளில் பயன்படுத்தப்படும் இசையென்பது இத்தகைய உளவியல் பயன்பாட்டு ஒலிகளும், ஒலிப்படிமங்களின் வடிவங்களுமே. இங்கும் சடங்குகளும், சமூகத்தின் எதிர்வினையும்தான் முக்கியமானதே ஒழிய இசையல்ல. இந்த இசை நுண்கலைகளின் கீழ் வருவதல்ல. இவை மற்ற இசை கலைஞர்களுக்கும், வேற்று சமூகக்குழுக்களுக்கும் வெற்று ஒலியாக மட்டுமே இருக்கும். அது கேட்பவரிடம் ஏற்படுத்தும் மாற்றத்தைக்கொண்டு அதை அவர்கள் நிராகரிக்கக்கூடும். அதுபோலவே சடங்குகள் தவிர்த்த வெற்று இசையை பெரும்பான்மை சமூகங்கள் நிராகரிக்கக்கூடும்.
ரசனை என்பது இசையினால் உந்தப்பட்ட உணர்வுகளை அடையும்போது ஏற்படுவது. ரசனை என்பது உணர்தலில் இருந்து அறிதலுக்கு இட்டுச்சென்றால்தான் ரசிகானுபவம் முழுமையடைகிறது. அந்த அறிதல் நிகழும்போது அது ஒருவனது ரசனையை நுண்மையாக்கிக்கொள்ளவும் முடிகிறது. ரசனைகளின் மூலமாக மட்டும் ஒரு படைப்பின் அத்தனை சாத்தியங்களையும் அணுகமுடிவதில்லை பொதுவாக வெளிப்படையாக, புறவயமாகத் தெரிபவைகளோடு அது நின்றுவிடுகிறது.
ஒருவர் தாம் பயன்படுத்திய அறிதல் முறையை, தர்க்கங்களுடன் முன்வைக்கிறார். அதைப்படிக்கும் வாசகன் அவனது சொந்த ரசனையை அறிதல் நோக்கி இட்டுச்செல்ல அவர் சில கருவிகளை அளிக்கிறார். அது ஒன்றுக்கு மேற்பட்ட திறப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இருக்கக்கூடும். எது ஒன்று நம்மை ரசனையில் இருந்து அறிதலுக்கு இட்டுச்செல்கிறதோ அதைத்தான் விமர்சனம் என்போம். ரசனைக் குறிப்புகள்,இசைக்கலைஞரின் வாழ்வு குறித்த தகவல்கள், ஆயத்த ரசனைகள் அளிப்பது, விமர்சனம் அல்ல.
இசை தூய கலையாக இருக்கிறது. இசை எப்போதுமே நிகழ்ந்துகொண்டிருப்பதால் அதை மற்ற கலைகளுடன் இணைத்து பயன்படுத்தும்போது அவைகட்கும் நிகழும்தன்மை கடத்தப்படுகிறது. இசையை நடனம், நாடகம், திரைப்படம் தவிர சடங்குகள், விளையாட்டு, திருமணம், இறப்பு, விளம்பரங்கள் என பல கலையுடனும் இணைத்து பயன்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. இத்தகைய இசையையோ அல்லது வேறு கலைகளையோ பயன்படுத்தி உருவாகும் கலைகளை கூட்டுக்கலைகள் (composite art) ஆகும்.
திரைப்படங்களும் ஒரு கூட்டுக்கலையே எனும்போது, கூட்டுக்கலையின் மீதான விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் என்பதில் பெருத்த குழப்பம் நிகழ்வதால் இதுகுறித்து பல்வேறு வகையான இலக்கியத்திற்கு ஏற்கனவே இருக்கும் விமர்சனக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன, கூட்டு விமரிசனக்கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இதில் நான் முக்கியமாக திரைப்பட இசை குறித்தே அறிய விரும்புவேன்.
