பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 11
துச்சளை இருகைகளாலும் கர்ணனின் வலக்கையை பற்றி தன்தோளில் வைத்து அதில் கன்னங்களை அழுத்தியபடி “மூத்தவரே, என் கனவில் எப்படியும் நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விண்ணிலிருந்து பேசுவது போலவும் நான் அண்ணாந்து உங்கள் குரலை கேட்பது போலவும்தான் இருக்கும். இப்போதுதான் தெரிகிறது. உங்கள் முகம் எனக்கு தலைக்குமேல் நெடுந்தொலைவில் உள்ளது. இப்படி நிமிர்ந்து பார்த்தால் வானத்தின் பகைப்புலத்தில் தெரிகிறீர்கள்” என்றாள்.
துச்சலன் “ஆகவேதான் அவரை வெய்யோன் மைந்தன் என்கிறார்கள்” என்றான். “அரிய கண்டுபிடிப்பு!” என்று துச்சளை துச்சலனின் தோளை அறைந்தாள். “மூத்தவரே, எங்கள் தந்தைக்கு மட்டும் எப்படி நூற்றுவரும் ஒரேபோன்று அறிவுத்திறனில் பிறந்திருக்கிறார்கள்?” “ஏன்? சுஜாதன் அறிவாளிதானே?” என்றான் துச்சலன். கர்ணன் “அவர்களிடம் விடுபட்ட அறிவுத்திறன் அனைத்தும் உனக்கு வந்திருக்கிறதே!” என்றான். துச்சகன் “ஆம். நான் அதையே எண்ணிக்கொள்வேன். எங்களைவிட இவள் எப்படி இவ்வளவு அறிவுடன் இருக்கிறாள்?” என்றான். துச்சளை தலையை நொடித்து “என்னை கேலி செய்கிறீர்கள் என்று தெரிகிறது” என்றாள்.
பின்னால் இருந்து சகன் அவள் மேலாடையை பற்றி இழுத்து “இங்கே பார்! நாங்களெல்லாரும் இளமையிலேயே படைக்கலப்பயிற்சிக்கு போய்விட்டோம். ஆகவேதான் எங்களுக்கு கல்வி கற்க பொழுதேயில்லை. நீ அரண்மனையிலேயே இருந்தாய். ஆகவே நீ கல்விகற்று அரசுசூழ்தலில் திறமை கொண்டவளானாய்” என்றான். “ஏன்? படைக்கலக் கல்வியில் தேர்ந்துவிட்டீர்களோ?” என்றாள் துச்சளை. கர்ணன் “அது எப்படி? துரோணர்தான் என்ன செய்ய முடியும்? முதல் கௌரவரிடமிருந்து அவர் கற்பிக்கத் தொடங்கினார். பத்தாவது கௌரவனுக்கு வருவதற்குள்ளாகவே அவர் களைத்துவிட்டார்” என்றான்.
துர்மதன் “ஆம். அவரது குருகுலத்தில் எப்போதுமே எங்களை எல்லாம் கூட்டமாக நிறுத்திதான் சொல்லிக்கொடுத்தார். அவர் என்ன சொல்கிறார் என்பதே எங்களுக்கு கேட்பதில்லை. ஆகவே பெரும்பாலும் வகுப்புகளில் சாய்ந்து துயில்வதுண்டு” என்றான். துச்சளை “குருகுலத்திற்குள் வாழும் மான்களையும் கங்கைக்கரை முதலைகளையும் எல்லாம் வேட்டையாடித் தின்றால் அப்படித்தான் தூக்கம் வரும்” என்றாள். துச்சலன் “நாம் சண்டை போடுவதற்கு இன்னும் நெடுநாட்கள் உள்ளன. இப்போது அரசுமுறை சடங்குகளுக்கான நேரம்” என்றான். கர்ணன் நகைத்தபடி “இந்தக் கலவரப்பகுதியில் என்ன சடங்கு நிகழமுடியும்?” என்றான்.
