வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 36

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 13

புஷ்பகோஷ்டத்தின் பெருமுற்றத்தில் தேர் நிற்க படிகளில் கால் வைக்காமலேயே இறங்கி சகடங்கள் ஓடி மெழுகெனத் தேய்ந்திருந்த தரையில் குறடுகள் சீர்தாளமென ஒலிக்க நடந்து மாளிகைப்படிகளில் ஏறி கூடத்தை அடைந்த கர்ணனை நோக்கி வந்த பிரமோதர் தலைவணங்கி “அமைச்சர் தங்களை மும்முறை தேடினார்” என்றார். கர்ணன் தலையசைத்தான். “சென்று அழைத்து வரவா என்று வினவினேன். வேண்டாமென்றார்.” தலையசைத்து “அரசர் எங்கிருக்கிறார்?” என்றான் கர்ணன். “உள்ளவைக்கூடத்தில் இளையோருடன் இருக்கிறார்” என்றார். கர்ணன் “உண்டாட்டா?” என்றான். பிரமோதர் புன்னகை புரிந்தார்.

மேலே நடந்தபடி “சிந்துநாட்டரசர் எப்போது வருகிறார்?” என்றான் கர்ணன். “அவரும் மேலே உண்டாட்டில் இருக்கிறார்” என்றார் பிரமோதர். கர்ணன் புருவங்களில் விழுந்த முடிச்சுடன் திரும்பி நோக்கி “உண்டாட்டிலா?” என்று கேட்டான். “ஆம். அமைச்சர் தங்களை உண்டாட்டிற்கு அழைக்கவே வந்தார் என்று கருதுகிறேன்” என்றார் பிரமோதர்.

கர்ணன் தலையசைத்துவிட்டு எடைமிக்க காலடிகள் தொன்மையான மரப்படிகளை நெரித்து வண்டொலி எழுப்ப மேலேறிச்சென்றான். இடைநாழியின் மறுஎல்லையில் நின்றிருந்த கனகர் அவனைக் கண்டதும் தேன்மெழுகு பூசப்பட்ட கரியமரத்தரையில் நீரென நிழல் விழுந்து தொடர ஓடிவந்து அவனை அணுகி வணங்கி “தங்களைத்தான் அரசர் கேட்டுக் கொண்டிருந்தார் அங்கரே” என்றார். “என்னையா?” என்றான் கர்ணன். கனகர் சற்று குழம்பி “ஆம். தங்களைத்தான்” என்றார். கர்ணன் சிலகணங்கள் இடையில் கைவைத்து விழிகள் வேறெங்கோ திரும்பி இருக்க அசைவற்று நின்றபின் “ஜயத்ரதர் அங்கு உள்ளார் அல்லவா?” என்றான். “ஆம் அரசே. ஜயத்ரதரும் உண்டாட்டில் மகிழ்ந்திருக்கிறார்” என்றார் கனகர்.

கர்ணன் உடலில் அவன் திரும்பப்போவது போல் ஓர் அசைவு எழ கனகர் முந்திக்கொண்டு “உண்டாட்டுக்கு தங்களை ஜயத்ரதரே அழைப்பதாக அரசர் சொன்னார்” என்றார். கர்ணன் திரும்பி அவர் கண்களை பார்க்க அவை மெல்லிய அசைவுடன் திரும்பின. அவர் சொன்னது பொய் என்று உணர்ந்து அவன் புன்னகைத்து விரல்களால் மீசையை நீவிக்கொண்டான். அப்புன்னகையிலேயே அப்போது தன்னியல்பாக உருவான மெல்லிய தடையை கடந்து “நன்று” என்றபடி மேலே நடந்தான்.

மூன்று சிறியபடிகளைக் கடந்து திரும்பி வரவேற்புக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அணுக்கனிடம் தன்னை அறிவிக்கும்படி கைகாட்டினான். அவன் பெரிய கதவை சற்றே திறந்து உள்ளே சென்றதும் தன் மேலாடையை சீரமைத்து குழலை பின்னால் தள்ளி நீவியபடி காத்திருந்தான். தன் எண்ணங்களை குவிக்கும்பொருட்டு கதவின் பித்தளைக்குமிழியில் தெரிந்த தன் உருத்துளியை நோக்கினான். அத்துளிக்குள்ளேயே அவன் நோக்கு மேலும் கூர்த்துளியென தெரிந்தது.

மலைக்கழுகின் குரல் போல ஓசையிட்டபடி கதவு விரியத்திறந்து துச்சலனும் துர்முகனும் இருகைகளையும் விரித்தபடி பாய்ந்து வெளியே வந்தனர். “மூத்தவரே, தங்களுக்காகத்தான் காத்திருந்தோம். உள்ளே வருக!” என்று அவன் கைகளை பற்றிக்கொண்டான் துச்சலன். அவன் உடலெங்கும் கள்மணம் வீசியது. கள்ளேப்பம் விட்ட துர்முகன் “நான்… உங்களை தேடினேன்” என்றான். கர்ணன் “இருங்கள்” என்று சொல்லி அவர்களின் இழுப்பை தவிர்த்து நழுவிய தன் மேலாடையை மீண்டும் சீரமைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

துர்முகன் உரக்க “உண்டாட்டு! மூத்தவரே, நெடுங்காலமாக இது போல் ஒரு உண்டாட்டு நிகழ்ந்ததில்லை” என்றான். “நேற்று முன்தினம்தான் உண்டாட்டு நிகழ்ந்தது” என்றான் கர்ணன். “அதைவிடப் பெரிய உண்டாட்டு இது. அன்று விடிகாலை என்பதால் நாங்கள் நன்கு உண்ணவில்லை. இப்போது இத்தனை வரவேற்புச் சடங்குகளுக்குப் பிறகு எங்களுக்கு பசியும் விடாயும் உச்சம் கொண்டிருக்கின்றன” என்று துச்சலன் சொன்னான்.

