அன்பு ஜெமோ அவர்களுக்கு
தங்களின் ஈரோடு சந்திப்பு குறித்த வலையேற்றம் கண்டேன். தங்களின் 3வருட வாசகன் யானை டாக்டர் முதல் அறிமுகம் குமட்டலுடன் படித்து நானே அந்த வைத்தியனாய் மாறிய அனுபவமும் டாப்ஸ்லிப் சுற்றுலா நினைவுகளும் என்னை அலைக்கழித்தன. மீண்டும் மீண்டும் உங்கள் தளத்தை கண்களும் கைகளும் துழாவியது. நல்வாசிப்பு என்னில் நானே கண்டேன். நான் கோவைவாசியாதலால் உங்களுடைய வியாசர் உரை, கீதை உரை, சங்கரர் உரை நேரில் கேட்கும் பேறு பெற்றேன். ஈரோட்டில் தங்களை சந்தித்து விவாதிக்கும் வாய்ப்புக்கு விழைகிறேன்.
நன்றி
கண்ணன்,
கோவை
அன்புள்ள கண்ணன்
குமட்டலுடன் வாசித்ததை எண்ணி புன்னகைசெய்தேன். இறுதியில் குமட்டல் இல்லாமலாகியிருக்குமென நினைக்கிறேன். ஈரோட்டில் சந்திப்போம் வருக
ஜெ
அன்புள்ள ஜெ,
நான் மின்னனு பொறியியல் இறுதியாண்டு மாணவன். உங்களின் புத்தகங்களையும், பதிவுகளையும் கடந்த இரண்டாண்டாக வாசித்து வருபவன். வரக்கூடிய வாய்ப்புள்ள என் முதல் நிகழ்வாய் இந்த ஊட்டி கலந்துரையாடல் நிகழ்வை கருதுகிறேன். வர தயாராய் உள்ளேன்.
இப்படிக்கு,
ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா. மா
அன்புள்ள சங்கர்
மின்னணு பொறியியல் படிப்பு என்பது ஒருவகையில் படிப்பு வெறியுடன் கடந்து செல்லவேண்டியது என நினைக்கிறேன். படிப்பை சிக்கலாக்கிக் கொள்ளாமல் இலக்கியம் வாசிக்கவும்
வருக
ஜெ
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்களுக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன். புதியவர்களுக்கான சந்திப்பில் இணைய விரும்புகிறேன். நண்பர் ஒருவருக்காகக் காத்திருந்தது தப்பாகப் போய்விட்டது. இடங்கள் நிறைவுற்றது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. அடுத்த சந்திப்பிலாவது வாய்ப்பு கிடைக்குமென்று நம்புகிறேன். இப்படியான சந்தர்ப்பங்களில் உங்களை சந்தித்தால் தான் உண்டு. இலக்கிய விழாக்களில் வாய்ப்பே இல்லை. இன்னுமொரு சந்திப்பை எங்களுக்காக நடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி,
ரிஷி
அன்புள்ள ரிஷி
ஈரோட்டில் சந்திப்போம்
நான் என் வாசகர்களிடம் நேரடியாக உரையாடத்தொடங்கியபின்னரே ஒவ்வொருநாளும் வாழ்க்கையைப்பார்க்கத் தொடங்கினேன். தொடர்பயணமும் உரையாடல்களும்தான் இத்தனை எழுதியும் என்னை காலியாக ஆக்காமல் நிறைக்கின்றன
இளையதலைமுறையைச் சந்திப்பது ஒரு தொடக்கமாக அமையட்டும்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
2013 ஜூன் மாதம் முதல் தங்கள் வலைத்தளத்தை படித்து வருகிறேன். அந்த வருடம்காந்தி பற்றிய ஒரு கேள்விக்கு மிக விரிவான பதில் அளித்திருந்தீர்கள்.நான்எங்கு போனாலும் மகாபாரதமும் என் கூடவே எப்படியோ ஒட்டிக் கொள்ளும். ஆறேமாதத்தில் நீங்கள் வெண்முரசு துவங்க அதை சரியாக உள்வாங்கி படிக்க எனக்குஒரு வருடம் ஆனது. தங்களை முதன் முறையாக வெண்முரசு நூல் வெளியீட்டுவிழாவில் மேடையில் பார்த்தேன். பின்னர் இரு விஷ்ணுபுரம் விருது விழாமற்றும் ஒரு நாள் கீதை உரையில் பார்த்தது. பொதுவாக புதியவர்களிடம் பேசஎனக்கு கொஞ்சம் தயக்கம் உண்டு. என் கூச்ச சுபாவமே அதற்கு காரணம்.ஆகையால் உங்களை அருகில் பார்த்தும் பேச வரவில்லை. மிக குறைவாக பேசுவதும்அதிகம் கவனிப்பதுமே என் வழக்கம். கடந்த 4 மாதங்களாக சென்னை வெண்முரசுகூடுகையிலும் கலந்து கொள்கிறேன். தற்போது தங்கள் புதியவர்கள் சந்திப்புஅறிவிப்பு கண்டேன். சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.
சிவக்குமார்
அன்புள்ள சிவக்குமார்
ஏகப்பட்ட செந்தில்கள். ஏகப்பட்ட சிவக்குமார்கள். நேரில்சந்தித்து ஏதேனும் அடைமொழி போட்டாலொழிய நினைவில் நிற்கமாட்டீர்கள்
ஜெ