அவர்களைச்சுற்றி அதுவரை இருந்த அனைத்து ஒழுங்குகளும் சிதறி மீண்டும் தங்களை ஒருங்கமைக்கும் முயற்சியில் மேலும் கலைந்து கூச்சல்களும் காலடி ஓசைகளும் படைக்கலன்கள் உரசும் ஒலிகளுமாக இருந்தது சூழல். “முதலை புகுந்த நீர்ப்பறவைக்கூட்டம் போல” என்று துச்சலன் சொன்னான். “நானும் அதையேதான் நினைத்தேன்” என்றான் துச்சகன். “கங்கைக்கரை முதலைகள் மிகச்சுவையானவை. மீன்களைப்போல அடுக்கடுக்கான மென்மையான வெண்ணிற ஊன்…” என்றான்.
கர்ணன் “நமது இளவல்கள் அப்படியே மொத்த அஸ்தினபுரியையும் கலைத்துக்கொண்டு இந்நேரம் அரண்மனை சென்றடைந்திருப்பார்கள்” என்றான். “ஆம், அவர்கள் செல்லும் வழியே ஓசைகளாக கேட்கிறது. அங்காடியை கடந்துவிட்டனர்.” “அவர்கள் கொண்டு வருவது சிந்துநாட்டு இளவரசன் என்று அங்கு யாருக்காவது தெரியுமோ என்னவோ? விளையாட்டுக்களிப்பில் பாதி வழியிலேயே அவனை தரையில் விட்டுவிட்டுப் போனால்கூட வியப்பதற்கில்லை” என்றான் கர்ணன். சத்வன் “ஆம். ஆனால் ஒன்றுள்ளது. சிந்துநாட்டுக் குழந்தை நம் குழந்தைகளைப்போல பெரிய உருவம் கொண்டதல்ல. ஆகவே அரச குடியினருக்கு ஐயம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்றான். “ஆனால் இங்கே கொஞ்சநாள் இருந்தால் யானைப்பால் குடித்து அவனும் பெரியவனாக ஆகிவிடுவான்.”
கோட்டைக்குள் அவர்கள் நுழைந்ததும் கோட்டைக்காவலன் இருபுறமும் கைநீட்டியபடி பதற்றம்கொண்டு கூவி வீரர்களை திரட்டிக்கொண்டே அவர்களை எதிர்கொண்டு மூச்சுவாங்க தலைவணங்கி “அரசியார் என்மேல் பொறுத்தருள வேண்டும். சற்று நேரத்தில் இங்குள்ள அனைத்தும் ஒழுங்கு சிதறிவிட்டன. நகரத்துக்குள் தங்களை பார்ப்பதற்காக வந்து குழுமிய மக்கள் தெருக்களில் இறங்கிவிட்டார்கள். அவர்களை ஒதுக்குவதற்காக இங்குள்ள படைகள் அனைத்தையும் அங்கு அனுப்பினேன். அதற்குள் இங்குள்ளவர்கள் கலைந்துவிட்டார்கள். இப்போது இங்கு ஒழுங்கை நிறுத்துவதற்கு என்னிடம் படைகள் இல்லை” என்றான். கர்ணன் “இப்படியே இருக்கட்டும். இது படை நகர்வு அல்ல. திருவிழா” என்றான்.
அவன் அதை புரிந்துகொள்ளாமல் “பொறுத்தருள வேண்டும் மூத்தவரே. இங்கு என்ன நடக்கிறது என்றே எனக்கு புரியவில்லை” என்றான். “நன்று” என்றபடி கர்ணன் கோட்டைவாயிலைக் கடந்து மறுபக்கம் சென்றபிறகுதான் கோட்டைக்காவலன் திடுக்கிட்டு எண்ணிக்கொண்டு முரசறைபவனை நோக்கி கையசைக்க அவர்களை வரவேற்கும் பெருமுரசங்கள் முழங்கத்தொடங்கின. முற்றமெங்கும் அதுவரை செய்யப்பட்டிருந்த அணியமைப்புகள் பொலிநிரைகள் அனைத்தும் கிழிந்தும் சிதறியும் தரையில் மிதிபட்டுக் கிடந்தன. பொதுமக்கள் பெருமுற்றத்தில் இறங்கி ஒருவரையொருவர் நோக்கி கூச்சலிட்டு அணைந்தும் குறுக்காக ஓடியும் அதை வண்ணக்கொந்தளிப்பாக மாற்றியிருந்தனர். விதுரர் நிற்பதற்காக போடப்பட்டிருந்த அணிப்பந்தல் குடை சரிந்திருந்தது. அவர் அருகே மேடையில் கனகர் நின்று பதற்றத்துடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். விதுரர்தான் கூட்டத்தின் நடுவே வந்த துச்சளையைப் பார்த்து முதலில் கையசைத்தார்.
