உங்களுடைய புல்வெளி தேசம், ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரை படித்து முடித்தேன்! தனி நபர்கள் பெயர்களை எடுத்துவிட்டால் அது ஆஸ்திரேலியாவின் புவி இயல், வரலாறு பற்றிய பாடப் புத்தகமாக வைத்துவிடும் அளவிற்கான தரம் கொண்டிருந்தது.
குறிப்பாக ,பலாரட் தங்கச் சுரங்கம், நியாண்டர்தால் மனிதர்களின் வாழ்வியல், வீடுகள் கட்டும் முறை, John Keynes Theory, கான்பெராவின் தொன்மை, அதன் நிர்வாக அனுகூலம்,நகர அமைப்பு,நீங்கள் வாசித்த போர் நாவல்கள், கலிபோலி போர்,ஆஸ்திரேலியர்களின் பொருள் வழிபாடு நிலை, பள்ளிகளில் வேலையை விரும்பிச் செய்யும் ஆசிரியர்கள்,வெய்யில், அதன் மஞ்சள் ஒளி,கங்காருவின் பெயர் காரணம், குரு நித்ய சைதன்ய யதி விவரித்த தென்னை மரம் தண்ணீரை தன்னுடைய உச்சிக்கு கடத்தும் தத்துவம். ஆஸ்திரேலியாவில் நீங்கள் உணர்ந்த மதுரையின் சப்தம், ஈமு பறவைகளின் கால்கள்,புதர் நடை, யூகலிப்டஸ் காடுகள், கோலா கரடிகள்,மனித உடலின் குறைவான உணவுத் தேவை, வீ ஜாஸ்பரின் பூகோள அமைப்பு, இனக் காழ்ப்புகள் உருவாகும் சூழ்நிலை,சீக்கியர்களின் வாழை விவசாயம், முயல்களின் நெரிசல்கள்,டிங்கோ,நெட் கெல்லி, நீதிபதி பாரியின் மரணம், கருப்பசாமி சுடலைமாடன் சாமிகளின் வழிபாடு முறைகள், பௌத்தர்களின் அதுவாகுதல் நிகழ்வு,சீனாவின் வாசிப்பு இல்லாத நிலை,பசுத்தல்,சிட்னி பிரிட்ஜ்,புல்லரிக்க வைக்கும் குளிர், நிழல் உலகின் நாணயமான போதை பொருள்கள்,ஒபரா ஹால், நீண்ட மூங்கில் வாத்தியம் வாசிக்கும் பழங்குடியினர், துறைமுகங்கள் உருவாகும் முறை,சு.கி.ஜெயகரன், லூயி மார்கன், எல்வின் தியரி, அந்தமானின் ஒங்கிகள்(அந்தமானில் பணி புரிந்திருந்தாலும் ஜார்வா-க்களை மட்டுமே தெரியும்),SBS-ன் வானொலி சேவை, உங்களுடைய, உங்களின் துணைவியின் பேட்டி, கிளிப் பேச்சு,சர்வேயர் Wart and Crane, மக்பி, ரேவன் பறவைகள், சுரங்கப் பாதைக்குள் உபயோகிக்கும் புகை கக்காத”பாரஃபின் விளக்குகள்,எருமையின் புட்டத்துக் காயம், தூக்கு ரயில்,KFC, Mcdonald ஆகியவை இந்தியாவிற்கு வர வேண்டிய காரணங்கள், உங்கள் நண்பரின் மகன் “தமிறோ”, Chop Stick, கணவாய் மீன்கள்(துறைவன் புதினத்திலும் படித்தேன்)சுஷி,சீன ஜப்பானிய உணவின் தொடு ரசங்கள்,ஜப்பானிய சாமுராய் வாளின் பெயர் “கடானா”, நாகர்கோயிலுக்கு ரயில் வந்த தினம்,சிட்னி-மெல்போர்ன் ரயில் பயணம், அதில் வந்த குழந்தைகளின் நடவடிக்கைகள்,ரஹ்மானின் ஜெய்ஹோ,நண்பர் சியாமளாவின் வயதான தந்தையின் அன்றாட வாழ்க்கையின் மீது அக்கறை, யாரா நதி,அதன் வாசனை, மழை நீர், மற்றும் கழிவு நீர் மேலாண்மை, குதிரைகள் மேய்வதை பார்க்கும்போது எழும் உணர்வு, அருங்காட்சியகம், தாடியில்லா சர்தார்ஜியான காரோட்டுனருடன் உங்களுடைய பண பரிவர்த்தனை,Pantheonism,விடுதலைப் புலிகளுக்கான உங்களுடைய நிலைப்பாடு, சலீம் அலி சொல்லிய “பறவை நீ பார்ப்பதற்கு முன்னரே உன்னை பார்த்திருக்கும்” என்னும் வரிகள், செம்முட்டன் எனும் தனி நெல்வகை, ஒரு வட இந்தியரிடம் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு பிறகு உங்களுடைய எதிர்வினை….
