சங்கரர் உரை -கடிதம் 8

 

1

அன்புடன்  ஆசிரியருக்கு

கிட்டத்தட்ட  நடுங்கும்  மனநிலையோடே  தட்டச்சு  செய்து  கொண்டிருக்கிறேன்.  சங்கரர்  பற்றிய  உரையை  தற்போது கேட்டு  முடித்த  உடனே  எழுதுகிறேன்.  நேற்று  முன்தினம்  நண்பர்  பிரபு  மேற்குலகினைப்  பற்றி ஏதோ பேசிக்  கொண்டிருக்கும்  போது  மேலைச் சிந்தனைக்கும்  இந்திய  சிந்தனைக்கும்  என்ன  வித்தியாசம்  இருக்க  முடியுமென்ற  கேள்வி  எழுந்தது.

அக்கேள்வியை எதிர்கொள்ளக் கூட  என் தகுதி  வளர்ச்சியடையவில்லை என்றெனக்குத்  தெரியும்.  இருந்தும்  உடனே  நான்  சொன்னது  “பைபிள்  முதல் வரியிலிருந்தே  பிரிக்கத் தொடங்கி விடுவது  போல்  மேலைச் சிந்தனையும்  ஒவ்வொன்றையும்  பிரித்து  விளக்க  முயல்கிறது. இந்தியச் சிந்தனை அனைத்தும்  நானே என்பது போல் இணைத்து விளக்க  முயல்கிறது” என்பதே.

இப்படி  ஏன் சொன்னோம் என ஐயப்பட்டேன். ஆனால்  சங்கரர்  குறித்த உரை  முடிகையில்  எனக்குப்  புரிந்தது  அதைச்  சொல்ல  வைத்தது  உங்கள்  எழுத்துக்களும்  நீங்கள்  அளித்த  புதுவிதமான  வரலாற்று நோக்குமே. அவரிடம்  சங்கரர்  உரையை  கேட்கச்  சொன்னால்  கேட்டுவிட்டு நிச்சயம்  அவ்வுரையை கேட்ட பிறகே நான் அவ்வாறு  சொன்னதாகச் சொல்வார். நிச்சயம்  நீங்கள்  சொல்வதுபோல்  எங்களால்  அத்வைதம்  என்ற  மிக  உன்னதமான  மிகப் பிரம்மாண்டமான  கருணை மிக்க கருதுகோளை மேற்குலகில்  வலுவாக  வளர்த்தெடுக்கப்பட்ட சிந்தனைகளுக்கு  இணையாக  முன்  வைக்க  முடியாமலிருக்கலாம். ஆனால்  அத்வைதம்  தன் வழிகளை  அடையும்  என்று  நம்புகிறேன் .

விஜயநகர அரசு குறித்த தகவல் தவிர்த்து இவ்வுரையில் சொல்லப்பட்ட  பல வரலாற்றுத் தகவல்கள்  உங்கள்  இணையதளத்தில்  சங்கரப்புரட்சி தொடங்கி  கிடைக்கும்  சங்கரர்  குறித்த  பதிவுகளில்  இடம்  பெற்றிருந்தாலும்  அனைத்தையும்  முழுமையாக  தொகுத்துக்  கொள்ள இவ்வுரை  உதவியது. அத்வைதம்  குறித்து  எந்த  முதல்  நூலையும்  நான்  கற்றது  கிடையாது.  குறைந்தது  அத்வைதம்  என்ற  வார்த்தையை  சென்ற  வருடம்  உங்கள்  கட்டுரைகளை  படித்த  பின்னே  அறிந்தேன்.  ஒன்றே  அதற்கெதிரான இன்னொன்றாகும் நிலையை  அம்பை பீஷ்மரின்  இறுதி  சந்திப்பில்  அறிய  முடிகிறது. அகத்தியர்  விசித்திர  வீரியனின் அறையில்  தேடியதும் பிரம்மத்தின் எண்ணிலடங்கா இணைகளில் ஒன்றைத்தானோ?