கனகர் அவளை நோக்கி ஓடிவந்து “இங்கு அனைத்துமே சிதறிவிட்டன இளவரசி… அஸ்தினபுரிக்கு நல்வரவு. வாருங்கள்” என்றார். துச்சளை சென்று விதுரரின் முன் முழந்தாளிட்டு தன் நெற்றியால் அவர் கால்களை தொட்டாள். “பதினாறு சிறப்புகளும் தெய்வங்களால் அருளப்படுவதாக!” என்று விதுரர் அவளை வாழ்த்தினார். அவள் எழுந்து அவர் அருகே நின்றதும் திரும்பி தன் அருகே நின்ற பணியாளர்களிடமிருந்து குங்குமத்தைத் தொட்டு அவள் நெற்றியில் இட்டு “என்றும் குன்றாத மங்கலம் உடன் வருக!” என்றார். எவ்வித உணர்வுமின்றி அதை சொல்லவேண்டுமென்று அவர் முன்னரே முடிவு செய்திருந்தபோதிலும் கண்களில் படர்ந்த ஈரமும் இதழ்களில் இருந்த சிறு நடுக்கமும் அவர் உணர்வெழுச்சி கொண்டிருப்பதை காட்டின.
“தங்கையே, உனக்காக அஸ்தினபுரியின் பொற்தேர் வந்து நின்றிருக்கிறது” என்றான் கர்ணன். துச்சலன் “முதலில் அதில் நான்கு சகடங்களும் ஆணிகளில் இருக்கின்றனவா என்று பாருங்கள். கடையாணியை கழற்றிக்கொண்டு போயிருக்கப்போகிறார்கள்” என்றான். கனகர் தானாக வந்த சிரிப்பை விதுரரை கடைக்கண்ணால் பார்த்து அடக்கிக்கொண்டு “நான் நோக்கிவிட்டேன், கடையாணிகள் உள்ளன” என்றார். கர்ணன் “இந்நேரம் அரண்மனை எப்படி இருக்கும் என்பதைப்பற்றித்தான் நாம் கவலை கொள்ளவேண்டும்” என்றான். துச்சளை “எத்தனை குழந்தைகள்! நான் சென்று மூன்று வருடங்களாகின்றன மூத்தவரே. இப்போது நினைக்கையில் ஏன் சென்றோம் என்று இருக்கிறது. இங்கிருந்தேன் என்றால் ஒவ்வொருவரையும் மடி நிறைத்து வாழ்ந்திருப்பேன்” என்றாள்.
“இனியும் என்ன? ஒரு ஐநூறு குழந்தைகளை சிந்துநாட்டுக்கு கொண்டு செல்” என்றான் துச்சகன். கர்ணன் “அந்த ஐநூறு குழந்தைகளின் இடத்தையும் இவர்கள் உடனே நிரப்பிவிடுவார்கள்” என்றான். அமைச்சர் கைடபர் வந்து வணங்கி நின்றார். துச்சளை “கைடபரே, நலமாக இருக்கிறீர்களா?” என்றாள். “சிந்துநாட்டரசியை தலைவணங்குகிறேன்” என்றார் கைடபர். “பாருங்கள்! இத்தனை கலவரத்திலும் முறைமைச் சொற்களை கைவிடாதிருக்கிறார்” என்றாள் துச்சளை.
கர்ணன் “ஆம். அது ஒரு அமைச்சரின் கடமை. முதிர்ந்து படுக்கையில் இருக்கையில் பாசக்கயிற்றில் எருமைக்காரன் வரும்போதுகூட நன்று சூழ்க நாம் கிளம்புவோம் என்று முறைமைச் சொல்லை சொல்ல வேண்டும்” என்றான். அப்போதும் கைடபர் முகத்தில் புன்னகை எழவில்லை. தலைவணங்கி “ஆவன செய்துள்ளோம் இளவரசி” என்றார். “நன்று! இந்த ஒரு முகத்திலாவது அரச முறைமை எஞ்சுவது நிறைவளிக்கிறது” என்றான் கர்ணன்.
