அன்புடன் ஆசிரியருக்கு
உலகின் அத்தனை பெருஞ் சிந்தனைகளுக்குள்ளும் நுழைய நினைக்கும் உத்வேகத்தை வாசகனுக்கு உங்கள் எழுத்துக்கள் அளிக்கின்றன எனப் புரிகிறது. நேரடியாக எந்தெந்த புத்தகங்களை படித்து சிந்தனை உலகில் நுழையலாம் என்பது போன்ற அபத்தமான கேள்விகளுக்கு மென் நகைப்பு மட்டுமே உங்கள் பதிலாக இருக்கும். அந்த வகை அபத்தம் நிறைந்த கேள்விகளே என்னிடம் நிறைய இருக்கும் என நினைக்கிறேன். இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் படித்தபின்பு காண்டீபம் வரை ஒரு கவனமான மீள் வாசிப்பு மற்றும் உங்களுடைய மற்ற நூல்களை வாசித்தபின்பே உங்களை அணுக நினைக்கிறேன். நேற்று என் பிறந்த தினம். இந்த வருடம் வித்தியாசத்தை மிகத் தெளிவாக உணர்ந்தேன். நிறைய பேர் வாழ்த்தினார்கள். அதற்கு என் பழகும் முறையில் ஏற்பட்ட மாற்றமே காரணம். அம்மாற்றத்திற்கு உங்கள் எழுத்துக்களே காரணம். பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்
நன்றி நேரில் சந்திப்போம். இத்தகைய கடிதங்களில் உள்ளது ஒரு தனிப்பட்ட நெகிழ்ச்சி. அதை தனிப்பட்டமுறையில் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அவை வெளியாவது பிறருக்கு சமானமானவர்களை அடையாளம் காண, நேரில் சந்திக்கையில் உரையாட உதவும் என்று தோன்றியது பின்பு
கேள்விகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அபத்தமானவை என ஏதுமில்லை. நான் கேட்காத அபத்தமான கேள்விகளா? என்னைப்பார்த்தும் சுந்தர ராமசாமியும் பி கே பாலகிருஷ்ணனும் ஆற்றூர் ரவிவர்மாவும் நித்யாவும் சிரித்திருக்கிறார்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
காடு பற்றி பேசுவதற்கும் தெரிந்து கொள்வதற்கும் நிறைய உள்ளது .எனவே ஊட்டி சந்திப்பில் கலந்து கொள்ள நானும் ஆவலாக உள்ளேன். கூடலும் கூடல் நிமித்தமும் என்று திணையும் பொருந்தியே வருகிறது. எனது பெயரையும் பதிவு செய்யும்படி கோருகிறேன். உங்களோடு கதைக்கவும் எனக்கான நண்பர்களை நான் கண்டுகொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.
அன்புடன்,
ஜானகிராம்
அன்புள்ளள ஜானகிராம்
வருக பேசுவோம்
பொதுவாக பேசுவது என்பது நம் கருத்துக்களை நாமே தொகுத்துக்கொள்ள, நம்மை நாமே கண்டுகொள்ள உதவுவது. அதைச்செம்மையாகச் செய்வதென்பது சிந்திப்பதன் முதல்படி. அதற்காகவே இச்சந்திப்புகள்
ஜெ
அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,
தங்களுடைய எழுத்துக்களுக்கு நான் அறிமுகம் ஆனது மூன்றே மாதங்களுக்கு முன்பு தான். அவை அளித்த அனுபவமும் திறப்பும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. இந்த இனிய துன்பத்தை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். தங்களை நேரில் சந்திக்கக்கூடிய பொன்னான நாளை நான் கனவுகளில் கண்டு உங்களுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன். உங்களுடைய வலைப்பூவில் புதிய வாசகர்களை சந்திக்க விரும்பும் உங்கள் அறிவிப்பைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஈரோடு வாசகர் சந்திப்பில் உங்களைக் காணும் ஆவலில் காத்திருக்கிறேன். என்னுடைய விண்ணப்பத்தை தயை கூர்ந்து பரிசீலிக்கவும்.
அன்புள்ள மாரிராஜ்
வருக, சந்திப்போம். பொதுவாக நம் சூழலில் என்னிடம் பழக ஒரு தயக்கம் உள்ளது. ஓங்கிப்பேசும் குரல்வழியாக நானே அதை உருவாக்கிக்கொண்டேன் என நினைக்கிறேன். அதைக் கடந்துசெல்லவும் இச்சந்திப்புகள் உதவலாம்
ஜெ