ஜெமோ,
ரசிக்க வைத்த கட்டுரை. வடபழனி வாக்குவாதங்களை படித்து, வெகுநேரம் சிரித்தேன்.
ஒரு வேண்டுகோள். திருவையாறு பற்றி நீங்கள் எழுதியது ஞாபகமிருக்கிறது. தஞ்சை பற்றி அதிகமாக எழுதவில்லை என்று நினைக்கிறேன். பெரியகோயில் 1000வது ஆண்டுவிழா நிறைவடையும் நேரத்தில் பெரியகோயில் பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சி. நன்றி
ராம்கி
அன்புள்ள ராம்கி
வரும் அக்டோபர் 15 க்குப்பின் நான் ஒருவாரம் தஞ்சை செல்வேன். அப்போது பார்க்கலாம்
ஜெ
அன்புள்ள திரு ஜெ,
நலமா?
ஒரு பரிந்துரை. நான் சிறு வயதிலிருந்து பல மகாபாரதக் கதைகள் படித்திருக்கிறேன். ஒன்று அவை தொகுப்புகளாக இருக்கும் (இராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து போல) அல்லது பாரதத்திலிருந்து எடுத்த ஏதாவது ஒரு கிளைக் கதையாயிருக்கும் (நளதமயந்தி போல). நான் தற்போது ஒரு முழு பாரதத்தொகுப்பு தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன். அவ்வாறு ஒன்று தமிழில் உள்ளதா? அப்படியாயின், தங்கள் படித்தவற்றுள் நல்ல ஒரு பதிப்பை பரிந்துரைப்பீர்களா? இதே போல் இராமாயணமும் பரிந்துரைத்தால் மிகவும் உதவியாயிருக்கும்.
ஸ்ரீனிவாசன்
அன்புள்ள ஸ்ரீனிவாசன்
மகாபாரதம் ஒரு கலைககளஞ்சியம் போல. முழுமையான நூலை சேர்த்து வாசித்துச்செல்ல முடியாது. ஆகவே வர்தமானன் பதிப்பகத்தின் வியாசமகாபாரதமே சிறந்தது என்பேன். முழுக்க வாசிக்க வைமு கிருஷ்ணமாச்சாரியார் மகாபாரத மொழியாக்கம் இப்போது கிடைக்கிறது.
கம்பராமாயணம் கோவை கம்பன் அறநிலை வெளியீடு நல்லது.
ஜெ
அன்புள்ள ஜெ,
அன்றைய தினத்தைப் பற்றிய எனது பகிர்வு இதோ..
குடி மீதும் குடிப்பவர்கள் மீதும் பொதுவாக உங்களுக்கிருக்கும் கடும் வெறுப்பைக் நீக்கமுயற்சிக்காமலிருப்பது மது தரும் உன்னத தோழமைக்கு நான் செய்யும் அநீதியாகத் தோன்றியதுண்டு. அவ்வாறு வருந்தித் தூங்கப்போகும் இரவுகளில் பல நேரம் ‘’ லே மக்கா, குடிக்காதவன் பேச்சக்கேட்டு சும்மா வந்திட்டியலே.. உள்ளத சொல்லாம வந்திட்டியலே..’ என்று குடிநீலி சன்னதம் கொண்டு உலுக்க எழுந்தமர்ந்து இருளை வெறித்திருக்கிறேன். நல்ல தோழமை நமது செயல்பாடுளை ஊக்குவித்து உற்சாகத்தை பெருக்குவது போலவே என்றைக்கும் எனக்கு மது இருந்து வருகிறது. சதா மகிழ்ச்சியில் இருந்கும், நகைச்சுவை உணர்வுகொண்ட சுற்றம் நாடும் மனம் இதனால் இன்னும் அதிகமாக மகிழ்ச்சிகொள்கிறது, துர்பலமான, குறுகிய எண்ணங்கள் கொண்ட மனம் மேலும் ஆழமாக அந்நிலைக்கே தள்ளப்படுகிறது. குடிபற்றி எனது புரிதல் இதுதான். தங்களுக்கு நேர்ந்த முந்தைய சந்திப்புகளில் துரதிர்ஷ்டவசமாக இரண்டாம்வகையினர் “தண்ணிபோட்டு “ காரியத்தைக் கெடுத்துவிடுவதால், அவை உங்களுக்கு குடியின் மேல் தீராத வெறுப்பை எற்படுத்தியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. .
அந்த இரவை, குடிதேவதையின் பக்கம் நின்று பேச அமைந்த அரிய சந்தர்பம் என்றே சொல்வேன். இனி செய்யும் செயல் முந்தைய செயலைவிட மெருகேறியிருக்கவேண்டும் என்ற நோக்கில் லவுகிக வாழ்வை நகர்த்தும், நீங்காத தேடல் நிறைந்த ஒரு உற்சாகமான குழு துளசிப்பார்க்கில் அன்று இரவில் கூடி உரையாடியது. மதுவும் அவர்களுடன் இணைந்தது. அன்றைய நிகழ்வுகளை இப்போது சற்று அசைபோடுகிற போது, தகுதியானவர்கள் குடித்தால் எத்தனை ரம்மியமான பொழுதாக அது அமையும் என்று உதாரணம் சொல்லத் தகுதியானதாக. குடியின் வெளிச்சம் நிறைந்த சாத்தியங்களை அது சுட்டுவதாகப் தோன்றுகிறது.
நீங்கள் பக்கத்திலிருகிறீர்கள் என்று எங்களிடம் முதலில் படர்ந்திருந்த தயக்கம் சிறிது நேரத்தில் மறைந்து சுதந்திரமானோம். எங்கள் கைகளில் ஒரு பானம் இருந்தது என்பதைத் தவிர்த்தால் உரையாடல் வழக்கமான முக்கியத்துவத்துடனே தொடங்கியது.