துச்சளை “மூத்தவரே, என்னுடன் நீங்களும் தேரில் ஏறிக்கொள்ளுங்கள்” என்றாள். “நானா?” என்று கர்ணன் சிரித்து “மூன்றாண்டுகளுக்குப் பிறகு நகர் நுழைகிறாய். உன்னைப் பார்ப்பதற்காகத்தான் அஸ்தினபுரியின் அனைத்து மக்களும் இருபுறமும் கூடியுள்ளனர்” என்றான். “நீங்கள் என்னருகே நின்றால் எவரும் என்னை பார்க்கமாட்டார்களென்று எனக்குத் தெரியும்” என்றாள் துச்சளை. “ஆனால் நான் உங்களை பார்க்க விரும்புகிறேன்.”
“நாம் பேசுவதற்கென்ன? நான் உன் மகளிர்மாளிகைக்கே வருகிறேன். இரவெல்லாம் பேசுவோமே” என்றான் கர்ணன். “அரண்மனையில் நாம் பேசப்போவதில்லை. அங்கு சென்றதுமே அரசமுறைமைகளும் விழவுக் களியாட்டுகளும் தொடங்கிவிடும். என்னை பத்தாகக் கிழித்து பத்து இடங்களுக்கு அனுப்பினால்தான் சரியாக வரும். இங்கிருந்து அங்கு போவதுவரை மட்டுமே நான் உங்களிடம் தனியாக பேசமுடியும்” என்றபின் அவன் கையைப்பற்றி சிணுங்கலாக “வாருங்கள்” என்றாள்.
கர்ணன் திரும்பி விதுரரைப் பார்க்க அவர் மெல்ல இதழ்நீள புன்னகைத்தார். கைடபர் “தாங்களும் ஏறிக் கொள்ளலாம் அங்கரே” என்றார். “அங்கநாட்டு அரசனுடன் சிந்துநாட்டு அரசி வருவது அரசமுறைப்படி பிழையன்று அல்லவா?” என்றான் கர்ணன். கைடபர் “அங்கநாடும் சிந்துநாடும் போரில் இருக்கும்போது மட்டும் அது ஒப்பப்படுவதில்லை” என்றார். அவர் கண்களுக்குள் ஆழத்தில் சென்று மறைந்த புன்னகையின் ஒளியைக் கண்ட கர்ணன் உரக்க நகைத்து “ஆம். அதற்கான வாய்ப்புகள் சற்று முன்பு வரைக்கும் இருந்தன” என்றபின் துச்சளையின் தலையைத் தட்டி “வாடி” என்றான்.
துச்சளையின் தேரில் கர்ணன் ஏறிக்கொண்டு கை நீட்டினான். அவள் அவன் கையைப்பற்றி உடலை உந்தி ஏறி தட்டில் நின்று மூச்சிரைத்தாள். “மிகுந்த எடை கொண்டுவிட்டாய்! எப்படி? இதற்காக கடுமையாக உழைத்தாயா?” என்றான் கர்ணன். “அங்கு நான் எந்த திசையில் திரும்பினாலும் உணவாக இருக்கிறது. நான் என்ன செய்ய?” என்றாள் துச்சளை. “அத்துடன் குழந்தை பிறந்ததும் எனக்கு பேற்றுணவு அளிக்கத்தொடங்கினார்கள். முழுக்கமுழுக்க ஊனும் மீனும். பெருக்காமல் என்ன செய்வேன்?” சிரித்துக்கொண்டு “சிந்துநாட்டின் பல நுழைவாயில்களில் என்னால் கடந்து செல்லவே முடியவில்லை” என்றாள்.
