பேராசிரியர்கள் குறித்த விவாதம்

அன்பிற்குரிய திரு ஜெயமோகன்,

தங்கள் தளத்தில் நடந்து வரும் பேராசிரியர்கள் குறித்த விவாதம் குறித்து என் பார்வைகள் சில.

எஸ் .வி. டி இங்கே குறிப்பிட்டிருப்பது போல அறுந்த செருப்போடு, கசங்கிப் போன மஞ்சள் பையில் தன் புத்தகப் பொதிகளைச் சுமந்து கொண்டு வந்த சி.சு செல்லப்பா அவர்களைக் கல்லூரி முற்றத்தில் எதிர்கொண்டு,அவரிடமிருந்த புத்தகங்களின் ஒரு செட்டைச் சொந்த நூலகச் சேமிப்புக்கும் இரண்டு செட் நூல்களைக் கல்லூரி நூலகத்துக்கும் வாங்கிய ஒரு பேராசிரியர் என்பது மட்டுமே
இந்த உரையாடலில் பங்கு கொள்ள எனக்கு இருக்கும் ஒரே ஒரு சிறிய தகுதி என்பதை முதலில் சற்றுக் கூச்சத்துடனேயே சொல்லிக் கொள்கிறேன்.

சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் தலைவனுக்குப் பொய் சொல்லத் துணை போகும் பாணனைப் பற்றிய தலைவியின் நினைவோட்டத்தைக் குறிப்பிடுகையில் ‘’ஒரு பாணன் பொய்யனாக இருப்பதால் ஊரிலுள்ள எல்லாப் பாணர்களுமே அவள் கண்ணுக்குத் தவறாகத் தெரிகிறார்கள்’’என்பதாக ஒரு வரி வரும் ; ஆனால் இந்த விஷயத்தில் நிச்சயம் அப்படிச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. நிலைமை இங்கே முற்றிலும் நேர்மாறானது. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் தடம் புரள்வதால் வித்தியாசமான சிந்தனையும் பார்வையும் கொண்ட – எண்ணிக்கையில் வெகு குறைவான ஒரு சிலரும் கூட இலக்கியத் தளங்களில் மிகக் கேவலமான பரிகசிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.வேதனையோடு தலை கவிழ்ந்து அவற்றை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

நீங்கள் சொல்வதில் பிழை சிறிதும் இல்லை.ஆறாவது ஊதியக் கமிஷன் சம்பளத்தை அள்ளித்தான் கொடுத்திருக்கிறது.ஆனால் வகுப்புக்குத் தயாரிப்போடு செல்லும் மன நிலையோ…,சமகாலப் புத்தகங்களைப் படித்து update செய்து கொள்ளும் ஆர்வமோ முனைப்போ பலருக்கும் இல்லைஎன்கிற கசப்பான நிஜத்தை அந்த நெருப்புக்குள்ளிருந்தே அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கும் அபாக்கியம் மிகவும் துன்பம் தருவது.(பாடத்துக்கு வெளியே கூட வேண்டாம்;பாடத் திட்டத்தில் இருப்பதைக் கொஞ்சம் பிழையில்லாமல் சொல்லிக் கொடுத்தால் போதும் என்ற அளவுக்கல்லவா நிலைமை இப்போது கீழிறங்கிக் கிடக்கிறது)

இதற்கான காரணங்கள் , இதை ஒருபோதும் நியாயப்படுத்திவிட முடியாது என்றாலும் கூட இந்த அளவுக்குக் கல்வித் துறை அழுகி நாற்றமெடுப்பதற்கான காரணங்களையும் சற்று யோசித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது.
பேராசிரியர் பணி / கற்பித்தல் பணி என்பது கொழுத்த ஊதியத்தைப் பெற்றுத் தரும் ஒரு carrier மட்டுமே என்பதாகத் தரம் தாழ்ந்து போய்ப் பல வருடங்களாகி விட்டன.

