புதியவாசகர்களின் கடிதங்கள்-7

4

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,

உங்களுடனான எனது வாசிப்பு அனுபவங்களை தனி கடிதமாகவே எழுத எண்ணியிருந்தேன். இன்று சென்னையில் நடந்த வெண்முரசு விவாதத்தில் பங்கு பெற்று வந்த உடனேயே உங்களுக்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்.

நீங்கள் எனக்கு அறிமுகம் ஆனதே ஒரு தற்செயல் நிகழ்வு தான். s.ராமகிருஷ்ணன் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்த போது உங்கள் வலைத்தளத்திற்கு வர நேர்ந்தது. அது ஒரு மறக்க முடியாத தருணம். காந்தி பற்றிய கட்டுரை அது. நீங்கள் உங்கள் கருத்துக்களை முன் வைத்த விதம், அதன் மறுக்கவே முடியாத நேர்மை, எதிர்த்தரப்பின் நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பண்பு, முரணியக்கத்தை விளக்கிச் சொல்லும் அறிவுமுறை என்னை கட்டிப்போட்டன. காலை பத்தரை மணிக்கு ஆரம்பித்த வாசிப்பு மதியம் மூன்றரை மணிக்குத்தான் முடிந்தது. அப்போதும் போகவில்லை என்றால் மதிய உணவுக்கு ஹோட்டல்கள் மூடி விடும் என்ற காரணத்தினால். அக்டோபர் மாத மத்தியில் இது நடந்தது. அன்று முதல் உங்களை வாசிக்காமல் நான் இருந்ததே இல்லை.
உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகளைத் தேடித்தேடி படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் அளிக்கும் திறப்பு அலாதியானது.

நான் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும்போது எனது தந்தையை இழந்தேன். அந்த இழப்பு ஏற்படுத்திய அலைக்கழிப்பை நீங்கள் புரிந்துகொள்ளக் கூடும். எனது வாசிப்பு தொடங்கி, வடிவம் பெற்றது அப்போது தான். தமிழ் நீதி நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். திருப்தி ஏற்படவில்லை. ஆன்மிகம் பக்கம் கவனம் திரும்பியது. இந்து மத தத்துவ நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். பகவத்கீதை, பல உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் போன்றவற்றை வாசித்தேன். ஆறு தரிசனங்களில் கிடைத்தவற்றைப் படித்தேன். விளைவாக இறை நம்பிக்கை இல்லாமல் போனது. ஆனால் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.எந்த நூலும் நான் இருந்த அந்த கொந்தளிப்பான மனநிலையை மாற்ற இயலவில்லை.

நான் படித்த கடைசி உபநிஷத்தில் மேலும்மேலும் தத்துவ நூல்களை படிப்பது மனக் குழப்பத்தையே உருவாக்கும் என்ற தகவல் இருந்தது. அந்நேரத்தில் எனக்கும் அது சரியென்றே பட்டது. ஆன்மிக நூல்களை நிறுத்தினேன். இந்த நேரத்தில் பதஞ்சலி யோக சூத்திரத்தை பயிலும் ஆழ்நிலைத் தியானத்தை ( transcendental meditation) பயிலத் தொடங்கினேன். ஓரளவு மனம் அமைதி அடைந்த்து. காந்தியின் சத்ய சோதனை புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன். அவர் மேல் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. ஆனால் ஏனோ அவரைத் தொடர்ந்து வாசிக்கவில்லை. எனது கல்லூரிப்படிப்பை முடித்தேன். மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் பட்ட மேற்படிப்பை முடித்தேன். எவ்விதக் கெட்ட பழக்கங்களிலும் ஈடுபடாமல் தப்பிக்க எனது தந்தையின் வழி காட்டுதலும்,எனது வாசிப்புமே உதவியது. அவை எனக்கு எந்த ஈர்ப்பையும் அளிக்கவில்லை. அவை குறித்த தெளிவு என்னிடம் எப்போதுமே இருந்து வருகிறது.

