பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 15
இசைக்கூட வாயிலிலேயே விப்ரர் ஓசையற்ற நிழலசைவென தோன்றியதும் அவரை முதலில் அறிந்த திருதராஷ்டிரர் திரும்பி “சொல்லும்” என்றார். முகமன் ஏதுமின்றி அவர் “சிந்துநாட்டு அரசியும் அஸ்தினபுரியின் அரசரும்” என்றார். வரச்சொல்லும்படி கைகாட்டிவிட்டு கர்ணனிடம் “இவ்வரசமுறைமைகளைக் கண்டு சலிப்புற்றுவிட்டேன் மூத்தவனே” என்றார். விப்ரர் மீண்டும் ஆடிப்பாவை ஆழத்திற்குள் செல்வதென வாயிலுக்கு அப்பால் மறைந்தார்.
கர்ணன் குருதிக்குமிழிக்கண்கள் துடிக்க நின்றிருந்த முனிவரை சில கணங்கள் நோக்கிவிட்டு திருதராஷ்டிரரிடம் “மைந்தர் இங்கிருக்க வேண்டுமா?” என்றான். “இருக்கட்டும். வருபவன் இவர்களில் ஒருவனாக வளரவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.” கர்ணன் “ஆம், அவனும் அதைத்தான் விரும்புகிறான் என்று காலையில் கண்டேன்” என்றான். அவர் தலையசைத்து “குழந்தைகளுக்கு ஒன்றே உடலென்றாக தெரியும்” என்றார்.
திருதராஷ்டிரர் கையசைக்க இளையகௌரவர்கள் விலகிச்சென்று சூதர்கள் விலகிய இசைப்பீடத்திலும் அதைச் சுற்றியும் ஒருவரோடொருவர் உடல் ஒட்டி அமர்ந்துகொண்டனர். ஓசையிடாமல் ஒருவருக்கொருவர் கைபற்றி இழுத்தும் கிள்ளியும் மெல்ல அடித்தும் உதடுகளைத் துருத்தி முகம்சுளித்து சைகைகளால் பேசியும் பூசலிட்டுச் சிரித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். திருதராஷ்டிரர் “இளையவளை ஜயத்ரதனுக்கு கொடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை மூத்தவனே” என்றார். “அன்று அரசுசூழ்தலுக்கு அது இன்றியமையாததாக இருந்தது” என்றான் கர்ணன். “ஆம், பிறிதொன்றையும் நான் எண்ணவும் இல்லை. ஆனால் என் மகள் பிடியானை போல் உளம்விரிந்தவள். அவனோ புலியென நடைகொண்ட பூனையைப்போல் இருக்கிறான்” என்றார்.
அந்த ஒப்புமையை உளத்தில் வரைந்ததுமே கர்ணன் சிரித்துவிட்டான். அவன் சிரிப்பு ஒரு தொடுகையெனச் சென்று சித்திரத் திரைச்சீலை என நின்றிருந்த அம்முனிவரின் உருவை நெளிய வைத்தது. அவன் நோக்கியிருக்கவே அவர் சற்று பின்னடைந்து தூணை அணைப்பவர்போல அதனுடன் ஒன்றானார். அவன் விழிகூர்ந்து நோக்கியிருக்க கரைந்துகொண்டிருந்தார். அப்பால் காலடி ஓசைகள் கேட்டன. அவ்வோசைகேட்டு அவர் விழிகள் அதிர்ந்தன. ஒரு காலடியோசை துரியோதனனுடையது என்று உணர்ந்ததும் கர்ணன் முகம் மலர்ந்து “அரசர் வருகிறார்” என்றான். முனிவர் மறைந்துவிட்டார் என்பதை கண்டான்.
“ஆம், மேலும் தடித்துக்கொண்டே செல்கிறான் மூடன். கதைப்பயிற்சிக்குக்கூட நாளும் செல்வதில்லை. நேற்று நான் கேட்டேன் பயிற்சிக்களத்துக்கு அவன் வந்து எத்தனை நாளாயிற்று என்று. பன்னிரு நாள்! மூத்தவனே, இத்தனை நாள் கதை தொடாதவன் உணவில் மட்டும் ஏதாவது குறை வைத்திருப்பான் என்று நினைக்கிறாயா?” என்றார். கர்ணன் “தேவையென்றால் வெறியுடன் பயில்பவர்தான் அவர்” என்றான். “அவனுக்கு என்ன தேவை என்று நான் சொல்லவா? அவனுக்குத் தேவை ஒரு பகை. தன்னைத் தானே செலுத்திக்கொள்ளும் பெருங்கனவுகள் ஏதும் அவனுக்கு இல்லை. ஆம் மூத்தவனே, பகையின்றி அவன் வாழமாட்டான். இன்னும் சிலநாட்களில் அவனுக்கு உரிய பகையை கண்டடையவில்லை என்றால் இப்படியே பெருத்து உடல் சிதைந்து அழிவான். மூடன்! மூடன்!” என்றார் திருதராஷ்டிரர்.