உதாரணமாக, ஒரேநினைவு மின் அதிர்வுகளாக மூளையில் பயணிப்பது தலைமுறைகளாக நடக்குமானால் அது மூளைக்குள் வேதியல் நிகழ்வாக மாறி உயிரின் ஆதார செயல்பாடுகளின் வரிசையில் சேர்வதை நீங்கள் விளக்க, அது பல்வேறு உலக இனக்குழுக்களின் தனித்த பழக்க வழக்கங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டு உண்மை தெளிய வியக்கப்பட்டது. மேலும் சற்று நேரத்தில், தொழில் வியாபாரம் கலை எல்லாம் தாண்டி நாங்கள் குழந்தை மன நிலைக்கு வந்ததை உணர்ந்திருபீர்கள்.
சிறில் பாதிரிமார்களைப்பற்றிய நகைச்சுவைகளை ஆரம்பிக்க, மற்றவர் எடுப்பதைத் தாவிப்பிடிக்கும் குழந்தை போல முழு கூட்டமும் நகைச்சுவை தளத்திற்குத் தாவியது. மின் அதிர்வு, வேதியல் செயல்பாடுகள் மற்றும் மூளை முழுமையாக மறக்கப்பட்டன. மனிதன் சகமனிதர்களை மகிழ்விக்க கலையைக் கையிலெடுப்பதின் உச்ச நிகழ்வாக இருந்தது ஷாஜியின் பங்களிப்பு. மின்சார கம்பியை மிதித்தது போல் சதா பரபரப்பிலிருக்கும் அவர் இளகித் தணிந்து மிமிக்ரி செய்தது மதுவால் மட்டுமே சாத்தியப்படும் ஒன்று .
சினிமாப்பாடலுக்கே பொழிப்புரை தேடும் நான் பரப்புக்கலையின் சாத்தியங்களைப்பற்றி யோசித்த தீவிரம் சிந்தனையில் ஒருமுகம் ஏற்பட்டதற்கு ஒரு சான்று. அதை அடுத்தநாள் காலையில் என்னாலேயே நம்ப முடியவில்லை. இத்தருணங்களில் அடுத்தவர் நலனில் மேல் அக்கறை எந்த அளவிற்கு ஊற்றெடுக்கும் என்பதை நீங்களே நேரில் கண்டீர்கள். இரவு உணவுக்கு உங்களுக்கு பழங்கள் ஆர்ட்ர் செய்தோம். ஒவ்வொரு முறை எங்களுக்கு புதிதாக பீர் வரும் போதும் உங்களுக்கான பழங்களைக் கொண்டுவர அவர்களை நினைவுறுத்தினோம். இறுதியில் 12 மணி தாண்டி பார் மூடி எங்களுக்கு பீர் இனி வராது என்று அவர்கள் தெரிவித்த போதும் பழங்களை நினைவுறுத்தினோம்.
பிறர் கவலைகளில், அவர்களின் இக்கட்டான வேளைகளில் பங்கு கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு அளிக்கும் பண்பும் அங்கு ஒங்கி நின்றது. தொ.ப கட்டுரையை, புறப்பட்ட அம்பை பிடிக்கும் தீவிரத்தோடு இரவு முழுவதும் நீங்கள் தொடர. நாங்கள் அனைவரும் கூட்டாக ஆறுதல் சொல்லித் தேற்றினோமே ! குருநிந்தனை என்று நீங்கள் குமுறிய போது, குருவின் தவறுகளைச் சுட்டும் குரு நிந்தனை, அதைத் தெரிந்தும் அமைதியாயிருக்கும் குரு பக்தியை விடச் சிறந்தது என்று நாங்கள் உங்களைத் தேற்றவில்லையா..?
ஆக, விழிப்புள்ள யாருக்கும் குடியினால் ஒரு தீங்கும் விளைவதில்லை என்பதை கூறும் இரவாகவே அது இருந்தது என்று தோன்றுகிறது. குடியைப் பற்றிய உங்கள் தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய இது ஒரு காரணமாக அமைந்தால் மிகவும் மகிழ்வோம். கிளட்ச் மிதித்த வாகனம் போல் நாங்கள் இலகுவானதை கண்டீர்கள், பின்னிரவு வரை நீண்ட நகைச்சுவையும் , கனமான விஷயங்களும் கலந்த உரையாடல்களில் எங்களுடன் இருந்தீர்கள். தயவுசெய்து குடியின் நலனை எண்ணுக.
பேசிக்கொண்டிருந்த போதே அரங்கசாமி சுஷப்தி நிலைக்குச் செல்ல, நானும் சிறிலும் வாசலைத் தேடிக் கண்டுபிடித்து, துழாவித்திறந்து திரும்பிப்பார்த்தபோது, அதுவரை எங்களிடம் உச்ச ஸ்தானியில் உரையாடியவரா என்று வியக்கும் வண்ணம் அனைத்தையும் மறந்து, கணினியில் தட்டச்சில் அமைதியாக மூழ்கியிருந்தீர்கள். தத்துவக் கட்டுரையாகவோ, பதிலாகவோ இருக்கலாம். அந்த தணியாத ஆர்வத்தை, ஈடுபாட்டை சில கணங்கள் நின்று மெளனமாக வணங்கி கம்பீரமாக வெளியேறினோம். உங்களுக்கு பழங்கள் சீக்கிரம் வந்து சேரும் என்று நம்பிக்கொண்டே..
Regards,
K.P.Vinod