“வருக!” என்று மீண்டும் அவன் கையைப்பற்றி கொண்டு சென்று நீள்விரி கூடத்தில் தரையெங்கும் பரவி அமர்ந்திருந்த கௌரவர்கள் நடுவே நிறுத்தினான். அங்கு உண்டாட்டு ஏற்கனவே நெடுநேரம் கடந்திருந்தது. கூடத்தின் ஒரு பகுதி முழுக்க கடித்து துப்பப்பட்ட எலும்புக் குவையும் ஒழிந்த கள்கலங்களும் குடித்து வீசப்பட்ட குவளைகளும் ஊன்பொதிந்த இலைத்தாலங்களும் சிதறிக்கிடந்தன. பணியாளர்கள் சுவரோரமாகவே நடந்து சென்று ஓசையின்றி அவற்றைப் பொறுக்கி கூடைகளில் சேர்த்து வெளியே சென்று கொண்டிருந்தனர். கௌரவ நூற்றுவர்கள் தரைமுழுக்க பரவி கைகளை ஊன்றியும் உடலைத் தளர்த்தியும் குனிந்தும் மல்லாந்தும் அமர்ந்து இறுதிக்கட்ட ஊண்கோளில் ஈடுபட்டிருந்தனர்.

இரு கைகளையும் பின்பக்கமாக தரையில் ஊன்றி தலையை மார்பில் சரித்து கால்களை அகற்றி நீட்டி தரையில் அமர்ந்திருந்த துரியோதனன் கைகள் வழியாகவே கர்ணனின் காலடி அதிர்வை உணர்ந்து எடைகொண்டிருந்த தலையை உந்தித் தூக்கி சிவந்த விழிகளால் அவனைப்பார்த்து உதடுகளை அசைத்து ஏதோ சொல்லவந்தான். சொல் சிக்காமையால் வலக்கையை ஊன்றி உடலைத் தூக்கி இடக்கையை அவனை நோக்கி சுட்டி “இவர் என் மூத்தவர் கர்ணன். அங்க நாட்டிற்கு அரசர்” என்றபின் திரும்பி அருகிலிருந்த ஜயத்ரதனின் தொடையை அறைந்து “மைத்துனரே” என்றான்.

வாயிலும் உடைகளிலும் உணவுப்பசையும் துகள்களும் சிதறியிருக்க யோகிகளுக்குரிய புன்னகையுடன் சுவரில் சாய்ந்து கண்மூடி துயிலில் இருந்த ஜயத்ரதன் திடுக்கிட்டு எழுந்து வலக்கையால் வாயைத் துடைத்து “யார்?” என்றான். “நான் அஸ்தினபுரியின் அரசன்! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி! துரியோதனன்” என்றான் துரியோதனன். ஜயத்ரதன் “அதில் ஐயமென்ன?” என்றபின் மீண்டும் தலையை சாய்க்க துரியோதனன் அவன் முன்தலையைப் பற்றி குலுக்கி “விழித்துக் கொள்ளுங்கள். நான் சொல்லப்போகிறேன்” என்றபின் கர்ணனை நோக்கி திரும்பி “என்ன சொல்லப் போகிறேன்?” என்றான்.

அறையிலிருந்த அனைவருமே முழுமையான கள்மயக்கிலிருப்பதை உணர்ந்த கர்ணன் திரும்பி துச்சலனிடம் “இவர்களில் நீங்கள் இருவர் மட்டும்தான் எழுந்து நடமாடும் நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் ஓடிவந்ததைப் பார்த்தபோது மைத்துனர் முன் நீங்கள் இருவரும் கள் மயக்கிலிருப்பதை எப்படி அரசர் ஒப்புக்கொண்டார் என்று எண்ணினேன்” என்றான். துச்சலன் “மூத்தவரே, அரசர் கள்மயக்கில் இல்லை. அவர் எண்ணத்தில் ஆழ்ந்திருக்கிறார்” என்றான்.

துரியோதனன் இரு கைகளையும் நீட்டி “என்னை தூக்குங்கள்” என்றான். இரு கைகளையும் நீட்டியதனால் தாங்கு இழந்து பின்னால் சரிந்து விழுந்து மீண்டும் எழுந்து கால்களை உதைத்து உடலை சீரமைத்துக்கொண்டு மீண்டும் ஜயத்ரதனின் தொடையில் ஓங்கி அறைந்து “மைத்துனரே” என்றான். ஜயத்ரதன் திடுக்கிட்டு எழுந்து “யார்?” என்றான். “நான் அஸ்தினபுரியின் அரசன், பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. ஆனால்…“ என தயங்கி “நான் என்ன சொல்ல வருகிறேன்?” என்றான். துச்சலன் “தாங்கள் மூத்தவரைப் பற்றி சொல்ல வந்தீர்கள் அரசே” என்றான். “ஆம், நான் இவரைப் பற்றி சொல்ல வரவில்லை. ஏனென்றால் இவர் எங்கள் மூத்தவர். கர்ணன். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” என்றபின் திரும்பி “அடேய், அந்தப் பெரிய மதுப்புட்டியை எடு” என்றான்.