விதுரர் இசைக்கூடத்துக்குள் நுழைந்து தலைவணங்கினார். திருதராஷ்டிரர் உரக்க “விதுரா, மூடா, உன்னை காலையிலேயே வரச்சொன்னேன். எங்கே ஒழிந்தாய்? செத்துவிட்டாயா?” என்றார். “இல்லை அரசே” என்றார் விதுரர். “காலையில் வந்திருந்தேன்.” புருவம் சுளித்து “அப்படியா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், தாங்கள் சோனக இசை கேட்டுக் கொண்டிருந்தீர்கள். வந்து பார்த்துவிட்டு அப்படியே திரும்பிவிட்டேன்” என்றார். திருதராஷ்டிரர் முகம் மலர்ந்து “அது நல்ல இசை. அது நமது சூதர்களின் இசை போன்றதல்ல. மேற்கே எங்கோ ஒரு மரம்கூட இல்லாத மாபெரும் மணல்வெளிகளால் அமைந்த நாடுகள் உள்ளன. அங்கிருந்து வந்த இசை அது… வெண்மணல்வெளியில் வெண்புரவிகள் தாவி ஓடுவதைப் போன்ற தாளம் கொண்டவை. காற்றின் ஓலமென எழுபவை” என்றார்.
அவர் கைகளை விரித்து “விடாய் எரிக்க விழிவறண்டு இறந்துகொண்டிருக்கும் விலங்குகளின் ஓலம் கூட இசையாக முடியும் என்று அதை கேட்டுத்தான் அறிந்தேன். தனிமைதான் இசையை உருவாக்குகிறது என்றால், இசை பிறக்க அப்பாலை நிலம்போல் சிறந்த மண் எது உள்ளது? மூடா, அத்தனை அரிய இசையைக் கேட்டு நீ எழுந்து சென்றிருக்கிறாய் என்றால்… உன் மண்டையை அறைந்து உடைப்பதற்கு எனக்கு ஆற்றல் இல்லாமல் போயிற்றே!” என்றார். விதுரர் கர்ணனை நோக்கி புன்னகைத்து திரும்பி கைகாட்ட துரியோதனனும் துச்சாதனனும் ஓசையற்று கால்களை மெல்ல தூக்கிவைத்து வந்தனர். தரையில் விரிக்கப்பட்டிருந்த தடித்த மரவுரிக்கம்பளம் அவர்களின் கால்களை உள்ளங்கையிலென வாங்கி முன்கொண்டு சென்றது.
துரியோதனன் திருதராஷ்டிரரை அணுகி அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். அவன் தலையைத் தொட்டு “இங்கெதற்கு வருகிறாய்? இந்த நேரத்தை வீணாக்காதே! சென்று உணவறையில் அமர்ந்து ஊனையும் கள்ளையும் உள்ளே செலுத்து போ!” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் “தந்தையே, தம்பி என்னைவிட பெருத்துவிட்டான்” என்றான். துச்சாதனன் குனிந்து அவர் கால்களைத் தொட்டபோது அவர் ஓங்கி அறைந்து “நீயே மூடன். உனக்குத் துணையாக இன்னொரு பெருமூடன். உங்களை எண்ணவே என் உடல் பதறுகிறது. வீணர்கள். வெற்றுக் கல்தூண்கள்” என்றார்.
இருவரும் புன்னகைத்தபடி ஒருவரை ஒருவர் நோக்கினர். துரியோதனன் “சிந்துநாட்டு அரசர் ஜயத்ரதர் வந்துளார் அரசே” என்றான். “கூட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே? அவன் என்ன சக்ரவர்த்தியா அகம்படியுடன் வர?” என்றார். துச்சாதனன் விரைந்த காலடிகளுடன் சென்று அப்பால் நுழைவாயிலில் தயங்கி நின்றிருந்த ஜயத்ரதனை உள்ளே வரும்படி கையசைத்தான். ஜயத்ரதனும் துச்சளையும் குழந்தையுடன் உள்ளே வந்தனர்.