எப்போதோ படித்ததை உருப் போட்டு ஒப்பித்துவிட்டு..மரபின் ஆழத்தையும் துருவிப் போகாமல்,நவீன காலத்தின் இலக்கியப் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கான குறைந்த பட்ச மூளை உழைப்பையும் செலவிடாமல்..எப்படியோ மாணவர்களுக்கு மார்க் போட்டுத் தேற்றி விட்டு விட்டுக் கடமையைக் கழித்ததாய்க் காசை எண்ணிக் கொண்டு போகும் கூட்டத்துக்குப் பேராசிரியத் தகுதி இருப்பதாய் எப்படிக் கூற முடியும்?

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.அவர்கள் ஒன்றும் தீராத இலக்கிய தாகத்தால் இந்தப் பணிக்கு வந்துவிடவில்லை.அவர்களில் பலருக்கு நல்ல வருமானம்,சமூக அந்தஸ்து,கூடுதலான விடுமுறை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் ஒரு வேலைவாய்ப்பாக மட்டுமே இது இருந்து கொண்டிருக்கிறது.
அரசாங்க ஊழியரின் கோப்புக்கள்,மருத்துவரின் கேஸ்கள்,ஆசிரியரின் மாணவர்கள் ஆகிய மூன்றையுமே இன்று ஒரே தளத்தில் வைத்துப் பார்க்கக் கூடிய சூழல்தான் நிலவிக் கொண்டிருக்கிறது.

பட்டிமன்றம் பற்றியும் எஸ் வி டி குறிப்பிட்டிருந்தார்.30 வருடங்களுக்கு முன்பிருந்தவர்களாவது பாடத் தயாரிப்பு நேரத்தைப் பட்டிமன்றக் குறிப்பெடுக்கப் பயன்படுத்தினார்கள்;இன்று அந்த மேடைகளும் கூடக் கிச்சுகிச்சு மூட்டும் வெற்று அரங்கங்களாக மாறிப் போனபின் அந்தத் தயாரிப்புக்கான அவசியம் கூட இன்றி…மொழியிலிருந்தும்,இலக்கியத்திலிருந்தும் முற்றாகவே அவர்கள் தனிமைப்பட்டுப் போய்க் கிடக்கிறார்கள்.

முனைவர் பட்டங்களின் அவலம் பற்றித் தனித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.மனச் சாட்சியோடு உழைத்து இந்தப் பட்டம் பெற்ற சிலருக்கும் கூட – இன்று நடக்கும் அருவருப்பான முனைவர் பட்ட பேரம் மற்றும் பகற்கொள்ளை வியாபாரத்தைப் பார்க்கையில் அந்தப் பட்டத்தைப் போட்டுக் கொள்ளக் கொஞ்சம் நாணமாகத்தான் இருக்கிறது.

தமிழ்ச் சூழலில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் குறித்த இந்தப் பார்வைக்கு இன்னுமொரு மறு பக்கமும் உண்டு.

1.தமிழகக் கலைக் கல்லூரிகளில் தமிழ் படிக்க வரும் மாணவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள், மொழியின் மீது வைத்திருக்கும் ஆராக் காதலால் அந்தப் படிப்புக்கு வருபவர்களாக இருப்பதில்லை.punishment posting தருவதைப் போல வேறு துறைகளுக்குச் செல்ல விண்ணப்பித்து விட்டு அவற்றில் போதிய மதிப்பெண் இல்லாத நிலையில் -(மொழியின் மீது கௌரவமற்ற)–நிர்வாகத்தால் மொழிப்பாடங்களை நோக்கி வலிந்து தள்ளப்படும் கூட்டமே பெரும்பான்மையானது.அந்தப் பெரும்பான்மைக்குள்ளிருந்து முளைத்து வரும் சில சிறுபான்மையோர் – பின்னாளில் அதே பிடிமானத்தைப் பற்றிக் கொண்டபடி ஆசிரியர்களாகி விடுகையில் மொழியையும் இலக்கியத்தையும் விட அவர்களுக்கு அது ஒரு வேலை என்ற எண்ணமே பிரதானமாகி விடுகிறது.

(தமிழைச் சிறப்புப் பாடமாய்ப் படிக்கும் மாணவர்களை விட வேதியியல்,இயற்பியல்,வணிகம் முதலிய துறையிலுள்ள மாணவர்கள் மொழி வாசிப்பும், சமகாலப் போக்குகள் பற்றிய பிரக்ஞையும் உடையவர்களாக இருப்பதைப் பல முறை அனுபவத்தில் கண்டதுண்டு).