“இதற்குமேல் தாங்கள் மது அருந்தலாகாது அரசே. நாம் பேரரசரை இன்னும் சந்திக்கவில்லை” என்றான் கர்ணன். “அவர் இதைவிட மது அருந்தியிருப்பார். மது அருந்திவிட்டு அவர்முன் சென்றால் என்ன வகை மது என்றுதான் அவர் கேட்பார்” என்றான் துரியோதனன். ஜயத்ரதன் காக்கைகள் பூசலிடும் வேடிக்கையான ஒலியில் உரக்கச் சிரித்து அச்சிரிப்பின் அதிர்வினாலேயே உடல் தளர்ந்து கையூன்றி ஏப்பம் விட்டான்.

கர்ணன் துரியோதனன் அருகே சென்று அங்கு கவிழ்ந்து கிடந்த சிறு பீடமொன்றை நிமிர்த்தி அதில் அமர்ந்தபடி “அரசே, உண்டாட்டு அரசருக்குரியதுதான். ஆனால் இதன் பெயர் உண்டாட்டு அல்ல. கள்ளாட்டு” என்றான். “ஆம், கள்ளாட்டு! நல்ல சொல்” என்றபின் துரியோதனன் உரக்க நகைத்து ஜயத்ரதனின் தொடையில் ஓங்கி அறைந்து “அதனால்தான் சொல்கிறேன் மைத்துனரே. இவன் எங்கள் மூத்தவர். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” என்று சுட்டுவிரலை தூக்கிக்காட்டினான். சுட்டுவிரல் அசைவற்று நின்றது. இரு கண் இமைகளும் மெல்ல தாழ அவன் சற்றே தளர்ந்து ஒரு கணம் துயின்று விழித்துக்கொண்டு “துச்சலா, மூடா, அங்கு என்ன செய்கிறாய்? உன்னிடம் மதுக்குடத்தை எடுக்கச் சொன்னேனே!” என்றான்.

துச்சலன் “அது ஒழிந்த மதுக்குடம் மூத்தவரே” என்றான். துரியோதனன் “ஒழிந்த மதுக்குடத்தில் ஒழிந்த மது இருக்குமல்லவா?” என்று கேட்டபின் கர்ணனை நோக்கி பெருங்குரலில் நகைத்தான். கர்ணன் பற்களைக் கடித்தபடி துர்முகனிடம் “அணுக்கர்களை வரவழைத்து அறையை தூய்மை செய்யச் சொல்!” என்றான். சற்று அப்பால் ஒருவரை ஒருவர் அணைத்தபடி படுத்திருந்த விருந்தாரகனும் தனுர்தரனும் ஒருவரை ஒருவர் உந்தியபடி புரண்டனர். சப்புக்கொட்டியபடி முனகி மீண்டும் அணைத்துக்கொண்டு குறட்டை விடத்தொடங்கினர்.

கர்ணன் துச்சலனிடம் “பானுமதி இங்கு வராமலிருப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான். துச்சலன் நடுங்கி “இங்கு வருகிறார்களா? அவர்களா?” என்றான். வாயிலை நோக்கியபின் “நான் மிகக்குறைவாகத்தான் மது அருந்தினேன் மூத்தவரே, இவர்கள்தான் அருந்திக்கொண்டே இருந்தார்கள்” என்று சொன்னபின் “வருகிறார்களா?” என்று மீண்டும் கேட்டான். “தெரியவில்லை. ஆனால் வரக்கூடும்” என்றான் கர்ணன். துச்சலன் “வரமாட்டார்கள். ஏனென்றால்…” என்று சொல்லி உரக்க நகைத்து “ஏனென்றால் அவர்கள் சிந்துநாட்டரசரின் மைந்தனுடன் அன்னையின் அரண்மனையில் இருக்கிறார்கள். அன்னை குழந்தையை தன் மடியில் வைத்திருக்கிறார்” என்றான்.

படுத்திருந்த சுபாகு ஒரு கையை ஊன்றி எழுந்து “எந்த மைந்தன்?” என்றான். “நன்று! இனி தொடக்கத்திலிருந்து அனைத்தையும் சொல்ல வேண்டியதுதான்” என்றான் துச்சலன். சுபாகு கர்ணனைப் பார்த்து “எப்போது வந்தீர்கள் மூத்தவரே? இவர்கள் எல்லாம் கட்டுமீறி களிமயக்கில் இருக்கிறார்கள். நான் என்னால் முடிந்தவரை சொன்னேன், யார் கேட்கிறார்கள்?” என்றான். துரியோதனன் கையை மேலே தூக்கி அசைத்து “குடம் ஒழிந்து கிடக்கிறது” என்றான். “என்ன சொல்கிறார்?” என்றான் சுபாகு. கர்ணன் “ஆழ்ந்த அரசியல் உண்மை ஒன்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றான் எரிச்சலுடன். ஜயத்ரதன் நாய்க்குட்டி குரைப்பதுபோல் உரத்தகுரலில் நகைத்து “ஆழ்ந்த அரிய கருத்து… ஆம்” என்றான்.

துச்சலன் மதுக்குடத்துடன் வந்த அணுக்கனை அணுகி அதைப் பெற்று துரியோதனன் அருகே கொண்டு வைத்தான். துரியோதனன் அதை இரு கைகளாலும் வாங்கி முகர்ந்துவிட்டு “உயர்ந்த மது! நான் உயர்ந்த மதுவை மட்டும்தான் அருந்துவேன். ஏனென்றால்…” என்றபின் ஓங்கி ஜயத்ரதன் தொடையில் அடித்து “மைத்துனரே” என்றான். ஜயத்ரதன் திடுக்கிட்டு விழித்து “யார்?” என்றான். “நான் துரியோதனன். அஸ்தினபுரியின் அரசன்! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி! ஆனால் இவர் என் மூத்தவர். இவரை…” என்றபின் தலைக்குமேல் கையைத்தூக்கி மும்முறை ஆட்டியபின் துச்சலனைப் பார்த்து “இவரைப்பற்றி நான் உன்னிடம் என்ன சொன்னேன்?” என்றான்.

