அன்புள்ள ஜெ,
கிட்டத்தட்ட இணையத்தில் மட்டுமே எழுதக்கூடிய எழுத்தாளராக ஆகிவிட்டிருக்கிறீர்கள். அச்சிதழில் உங்கள் ஆக்கங்களைப்பார்த்தே நெடுநாட்கள் ஆகின்றன. எழுதவேண்டாமென்றிருக்கிறீர்களா?
சண்முகம், மதுரை
ஆம். பல பெரிய இதழ்கள் படைப்புகளை கோருகின்றன. விகடன் கேட்டது, ஆனால் அதில் எழுத எனக்கு மனமில்லை. ஒருபோது சர்வவல்லமை கொண்ட ஓர் இதழ் தனி எழுத்தாளனுக்கு எதிராக அவதூறு சதி போன்றவற்றைச் செய்யக் கூடாது. விகடன் அதைச் செய்தது. அது ஒருபோதும் மறக்கக் கூடியதல்ல.
சிற்றிதழ்களில் எழுதச் சொல்கிறார்கள். அதுவும் எனக்குச் சிக்கலே. ஒரு சிற்றிதழில் என் எழுத்து வெளியாகும் என்றால் உடனே அடுத்த இதழிலேயே சம்பந்தமே இல்லாமல் என்னை வசைபாடி, அவதூறு செய்து யாராவது ஏதாவது எழுதுவதை வெளியிடுவார்கள். எழுதுபவனின் தகுதி அல்லது அவன் சொல்லும் விஷயங்களின் பெறுமானம் எதுவுமே கருத்தில் கொள்ளப் படுவதில்லை. கேட்டால் அது கருத்துச் சுதந்திரம் என்பார்கள். இது கடைசியாக தீராநதியில் நிகழ்ந்தது.
என்ன காரணம் என்றால் இன்று பல சிற்றிதழ்களின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பெரிய வாசிப்புப் பழக்கமேதும் இல்லை. அவர்களுக்கு இலக்கிய வம்புகள்தான் தெரியும். அடிக்கடி அடிபடும் பெயர்கள் தெரியும். எல்லாருமே சமம் என்ற ஜனநாயக உணர்வை இதன் விளைவாக அடைந்து விடுகிறார்கள். எந்த ஒரு இதழுக்கும் எழுத்தாளன் யார் அவன் இடம் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். அது இவர்களுக்கு இல்லை
ஆகவே இவ்விதழ்களில் எழுதினால் என்னைப் பற்றிய வசைகளுக்கும் அவதூறுகளுக்கும் நானே களம் அமைத்துக் கொடுத்ததாகவே ஆகும். மேலும் என் எழுத்துக்கள் அடையும் முக்கியத்துவம் மூலம் அந்த சாரமற்ற எழுத்துக்களுக்கும் நானே கவனத்தையும் ஈட்டித் தருவதும் நிகழும். ஆகவே தவிர்க்கிறேன்.
இன்று எனக்கு எந்த அச்சு ஊடகத்தின் துணையும் தேவையில்லை. எனக்கான வாசகர்கள் என்னைத் தேடிவந்து வாசிக்கிறார்கள். இவர்களுக்கு வெளியே சென்று பொதுவாசகர்களுக்காக எழுதும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. எந்த சிற்றிதழை விடவும் என்னுடைய வாசகர் எண்ணிக்கை அதிகம்.
ஆகவே அச்சு ஊடகம் இப்போதைக்கு வேண்டாமென எண்ணுகிறேன்
ஜெ