துச்சளையின் இடையிலிருந்த சுரதன் கௌரவர்களை பார்த்ததும் பேருவகை கொண்டு முற்றிலும் உடல்வளைத்து திரும்பி இருகைகளையும் தூக்கி தலைக்குமேல் ஆட்டி “ஹே! ஹே! ஹே!” என்று கூவியபடி கால்களை உதைத்தான்.காற்றில் பறக்கும் மேலாடையென அவனை திருப்பிப்பற்றியபடி நடந்து வந்தாள் துச்சளை. அவள் முகத்தை மாறிமாறி கைகளால் அறைந்த பின் திரும்பி இளைய கௌரவர்களைப் பார்த்து ஹே ஹே என்று கூவியது குழந்தை. ஜயத்ரதன் புன்னகையுடன் துரியோதனனிடம் “அவர்களிடம் மட்டுமே இருக்க விழைகிறான்” என்றான். “ஆம், விளையாட்டு அவனை ஈர்க்கிறது” என்றான் துச்சாதனன். “விளையாட்டா அது?” என்றான் ஜயத்ரதன்.
“இங்கே பார் தாதை! உன் முதுதாதை” என்று துச்சளை குழந்தையை முகத்தைப்பற்றி திருப்ப அவன் தன் இரு கைகளாலும் அவள் முகத்தை மாறிமாறி அறைந்தபின் தலையை சுற்றிப்பிடித்து அவள் மூக்கை கவ்வினான். “ஆ!” என்று அலறியபடி அவள் மூக்கை விடுவித்துவிட்டு வருடியபடி நகைத்தாள். அவன் மேலிரு பற்களும் ஆழப்பதிந்து அவள் மூக்கில் தடம் தெரிந்தது. “இதெல்லாம் இங்கு வந்தபின் கற்றுக்கொண்டிருப்பான்…” என்றான் துச்சாதனன். “இதோ இங்கிருக்கும் அத்தனை பேருமே இக்கலையில் தேர்ந்தவர்கள்.”
துச்சளை அவர்களைப் பார்த்து மெல்லிய குரலில் “இவர்கள் இப்படி அசையாமல் இருக்க முடியுமென்பதே விந்தையாக உள்ளது” என்றாள். “தந்தையிடம் மட்டும் இப்படித்தான் இருப்பார்கள்” என்றான் துரியோதனன். ஜயத்ரதன் கைகூப்பி தலைவணங்கியபடி முன்னால் சென்று குனிந்து திருதராஷ்டிரரின் கால்களைத் தொட்டு சென்னிசூடி “அஸ்தினபுரியின் பேரரசரை சிந்துநாட்டரசன் ஜயத்ரதன் வணங்குகிறேன்” என்றான். “அதை நீ வரும்போதே சொல்லிவிட்டார்கள். செல்லுமிடமெல்லாம் இதை சொல்லிக் கொண்டிருப்பாயா மூடா?” என்றார் திருதராஷ்டிரர்.
அதை எதிர்பாராத ஜயத்ரதன் கண்கள் நோக்குமாற துச்சளையை பார்த்தான். அவள் வாய்க்குள் சிரித்தபடி விழிகளை திருப்பிக் கொண்டாள். கர்ணன் “அவர் அரச முறைப்படி தங்களை வணங்க வந்திருக்கிறார் தந்தையே” என்றான். “அரசமுறைப்படி வணங்க வேண்டுமென்றால் அரசவையில் வந்து வணங்க வேண்டியதுதானே. இது என் இசைக்கூடம். இங்கு நான் மணிமுடி சூடுவதில்லை. அரச ஆடையில்லாமல் அமர்ந்திருக்கிறேன்…” என்றார். “தந்தையே…” என துச்சாதனன் சொல்ல “வணங்கிவிட்டால் அவனை செல்லும்படி சொல். அவன் நாட்டில் மழைசிறக்கட்டும்” என்றார்.
ஜயத்ரதன் “என் மைந்தனும் சிந்துநாட்டு இளவரசனுமாகிய சுரதனை தங்களிடம் காட்டி வாழ்த்து பெற வந்தேன் அரசே” என்றான். இரு கைகளை மேலே தூக்கி “அரசமைந்தனை வாழ்த்தவேண்டுமென்றால் நான் கைகளில் கங்கணம் அணியவேண்டுமே!” என்றார் திருதராஷ்டிரர். “வெறுங்கைகளால் வாழ்த்தினால் போதுமென்றால் வா!” துச்சளை அருகே வந்து குழந்தையை மார்போடணைத்தபடி தலைகுனிந்து “என்னை வாழ்த்துங்கள் தந்தையே. புதல்வனுடன் தங்களைப்பார்த்து நற்சொல் பெற்று பொலிய இங்கு வந்துளேன்” என்றாள். திருதராஷ்டிரர் சிலகணங்கள் அசைவற்று அமர்ந்திருந்தார். தன் கைகளை அவரால் தூக்க முடியவில்லை என்று தெரிந்தது.