“சொல்லத் தொடங்கினீர்கள் மூத்தவரே” என்றான் துச்சலன். “இவர் எங்கள் மூத்தவர். இவர் உண்மையில் எங்கள் மூத்தவர்” என்றான் துரியோதனன். கர்ணன் “போதும்! அருந்திவிட்டு படுங்கள்!” என்றான். ஜயத்ரதன் “இவர் என்னை அவையில் சிறுமை செய்தார். ஆகவே நான் இவரிடம் விழிகொடுக்கலாகாது என்று முடிவு செய்தேன்” என்றான். “ஏன் விழிகொடுக்கவில்லை? விழிகொடுக்காவிட்டால்… உடனே நான்… ஏனென்றால்… இவர் எங்கள் குடிக்கு மூத்தவர்… ஏனென்றால்…” என்றபின் துரியோதனன் இரு கால்களையும் நீட்டி கைகளை பின்னுக்கு சரித்து “மது அருந்தினால் மட்டும்தான் எனக்கு இவ்வளவு வியர்க்கிறது” என்றான்.

“தொங்கு விசிறிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன” என்றான் சுபாகு. “அது யார்?” என்று துரியோதனன் கேட்டான். “தம்பி துச்சாதனா, அது நீயா?” சுபாகு இருகைகளையும் ஊன்றி ஏழெட்டுபேரை கடந்து வந்து “அதைச் சொன்னவன் நான் மூத்தவரே!” என்றான். “சீ மூடா” என்றான் துரியோதனன். “துச்சாதனனை அழைத்தால் நீயா வருகிறாய்? நான் துச்சாதனனை அழைத்தேன். அவன் என் ஆடிப்பாவை. நான் இறக்கும்போது அவனும் இறந்து நாங்கள் இருவரும் இணைந்து விண்ணுலகுக்குச் செல்வோம்.” மரம்பிளக்கும் ஒலியில் நகைத்து “அங்கே என் பிழைகளுக்காக அவனை கழுவிலேற்றுவார்கள்!” என்றான். அதை அவனே மகிழ்ந்து சிரித்துக்கொண்டே “கழுவிலே! ஆம்!” என்றான்.

“நாங்களும் இணைந்துதான் வருவோம்” என்றான் துச்சலன். “ஆம் மூத்தவரே, நாங்களும் இணைந்து வருவோம்” என்றான் துர்முகன். படுத்திருந்த கௌரவர்களில் ஒருவன் எழுந்து “யார்? எங்கு செல்கிறார்கள்?” என்றான். அவன் நிஷங்கி என்று கர்ணன் கண்டான். அவன் இடையில் ஆடை இருக்கவில்லை. துச்சலன் குனிந்து அவன் தலையில் ஓங்கி அறைந்து “படு” என்றான். “சரி” என்று அவன் உடனே திரும்ப படுத்துக்கொண்டான். கர்ணன் சிரித்தபடி அந்தப் பேச்சொலிகளுக்கும் சிரிப்புக்கும் தொடர்பே இன்றி மும்முரமாக உண்டுகொண்டிருந்த பிற கௌரவர்களை நோக்கினான். துச்சலன் “குடிகாரர்கள் மூத்தவரே” என்றான்.

கர்ணன் துச்சலனிடம் “நாம் எப்போது பேரரசரை பார்க்கப் போகிறோம்?” என்றான். துச்சலன் “இங்கிருந்துதான். நாமெல்லாம் உண்டாட்டு முடிந்து இப்படியே கிளம்பிச் செல்வதாகவும் அங்கிருந்து துச்சளையும் மைந்தரும் வந்துவிடுவதாகவும் சொன்னார்கள்” என்றான். கர்ணன் திரும்பி நோக்கி “இந்த நிலையில் இவர்களால் இந்த இடைநாழியையே கடக்க முடியாதே!” என்றான். துச்சாதனன் பெரிய ஏப்பத்துடன் எழுந்து இரு கைகளையும் விரித்து சோம்பல் முறித்து “யார் ஓசையிடுவது?” என்றான். பின்னர் திரும்பி தன்னைச்சுற்றி அமர்ந்து உண்டுகொண்டிருந்த கௌரவர்களைப் பார்த்து “ஆ! உண்டாட்டு நிகழ்கிறது!” என்றான். கர்ணன் “இளையோனே, நீயேனும் சற்று உளத்தெளிவுடன் இருக்கிறாயா?” என்றான்.

துச்சாதனன் “மூத்தவரே, தாங்களா?” என்றபின் எழுந்து தலைவணங்கி குனிந்து கீழே கிடந்த சால்வையை எடுத்து உடலைத் துடைத்தபடி “நான் சற்று துயின்றுவிட்டேன்” என்றான். “உண்டாட்டு நெடுநேரமாக நடக்கிறது அல்லவா?” என்றான் கர்ணன். “நெடுநேரமாக இல்லை. இப்போதுதான்” என்றபின் துச்சாதனன் திரும்பி துரியோதனனைப் பார்த்து “மூத்தவர் சற்று மிகையாகவே கள்ளுண்டார்” என்றான். “இன்று அவருள்ளம் உவகையால் நிறைந்திருக்கும். இளையமைந்தனை அவர் இன்னும் பார்க்கவில்லை. மைந்தன் வந்துள்ளான் என்று அறிந்ததுமே உவகையில் கள்ளுண்ணத் தொடங்கிவிட்டார்.”