2.இரண்டாவது ,பாடத் திட்டம்.

பல்கலைப் பாடத் திட்டம் அமலில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் அது – வயதிலும் ,அனுபவத்திலும் மூத்த பேராசிரியர்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அவர்களில் பலர்,கவிதையில் மேத்தாவையும்,கதைகளில் அகிலன்,மு.வ.,கொஞ்சம் ஜெயகாந்தன் என்ற எல்லைக்கு மேல் தாண்டிப் போகாதவர்களாகவோ- அல்லது அவ்வாறு தாண்டிப் போகப் பிரயத்தனப் படாதவர்களாகவோதான் இருக்கிறார்கள் என்பதும் –
அப்படித் தாண்டிப் போகாத தங்கள் பேதமையைச் சமகாலப் போக்குகளைப் பற்றி அறியாமலே வசை பாடுவதன் வழி மறைத்துக் கொள்கிறார்கள் என்பதும் மிக மிகக் கேவலமானது.
( ’’கல்லாத நூல் குறித்து ஏளனம் செய்பவன் ஞானம் எனும் சொல்லை உச்சரிக்கவே தகுதியற்ற மூடன்’’என்று ‘விஷ்ணுபுர’த்தில் நீங்கள் குறிப்பிடுவது போல)

ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கான (upsc,tnpsc)தமிழ்ப் பாடத் திட்டங்களிலும் கூடப் புதியதை அறியாமல் புறந்தள்ளும் இவர்களின் பேதமைதான் வெளிச்சமாகிக்கொண்டு இருக்கிறது.
இவர்களில் சிலர் சாகித்திய அகாதமியின் விருதுக் கமிட்டியிலும் இருப்பது இன்னும் கொடுமை.

தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தை வடிவமைக்கும் சுதந்திரம் குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுடையதென்றபோதும் , மேலை இலக்கியக் கோட்பாடுகளில் பயிற்சியும் ஆர்வமும் கொண்ட – சமகாலத் தமிழ் இலக்கியப் போக்குகளைத் தொடர்ந்து உள் வாங்கி வரும் சில இளம் ஆசிரியரின் குரல்வளைகள் சீனியாரிட்டி என்ற அறியாமை அபத்தத்தால் தொடர்ந்து நெரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களாலும் அதைத் தாக்குப் பிடிக்க முடிவதில்லை.மேலை நாடுகளைப் போன்ற அத்தகைய சுதந்திரமான சூழல் இங்கில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

3.ஒரு துறையில் 15 ஆசிரியர்கள் இருந்தால் உண்மையான இலக்கிய ஆர்வத்துடன் – அன்றாடம் வளர்ந்து கொண்டிருக்கும் புதுப் புது முயற்சிகளை மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்படக் கூடியவர்கள் 2 அல்லது 3 பேராகத்தான் இருப்பார்கள்.( சில இடங்களில் அதுவும் கூடச் சந்தேகம்தான்)அவர்களிடம் வந்து சேரும் மாணவர்கள் , முன்பு குறிப்பிட்ட ஆர்வமற்ற கும்பலின் அடித்தளத்தயாரிப்பாக அமைந்து போனால் அடியாழத்திலிருந்து மீண்டும் தொடங்க வேண்டியதுதான்.

4.பாடத் தயாரிப்பை விட வேறுவகையான பணிச் சுமைகளை(கல்லூரி நிதி திரட்டல் போன்றவை)நிர்வாகம் திணிக்கும்போது–காலப் போக்கில் கல்வித் துறைக்கே அந்நியமானவர்களாக ஆசிரியர்கள் ஆகி விடும் அவலமும் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்தனைக்கும் நடுவே தனிப்பட்ட ஆர்வத்தாலும்,அடுத்த தலைமுறையைச் சரியான வகையில் ஆற்றுப்படுத்தும் ஆவேசத்தாலும் இயங்கி வரும் ஆசிரியர்களும் எங்கெங்கோ இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் பெரும்பான்மையினராக இல்லாமற்போய்விட்டது பேரழிவுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்குச் சற்றும் இடமில்லை.