பின்பு அவரது வலதுகை இரைகண்ட கருநாகம் போல் எழுந்து அவளை நோக்கி நீண்டு தலையை தொட்டது. அவள் உச்சிவகிடில் சுட்டுவிரலை வைத்து நீவி நுதல்வளைவை இரு கைகளாலும் வருடி “பருத்துவிட்டாய்” என்றார். “ஆம், தந்தையே” என்றாள் அவள். “நீ வளரத்தொடங்கியதை நான் விரும்பவில்லை” என்றார் அவர். அவள் “அதற்கென்ன செய்வது?” என்றாள். அவர் அவள் கன்னங்களை வருடி கழுத்தை தொட்டார். அவள் தோள்களை கைகளால் ஓட்டி “மிகமிக பருத்துவிட்டாய்” என்றார்.
“உங்களைப்போல் ஆகிவிட்டேன் என்கிறார்கள்” என்றாள். திருதராஷ்டிரர் இடக்கையால் தன் இருக்கையின் கைப்பிடியை அறைந்து சிரித்து “என்னைப்போலவா? வருகிறாயா? ஒரு நாள் முழுக்க ஒருமுறை கூட தாழ்த்தாமல் பயிற்சிக்கல்லைச் சுழற்றுகிறேன்” என்றார். “என்னுடன் கதையாட வருகிறாயா?” “அப்படியல்ல தந்தையே, நான் எடையில்மட்டும்தான்…” என்றாள். அவள் கன்னத்தை அறைந்து தலைதூக்கி “விதுரா, மூடா, இவளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்றார். “தங்கள் வாழ்த்துக்களை மட்டும் கொடுத்தால் போதும்” என்றார் விதுரர்.
“வாழ்த்துக்கள்… அதை நான் சொல்லென ஆக்க வேண்டுமா என்ன?” என்றபின் அவர் கைகளை மேலெடுத்து அவள் சிறிய உதடுகளை தொட்டு “மிகச்சிறிய உதடுகள். இவை மட்டும்தான் அன்று என் கையில் இருந்த அதே சிறுமியின் உதடுகள்” என்றார். அவர் தன்னுள் எழுந்த உணர்வுகளை தனக்கே மறைக்கவே பேசுகிறார் என தோன்றியது.
“மைந்தன் எங்கே?” என்றார். சுரதன் அவள் முந்தானையை இருகைகளாலும் பற்றிக்கொண்டு பெரியவிழிகளால் நிமிர்ந்து திருதராஷ்டிரரின் முகத்தை நோக்கிக் கொண்டிருந்தான். அவர் வேறெங்கோ நோக்கி புன்னகைத்து “அவன் மணத்தை என்னால் உணரமுடிகிறது” என்றார். சுரதன் அவர் கண்களையே பார்த்தான். அவனுக்குப் புரியவில்லை. சட்டென்று “ஹே!” என்று குரலெழுப்பினான். திருதராஷ்டிரர் “அதட்டுகிறான்” என்று உரக்க நகைத்து அவன் தலையை தொட்டார். அவன் அக்கைகளைப் பற்றி இரு கைகளாலும் பிடித்து தடித்த சுட்டுவிரலை தன் வாய்க்குள் கொண்டு வந்தான்.
“கடிக்கப் போகிறான்” என்றாள் துச்சளை. “கடித்து அறியட்டும் தாதையை” என்று சுட்டு விரலை அவன் வாய்க்குள் விட்டார். அவன் ஒருமுறை கடித்துவிட்டு வாயிலிருந்த விரலை எடுத்தான். சிறிய உதடுகளை எச்சில் வழிய சப்புக்கொட்டி “ஆ!” என்றான். “கட்டையை கடிப்பது போலிருக்கும்” என்றான் துச்சாதனன். “நான் இளமையில் கடித்ததே நினைவிருக்கிறது.” திருதராஷ்டிரர் குழந்தையை ஒற்றைக்கையால் பற்றி மேலே தூக்கி தன் தோள்மேல் வைத்து திரும்பி “லக்ஷ்மணா” என்றார்.