துரியோதனன் “கள் அல்ல. இமய மது அது. திரிகர்த்தர்களின் நாட்டிலிருந்து வருகிறது. சோமக்கொடியின் நீரைப் பிழிந்து அதில் நறுமணம் சேர்த்து இந்த மதுவை செய்கிறார்கள். இதை அருந்துபவர்கள் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள தேவகன்னியருடன் ஆடி மீள்வர். நான்…” என்றபின் ஓங்கி ஜயத்ரதன் தொடையில் அடித்து “மைத்துனரே” என்று வெடிக்குரலில் அழைத்தான். ஜயத்ரதன் திடுக்கிட்டு விழித்து நான்குபுறமும் பார்த்து “யாரது?” என்றான்.

“நான் துரியோதனன்! அஸ்தினபுரியின் அரசன்! பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. இவர் எங்கள் மூத்தவர்…” என்ற துரியோதனன் துச்சாதனனைப் பார்த்து சில கணங்கள் அசைவிழந்து அமர்ந்திருந்தபின் மீண்டும் கர்ணனைப் பார்த்தபின் “இவர் எங்கள் மூத்தவர், அங்க நாட்டுக்கு அரசர்” என்றான். “ஆம்” என்றான் ஜயத்ரதன். “இவரை நான் பார்க்கவே கூடாது என்று நினைத்தேன்” என்றான். “ஏன்?” என்றான் துச்சாதனன். “இவர் என் ஆடையை அவிழ்த்து அவை நடுவே நிறுத்தினார்.” கர்ணன் “பொறுத்தருள்க மைத்துனரே! தங்கள் கால்களை சென்னி சூடி அதற்காக துயர் அறிவிக்கிறேன்” என்றான்.

ஜயத்ரதன் “நான் வஞ்சம் கொண்டிருந்தேன். ஆனால் அந்த வஞ்சத்தை நான் காட்டினால் என்னை துச்சளை கொன்றாலும் கொன்றுவிடுவாள். அவள் கௌரவரின் தங்கை என்று தெரிந்ததனால் நான் அந்த வஞ்சத்தை மறைத்துக்கொண்டேன். ஆனால்…” என்றபின் “எனக்கு தண்ணீர் வேண்டும்” என்றான். “தண்ணீர் எதற்கு? அருந்த இடமுள்ளது என்றால் மதுவே அருந்தலாமே” என்றான் துச்சாதனன். அருகே படுத்திருந்த நந்தன் எழுந்து “மது உள்ளது சைந்தவரே” என்றான். ஜயத்ரதன் “இனி மது அருந்தினால் என்னால் எழ முடியாது” என்றான். “இப்போதே எழ முடியாதுதானே” என்றான் குண்டசாயி.

ஜயத்ரதன் அவர்கள் இருவரையும் பார்த்து கைநீட்டி வெருண்ட நாய்போல ஒலியெழுப்பி சிரித்து “இவர்கள் இருவரும் ஒருவர் போலவே இருக்கிறார்கள். எப்படி தங்களை தாங்களே அடையாளம் கண்டு கொள்வார்கள்?” என்றான். “அவர்கள் இருவரும் ஒருவர்தான் சைந்தவரே, தங்களுக்கு கள்மயக்கில் இருவராக தெரிகிறார்கள்” என்று துச்சலன் சொல்லி கர்ணனைப்பார்த்து கண்களை சிமிட்டினான்.

துரியோதனன் பெரிய ஏப்பத்துடன் விழித்தெழுந்தான். அருகிருந்த மதுக்குடத்தை பேராவலுடன் எடுத்து நான்கு மிடறுகள் அருந்தியபின் திரும்பி ஜயத்ரதனின் தொடையில் ஓங்கி அறைந்தான். ஜயத்ரதன் காலை விலக்கிக்கொண்டதனால் அந்த அறை மரத்தரையில் பட்டது. ஒலிகேட்டு திடுக்கிட்டு எழுந்த மகாபாகு “மூத்தவரே, யானை!” என்றான். துச்சலன் குனிந்து அவன் தலையில் ஓங்கி அறைந்து “படு” என்றான். “அவ்வண்ணமே” என்று அவன் திரும்பிப் படுத்து துயிலத்தொடங்கினான். உண்டுகொண்டிருந்த கௌரவர் நால்வர் திரும்பிப்பார்த்து உரக்க நகைத்து “யானையை பார்த்திருக்கிறார்” என்றனர்.

துரியோதனன் “நான் துரியோதனன்! அஸ்தினபுரிக்கு அரசன்!” என்றான். ஜயத்ரதன் “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி!” என்றான். “ஆம், நான் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி” என்று சொல்லி துரியோதனன் தரையில் மீண்டும் ஓங்கி அடித்து உரக்க நகைத்து கர்ணனை நோக்கி “ஆனால் இவர் எங்கள் மூத்தவர். இவரது கால்களை நாங்கள் சென்னி சூடுகிறோம். ஏனெனில் இவர் சூரியனின் மைந்தர்” என்றான். பெரும் ஏப்பம் ஒன்றில் உடல் உலுக்கிக்கொள்ள “நான் இவர் சூரியனின் மைந்தர் என்பதை மூன்றுமுறை கனவில் கண்டேன். ஏழு செம்புரவிகள் பூட்டப்பட்ட தேரில் இவரது தந்தை அமர்ந்திருந்ததை கண்டேன். அவரது மடியில் இவர் அமர்ந்திருந்தார். அதை நான் கண்டேன். அதை கரிய உடலுள்ள ஒருவன் ஓட்டிக் கொண்டிருந்தான். கரியவன்…”

