இலக்கியமும் வரலாறும்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
ஊர்புகுதல் படித்துவிட்டு பொழுது போகாமல் விக்கிபிடியாவை அலசிகொண்டிருந்தேன். கதை நடக்கும் காலம் 1725-1730 என்று கொள்ளலாமா? புகையிலை பாண்டியிலிருந்து நாஞ்சிலுக்கு போயிருக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கென்னமோ வேனாட்டிலிருந்துதான் போயிருக்கும் என்று தோணுது. போர்த்துகீசியர்கள் மேற்கு கடற்கரைகளில் தானே முதலில் வியாபாரம் செய்தார்கள். அவர்கள் கொண்டு வந்த அமெரிக்க புகையிலை, தக்காளி, மிளகாய், உருளை கிழங்கு எல்லாம் மேற்கு கடற்கரையிலிருந்து பரவியிருக்காதா? (மெட்ராசை சென்னைனும் பாம்பாயை மும்பைனும் மாத்தின கும்பல் மேற்கூறிய காய்கறிகளை சாப்பிட கூடாதுன்னு தடுக்கணும் :-)
நவீன்

அன்புள்ள நவீன்

ஊர்புகுதலில் வரும் தகவல் சரியானதே. அதை வேலுப்பிள்ளை, நாகம் அய்யா போன்றவர்களின் திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலில் பார்க்கலாம். புகையிலை இரு வழிகளில் இங்கே வந்தது. ஒன்று மங்களூரில் இருந்து வரும் வடக்கன் புகையிலை. இன்னொன்று தூத்துக்குடி வழியாக வரும் யாழ்ப்பாணன் புகையிலை. யாழ்ப்பாணம் புகையிலை மென்மையானது, சிறந்த முறையில் பதனிடப்பட்டது. வடக்கன் முரட்டுபுகையிலை.

இந்த கடத்தலை தடுக்க தமிழகப்பகுதியை கேரளத்தில் இருந்து பிரிக்கும் பெரிய கோட்டையை திவான் அய்யப்பன் மார்த்தாண்டன் கட்டினார். கன்யாகுமரி கடல் முதல் [கோவளம் அருகே இதன் தொடக்கத்தை காணலாம்] பூதப்பாண்டி மலையுச்சி வரை இது கட்டப்பட்டிருந்தது. செங்கல்லும் வெட்டுக்கல்லும் கொண்டு கட்டப்பட்டது. இதை ஆங்கிலேயர் இடித்து கட்டிடங்களும் தேவாலயங்களும் கட்டினார்கள். பல இடங்களில் இதன் இடிபாடுகள் இன்றும் உள்ளன

ஜெ

வணக்கம் திரு.ஜெயமோகன்,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

சமீபத்தில் தங்களது வீட்டில் நானும் எனது நண்பர் சந்திரசேகரும் தங்களை சந்தித்து உரையாடியபோது மருங்கூர் நூலகத்தின் பெயர் சுவாமி சின்மயானந்தா நூலகம் என குறிப்பிட்டோம். தாங்கள் உடனே அது அப்படி இருக்க வாய்ப்பில்லை என கூறிறீர்கள். உண்மைதான் நூலகத்தின் பெயர் சுவாமி சிவானந்தா வாசிப்பு சாலை. இப்போது அதன் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.மேலும் கம்பராமாயணம் புலியூர் கேசிகன் உரையுடன் படித்ததாக கூறினேன். அதுவும் தவறு என சுட்டிக்காட்டினீர்கள். இதுவரை எவ்வளவு முயன்றும் சரியாக ஞாபகம் இல்லை எனக்கு. போகட்டும். எனது வாசிப்பின் மீது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் நான் கம்பராமாயணம் வாசித்த காலத்தில்தான் ‘கலித்தொகை’யும் வாசித்துக்கொண்டிருந்தேன். அது புலியூர் கேசிகன் உரை என நம்புகிறேன்.

நல்லது, புறநானூறு போன்றவை நிகழ்த்தல் கலையாக ஒருகாலத்தில் இருந்திருக்க வேண்டும் என முன்பொருமுறை நீங்கள் கூறினீர்கள். பிற இலக்கியங்களும் அவ்வாறே இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம் என எண்ணத்தோன்றுகிறது.ஆனால் அடிப்படையான சந்தேகம் அவற்றில் கையாளப்படும் வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்பைப்பற்றியது. பெரும்பான்மையான சொற்கள் மற்றும் வாக்கிய அமைப்புகள் தற்காலாத்தில் எளிதில் புரிந்து கொள்ள முடியாதைவையாக இருக்கின்றன.ஆனால் அக்காலத்தில் அவை பெரும்பான்மையான மக்களுக்கு புரிந்திருக்கும். காலத்திற்கும், மொழியின் மாற்றத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி சற்று விரிவாக விளக்குவீர்களா? மேலும் திருக்குறள், நாலடியார் போன்றவை நிகழ்த்தல் கலையாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அது எவ்வாறு உருவாகியிருக்கும் மக்களிடம் எவ்வாறு அது பரவியிருக்கும் என தங்களது கருத்தைச் சொன்னால் உபயோகமாக இருக்கும்.(திருவள்ளுவர் ஆசிரியராக இருந்திருப்பாரோ என அடிக்கடி நான் எண்ணுவதுண்டு).
தங்களது நேரத்திற்கும் பதிலுக்கும் நன்றி.
பாலா.
சிங்கப்பூர்.

பாலா,

சங்க காலத்துக்கும் பிற்கால இலக்கியத்துக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் உள்ள ஒரே பாணி பின்னர் இருப்பதில்லை. அந்த ஒரே பாணி அவை நிகழ்த்து கலைகளின் பகுதியாக எழுதப் பட்டமையால் வந்தது என்பதே ஊகம். பின்னர் காவியங்கள் உருவானபோது அந்த முறையே இல்லாமல் ஆகிவிட்டது. சிலப்பதிகாரம் ஒரு காப்பியம். காப்பிய ஆசிரியனால் வாசிப்பதற்காக எழுதப்பட்டது. பிந்தைய நூல்கள் அவ்வாறே.

ஆனால் மீண்டும் பக்தி காலகட்டங்களில் ஆழ்வார் நாயன்மார் பாடல்கள் பாடப் படுவதற்காகவும் நடிக்கப் படுவதற்காகவும் உருவாக்கப் பட்டன. ஆகவே மீண்டும் சங்க கால அழகியல், இலக்கணம் தலையெடுக்கிறது

நீதிநூல்களை சமணர்கள் உருவாக்கினார்கள். அனேகமாக களப்பிரர் காலகட்டத்தில் சமணர்கள் கல்வியை ஒரு மதச்செயலாக கருதினர். பள்ளி கொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள். சமணர் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. அங்கே கல்வி அளிக்கப் பட்டமையால் தான் பள்ளி என்ற சொல்லே வந்தது. அந்த கல்விக்காக சமணர் எழுதிய பாடநூல்களே நீதி நூல்களும் நன்னூல் போன்ற இலக்கணநூல்களும்

ஜெ

முந்தைய கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 1
அடுத்த கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 2