லக்ஷ்மணன் எழுந்து “தாதையே” என்றான். “எப்படி இருக்கிறான் சிறுவன்?” என்றார். “இவனைப்போன்று இங்கே நூற்றுப் பன்னிரண்டு சிறுவர்கள் இருக்கிறார்கள் தாதையே” என்றான். “நடக்கிறானா?” என்றார் திருதராஷ்டிரர். தூமன் “நாங்கள் நேற்று இவனை நடக்கவைக்க முயற்சி செய்தோம். அவன் எறும்புபோல கையூன்றித்தான் நடக்கிறான்” என்றான். “இன்னும் ஒரு மாதத்தில் நடந்துவிடுவான்” என்ற திருதராஷ்டிரர் அவனை தன் கழுத்தெலும்பு மேல் அமர வைத்தார். முகத்தை திருப்பி அவனுடைய மென்வயிற்றில் மூக்கை புதைத்தார். உரக்க நகைத்தபடி அவன் கால்களை உதைத்து எம்பிக் குதித்து அவர் தலையை தன் கைகளால் அறைந்தான்.
அவர் அவனை தன் மடியில் அமரவைத்து அவன் கன்னங்களையும் கழுத்தையும் வருடி “எத்தனை சிறிய உடல்!” என்றார். துச்சாதனன் “இதைவிடச் சிறியதாக இருந்தான் லக்ஷ்மணன்… இன்று அவன் என் தோள் வரை வந்துவிட்டான்” என்றான். “அவனுக்கு ஏழு வயதுதானே ஆகிறது?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம். அதற்குள் தந்தைக்கு நிகராக உண்கிறான்” என்றான் துச்சாதனன். திருதராஷ்டிரர் “எவரையும் நான் பார்த்ததில்லை. ஆனால் கைவிரல்நினைவாக இருக்கிறார்கள்” என்றார். “அரசே, தாங்கள் அறிந்ததுபோல குழந்தைகளை இங்கு எவரும் அறிந்ததில்லை. விழிகள் குழந்தையை அறிய பெரும்தடைகள். ஆகவேதான் தங்களுக்கே மைந்தரை அள்ளி அள்ளிக்கொடுக்கிறார்கள் தெய்வங்கள்” என்றார் விதுரர். “ஆம்! ஆம்! உண்மை” என்றபின் திருதராஷ்டிரர் உரக்க நகைத்தார்.
பின்பு சுரதனை மேலே தூக்கி காற்றில் எறிந்து அவன் சுழன்று கீழிறங்கும்போது பிடித்து உரக்க நகைத்து மீண்டும் தூக்கி எறிந்தார். அவன் மாயச்சரடால் என காற்றிலேயே தாங்கப்பட்டு சுழன்று மெல்ல இறங்கி அவர் கைகளில் வந்து அமர்வதுபோல் தெரிந்தது. சற்றுநேரத்தில் அக்குழந்தையும் அவரும் மட்டுமேயான ஓர் ஆடல் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. காற்றில் எழுந்து கைவிரித்து பற்கள் ஒளிர நகைத்த குழந்தை பூனைபோல உடல் நெகிழ்த்தி வளைந்து அவர் கைகளில் வந்து அமர்ந்து மீண்டும் எம்பியது. விண்ணிலிருந்து உதிர்ந்துகொண்டே இருக்கும் குழந்தைகளை அவர் கை ஓயாது பெற்று பெற்று கீழே தன்னை சுற்றிப் பரப்புவதுபோல் இருந்தது.
இளைய கௌரவர்கள் அதைக்கண்டு உரக்க நகைத்தனர். இருவர் எழுந்து அருகே வந்து “தாதையே இங்கு!” என்றனர். அவர் சுரதனை காற்றில் வீச அவர்களில் ஒருவன் பற்றிக்கொண்டான். “எனக்கு! எனக்கு!” என்று நூறுபேர் கைகளை தூக்கினர். லக்ஷ்மணன் அவனை மீண்டும் திருதராஷ்டிரரை நோக்கி எறிந்தான். திருதராஷ்டிரர் குழந்தையை திரும்ப லக்ஷ்மணனை நோக்கி அனுப்பினார். அறையெங்கும் வண்ணத்துப்பூச்சி போல் மைந்தன் பறப்பதைக்கண்டு ஜயத்ரதன் பதற்றமும் நகைப்புமாக தவித்தான். ஒவ்வொரு கையிலாக சென்று அமர்ந்து சிறகடித்து மீண்டும் எழுந்து மீண்டும் அமர்ந்தான் சுரதன்.
“போதும் தந்தையே!” என்றாள் துச்சளை. “போதும் என்ற சொல்லுக்கு இவர்கள் நடுவே இடமே இல்லை” என்றான் துச்சாதனன். திருதராஷ்டிரர் கையைத்தூக்கி “இங்கே” என்றார். அவர் கையில் வந்தமைந்த மைந்தனை துச்சளையிடம் கொடுத்து “இதோ உன் மைந்தன்…” என்றார். குழந்தை திரும்பி தன் கால்களாலும் கைகளாலும் அவர் கைகளை வண்டுபோல பற்றிக்கொண்டு அமர்ந்து அன்னையிடம் செல்வதற்கு மறுத்தான்.