இரு கைகளையும் விரித்து துச்சாதனனிடம் “நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?” என்றான் “கரியவன்” என்றான் துச்சாதனன். “ஆம், இவரும் கரியவர். கரியவர்கள் அழகானவர்கள்” என்றான் துரியோதனன். “அந்தத் தேரோட்டியை நான் நன்கு அறிவேன் . துச்சாதனா! மூடா, அவர் யார்?” ஜயத்ரதன் இருகைகளையும் விரித்து “ஆகவே நான் இவரை புறக்கணிக்கவேண்டும் என்று நினைத்தேன்” என்றான். “தேரில் வரும்போது இவரை எப்படி புறக்கணிப்பது என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதன்பின் கங்கையைக் கடக்கும்போது அமைச்சர் ருத்ரரிடம் கேட்டேன். எப்படி இவரை புறக்கணிப்பது என்று.”

“எப்படி?” என்று மகிழ்வுடன் சிரித்தபடி ஜலகந்தன் அருகே முகம் தூக்கி கேட்டான். “ருத்ரர் சொன்னார், அங்கநாடு மிகச்சிறிய நாடு. நான் தொல்புகழ் கொண்ட சிந்துநாட்டின் தலைவன். ஆகவே அங்கநாட்டு அரசரை முறைமை என்பதற்கப்பால் நாம் அடையாளம் காணவேண்டிய தேவையே இல்லை. ஆகவே நானும் அதை செய்தேன்.” அவன் நீர்கொப்பளிப்பதுபோல சிரித்தான். “நான் அதற்கென்று நன்கு பயிற்சி பெற்றவன்.” அவனே மகிழ்ந்து நான்குபக்கமும் நோக்கியபின் கடையாணி உரசும் ஒலியில் நகைத்து “ஆகவே நான் இவரை பார்க்கவில்லை. ஆம் அங்கரே, நான் உங்களை பார்க்கவில்லை” என்றான்.

கர்ணன் புன்னகைத்தான். ஜயத்ரதன் இரு கைகளையும் விரித்து “ஆகவே நான் உங்களைப் பார்க்காமல் வந்தேன். ஆனால் அங்கிருந்த அனைவரும் உங்களைப் புகழ்ந்து கூச்சலிட்டார்கள். ஆகவே நான் அவர்களின் முகங்களை பார்த்தேன். அவற்றில் நான் உங்களைப் பார்த்தேன். அங்கரே, நான் பார்க்காத எதையோ அவர்கள் பார்க்கிறார்கள் என கண்டேன். உங்களுக்குப் பின்னால் உங்களைவிடப் பெரிய யாரோ வருவதுபோல் அத்தனை பேரும் பெருவியப்பு நிறைந்த விழிகளுடன் நோக்கினார்கள்” என்றான். அவனுக்கு விக்கல் வந்தது. துச்சலன் நீட்டிய கோப்பையை வாங்கி ஆவலுடன் குடித்து “அதுதான் எனக்குள் உள்ள வினா” என்றான்.

துரியோதனன் ஓங்கி தரையில் அறைந்து “நான் சொல்கிறேன். அது சூரியன்” என்றான். “நான் கனவில் பார்த்தேன். மிகப்பெரிய சூரியன். இவரை தன் மடியில் வைத்திருந்தவர் சூரியதேவன். ஆனால் இவருக்கு தேரோட்டியது யார்? அது தெரிந்தாக வேண்டும்.” நான்குபக்கமும் நோக்கியபின் “யார் ஓட்டியது?” என்று ஜயத்ரதன் கேட்டான். “இவருக்குத் தேரோட்டியவர் இவரைப்போலவே இருந்தார். கரிய உடல் கொண்டவர். இவருடைய மைந்தர் போலிருந்தார். ஆம், ஆனால்…” என்று திரும்பி கர்ணனைப் பார்த்து விரலால் சுட்டி விழிசரிய சற்றுநேரம் அசைவற்று நிறுத்திவிட்டு “நான் இவரைப்பற்றி என்ன சொன்னேன்?” என்று துச்சாதனனிடம் கேட்டான்.

“இவர் மூத்தவர்” என்றான் துச்சாதனன். ”ஆம், எங்கள் மூத்தவர் இவர். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” ஓங்கி ஜயத்ரதனின் தோளை அடிக்கப்போக அவன் எழுந்து விலக பேரொலியுடன் பலகை அதிர்ந்தது. அப்பால் இருந்த மூன்று கௌரவர்கள் தலைதூக்கினர். பீமவேகன் “யாரோ கதவை தட்டுகிறார்கள் மூத்தவரே” என்றான். “படுடா” என்று சொல்லி அவன் மண்டையில் துச்சலன் அறைந்தான். “அடிக்காதீர்கள் மூத்தவரே” என்றபடி அவன் திரும்ப படுத்துக்கொண்டான். உண்டுகொண்டிருந்த நான்கு கௌரவர்கள் எழுந்து உரத்தகுரலில் ஏப்பம் விட்டபடி அங்கு பிறர் இருப்பதையே அறியாதவர்கள் போல் தள்ளாடி நடந்து கீழே கிடந்தவர்களைத் தாண்டி வெளியே சென்றார்கள்.