“நன்று. பெண்டிர் மணமான ஆண்டுகளில் இப்படி ஆவதில் இறைவனின் ஆணை ஒன்று உள்ளது” என்று தொலைவை நோக்கியபடி கர்ணன் சொன்னான். அவன் குரலிலேயே கேலியை உணர்ந்து “என்ன?” என்றாள் துச்சளை. “உன்னை முன்பு விரும்பியிருந்த அரசர்கள் அத்தனைபேரும் ஆறுதல் கொள்ளவேண்டுமல்லவா?” என்றான். அவள் ஓங்கி அவன் தோளில் அறைந்து “கேலி செய்கிறீர்களா?” என்றாள். கர்ணன் சிரித்து “பாவம் அந்த பூரிசிரவஸ். அவன் பால்ஹிகநாட்டிலேயே ஏதோ குலக்குழுத்தலைவரின் மகளை மணந்திருக்கிறான்” என்றான். அவள் கண்கள் மாறின. “கேலி வேண்டாம் மூத்தவரே” என்றாள். கர்ணன் “சரி” என்றான்.
கர்ணன் தேரோட்டியிடம் “செல்க!” என்றான். தேர் அரசநெடும்பாதையில் செல்லத் தொடங்கியது. ஆனால் தெருவெங்கும் சிதறிக்கிடந்த பந்தல் மூங்கில்களும், சிதைந்த வாழைத்தண்டுகளும், சகடங்களில் சுற்றிச்சுழன்ற பட்டுத்துணிகளும், சரிந்துநின்ற பாவட்டாக்களும், சாலைக்குக் குறுக்கே சரிந்துசென்ற தோரணக்கயிறுகளுமாக அவர்களின் பயணம் நின்றும் தயங்கியும் ஒதுங்கியும்தான் அமைந்தது. இருபக்கமும் கூடிநின்ற அஸ்தினபுரியின் மக்கள் அனைத்து முறைமைகளையும் மறந்து களிவெறி கொண்டு கூச்சலிட்டனர். மலர் மாலைகளையும் பட்டாடைகளையும் தூக்கி அவர்கள் மேல் வீசினர். அரிமலர் பொழிவதற்கு நிகராகவே மஞ்சள்பொடியும் செந்தூரக்கலவையும் செம்பஞ்சுக்குழம்பும் சந்தனக்காடியும் அவர்கள் மேல் கொட்டியது.
“வெறியில் வீட்டிலுள்ள கோலமாவையும் அப்பக்காடியையும் எல்லாம் அள்ளி வீசிவிடுவார்கள் போலிருக்கிறது” என்றான் கர்ணன். துளிகளும் தூசும் பறந்து காற்றே வண்ணங்கள் கலந்த திரைப்படலம் போலாயிற்று. சற்று நேரத்தில் இருவரும் உடலெங்கும் வண்ணங்கள் நிறைந்து ஓவியங்கள் என்றாயினர். துச்சளை வாய்பொத்தி நகைத்தபடி “இவர்கள் இந்திரவிழவு என்று தவறாக எண்ணிவிட்டனர்” என்றாள். “சம்பாபுரியில் சூரியவிழவு இப்படித்தான் இருக்கும்” என்றான் கர்ணன்.
துச்சளை “அரசியர் கருவுற்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்” என்று அவனைப் பாராமல் சொன்னாள். “ஆம்” என்றான் கர்ணன். “இளைய அரசியின் செய்தி அரசருக்கு வந்தது” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “அதை என்னிடம் காட்டினார். அதில் அவருக்கு ஒரு பெருமை. அதை என்னிடம் காட்டுவதில் மேலும் பெருமை” என்றாள். “நீ என்ன சொன்னாய்?” என்றான். துச்சளை “பெண்களின் நுண்ணுணர்வுக்கு அளவே இல்லை. அவற்றை அவர்கள் பயன்படுத்தும் அறியாமைக்கும் அளவே இல்லை என்றேன்” என்றாள்.