என எனக்காக மட்டும் கடந்த பத்து நாட்களாக நீங்கள் உங்கள் குரலில் சொல்லி வந்ததாகவே உணருகிறேன்!என்னுடைய சகதர்மிணி, எங்களது மகன் வருணுக்கும், சௌந்தர்யா மாமிக்கும் இதை வாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்!நிறைய ஆங்கில, தமிழ் பயண நூல்களை படித்திருந்தாலும் அவைகள்வெறுமென கேளிக்கை, வசதிகள்,அல்லது அவர்கள் கடந்த தொல்லைகளை மட்டுமே முன்னிறுத்தியதாக உணருகிறேன்! இதயம் பேசுகிறது ஆசிரியர் “மணியன்” அமெரிக்க குடியரசில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அமெரிக்கர்களாகிய நாங்களே எங்கள் நாட்டின் புவியியலை பற்றி கவலைப் படுவதில்லை, நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள்? என பலர் கேட்டதாக குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
உங்களுடைய எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கும்போது, நீங்கள் எங்குமே ஆங்கில சொற்றொடர்களை உபயோகிப்பதில்லை, இயன்றவரை அதை தமிழ் படுத்தி எழுதுவதையும் அவதானிக்கிறேன்!சென்ற கடிதத்தில் உங்களை நான் “ஆசான் ஜெயமோகன்” என்று குறிப்பிட்டு இருந்ததையும் நீக்கி வெறுமென “ஜெயமோகன் அவர்களுக்கு” என்று எடிட் செய்து இருந்ததும், உங்களை நீங்கள் எவ்வாறு முன்னிறுத்திக் கொள்கிறீர்கள் என்பது தெள்ளந் தெளிவாக தெரிகிறது.அடுத்து விஷ்ணுபுரம் எனக்காக காத்திருக்கிறது!
மிகத் தொலைவில் உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
சுந்தர்.
அன்புள்ள சுந்தர்
புல்வெளிதேசம் சம்பந்தமான ஒரு சுவாரசியமான விஷயம் உண்டு
நண்பர் ஈரோடு கிருஷ்ணனுக்கு அதை சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் எப்போதும் என்னுடன் இருப்பவர். ஈரோடு பாரதிபுத்தகாலயத்திற்கு தினமும் செல்பவர். ஆகவே நூலை அவரே அங்கிருந்து விலைகொடுத்து வாங்கட்டும் என சொன்னேன், சற்று சீண்டலாகத்தான். அதெப்படி எனக்குச் சமர்ப்பணம் செய்த நூலை நான் பணம் கொடுத்து வாங்குவது என அவர் வீம்புபிடித்தார்
அவர் கடைசிவரை அந்நூலை வாங்கவேயில்லை. உயிர்மை பிரசுரித்த அந்நூலின் மறுபதிப்பு இப்போது கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் கோவையில் நான் அதை அவருக்கு கொடுத்தேன். தோற்கவேண்டியிருந்தது, வேறுவழியில்லை. அவர் சிரித்தபடி வாங்கி புரட்டிப்பார்த்து வாசிக்க ஆரம்பித்தார்
ஜெ