அவர்கள் கதவு வரை செல்வதை பார்த்த துரியோதனன் சரிந்த விழிகளை தூக்கி “ஆகவே நான் சொல்வது என்னவென்றால்… இவர் மூத்தவர். அங்க நாட்டுக்கு அரசர். ஆனால்…” என்றபின் ஜயத்ரதனை பார்த்து “ஆனால் ஒரு சொல் இவர் சொல்வார் என்றால் அஸ்தினபுரியின் அரசராக இவரே இருப்பார். இவருக்கு வலப்பக்கம் தருமன் நின்றிருப்பான். இடப்பக்கம் நான் நின்றிருப்பேன். இவர்களைச் சூழ்ந்து நூற்றிமூன்று உடன்பிறந்தார் நிற்பார்கள். பாரதவர்ஷத்தின் சூரியன் கால்படும் காமரூபத்து மேருமலை முதல் மாலை அவன் கால் நிழல்விழும் பால்ஹிகம் வரை இவர்தான் ஆள்வார். புரிகிறதா?” என்றான்.

ஜயத்ரதன் “புரிகிறது” என்றான். “அதனால்தான் அத்தனை குடிமக்களும் இவரை வாழ்த்தி கூவினார்கள். ஆகவே நான் இவரை பார்க்கவில்லை. ஏனென்றால்…” என்றபின் அவன் “எனக்கு தண்ணீர்” என்றான். ஏவலன் கொண்டுவந்த தண்ணீர்குடத்தை வாங்கி துர்முகன் அவனுக்கு கொடுக்க அவன் அதை ஆவலுடன் வாங்கி குடித்துவிட்டு எஞ்சியதை தன் தலையிலேயே கவிழ்த்தான். குழலை கையால் நீவி பின்னால் விட்டு கண்களை துடைத்தபடி “நீர் கொண்டு தலை கழுவினால் என்னால் தெளிவாக எண்ணிப்பார்க்க முடியும்” என்றபின் திரும்பி “இங்கு உண்டாட்டு நிகழ்கிறது” என்றான்.

கர்ணன் புன்னகைத்தபடி “கண்டுபிடித்துவிட்டார்” என்றான். துச்சாதனன் உரக்க நகைத்து “மைத்துனரே, தங்களுக்கு மேலும் மது தேவைப்படுகிறது” என்றான். “இல்லை. முறைப்படி நான் இன்னும் சற்று நேரத்தில் சென்று பேரரசரை சந்திக்கவேண்டும். பேரரசரை சந்திப்பதற்கு முன்…” என்று அவன் துரியோதனனை பார்த்து “ஆனால் இவர் எப்படி பேரரசரை சந்திக்க முடியும்? இவரால் நடமாடவே முடியாது. மது அருந்துவது அளவோடு இருப்பது நன்று” என்றான்.

துரியோதனன் கண்களை இழுத்துத் திறந்து துச்சாதனனை பார்த்து “சிந்து நாட்டு இளவரசர் இப்போது எங்கே?” என்றான். “திரும்பி வந்து கொண்டிருக்கிறார்” என்றான் மெல்லிய குரலில். அவனுக்குப் பின்னால் இருந்த இளைய கௌரவன் வெடித்து நகைத்து “ஆம். அவர் விண்ணுலகுக்கு சென்றிருந்தார்” என்றான். துச்சலன் குனிந்து அவன் தலையில் அடித்து “படு” என்றான். “இல்லை மூத்தவரே, நாங்கள்…” என்றபோது அவனருகே படுத்திருந்த ஒருவன் கையூன்றி தலை தூக்கி “மிதமிஞ்சி குடித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறான் மூத்தவரே. அவன் தலையை உடைக்க வேண்டும்” என்றான். துச்சலன் “படு” என்றபடி கையை ஓங்க “படுக்கிறேன் மூத்தவரே. படுக்கிறேன்” என்றபடி அவன் படுத்துக்கொண்டான்.

படுத்தபடியே விசும்பி அழுது “என்னை மட்டும் அடிக்கிறீர்கள்” என்றான். “படுடா” என்று துச்சலன் மீண்டும் கை ஓங்கினான். “என்னை மட்டும் அடிக்கிறீர்கள்” என்றான். பிறகு விசும்பியபடி புரண்டு படுத்து “என்னை மட்டும் எல்லோரும் அடிக்கிறார்கள். கதாயுதத்தை நான் எடுத்தாலே எல்லோரும் என்னை அடிக்கிறார்கள்” என்று புலம்பத் தொடங்கினான். துரியோதனன் எழுந்து “அழுகிறான்” என்றபடி குப்புறக்கிடந்த இரு கௌரவர்களுக்கு மேலாக தவழ்ந்து அவனை அணுகி அவன் தலையைத் தொட்டு வருடி “அழாதே இளையோனே. இனிமேல் உன்னை யாரும் அடிக்க மாட்டார்கள்” என்றான். அவன் புரண்டு துரியோதனனின் கையைத்தூக்கி தன் முகத்தில் வைத்து தானே கைகளால் கண்ணீரை துடைத்தபடி “அடிக்கிறார்கள் மூத்தவரே” என்றான்.