கர்ணன் நகைத்தபடி “அரிய சொல். இதை நான் சூதனிடம் சொல்லி பாடலில் சேர்த்து காலத்தால் அழியாமல் ஆக்க வேண்டும்” என்றான். சிறிய வெண்பற்கள் தெரிய நகைத்தபோது துச்சளையின் முகம் மிக அழகானதாக ஆயிற்று. “இளையவளே, உடல் பெருத்தபோது நீ மேலும் அழகிய புன்னகை கொண்டு விட்டாய்” என்றான். “புன்னகை மட்டும்தான் அழகாக இருக்கிறது என்கிறீர்கள்” என்றாள். “இல்லையடி, திடீரென்று நீ ஒரு பெரிய குழந்தையென ஆகிவிட்டது போலிருக்கிறது. சட்டென்று மழலைச்சொல் எடுக்கத் தொடங்கிவிடுவாயோ என்று தோன்றுகிறது” என்றான் கர்ணன். அவள் அவன் கையைப்பற்றி தோளில் தலைசாய்த்து “மூத்தவரே, தங்களிடம் மழலை பேசவேண்டுமென்று எவ்வளவு விழைகிறேன் தெரியுமா?” என்றாள்.
கர்ணன் அவள் நெற்றியின் கூந்தலைப் பார்த்து “உன் கூந்தல் என்ன இவ்வளவு மேலேறிவிட்டது?” என்றான். “கருவுற்று குழந்தை ஈன்றால் நெற்றி முடி உதிரும். இது கூடத்தெரியாதா?” என்றாள். “அப்படியா?” என்றான் கர்ணன். “உண்மையிலேயே தெரியாது” என்றான். “மூத்தவள் கருவுற்றிருக்கிறாள் அல்லவா? சின்னாட்களில் தெரியும்” என்றாள். கர்ணன் “பார்க்கிறேன்” என்றான். “தங்கள் கண்களில் உவகை இல்லை மூத்தவரே” என்றாள். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “என்ன நடக்கிறது என்று என்னால் எளிதில் அறியமுடியும் மூத்தவரே. நான் என்ன சொல்ல? தங்கள் ஒளிமிக்க பீடத்திலிருந்து இங்குள்ள எளிய மானுடரை எப்போதும் பொறுத்தருளிக் கொண்டே இருக்கவேண்டும்” என்றாள் துச்சளை.
கர்ணன் அவளை திரும்பி நோக்காமல் அவன்முன் வாழ்த்தொலிகளுடன் கொந்தளித்த மக்களின் பலநூறு கைகளின் அலையடிப்பையும் விழியொளிகளின் மின்மினிக் கூட்டத்தையும் பற்களின் நுரைக்கீற்றுகளையும் பார்த்தபடி சென்றான். அதன்பின் சற்றுநேரம் துச்சளை ஒன்றும் சொல்லவில்லை. அரண்மனையின் மையக்கோட்டை தெரியத் தொடங்கியதும் “மூத்தவரே, தாங்கள் இளைய யாதவரை எப்போதேனும் பார்த்தீர்களா?” என்றாள். “இல்லை” என்றான் கர்ணன். “ஆம், அதை நானும் உய்த்தேன். ஆனால் அவ்வண்ணம் எண்ணுகையில் என் உள்ளம்கொள்ளும் துயர் பெரிது” என்றாள். “ஏன்?” என்றான் கர்ணன். “என் உள்ளம் நிறைந்துநிற்கும் இருவர் நீங்களும் அவரும். ஏன் ஒருமுறைகூட உங்களுக்குள் ஒரு நல்ல சந்திப்பு அமையவில்லை? என்றேனும் உளம் பரிமாறியிருக்கிறீர்களா?” என்றாள்.
“அது நிகழாது இளையவளே” என்றான் கர்ணன். “ஏன்?” என்றாள். ஒன்றும் சொல்லாமல் நின்றான். அவள் அவன் கையைப்பிடித்து சற்றே உலுக்கி “சொல்லுங்கள்” என்றாள். கர்ணன் திரும்பி அவள் கண்களுக்குள் நோக்கி “எங்களுக்கு நடுவே ஒருபோதும் சொல்லென ஆக முடியாத ஒன்றுள்ளது குழந்தை” என்றான். அவள் கண்கள் சற்றே மாற “என்ன?” என்றாள். கர்ணன் புன்னகைத்து “சொல்லென மாறமுடியாதது என்றேனே” என்றான். அவள் மெல்ல சிணுங்கும் குரலில் “அப்படியென்றால் எனக்கு உணர்த்துங்கள்” என்றாள். “என் முன் மழலை பேசுவதாக சொன்னாய். இப்போது அரசுசூழ்தலை பேசத் தொடங்கியிருக்கிறாய்” என்றான்.
