[ஜேசுதாசை வணங்கும் எஸ் பி பாலசுப்ரமணியம்]
ஜெ
முன்பொருமுறை ஒரு கட்டுரையில் காலில் விழுவதைப்பற்றி எழுதியிருந்தீர்கள். காலில்விழும் கலாச்சாரத்தை நான் வெறுக்கிறேன். அது ஒரு அடிமைத்தனம் என நான் நினைக்கிறேன். அதைப்பற்றி நீங்கள் எழுதியவரிகள் எனக்கு அருவருப்பை அளித்தன. அதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நினைத்தேன். ஆகவேதான் இந்தக்கடிதத்தை எழுதினேன்
க.பாரதிராஜா
அன்புள்ள பாரதிராஜா,
வேறெந்த கலாச்சாரம் உங்களுக்கு உவப்பாக இருக்கிறது? மேலைக்கலாச்சாரமா? அதைப்பின்பற்றுங்கள், தாராளமாக.
ஆனால் அந்தக்கலாச்சாரத்திலும் பல நுண்ணிய பழக்கங்கள், ஆன்மீக உள்ளடக்கம் கொண்ட செயல்பாடுகள் உண்டு. அவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். மேலைநாட்டு நாகரீகம் என்றால் அங்குள்ள மோஸ்தர்கள் மற்றும் நுகர்வு மட்டுமே என புரிந்துகொள்ளாதீர்கள்
உதாரணமாக, ஒரு வாயிலை முதலில் திறப்பவர் கடைசிநபர் உள்ளே நுழைந்தபின்னரே அதை மூடிவிட்டு தான் நுழையவேண்டும். அமெரிக்காவில் இந்தியர்கள் தவிர அத்தனைபேரும் கற்றிருப்பது இந்தப்பழக்கம் என்பதைக் கண்டேன். அங்கே பெண்களுக்கு ஆண்கள் எங்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும். பெண்களுக்கு எப்போதும் எழுந்து மரியாதை செலுத்தவேண்டும். அது இன்னொருவகை இழிவாக உங்கள் ஆண்மைக்குப் படக்கூடும்.
காலில் விழுந்து ஆசி பெறுவதென்பது பல்லாயிரமாண்டுகளாக இந்தியப்பண்பாட்டில் இருந்துவரும் ஒரு வழக்கம். தந்தையிடமும் தாயிடமும் முழுமையாகப் பணிவதில் அது தொடங்குகிறது. மூத்தவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை வணங்குவதாக அது விரிகிறது. இங்கு அதன் பொருள் என்பது ஆணவத்தைத் தாழ்த்துதலே. ஒரு சடங்காக அதைச்செய்வது சரியல்ல. ஆனால் உள்ளம் வணங்குவது ஒரு குளியல்போல.
மன்னர்கள் காலில் பிறர் விழுந்து வணங்கும் மரபு இந்தியாவில் இருந்ததில்லை. தலைவணங்குவதுடன் சரி. ஆனால் துறவிகள், சான்றோர் காலில் மன்னர்கள் விழுந்து வணங்கியாகவேண்டும். இன்றும் அம்மரபு தொடர்கிறது. அதில் ஒருவன் அருவருப்படைகிறான் என்றால் அவன் பண்பாட்டைப் புரிந்துகொள்ளமுடியாதவன். பண்பாடு அத்தகைய சில குறியீட்டுச் செயல்கள் வழியாகவே நிகழ்கிறதென அறியும் நுண்ணுணர்வற்றவன். அவனால் மேலைப்பண்பாட்டையும் புரிந்துகொள்ளமுடியாது.
ஒவ்வொரு கணமும் நாம் ஆணவத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறோம். ஆளுமை உருவாகும்போதே ஆணவம் பெருகத்தொடங்குகிறது. நான் என்னும் எண்ணம். தொடர்ந்து நம் இடம், நம் உடைமைகள் பற்றிய பெருமிதம். பிறப்பு இறப்பென ஓடும் காலவெள்ளத்தில் அவையெல்லாம் வெறும் நீர்க்குமிழிகளே என உணர்ந்தவன் பெற்றோரையும் மூத்தோரையும் முழுதும் அடங்கிப் பணியாமலிருக்கமாட்டான். பணிவதே அவ்வறிதலை அளிக்கும்
கல்வியும் ஞானமும் அதைவிடப்பெரிய ஆணவஊற்றுக்கள். மிகச்சிறிய அளவு கல்விகூட அதேயளவுக்கு ஆணவத்தை இணைத்தபடியேதான் வந்துசேரும். ஆகவேதான் கல்வி எப்போதுமே பிறரைப் புண்படுத்தும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.ஓர் எல்லைவரை கல்வியாணவம் தேவையானதே. ஏனென்றால் உலகியலின் சிறுமைமுன் நிமிர்ந்து நின்றிருக்க, கல்விக்காக பிற அனைத்தையும் துறக்க, உண்மை ஒன்றே தேவை என உறுதியுடன் சென்றுகொண்டிருக்க அந்த ஆணவமே துணை
ஆனால் அதுவே நம் கண்ணை மறைக்கும் திரையாகவும் ஆகும். அந்த மாயையில் சிக்காதவர்களே இல்லை. புராணங்களில் ஞானமே ஆணவமாக மாறி அறியாமையாக உருக்கொண்டதைப்பற்றிய கதைகள் ஏராளம். தெய்வங்களே அந்தப்பொறியிலிருந்து தப்பவில்லை. கல்வித்தெய்வம் கலைமகளும் படைப்புத்தெய்வம் பிரம்மனும்தான் அடிக்கடி ஆணவம் கொண்டு அறியாமையை அடைகிறார்கள்
ஆனால் ஒருவனின் கல்வி என்பது எத்தனை பிரம்மாண்டமானது என்றாலும் மானுட ஞானமென்னும் பெருக்கில் துளியினும் துளியே. அனைத்து ஞானங்களும் முன்னோடிகளிடமிருந்து பெறப்பட்டு சற்றே சேர்க்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கைமாறப்படுவது மட்டுமே. அதை உணர்ந்தவன் ஆசிரியர்களிடம் அனைத்து ஆணவங்களையும் கழற்றிவைத்துவிட்டுப் பணியத் தயங்கமாட்டான். அப்பணிவினாலேயே அவன் ஞானம் முழுமையடைகிறது.