துச்சளை “வா… என் கண்ணல்லவா? என் அரசல்லவா?” என்று சொல்லி அவனை தூக்கமுயல “மாட்டேன்” என்பது போல் உடலசைத்தபடி அவன் இறுகப் பற்றிக்கொண்டான். “இங்கு வந்தது முதல் வேறெங்கும் இருக்க மறுக்கிறான்” என்றாள் துச்சளை. “பிறகு நீ எதற்கு நீ அவனை தூக்குகிறாய்?” என்றபின் அவனை திரும்ப தூக்கி லக்ஷ்மணனை நோக்கி வீசினார். லக்ஷ்மணன் அவனை பற்றிக்கொண்டதும் “சென்று விளையாடுங்கள்” என்றார். அவர்கள் புன்னகைத்தபடி ஒருவரை ஒருவர் முட்டி மோதி இசைக்கூடத்திலிருந்து வெளியே ஒழுகிச்சென்று மறைந்தனர்.
அவர்களின் கரிய உடல்கள் மறைய அவ்வறையே மெல்ல ஒளி கொள்வதுபோல் தோன்றியது. துச்சளை “தாங்கள் தங்கள் இசை உலகுக்குள் முழுதமைந்துள்ளீர்கள் என்றார்கள் தந்தையே” என்றாள். “ஆம், இங்கு எவருமே இல்லை” என்றார் திருதராஷ்டிரர். திரும்பி ஜயத்ரதனிடம் “நன்று அரசே, எங்கள் குலமகளை பெற்றுள்ளீர்கள். அனைத்து நலன்களும் சூழ்க!” என்றார். அம்முறைமைச் சொல்லால் சற்று முகமாறுதல் அடைந்த ஜயத்ரதன் விதுரரை நோக்கியபின் “தங்கள் சொற்கள் என் நல்லூழ் என வந்தவை பேரரசே” என தலைவணங்கினான்.
துரியோதனன் “நான் அரசவை புக நேரமாகிறது தந்தையே. இன்று பெருமன்றில் இளவரசன் எழுந்தருளும் நாள். தாங்கள் அவை புக வேண்டும்” என்றான். திருதராஷ்டிரர் விதுரரிடம் “விதுரா, நீ என்ன சொல்கிறாய்? நான் இன்று சென்றாகவேண்டுமா என்ன?” என்றார். “தாங்கள் இருந்தாக வேண்டும் மூத்தவரே” என்றார் விதுரர். “அரசவையில் நெடுநேரம் அமரும்போது என் உடல் வலிக்கிறது” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், ஆனால் பெருங்குடிகளின் அவையை தாங்கள் தவிர்க்க முடியாது. தாங்கள் அவையமர்வதேயில்லை என முன்னரே உளக்குறை உள்ளது” என்றார்.
திருதராஷ்டிரர் ஜயத்ரதனிடம் “நன்று சைந்தவரே, அவைக்கு வருகிறேன். அங்கு அனைத்து முறைமைகளும் நிகழட்டும்” என்றார். அவர் கைகளைத் தொட்டு தலையில் வைத்தபின் துரியோதனன் நடக்க துச்சாதனனும் வணங்கி பின்னால் நடந்தான். துச்சளை “நான் வருகிறேன் தந்தையே” என்றாள். அவர் “தனியாக என் அறைக்கு வா சிறியவளே. உன்னை நான் இன்னும் சரியாக பார்க்கவில்லை” என்றார். “நாளை காலை வருகிறேன் தந்தையே” என்றாள் துச்சளை. ஆற்றாதவராக அவர் கை நீட்டி மீண்டும் அவள் கைகளைப் பற்றி “உன் உள்ளங்கைகள் மட்டும் நாயின் நாக்கு போல மிகச்சிறிதாக உள்ளன” என்றார்.
அவள் புன்னகைக்க அவரது கை அவள் தோள்களைத் தொட்டு புயத்தை அழுத்தி வருடியது. அவளை தொட்டுத் தொட்டு தவித்த விரல்களுக்கு இணையாக முகமும் பதைத்தது. பின்பு மெல்ல யாழ்தடவும் பாணனின் விரல்களாயின அவை. அவர் முகம் இசையிலென ஊழ்கம் கொண்டது. அந்த இயைபில் அவளும் கலந்துகொள்ள அவர்கள் இருவர் மட்டிலுமே அங்கிருந்தனர். அவள் கைகளின் நரம்புகளை அழுத்தி விரல்களை ஒவ்வொன்றாகப் பற்றி நகங்களை உணர்ந்து மணிக்கட்டை வளைத்து கைமடிப்பில் தயங்கி இடையில் படிந்து எழுந்து அவரது கை அவள் வலது மார்பை தொட்டது. முனகலாக “ஆ! நீ பெரிய பெண்ணாகிவிட்டாய்” என்றார். துச்சளை பெருமூச்சுவிட்டாள்.