என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு ராகுல் சான்கிருத்தியாயனை அறிமுகம் செய்து வைத்தான். அவருடைய ‘ மனித சமுதாயம்’ என்ற நூலை வாசித்த நான் இதன் பிறகு வாசிக்க வேண்டியது எதுவும் இல்லை என்பது போலவும், கம்யூனிஸம் மட்டுமே உலகைக் காப்பாற்றும் என்றும் நம்ப ஆரம்பித்தேன். இந்தியத் தத்துவங்கள் எல்லாமே மக்களை அடிமைப்படுத்தி வைக்க மட்டுமே பயன்பட்டன என்றும் மதங்கள் மக்களை ஒரு போதை நிலையிலேயே வைக்க உதவுகின்றன என்றும் நம்பத் தொடங்கினேன். த்யானத்தை கைவிட்டேன். வாசிப்பதை நிறுத்தினேன். சேகுவேராவைப் போல வீர மற்றும் தியாக வாழ்வே இன்றைய தேவை என நம்பத் தொடங்கினேன். தத்துவங்களை வெறுத்தேன். இலக்கியம் என்பதே வீண்வேலை என்று எண்ணியிருந்தேன். இந்து மதத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் பிற்போக்கு வாதிகள் என்று நினைத்தேன்.

காந்தியம் ஈழ விடுதலைப் போரில் பயன்படாது என்றும், விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தமிழ் விரோதிகள் என்றும் நம்பினேன். நிறைய பேரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறேன். பிரபாகரன் என்னுடைய மானசீக தலைவர் ஆனார். மாவோயிஸ்ட் போராட்டம் கட்டாயம் தேவை எனவும் இந்திய அரசாங்கம் கொடுமை மட்டுமே செய்து வருகிறது என்றே எண்ணியிருந்தேன். காந்தி மீதான தனிப்பட்ட மரியாதை தவிர காந்தியம் செத்து விட்டதாகவே நினைத்தேன். நேதாஜிக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக நம்பினேன். சுருக்கமாக சொல்வதென்றால் “அறிவு மொண்ணைத் தனத்தோடு கம்பீரமாக வலம்” வந்திருக்கிறேன்.

மேலும் ஒரு தனிப்பட்ட இழப்பு என்னை முழுவதுமாக சீரழித்து விட்டது. மீண்டும் ஒரு விரக்தியான மனநிலை. விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டேன். பல நாட்கள் தனிமையில் கழிந்தன.
இந்நிலையில் தான் உங்கள் எழுத்துக்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு என்ன நடந்திருக்கக்கூடும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இப்படி வேண்டுமானால் சொல்லலாம். இது என் சிந்தனையில் ஏற்பட்ட “மறுபிறப்பு”. அதை அளித்தது உங்கள் எழுத்துக்கள்தான். இந்த வாசிப்பு எனக்களித்த வலி, அதன் விளைவாக எனக்குள் ஏற்பட்ட மாற்றம் மற்றும் எனக்குள் ஏற்பட்டுள்ள தெளிவு இவற்றுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த நீண்ட கடிதம்.

உங்களைப் பொறுத்தவரை உங்களுடைய லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தன். ஆனால் நீங்கள் எனக்கு நானே சென்று அடைந்த குரு. என்னுடைய ஆசான். என்னுடைய பள்ளி நாட்களில் ஒரு சிறந்த ஆசிரியரைப் பெற்றிருந்தேன். அவர் அருகாமையில் இருப்பதே மிக மகிழ்ச்சியாக இருக்கும். உங்களை வாசிக்கும்போது அதே பள்ளிப் பருவத்துக்கே போவது போன்ற உணர்வு. மிக சந்தோஷமாக உணர்கிறேன். உங்களை எனது மிக நெருக்கமான ஒருவராகத்தான் எண்ண முடிகிறது.

