ஜெ,
பெரும்புகழ்பெற்ற பீப் பாடலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லவே இல்லை. நான் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று பெட் கட்டியிருந்தேன்
செல்வகுமார்
அன்புள்ள செல்வா
பீப் பாடலை மட்டுமல்ல எந்தப்பாடலை தடைசெய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் அதை நாம் கேட்காமலாவதில்லை. பாடலும் பரபரப்பு தடையும் பரபரப்பு என்பதனால் தமிழ்க்கலையுள்ளங்கள் மேலும் கேளிக்கையை அடைகின்றன. பெண்ணியர் கட்டுரை தேற்றிக்கொள்கிறார்கள். முகப்புத்தங்கள் புன்னகைக்கின்றன.
ஆனால் நெல்லை மற்றும் குமரிமாவட்டத்தினராகிய என் நண்பர் சுகா மற்றும் நான் மனமுருகிச் சொல்லிக்கொள்ள ஒன்றுள்ளது. அதாவது பாடலை தடைசெய்த உற்சாகத்தில் அச்சொல்லையே தடைசெய்துவிட்டால் என்னாவது என்னும் அச்சமும் பரிதவிப்பும்தான் அது
மேற்படிச் சொல் எங்களூர் மொழியில் வெண்டைக்காய் போல பொரியல், கூட்டு ,சாம்பார் ,தேங்காய்க்குழம்பு, பிரட்டல் என பலவகையில் பயன்படும் ஓர் அன்றாட விஷயம். நாற, ஊற,வக்கா,ஆச்சி,பேப் என பலவகை துணையுச்சரிப்புகளுடனும் இல்லாமலும் தினப்படிப் புழக்கத்தில் உள்ளது. வண்டி ஆரன் போல அதைக்கேட்காமல் இங்கே எவரும் வாழ முடியாது
அதைத்தடைசெய்தால் எங்களூர்ப்பக்கம் பொதுவாகப் பேச்சே நின்றுவிடும். பொது இடங்களில் பரவாயில்லை, வீட்டிலும் அப்பன் பிள்ளை பேச்சுகள் அற்றுவிடும் என்பது ஓர் நடைமுறை யதார்த்தம். மேன்மக்களெல்லாம் பேசிக்கொண்டிருக்க நாங்கள் சைகையால் வாழவேண்டும் என்பதெல்லாம் ஒடுக்குமுறை
மேலும் இச்சொல்லை சைகையால் சொல்ல ஆரம்பித்தால் அது ஆபாசமாக இராதோ என்னும் ஐயமும் வாட்டுகிறது
ஜெ