திருதராஷ்டிரர் விழிப்பு கொண்டு “செல்க… நான் உன்னை தொடத்தொடங்கினால் என் இளமையை முழுக்க தொடவேண்டியிருக்கும். விழிகொள்ளவேண்டுமென நான் விழைந்ததில்லை. ஏனெனில் அது என்னவென்று நான் அறிந்ததே இல்லை. ஆனால் இவளை சிறுகுழவியென என் கைகளில் கொண்டு வைத்தபோது நோக்கை விழைந்தேன். இப்போதும் இவளுக்காகவே விழைகிறேன்” என்றார். “தந்தையின் பேரின்பம் மகளழகை பார்ப்பது என்கிறார்கள் சூதர்கள்…” குரல் இடற “பேரின்பம் என்பது மண்ணில் உள்ளதே என நானும் அறிவேன்” என்றார்.
துச்சளையின் விழிகள் கலங்கின. தழுதழுத்தகுரலில் “தந்தையே…” என்று சொல்லி அவர் கைகளை பற்றினாள். “இல்லை பெண்ணே. நான் ஒரு நகையாடலாகவே அதை சொன்னேன். இனி நான் விழிகொண்டாலும் உன்னை இளமகளென பார்க்க இயலாதல்லவா?” என்றார். “இன்னொரு பிறப்பு உண்டு அல்லவா தந்தையே?” என்றாள் துச்சளை. “ஆம், நாம் பார்க்காது விண்ணுலகு எய்தப்போவதில்லை” என்றார். அவள் அவர் கைகளைப்பற்றி தன் தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “ஆம்” என்றாள். “ஆனால் அங்கு நீ மகள் என வரப்போவதில்லை. எனக்கு அன்னையென்றே வருவாய்” என்றார். துச்சளை தன்னை அடக்கிக்கொள்ள முயன்று கணங்கள் மேலும் மேலும் அழுத்தம் கொள்ள சட்டென்று உடைபட்டு மெல்லிய தேம்பல் ஒலியுடன் அவர் கையில் முகம்புதைத்தாள். கண்ணீர் அவரது மணிக்கட்டின் முடிகளின் மேல் சொட்டி உருண்டது.
“என்ன இது? நீ அரசி. விழிநீர் அரசியர்க்குரியதல்ல. வேண்டாம்” என்றார் திருதராஷ்டிரர். வெண்பற்கள் கரிய முகத்தில் ஒளிவிட சிரித்தபடி கர்ணனை நோக்கி “அழுகிறாள்… அடுமனைப் பெண்போலிருக்கிறாள். இவள் எப்படி அரியணை வீற்றிருப்பாள் என்று நினைக்கிறாய்?” என்றார். கர்ணன் “அவளுக்காக மும்மடங்கு பெரிய அரியணை ஒன்றை அங்கே அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் தந்தையே” என்றான். துச்சளை தலைதூக்கி கண்களை துடைத்தபடி உதடுகளைக் குவித்து கர்ணனிடம் ஓசையின்றி பேசாதீர்கள் என்று சொன்னாள்.
“என்ன சொல்கிறாள்?” என்றார் திருதராஷ்டிரர். “கடிந்து கொள்கிறாள்” என்றான் கர்ணன். திருதராஷ்டிரர் கைகளை இருக்கையில் அறைந்து உரக்க நகைத்தபடி “நூறுபேரையும் தன் அடியவர்களாக்கி வைத்திருந்தாள். உன் ஒருவனிடம்தான் தங்கை என்ற உணர்வை சற்றேனும் அடைகிறாள்” என்றார். “சென்று வருகிறோம் தந்தையே” என்று மீண்டும் துச்சளை சொன்னாள். “நன்று சூழ்க!” என்று அவள் தலைமேல் கைவைத்து வாழ்த்தினார் திருதராஷ்டிரர். விதுரர் “அவர்கள் அவை புகவேண்டும். அரைநாழிகையில் நாமும் சித்தமாகி அவைக்கு செல்வோம்” என்றார். “ஆம், அவை புகுதல் இன்றியமையாதது என்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார் திருதராஷ்டிரர். அவர்கள் அனைவரும் மீண்டும் தலைவணங்கி அவர் முன்னில் இருந்து விலகியபோது ஜயத்ரதன் அருகே சென்று “வணங்குகிறேன் தந்தையே” என்றான்.