ஒரு குடும்பப்  பண்டிகையில் கூட  பொருளாதார அடிப்படையில்  ஒரே  தரத்தினராக இருப்பவர்களே  ஒன்றி நிற்பார்கள்.  அவர்கள்  அனைவரையும்  ஒன்றிணைத்து  அப்பண்டிகையை  அனைவருக்கும்  உரித்தானதாக  மாற்றும்  ஒருவரை  அனைவரும்  விரும்புவோம். இந்த  வேறுபாடுகளின் இணைவு  தொடர்ந்து  ஈர்ப்புமிக்கதாக இருப்பது  மறைமுகமாக  அத்வைதம்  நம் சிந்தனையில்  ஊறியிருப்பதனால்  போலும். உணர்வுப்பூர்வமாக  அன்றி  அறிவுப்பூர்வமாக  மட்டுமே  அத்வைதத்தை அணுகிய  மாமனிதர்  சங்கரர் என்பது  மறுக்க  முடியாத விவாதப்  பொருளாகும். இன்னொருவனை குறை  சொல்லி தப்பிக்க  முடியாத ஆழமான  குற்றவுணர்வினை அடைகிறேன்.  இப்போதாவது அறிந்தேனே என்ற  மகிழ்ச்சியும் மறுபக்கம். உளறிக்  கொட்டுகிறேன்.
நன்றி

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

 

அன்புள்ள ஜெ

சங்கரர் உரையை நாலைந்துமுறை கேட்டுவிட்டு இதை எழுதுகிறேன் அது புரிய ஒரு கோணம் என்பதனால் என்னால் தொகுத்துக்கொள்ள பலநாட்கள் ஆகியது. ஆனால் மிகச்சிறந்த ஒரு பயிற்சியாக இருந்தது

சங்கரர் பௌத்தர்களுடனான விவாதத்தில் அவர்கள் கேட்ட மேலதிகத் தத்துவக்கேள்விகளுக்கு அவர்களின் நியாய சாஸ்திரத்தைக்கொண்டே உரிய பதில் சொல்லி அவர்களை வென்று வேதாந்தத்தை ஸ்தாபனம் செய்தார்

ஆறுமதங்களையும் ஒன்றாகக் கருதும் ஷன்மதம் அமைப்பை உருவாக்கினார். அதைப்பரப்ப ஏகதண்டிகள் என்னும் குருமரபை உருவாக்கினார்.

ஆனால் அவரது சிந்தனைகள் ஒரு சிறிய ஞானவட்டத்துக்குள்ளேயே இருந்தன. அவற்றுக்கு பெரிய அளவிலான ஸ்தாபன மதிப்பு இருக்கவில்லை.

பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் இந்து மதம் தன்னை தொகுத்துக்கொள்ளவேண்டிய அரசியல்கட்டாயம் உருவானபோது சங்கரர் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டார்

வித்யாரண்யர் அவரை ஒரு பேரரசின் பின்னணி கொண்டவராக ஆனார். அவரே சங்கரர் பேரால் ஸ்மார்த்தர் என்னும் அமைப்பை உருவாக்கினார். அது அன்றிருந்த ஆறுமதங்களிலும் உள்ல பூசகர்களை ஒன்றாக ஆக்கிய ஒரு முறை

அந்தமுறை இந்துமதத்தைக் காப்பாற்றியது. ஸ்மார்த்தர்கள் தங்கள் வரலாற்றுப்பங்கை ஆற்றினர்கள். ஆலால் அவர்கள் மாற்றத்துக்கு எதிரான நிலைச்சக்தி

இப்படி சங்கரர் பேரால் ஆறுமதம் இணைக்கப்பட்டபோது சங்கரர் ஆறுமதங்களுக்கும் பொதுவான பக்திமார்க்கத்தலைவராக ஆனார். ஆகவே அவர் பேரில் ஆறுதெய்வங்களையும் பாடும் தோத்திரநூல்கள் பிறந்தன

இந்தக்கவசத்தை பதினெட்டாம் நூறாண்ண்டில் வேதாந்தம் கழற்றியது. சங்கரர் மீண்டும் புதிதாகப்பிறந்தார். அதுவே ராமகிருஷ்ண மடம் போன்றவை

நான் சுருக்கிக்கொண்டது சரியா?

வேத்பிரகாஷ்

 

முந்தைய கட்டுரைதான்சானியாவில் தேர்தல்- அருண் மதுரா
அடுத்த கட்டுரைராஜாவின் எதிரிகள்