துரியோதனன் ஏறிச் சென்றதால் விழித்துக்கொண்ட சராசனனும் திடஹஸ்தனும் நான்குபுறமும் பார்த்து கர்ணனை கண்டறிந்து திகைத்தனர். சராசனன் “மூத்தவரே!” என்றான். “பொழுது விடிந்தது. சென்று நீராடிவிட்டு உணவருந்துங்கள்” என்றான் கர்ணன். “ஆம், பொழுது விடிந்தது” என்று அவன் சொல்லி அருகிலிருந்த சுவர்மனைத் தட்டி “பொழுது விடிந்தது. எழுந்திரு” என்றான். அழுது கொண்டிருந்தவன் கையை ஊன்றி எழுந்து துரியோதனன் மடியில் தலையை வைத்து விசும்பத்தொடங்கினான். துரியோதனன் அவன் தலையை வருடியபடி “மிகவும் இளையவன். இவனுக்கு இளவயதில் நான்தான் உணவு ஊட்டுவேன்” என்று கர்ணனிடம் சொன்னான்.

பேரொலியுடன் ஒரு விசும்பல் கேட்க கர்ணன் திரும்பி கௌரவர்களை பார்த்தான். இருவர் வெண்ணிறப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டிருந்தனர். அது சிரிப்பொலியா என்று அவனுக்கு ஐயமாக இருந்தது. துரியோதனன் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. மூக்கைத் துடைத்தபடி “என் மைந்தர்” என்றான். பிறகு இரு கைகளையும் விரித்து “இவர்களெல்லாம் என் மைந்தர்! நூறு மைந்தர்! இவர்களை நான் தோளில் தூக்கி வளர்த்தேன்! என் நூறு தம்பியர்!” என்றான்.

மீண்டும் அந்த உரத்த விசும்பல் ஒலி கேட்க கர்ணன் திரும்பிப் பார்த்தபோது ஜயத்ரதன் அழுது கொண்டிருந்தான். சிரிப்பை அடக்குவதற்காக கர்ணன் தலைதிருப்பி மீசையை நீவினான். ஜயத்ரதன் கைகளை நீட்டி உடைந்த குரலில் “நானும் தம்பிதான் மூத்தவரே. நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். உங்கள் தம்பியரில் ஒருவனை அனுப்பி சிந்துநாட்டை ஆளச்சொல்லுங்கள். நான் இனிமேல் இங்கிருந்து போகமாட்டேன்” என்றான்.

“நீ என் தம்பி… அடேய், வாடா இங்கே” என்று துரியோதனன் கையை தூக்க ஜயத்ரதன் ஏழெட்டு கௌரவர்கள் மீதாக தவழ்ந்து துரியோதனனை அடைந்தான். துரியோதனன் அவனை அணைத்து தன் நெஞ்சோடு சேர்த்து முத்தமிட்டு “என் தம்பி நீ. நீ இங்கு இரு… எங்கும் செல்லவேண்டாம்” என்றபின் கைதூக்கி “அல்லது ஒன்று செய். நான் மகதத்தை வென்று உனக்கு தருகிறேன். நீ அதை ஆட்சிசெய்” என்றபின் “தம்பி துச்சாதனா!” என்றான். “மூத்தவரே” என்றான் துச்சாதனன். “நீ இப்போதே கிளம்பி மகதத்திற்கு போ. ஜராசந்தனை நீயே கொன்றுவிடு. நாம் இவரை அங்கு அரசனாக்குவோம்” என்றான். “நான் இங்குதான் இருப்பேன். நான் அங்கு செல்ல மாட்டேன். எனக்கு யாருமில்லை. அங்கெல்லாம் அந்தணர்கள்தான் என்னை சுற்றி இருக்கிறார்கள். அவர்கள் மது அருந்துவதே இல்லை” என்றான் ஜயத்ரதன்.

“சரி. நீ இங்கேயே இரு. நான் முடிதுறந்து உங்களுக்கெல்லாம் பிதாமகனாக இருக்கிறேன். நீயே அஸ்தினபுரியின் அரசனாகிவிடு. ஆனால் நமக்கு அனைவருக்கும் இவர்தான் மூத்தவர். நாம் இவரது பாதப்புழுதியை தலையில் சூடும் தம்பியர்” என்றபின் துரியோதனன் கைநீட்டி கர்ணனின் கால்களை தொட்டான். “மூத்தவரே, நாங்களெல்லாம் அறிவில்லாத தம்பியர். நீங்கள் விண்ணுலகில் ஏழுபுரவிகள் கொண்ட தேரில் செல்லும் சூரியன்மைந்தர். ஆகவே நீங்கள் எங்களையெல்லாம் நன்றாக அறைந்து நல்வழிப்படுத்தவேண்டும். அறையுங்கள் மூத்தவரே!”

36

கர்ணன் “போதும்” என எழுந்தான். துச்சாதனனிடம் “எனக்கே சித்தம் குழம்புகிறது” என்றான். துரியோதனன் அவன் கால்களைப்பிடித்து “வேண்டாம் மூத்தவரே, செல்லவேண்டாம். எங்களை விட்டுவிடாதீர்கள்” என்று கூவினான். “நீங்கள் எங்கள் மூத்தவர். அங்கநாட்டுக்கு அரசர். ஆனால்…” என்றபின் சுட்டுவிரலைக்காட்டி துச்சாதனனை பார்த்தபின் மீண்டும் கர்ணனை பார்த்து “இவர்…” என்றான். ஒருமுறை விக்கல் எடுத்து “இவர் அங்கநாட்டு அரசர். எங்களுக்கெல்லாம் மூத்தவர்” என்றான்.

கர்ணன் பற்களைக் கடித்தபடி துச்சாதனனிடம் “எனக்கும் ஒரு குவளை மது கொண்டு வா இளையோனே. அதை அருந்தாமல் இங்கிருந்தால் பித்தனாகிவிடுவேன்” என்றான்.

முந்தைய கட்டுரைகாலில் விழுதல்
அடுத்த கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள்-7