அவள் சிலகணங்கள் அவனை நோக்கியபின் சட்டென்று நகைத்து “சொல்ல விரும்பவில்லை அல்லவா? சரி நான் கேட்கவும் போவதில்லை. ஆனால் என்றேனும் நீங்கள் இருவரும் தோள்தழுவி நிற்கும் காட்சியை நான் பார்க்கவேண்டும். பெண்ணென அன்று என் உள்ளம் நிறையும்” என்றாள். கர்ணன் “நன்று! அது நிகழ்வதாக!” என்றான்.
துச்சளை “அத்துடன் இன்னொன்றையும் நான் சொல்லவேண்டும். அதற்கென்றே இத்தேரில் உங்களை ஏற்றினேன் மூத்தவரே” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “தாங்கள் சிந்துநாட்டு அரசரைப்பற்றி சொன்னீர்கள். இப்போது அரசவையில் அவரை மீண்டும் சந்திக்கவும் போகிறீர்கள். ஒருபோதும் அவர் உங்களை அவமதிக்கப் போவதில்லை. ஏனெனில் என் உள்ளம் அவருக்குத் தெரியும். என் ஆற்றலும் அவருக்கு நன்கு தெரியும். அதை மீறும் அகத்திறன் கொண்டவரல்ல அவர். எனவே அந்த ஐயம் உங்களுக்கு வேண்டியதில்லை. ஆனால் தாங்கள் நினைப்பதுபோன்றவர் அல்ல அவர்” என்றாள்.
“அதை ஒரு துணைவியாக நீ சொல்லியாக வேண்டுமல்லவா?” என்றான் கர்ணன். “இல்லை மூத்தவரே. துணைவியாக மட்டும் சொல்லவில்லை” என்றபின் அவள் அவன் கையைப்பற்றி தன் தோளில் வைத்து “தங்கள் தங்கையாக நின்று இதை சொல்கிறேன். அவர் மிக எளியவர். பாரதவர்ஷத்தின் பிற ஷத்ரிய மன்னர்களிடமிருந்து பலவகையிலும் மேம்பட்டவரே. போர்த்திறனில், கல்வியில், அரசுசூழ்தலில், படைகொண்டு செல்லுதலில். ஆனால் அவர் பிறந்த இக்காலகட்டம் எங்கும் அவரை இரண்டாம் நிலையிலேயே வைத்துள்ளது. வென்று எழுந்து உங்களுக்கும் பார்த்தருக்கும் பீமனுக்கும் நிகர் நிற்க அவரால் இயலாது. ஒரு கணமேனும் துவாரகையின் தலைவனிடம் தானுமொரு ஆணென நிற்க அவருக்கு வாய்க்காது” என்றாள்.
“ஆனால் அரசர் என ஆண்மகன் என அவர் அப்படி விழைவதில் என்ன பிழை உள்ளது? அதற்கென அவரை நீங்கள் பொறுத்தருளவே வேண்டும். நீங்கள் அறிந்திருப்பீர்கள். மூத்தவரோ இளையவரோ இன்றி ஒற்றை மைந்தனாக சிந்துநாட்டரசுக்குப் பிறந்தவர் அவர். சிந்துநாடோ சூழ்ந்திருக்கும் நாடுகளால் அச்சுறுத்தப்பட்டு சிறுத்துக் கிடந்தது. மணிமுடி சூடி படைதிரட்டி தன் எல்லைகளை காத்தார். கருவூலத்தை நிறைத்தார். மேலும் என அவர் விழையும்போது எந்த ஷத்ரிய அரசரையும் போல பாரதவர்ஷத்தின் தலைவர் என்ற சொல்லே அவரை கிளரவைக்கிறது. அவரைச் சூழ்ந்து அதைச்சொல்ல ஒரு கூட்டமும் இருக்கிறது.”