நன்றி,
நந்தகுமார்

*

அன்புள்ள ஜெ..

நம்ம பல்கலைக் கழக மாணவர்களின் நிலை.. என்னத்தச் சொல்ல..

ஓராண்டுக்கு முன், ஒரு லோக்கல் கல்லூரியில் எம்.பி.ஏ மாணவர்களுக்கு ஒரு மணி நேரப் பேச்சாளானாகப் போனேன்.

சி.கே.ப்ரஹலாத் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று துவங்கினேன். கோயம்புத்தூர் கிருஷ்ணப் ப்ரஹலாத், உலகின் மிக மதிக்கப் பட்ட மேலாண் துறைப் பேராசிரியர். (சமீபத்தில் இறந்து விட்டார்) தமிழர். அரங்கில் பரிபூர்ண அமைதி.. எம்.பி.ஏ மாணவனுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படைத் தகவல்.

இளையராஜா இசையமைத்த முதல் படம் எது? அடுத்த கேள்வி.

முடிக்கும் முன் பதில் வந்துவிட்டது..

கிட்டத் தட்ட இளநிலைக் கல்வி முடியும் வரை, ஏதாவது வேலை கிடைக்குமா என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது. அதற்கு நம்மை எவ்வாறு தயார் செய்து கொள்கிறோம் என்பதில் கொஞ்சம் கூட அக்கறையில்லாத ஒரு சமூகம் நமது. எப்படியாவது கஷ்டப் பட்டுப் படிச்சு ஒரு வேலை வாங்கிட்டா போதும் அதுக்கப் புறம் ப்ரச்சினையில்லை என்று சொல்லித் தான் நம் குழந்தைகளை வளர்க்கிறோம். வாழ்க்கை முழுதும் உழைத்தல் என்னும் கோட்பாடு இல்லாத சமூகம் நமது. விளையாட்டில் ஈடுபடும் இளைஞன் கூட அதில் கிடைக்கும் சான்றிதழ்களை வைத்து விளையாட்டு கோட்டாவில் ஒரு வேலை கிடைக்குமா என்றுதான் பார்க்கிறான். இது மிகப் பெரும்பான்மையான மனநிலை.

அடுத்த படியாக, ஒரு தேசிய மேலாண்மைக் கழகம் ஒன்றில் உரையாற்றச் சென்றேன்.. அங்கே, நாடெங்கிலும் இருந்து வந்த, படிப்பில் புத்திசாலிகளான மாணவர்கள். அங்கே கேள்விகளுக்குப் பதிலும், உரை சம்பந்தமான கேள்விகளும் எழுந்தன. நானும் இருக்கிறேன் என்று நிரூபிக்கும் கேள்விகள்.. உரை முடிந்ததும், அனைவரின் விருப்பமும் என் நிறுவனத்தில் சேர்வதும், முதல் நிலையில் என்ன சம்பளம் கிடைக்கும் என்பதுமே.. நானும் அவ்வாறெ இருந்தேன் அவர்கள் வயதில்.

Beautiful mind படத்தில் முதல் வகுப்பில் பேராசிரியர் கேட்பார் “Now, gentlemen, who among you would be the next Einstein..” என்று.. இப்போதைக்கு மிக சிறுபான்மை மனித இனம் மட்டுமே அவ்வரிசையில் உள்ளது..

பள்ளியிலேயே அந்தத் தேடலைத் தூண்டி விடும் சாத்தியங்கள் உண்டு.. ஆசிரியர்கள் இல்லை.. மிகத் தகுதியான ஆசிரியர்கள் இல்லவே இல்லை.. இதை பேராசிரிய நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் – இங்கே அதற்கான வசதிகள் இல்லை. இராமானுஜனுக்கு ஏது வசதிகள் என்று கேட்டேன். பதிலில்லை.

டீக்கடை பெஞ்சில் உக்கார்ந்து வெட்டிக்கதை பேசும் சமூகம் நமது.. யோசிக்க யோசிக்க கசப்புதான் எஞ்சுகிறது.

பாலா

முந்தைய கட்டுரைபரப்பியம் மீண்டும்
அடுத்த கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 3