உங்கள் தளத்தில் உள்ள அனைத்து சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களைப் படித்து முடித்தேன். அறம் சிறுகதைகள் அளித்த அனுபவங்களை விளக்க இதை விடப் பெரிய கடிதத்தை எழுத வேண்டும். எழுதுவேன். எப்போதுமே எனக்கு நாவல்கள் மீது ஈடுபாடு இருந்ததில்லை. கல்லூரி நாட்களில் சங்க இலக்கியங்கள் பெரும்பாலானவற்றை படித்திருக்கிறேன். வைரமுத்துவின் கருவாச்சி காவியம், வில்லோடு வா நிலாவே, மற்றும் சுஜாதாவின் ஒரு நாவல் இவைதான் நான் படித்த மொத்த இலக்கியம். ஆனால் youtubeல் உங்கள் வீடியோக்களை பார்த்த பின்பு நாவல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒரு விளையாட்டாக வெண்முரசை அக்டோபர் மாத கடைசியில் படிக்க ஆரம்பித்தேன். டிசம்பர் மாத இறுதிக்குள் வெண்முகில் நகரம் வரை முடித்து விட்டேன். ஐ பேட் -ஐ கீழே வைக்கவே முடியவில்லை. சென்னையில் விடாத அடைமழை பெய்து கொண்டிருந்த போது நான் மழைப்பாடல் வாசித்துக்கொண்டு இருந்தேன். மழை வெள்ளத்தில் என் வீடு தீவிரமாக பாதிக்கப்பட்டு நான் வீட்டில் தங்க இயலாத நிலை. என் கணினி மற்றும் உடமைகள் வெள்ளத்தில் நாசமாயின.நண்பர்கள் வீட்டில் அடைக்கலம் புகுந்தாக வேண்டிய கட்டாயம். மழையினால் மின்சாரம் இல்லாத மூன்று நாட்கள் தான் நான் வெண்முரசு வாசிக்க முடியவில்லை. அடுத்தவர் வீட்டில் சோற்றுக்கு இருந்த நேரத்தில் கூட வெண்முரசை விடவில்லை. ஐபேட் ல் தொடர்ந்து வாசித்தேன்.

வாசிக்கும்போது என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்திருக்கிறேன், கண்ணீர் விட்டிருக்கிறேன், உணர்ச்சிப் பெருக்கால் பரவசம் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் என் தங்கைக்கு குழந்தை பிறந்ததைப் பார்ப்பதற்கு என் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு போன போது கூட வெண்முகில் நகரத்தை வாசித்துக்கொண்டு இருந்தேன். என் மருமகனான அக்குழந்தையைக் கொஞ்சும் போது கூட “தர்ம மகாராஜா” என்று தான் கொஞ்சத் தோன்றியது. தற்போது என் பணிச்சுமை காரணமாக இந்திரநீலத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் தான் வெண்முரசு விவாதக் கூட்டத்துக்கு சென்றேன். தயக்கத்துடன். விவாதம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சகஜமாக முடிந்தது. விவாதத்தின் முக்கியத்துவம் புரிந்தது. விவாதத்தில் பங்கு பெற்று சில அபத்தமான கருத்துக்களைக் கூறி விட்டேன். ஆனால் யாரும் அதை இடித்துரைக்கவில்லை. பொறுமையாக கேட்டார்கள். விவாதம் பல திறப்புக்களை அளித்தது.

ஒரு இனிய அதிர்ச்சியாக அஜிதனையும் சைதன்யாவையும் சந்தித்தேன். சற்று நேரம் அவர்களோடு பேச வாய்ப்பு கிடைத்தது. இனிய நண்பர்களாக இருந்தார்கள்.

வடஇந்திய பயணம் குறித்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களுடைய புகைப்படங்களையாவது காட்டுங்கள் என்று உங்களைப் பார்க்கும்போது கேட்க நினைத்தேன். ஆனால் நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டரை மாதங்களிலேயே வெண்முகில் நகரத்தை முடித்து விட்டதை சொன்னேன். இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.

ஈரோடு சந்திப்பை நினைக்கும்போது மீண்டும் தயக்கமாக உள்ளது. ஆனால் நேரில் வந்தால் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். இக்கடிதத்தில் சொன்ன விஷயங்களை விட சொல்லாமல் விடப்பட்டவையே அதிகம். தொடர்ந்து உங்களிடம் உரையாட ஆசை உள்ளது. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன் உங்களுக்கு தொந்தரவாக இல்லாத பட்சத்தில்.