ஒரு திரைப்படப்பாடல் என்பது தனியாகவும் கேட்டு ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் பின்னனி இசை என்பது காட்சிகளின் விளைவாக இருக்கிறது. ஒரு தறுவாய் தேவைப்படும் ரசிகன் காட்சிகள் அல்லது காட்சிகளின் நினைவுகள் இல்லாமல் பாடல்களை கேட்க முடிவதில்லை. அதற்கு சமூக, வரலாற்று, உளவியல் காரணங்கள் பல இருக்கலாம். என்னைக்கேட்டால் காரணம் அறிதலின்மை என்றுதான் சொல்வேன். இந்த திரைப்படப்பாடல்களை விமர்சிக்க புறவயமான அளவுகோல்கள் இல்லை என்று கூறுபவர்கள் அதன் ஊற்றை மறந்துவிடுகிறார்கள். பரப்பிசை என்று அழைக்கப்படும் வெகுஜன இசை, வேற்று கிரகத்திலிருந்து வந்து விழுந்ததல்லவே? எந்த இசைக்கூறுகளின் அடிப்படையில் பாடல்கள் அமைந்திருக்கின்றனவோ அவற்றின் அலகுகள் கொண்டு அதை விமர்சிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. நாட்டாரிசையின் அடிப்படையில் அமைந்த பாடலை அதைக்கொண்டும், மரபிசை சார்ந்த பாடல்களை அதன் அலகுகள் கொண்டு அளவிடுவதுதானே சரியாக இருக்கமுடியும்.
இதிலும் இதை பரப்பிசை என்று சொல்வதில் எனக்கு சில ஆட்சேபனைகள் உண்டு. பொதுவாக பரப்பிசையாக கருதப்படும் ராக், ஜாஸ் போன்றவை ஒரு சமூகத்தின், கலாசாரத்தின் வேரிலிருந்து எழுந்து வந்தவை. உதாரணமாக இந்தியாவில் வாரகாரி, பஜனை, வில்லுப்பாட்டு போன்றவற்றை இவ்வகையின் சில கூறுகளைக்கொண்டு ஒப்புக்கொள்ளலாம். சினிமா இசையின் தோற்றத்திற்கு அத்தகைய சமூக வேர்கள் கிடையாது. அவைகள் கூட்டுக்கலையின் அங்கம் மட்டுமெ. எனவே அதை வெகுஜனஇசை அல்லது திரையிசை என்றே குறிப்பிட வேண்டும்.
திரைஇசை மீதான சமூகம் சார்ந்த கருத்துக்கள் விமர்சனங்கள் என்ற எல்லைக்குள் வராது. ஏனெனில், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு அறிதல் சாத்தியமல்ல, வெறும் ரசனைகள் மட்டுமே சாத்தியம். என்னுடைய சுய அளவுகோல்களின் படி இசைக்கான விமரிசனம் இன்னொரு இசையாகத்தான் இருக்கமுடியும். இப்போது கேட்கும் இசையை புதுமையாக்கப்பட்ட பழைய இசை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. இன்று நாம் கேட்கும் ஒவ்வொரு திரையிசைப்பாடலும், ஏதோ ஒரு ஆதிகாலப்பாடலின் விமர்சனம் என்றே தோன்றுகிறது. இந்நிலையில் விமர்சகன் என்பவன் கலைஞனாகவும் இருக்கவேண்டியதாகிறது.
திரைஇசை விமர்சனம் என்பது ஒருவிதத்தில் பார்த்தால் சாத்தியமே இல்லாதது. தற்போது திரைஇசை விமர்சகர்கள் என்று அறியப்படுபவர்களை விமர்சனம் என்ற முறையில் முற்றிலுமாக நிராகரிக்கவேண்டும். அவர்கள் செய்வது ஒரு பம்மாத்து வேலையே. திரைஇசையை விமர்சிக்க எந்த ஒரு புறவயமான அல்லது உபயோகமான அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்கள் இல்லை. இசையின் சில அடிப்படை அளவுகோல்களான சுருதி சுத்தம், தெளிவான உச்சரிப்பு, தாளத்தோடு நிற்றல், நல்ல பாடல்வரிகள், ரசனையான மெட்டுக்கள் என்பவை கொண்டே அவை செய்யப்பட்டன. ஆனால், இவைகளில் குறையுள்ளபோதும், அவற்றை ரசிப்பதற்கான மக்கள் எப்போதுமே இருக்கிறார்கள். இந்நிலையில் விமர்சனம் என்பது சாத்தியமே இல்லை.
