புதியவர்களின் கடிதங்கள் 9

ஜெ

புதியவர்களின் கடிதங்களை நீங்கள் வெளியிடுவதைக்கண்டு இதை எழுதுகிறேன். நான் உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்து தொடர்ந்து எழுதாமல் ஒத்திப்போட்டுக்கொண்டே வருவதற்குக் காரணமாக இருந்தது நீங்கள் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்ற எண்ணம்தான். ஏனென்றால் நான் ஒரு ஆரம்பகட்ட வாசகன். எனக்கு வாசிப்பதில் நிறைய சந்தேகங்கள் குழப்பங்கள் உள்ளன

முதல்விஷயம் தொடர்ச்சியாக பலபக்கங்களுக்கு வாசிக்கமுடியவில்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஃபேஸ்புக்கில்தான். எஞ்சீனியரிங் படிக்கும்போதே பேப்பரில் வாசிப்பது இல்லாமலாகிவிட்டது. எங்கள் எல்லா பிராஜக்டையும் ஆன்லைனில்தான் தருவார்கள். எல்லாமே அப்படித்தான். புக் படிப்பதே இல்லாமலாகிதான் அதை பாஸ் பண்ணினேன். அதுதான் மாடர்ன் கல்வி என்றும் நினைத்திருந்தேன்

ஆனால் வேலைக்கு வந்த நிறுவனத்தில்பார்த்தால் இங்குள்ள வெள்ளைக்காரர்கள் எல்லாம் புத்தகங்களாகத்தான் படிக்கிறார்கள். இவர்கள் படிக்கும் தலைகாணிகளைப்பார்த்தபிறகுதான் எனக்கு புத்திவந்தது. நாமெல்லாம் ஒன்றுமே படிக்கவில்லை என்று. என் துறையில் நான் ஒரு டம்மி குமாஸ்தா என்றும் ஊருக்குப்போய் பீத்திக்கொள்ளத்தான் என் வேலை லாயக்கு என்றும் தெரிந்தபோது அவமானமாக உணர்ந்தேன்.

நானும் புக் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நாலைந்து பக்கம்கூட ஒரு நாள் வாசிக்கமுடியாது. வாசித்தது ஞாபகமும் இருக்காது. உடனுக்குடன் மறந்து போய்விடும். பெரிய சோர்வாக இருந்தது. எனக்கு என்ன பிரச்சினை என்று நான் யோசித்தேன். நம்மூர் கல்விமுறை என்னை மழுங்கவைத்துவிட்டது

அப்போதுதான் நான் பேஸ்புக் வாசிப்பதை நிப்பாட்டினேன். பேஸ்புக் அக்கவுண்டை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்தேன். இரவு வாசித்தேன். ஊருக்கு பணம் அனுப்பி புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஆங்கிலத்தில் திரில்லர் நாவல்களை வாசித்தேன். என்க்கு கிருஷாம் பிடித்த ஆசிரியர். உங்கள் நாவல்களில் காடு பிடித்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன். இப்போது நானும் கொஞ்சம் தன்னம்பிக்கையாக உணர்கிரேன்

ஆனால் என் நண்பர்களாகிய தமிழர்களைப்பார்த்தால் பரிதாபம். அவர்களுக்கு அவர்கள் பெரிய அறிவாளிகள் என்று நினைப்பு. ராத்திரிபகலாக எந்திரனைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் ஃபேஸ்புக் மட்டும்தான் வாசிக்கமுடியும் ஸ்க்ரோல் பண்ணியே வாசிக்கமாட்டார்கள். எதுவுமே ஞாபகமும் இருக்காது. ஆனால் அறிவார்ந்தவர்கள் என நினைப்பு. வாசிக்க ஆரம்பிததும் நான் அவர்களிடமிருந்து விலகி விட்டேன். இப்போது என்னை தலைக்கனம்பிடித்தவன் என்கிறார்கல்

உங்கள் இணையதளமும் புத்தகங்களும்தான் என்னை மீட்டன. எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. நன்றி. ஊரில் இருந்திருந்தால் உங்கள் சந்திப்புக்கு வந்திருப்பேன்

மா.செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சுருக்கமாக (அ) விரிவாக சொன்னாலும் நானொரு மென்பொறியாளன். அவ்வளவே! ஏற்கனவே ஓரிரு முறை கடிதமெழுதியுள்ளேன். சென்னை வெள்ள பாதிப்பின் காரணமாக சற்றே வேலைப்பளு மிகுந்த மன நெருக்கடி காலம். இன்று காலையும் அப்படியே.
சற்று புத்துணர்வு கொள்ள உங்கள் தளத்தினை வழக்கம் போல ஊடுருவிக்கொண்டிருந்தேன். ‘பீப்’ பாடல் பற்றிய உங்கள் கருத்து. அதிலும் “நாற, ஊற,வக்கா,ஆச்சி,பேப்….”
அலுவலகம் என்றும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.
பழைய பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டேன்.
உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்…!
அன்புடன்,
திசையிலி
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடனமங்கை’