இக்கடிதத்தில் எங்காவது அதிகப்பிரசங்கித் தனமாக எதையாவதுசொல்லி இருந்தாலோ அல்லது உங்களுக்கு அசௌகரியங்கள் தரக்கூடிய நெருக்கத்தை எதிர்பார்ப்பது போல் இருந்தாலோ தயவுசெய்து மன்னிக்கவும். அது ஒரு ஆசிரியரிடம் பேரன்பு கொண்ட மாணவனின் எதிர்பார்ப்பன்றி வேறில்லை.

அன்புடன்
மாரிராஜ்..

 

அன்புள்ள மாரிராஜ்

எவருக்கானாலும் இளமைப்பருவம் என்பது கொந்தளிப்பானது. ஒரேசமயம் வெளியுலகைப் புரிந்துகொள்ளவேண்டும், அதைக்கொண்டு தன்னையும் வரையறுத்துக்கொள்ளவேண்டும். புரட்சியாளன் ஆவதா, கலகக்காரன் ஆவதா, தலைவன் ஆவதா, ஞானி ஆவதா இல்லை பணக்காரனே ஆகிவிடலாமா என்றெல்லாம் முட்டிமோதிக்குழம்பாமல் எந்த இளைஞனும் தன்னைக் கண்டடைந்ததில்லை. நானும். அதையெல்லாம் நானே விரிவாக எழுதியிருக்கிறேன்

ஆனால் அந்த அலைமோதல் ஒன்று இழப்பு அல்ல. அந்தக்காலகட்டத்தில் நடுக்கடலில் நீந்துபவன் கரையைத்தேடுவதுபோல நாம் வாசித்திருப்போம். ஒவ்வொன்றையும் நுட்பமாக அப்போது உள்வாங்கியிருப்போம். அது ஒரு நல்லபயிற்சிக்காலம்தான்.

உங்கள் பயிற்சிக்க்கு என் எழுத்துக்கள் உதவியதில் ஒரு மகிழ்ச்சி. என் எழுத்துக்கள் வழியாக எந்தச்சிந்தனையும் அதற்குச்சமானமான மறுபக்கத்தையும் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருந்தீர்கள் என்றால் நான் வென்றேன்

இளமையில் எப்போதும் உள்ள தயக்கம் என்பது தப்பாக ஏதும் சொல்லிவிடுவோமா என்பது. அது நல்லது. பொதுவாக சிந்திப்பவர்கள் அனைவரும் அந்தத் தயக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் அது மிதமிஞ்சிப்போகக்கூடாது. நாம் எங்கும் பேசவே முடியாதவர்கள் ஆகிவிடுவோம். நாம் உண்மையிலேயெ நம்பிச் சொல்லும் ஒன்றை சற்று அசட்டுத்தனமாக இருந்தாலும் சொல்ல நமக்கு உரிமை உண்டு

வருக, சந்திப்போம்

ஜெ

 

அன்புடன் ஆசிரியருக்கு…-

நீங்கள் தெளித்த மையில் எனது வண்ணம் பூத்தது. உங்களுடைய நாளும் பொழுதும் புத்தகம் கொடுத்த தைரியத்தால் தான் நான் இப்போது ஓவியன் வேடத்தில் திரிகிறேன். எனது இரண்டு வருட இன்ஜுனியரிங் படிப்பை (மனப்பாடத்தை) விட்டு வெளியேறவும் அந்த தைரியம் உதவியது. உங்களின் மற்ற புத்தகத்தை நான் சுவாசித்ததில்லை. முடிந்த வரை உங்களை இணையத்தில் பின் தொடர்வேன்

ரிவர் ராஜேஷ்

 

அன்புள்ள ராஜேஷ்

ஓவியம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். பொறியியல் படிப்பைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப்பற்றி முடிவுசெய்யவேண்டியவர் நீங்கள். ஆனால் கடுமையான பயிற்சிக்காலம் ஒன்றை இளமையில் மேற்கொள்ளாமல் எவரும் தங்கள் விருப்பங்களை அடைந்ததில்லை என்பதை சொல்லவிரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 36
அடுத்த கட்டுரைசாயாவனம்