அதிகாரத்தை பணிவதும், செல்வத்தைப் பணிவதும் கீழ்மை. அது கீழ்களின் இயல்பு. அவர்களை இயக்குவது அச்சமும் ஆசையும் மட்டுமே. பெற்றோரை, மூத்தோரை, அறிந்தோரை, துறந்தோரை கால்தொட்டு வணங்குவது என்பது நம் பெருமரபு நமக்களித்த பண்பாடு.அதை நான் எவ்வகையிலும் வெட்கவில்லை. எப்படி என் பண்பாட்டை மதிக்கிறேனோ அதேபோல இன்னொரு பண்பாட்டிலிருக்கும் ஆன்மீகமான உள்ளடக்கத்தையும் புரிந்துகொள்கிறேன்.
நான் ஆணவம் கொண்டவன். என் தலை எத்தனை வீங்கியது என எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவே எனக்குநானே பணிக பணிக என ஆணையிட்டுக்கொள்கிறேன். எந்த அதிகாரத்தின்முன்பும் பணத்தின்முன்பும் இதுவரை பணிந்ததில்லை. எனக்குரிய முழுமையான மரியாதையை ஆணையிட்டுப் பெறவே முயல்வேன். ஆனால் பணியவேண்டிய இடங்களில் என்னை முழுமையாக வளைக்கவும் தயங்கமாட்டேன்.அது என்னை பிற இடங்களில் நிமிர்ந்து நிற்கச்செய்யும் என அறிந்திருக்கிறேன்.
கி.ராஜநாராயணன் கால்களையோ இளையராஜாவின் கால்களையோ தொட்டு வணங்குவதென்பது என் ஆணவத்தை நான் கடக்கும் வழி என்றே கொள்கிறேன். முழுதுடல் காட்டி நின்றிருக்கும் சமணமுனிவரின் முன் பணிகையில் என் எளிமையை ஆழமாக உணர்கிறேன். எண்பது கடந்த என் பெரியம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கும்போது மீண்டும் குழந்தையாக உணர்கிறேன். நாஞ்சில்நாடனை அவரது அறுபதாம்திருமணத்தன்று கால்தொட்டு வணங்கி நெற்றிநீறு இட்டுக்கொண்டபோது இளையவனாக உணர்ந்தேன்.
ஆனால் அதிலும் சில நிபந்தனைகள் இங்கு மரபாக இருந்தன. வயதில் இளையவர்களை வணங்கலாகாது. வணங்கப்படுபவர் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்திருப்பது அவசியமென்ற எண்ணமும் உண்டு. அறுபது எழுபதுகளுக்குமேல் சென்ற பெரியவர்களை வணங்குவதே மரபும் முறையும் ஆகும்.
பல ஆண்டுகளுக்கு முன் முதிர்ந்த கத்தோலிக்கத் துறவியான ஃபாதர் தொம்பர் அவர்களைச் சந்திக்கச்சென்றிருந்தேன். கிளம்பும்போது அவர் கால்களைத் தொட்டு வணங்கினேன். என் தலையைத் தொட்டு “பிதாசுதன்பரிசுத்தாவியின் ஆசியாலே’ என்று வாழ்த்தியபின் திரும்பி மேஜைமேலிருந்த சிலுவையை எடுத்து தன் நெற்றியில் வைத்தபின் திரும்ப வைத்தார்.
வாயில்வரை அவர் வந்தபோது அதை ஏன் அவர் செய்தார் என்று கேட்டேன். ‘வணங்கப்படுவது நானல்ல, பிதாவுக்காக நான் அணிந்த இந்த தோற்றமே என்று எனக்குநானே சொல்லிக்கொள்கிறேன்’ என்றார். அது எனக்கு ஒரு பெரிய தருணம்
பின்னர் நித்ய சைதன்யயதியிடம் அதைப்பற்றிச் சொன்னேன். ‘ஆம், வணங்கப்படுகையில் நான் என்னுள்ளே என் குருவை வணங்கிக்கொள்வேன். இந்த தொடர்ச்சி என்றும் இங்கே இருக்கவேண்டும் என எண்ணுவேன்” என்றார்
ஜெ