திரைஇசை விமர்சகராக அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி எதுவுமே இல்லை. ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுகோல்கள் இல்லையெனும்போது பயிற்சி என்பது சத்தியமே இல்லை. ஒரே வழியாக அவரது இசை கேட்கும் அனுபவத்தை மட்டுமே பயிற்சி என்று வைக்கமுடியும் எனும்போது அது ஒவ்வொருநாளும் மாறக்கூடும். எனவே அதை பயிற்சி என்று சொல்லவியலாது. இத்தகைய ஒரு முறை காலப்போக்கில் தவறான விமர்சனப் பழக்கங்களுக்கு இட்டுச்சென்று தனக்கு முறையான பயிற்சி இல்லாத தளங்களிலும் கருத்துக்களை சொல்லவைக்கும். ஏதாவது ஒரு இசைமுறை விமர்சனத்தில் தீவிர பயிற்சி இருந்து அதன்மூலம் அவர்கள் அடுத்த இசைகளுக்கு மாறும்போது, பயிற்சியின் கட்டுப்பாடாவது மிஞ்சுகிறது.
திரைஇசை விமர்சகர் தீர்ப்புக்களாக முன்வைக்கும் கருத்துக்கள் அவர்களுடைய கருதுகோள்கள், ரசனைகள் மட்டுமே. ஆனால் ஒரு தேர்ந்த பயின்ற விமரிசகன் முன்வைப்பது அதன் வடிவம், அமைதி, மற்றும் அவனது கருத்துக்கான கலாபூர்வமான தர்க்கங்கள். இது மொத்தமான திரைஇசையில் நிகழ சாத்தியம் மிகவும் குறைவு. அதன் விமர்சகர்களிடம் அபிப்ராயங்கள் தவிர்த்து ஏதும் இருப்பதில்லை.
சிலகாலம் முன்புவரை, வெகுஜன ஊடகத்தில் தேவையான தகவல்களை பெறுவதில் இருந்த தடை, இவ்வகை விமர்சகர்களின் அதிகாரத்தைக் கொடுத்தது. விமர்சகர்களின் கட்டுரைகள் எந்த பதிப்பகத்தில் வெளிவருகிறதோ அதைக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் போக்கும் இருந்தது. அது இணையத்தின் வரவால் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. தற்போது அவர்களது அபிப்ராயங்களை வெளிப்படுத்த ஒரு பொதுத்தளம் என்பது அனைவருக்குமே சாத்தியப்பட்டுவிட்டது என்பதால், அனைவரும் தமது கருத்தை இணையதளங்களில், பதிவிடும் நிலை உள்ளது. இதில் ஒரு விமர்சகன் முக்கியப்படுத்தப்படவேண்டும் என்றால் அவன் கூறும் கருத்துக்கள் மிகவும் கறாராக ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு பின்னரே அவனது பொது அங்கீகாரம் சாத்தியமாகிறது.
இப்போது இணையத்தில் எதைப்பற்றிவேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையிருக்கும்போது, சில இசை விரும்பிகளும், ரசிகர்களும் இசைகுறித்து எழுதுவதென்பது அவரது அதீத ஆர்வத்தினாலும், ஞானத்தினாலும் மட்டுமே எனும்போது, தேவைக்குமேலான திரைஇசை விமர்சகர்கள் தோன்றியுள்ளனர் என்று சொல்லலாம். இப்போது திரைஇசை விமர்சகர்களாக கருதப்படுபவர்களின் எழுத்துக்கள் பெருவாரியான இசை ரசிகர்களின் எழுத்துக்களுக்கு சற்றும் உயர்ந்ததுமல்ல, குறைந்ததுமல்ல.
இசைவிமர்சகர்கள் என்றறியப்படுபவர்கள், பொதுத்தளங்களில் விவாதத்தை முற்றிலுமாக தவிர்த்துவிடுகிறார்கள். அவர்களது பிடிவாதமான, முரட்டுத்தனமான, அகங்காரமான, அருவருப்பாக தொனிக்கும் நிலைகுறித்த தற்காப்பு நிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள். அனால் திரைஇசை குறித்த விமரிசகர்கள் இத்தகைய குணாதிசயங்களை கொள்ளவேண்டியதில்லை. அத்தகையவர்களுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், என்னையும் எடுத்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நான் கோட்பாடு சார்ந்து பேசுவதாகவும், இதற்கு கோட்பாடுகள் தேவையில்லை என்றும் நண்பர் ஒருவர் தொலைப்பேசியில் தெரிவித்தார். நான் சொல்வதெல்லாம் இதுதான்.