அச்சொல் திருதராஷ்டிரரை பாதையில் பாம்பைக்கண்ட யானை என ஒருகணம் உடல் விதிர்த்து அசைவிழக்கச் செய்தது. பின்பு தான் அமர்ந்திருந்த பீடம் பெரும் ஓசையுடன் பின்னகர அவர் எழுந்து அவனை இரு கைகளாலும் தூக்கி கால்கள் காற்றில் பறக்கச்சுழற்றி தன் இடையுடன் சேர்த்து அணைத்து இறக்கினார். பெரிய கைகளால் அவன் தோளை அறைந்து “மூடா! மூடா!” என்று அழைத்தார். அவனை இறுக தன் நெஞ்சோடணைத்து அவன் கன்னங்களில் முத்தமிட்டார். அவர் அவனை சுழற்றிய விரைவில் மேலாடையும் முத்துச்சரம் சுற்றிய தலையணியும் தெறித்து விழுந்திருந்தன. கலைந்த குழலும் உலைந்த ஆடையுமாக அவன் அவரது உடலோடு ஒட்டி குழந்தைபோல் நின்றான்.
“உன் தோள்கள் ஏன் இத்தனை மெலிந்துள்ளன? ஊனுணவு எடுப்பதில்லையா மூடா?” என்றார். “நான் ஊன் உண்பதுண்டு தந்தையே” என கண்புதைத்த குழந்தைபோல அவன் சொன்னான். “அறிவிலியே, உண்பதென்றால் அளந்துண்பதல்ல. கலம்நோக்கி உண்பவன் களம் வெல்வதில்லை. இனி இங்கிருக்கையில் நீ என்னுடன் உணவருந்த வேண்டும். நான் கற்பிக்கிறேன் உனக்கு” என்றார். ஜயத்ரதன் கர்ணனை நோக்கினான். அவன் கண்கள் சிவந்து ஊறி கன்னங்களில் வழிவதையும் உதடுகள் புன்னகையில் விரிந்திருப்பதையும் கர்ணன் கண்டான். “ஆம் தந்தையே, ஆணை” என்றான் ஜயத்ரதன்.
“வெல்வதும் அமர்வதும் இன்பமல்ல. சிறியவனே, இன்பமென்பது உண்பதும் உறங்குவதும் மட்டும்தான். பிறிதெதுவும் இல்லை” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் புன்னகையுடன் கர்ணனை பார்த்தார். அவன் மீசையை நீவுவதுபோல் சிரிப்பை அடக்கிக்கொண்டான். “இங்கு வா, என்னுடன் அமர்ந்து இசை கேள். நல்லுணவு உண்” என்றார் திருதராஷ்டிரர். “வருகிறேன் தந்தையே. தங்கள் ஆணை” என்றான் ஜயத்ரதன். தலையை வருடி மென்குரலில் “அஞ்சாதே” என்று அவர் சொன்னார். அச்சொல் வலியூறும் புள்ளியொன்று தொடப்பட்டது போல் அவனை நடுங்கச் செய்வதை கர்ணன் கண்டான்.
“எதற்கும் அஞ்சாதே. இங்கு உனக்கு நூற்றி ஒருவர் இருக்கிறார்கள். இதோ என் மூத்தமைந்தன் கர்ணன் இருக்கிறான். பரசுராமரும் பீஷ்மரும் துரோணரும் அன்றி பிறிதெவரும் அவன் முன் வில்லெடுத்து நிற்க இயலாது. உன் எதிரிகள் அனைவரும் அவனுக்கு எதிரிகள். உன் நண்பர்கள் மட்டுமே அவனுக்கு நண்பர்கள். என் மைந்தன் அமர்ந்திருக்கும் அஸ்தினபுரியின் அரசு, அவன் கைகளென பெருகி நிற்கும் நூறுமைந்தர்கள் அனைவரும் உனக்குரியவர்கள். அஞ்சாதே” என்றார். “இல்லை தந்தையே. இனி அஞ்சுவதில்லை. நேற்றுடன் அச்சம் ஒழிந்தேன்” என்றான். “நன்று நன்று… நீயும் என் மைந்தனே” என்றார் திருதராஷ்டிரர்.
ஜயத்ரதன் பாறையில் முளைத்த செடி என அவர் கைகளுக்குள் மார்பில் அமைந்திருந்தான். அவன் விழிகள் மூடியிருக்க தொண்டை அசைந்தபடியே இருந்தது. அழுபவன்போலவும் புன்னகைப்பவன்போலவும் அவன் தோன்றினான்.