இசையென்பதே ஒரு கோட்பாடுதான். ஒலிகளின் மீதான மனிதனின் கோட்பாடுதான் இசையெனும்போது, இங்கே கோட்பாடுகள் மிகவும் முக்கியமாகிறது. திரையிசைக்கு அத்தகைய கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்ளும் திறனும், தேவையும் இல்லை ஏனெனில், அதற்கு தன்னளவில் தனியான தோற்றமும் வளர்ச்சியும் இல்லை. பல வேர்களில் இருந்து வந்த இசை முயற்சிகளை அது எடுத்தாளுகிறது எனும்போது அதன் விமர்சனம் அது எடுத்தாண்ட இசை வகைகளைக்கொண்டதாகவே இருக்கமுடியும். இதன்மீதான விமர்சனமும், அந்த இசைவகைகளின் மீதான சரியான அறிதலில் இருந்தே தொடங்கமுடியும், ரசனைகளில் இருந்து அல்ல.
நன்றி
ராம்.
குறிப்பு: இந்த விவாதம் எழுந்ததும், இசைவிமர்சனம் சார்ந்த, பல மேற்கத்திய புத்தகங்களை மறுவாசிப்பு செய்யவேண்டியதாக இருந்தது. அப்போது தமிழில், ஏன் இந்தியாவிலேயே அத்தகைய புத்தகங்களும் ஆராய்ச்சிகளும் எதுவும் இல்லை என்று தோன்றியது. இத்தகைய விமர்சனப்பார்வைகள் குறித்த ஆராய்ச்சிகள் மிக அவசியம் என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் எது விமர்சனம் எது இல்லை என்பதே புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.
அன்புள்ள ராமச்சந்திரஷர்மா
உங்கள் கடிதம். உங்கள் சிந்தனைகளை ஒரு கோட்டுருவாகவே அளித்திருக்கிறீர்கள். அவற்றை இன்னமும் நீளமான கட்டுரையாக அல்லது நூலாக விரிவாக்கம்செய்யலாம்.
என்னைப்பொறுத்தவரை இசை சம்பந்தமான விஷயங்களில் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. இசையும் இலக்கியமும் வேறுவேரு அமைப்பு கொண்டவை. இசை போன்ற நுண்கலைகளில் பொதுவான விதிகள் உண்டு. அவற்றின் தொழில் நுட்பம் பயிலத் தக்கது, பொதுவானது. நான் இலக்கிய விமர்சனம் குறித்தே அதிகமும் சிந்திப்பவன்
இலக்கிய விமர்சனத்தில் ரசனை விமர்சனம் என்ற ஒன்று உண்டு. அதுவே விமர்சனத்தின் முதல் படி. ஒரு ஆக்கம் முதலில் ரசிக்கப்பட்ட பின்னரே விமர்சிக்கப்பட முடியும். கோட்பாட்டு விமர்சனம் அதன்பின்னர் வருவதே. கல்வித்துறை சார்ந்த பகுப்பு- வகைப்
பாட்டு விமர்சனம் அடுத்த படி. இவை பற்றி மிகவிரிவாகவே எழுதியிருக்கிறேன் — என் விமர்சன நூல்கள் [இலக்கிய முன்னோடிகள் வரிசை, புதுமைப்புத்தன் பற்றிய முதற்சுவடு நூலில் அக்கட்டுரை உள்ளது]
தமிழில் என்றும் இலக்கியத்தில் வலிமையாக இருந்துவந்திருப்பது ரசனை விமர்சனமே. ரா.ச்ரி தேசிகன், ஏ.வி.சுப்ரமணிய அய்யர், க.நா.சு, வெங்கட்சாமிநாதன் , சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன் என நீளும் ரசனை விமர்சன மரபு இங்கே உண்டு. அதுவே இங்கே இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்தது. ஆகவே தான் இலக்கியம் என்ற இயக்கத்துக்கே எதிரானதாக மார்க்ஸிய கோட்பாட்டு விமர்சனமும் பிற்காலத்தைய மொழியியல் விமர்சனமும் இங்கே அத்துமீறிய காலகட்டத்தில் இலக்கியம் அதனிடமிருந்து தப்ப முடிந்தது
ஜெ