கர்ணன் “நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?” என்றான். “இப்புவியில் அத்தனை மானுடரிடமும் நீங்கள் செய்வதைத்தான். அவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்கள் இளையோன் என எண்ணி பொறுத்தருளுங்கள்” என்றாள். “இதை நீ என்னிடம் சொல்லவேண்டுமா இளையவளே?” என்றான். “இல்லை. நீங்கள் அவ்வண்ணமே இருப்பீர்கள் என்று அறியாதவளா நான்? அதை நான் சொல்லி முடிக்கையில் எனக்கு எழும் நிறைவொன்றே போதும். அதற்காகத்தான் சொன்னேன்” என்றாள்.
அரண்மனை உள்கோட்டையின் முகப்பில் அவர்களை வரவேற்று அழைத்துச்செல்ல அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றிருந்தனர். படைத்தலைவர் உக்ரசேனர் தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு சிந்துநாட்டரசியை வரவேற்கிறோம். இவ்வரண்மனை தங்கள் பாதங்கள் பட பெருமை கொள்கிறது” என்றார். கர்ணன் “தாழ்வில்லை. இங்கு அனைத்தையும் ஓரளவுக்கு சீரமைத்துவிட்டார்கள்” என்றான். உக்ரசேனர் “இவ்வழியே” என்றார். பின்னால் விதுரரின் தேரும் தொடர்ந்து கௌரவர்களின் தேர்களும் வந்து நின்றன.
தங்களுக்குப் பின்னால் அத்தனை மாளிகைகளிலும் அஸ்தினபுரியின் முகங்கள் செறிந்து வாழ்த்தொலி கூவிக்கொண்டிருப்பதை கர்ணன் கேட்டான். முதுபெண்கள் முன்நிரையில் நிறைந்திருந்தனர். “இளையவளே, பார்! அத்தனை முகங்களிலும் உன்னை எதிர்நோக்கும் அன்னை தெரிகிறாள்” என்றான். துச்சளை திரும்பி அண்ணாந்து ஒவ்வொரு முகத்தையாக பார்த்தாள். அறியாத ஒரு கணத்தில் நெஞ்சு விம்மி இருகைகளை கூப்பியபடி “ஆம். மூத்தவரே, மீண்டு வந்துவிட்டேன் என்று இப்போதுதான் உணர்கிறேன்” என்றாள்.
அரண்மனை முகப்பில் மங்கலத்தாலமேந்திய அணிச்சேடியர் காத்து நின்றிருந்தனர். அவர்களைச் சூழ்ந்து இசைச்சூதர்கள் நின்றிருந்தனர். காவலர்தலைவர் கிருதர் ஓடிவந்து அவர்களை வணங்கி “அரண்மனைக்கு நல்வரவு இளவரசி” என்றார். “கிருதரே, நலமாக இருக்கிறீர்களா?” என்றாள். “ஆம், இளவரசி. நான் இப்போது கோட்டைக்காவலனாக உயர்ந்திருக்கிறேன்” என்றார். “சம்விரதை எப்படி இருக்கிறாள்?” அவர் முகம் மலர்ந்து “நான்காவது குழந்தை பிறந்துள்ளது இளவரசி… ஜயவிரதன் என்று பெயரிட்டிருக்கிறோம்” என்றார். “நன்று. குழந்தையை கொண்டுவரச்சொல்லுங்கள்…” என்றபடி அவள் முன்னால் சென்றாள்.
கிருதர் வழிநடத்த முற்றத்தை குறுக்காகக் கடந்து துச்சளையும் கர்ணனும், துச்சலனும் துர்முகனும் இருபக்கமும் வர நடந்தனர். பிற கௌரவர் பின்னால் வந்தனர். முன்னால் நின்றிருந்த மூத்தசூதர் கைகாட்ட மங்கல இசை மயிற்பீலிப்பொதிகள் அவிழ்ந்து சொரிவதுபோல அவர்களை மூடிச்சூழ்ந்தது. உலையில் உருக்கிய பொற்கம்பி வழிவதுபோல அணியும்துணியும் ஒளிவிட எழிற்சேடியர் சீராக நடந்துவந்து மங்கலத்தாலங்களை துச்சளை முன் காட்டி மும்முறை உழிந்து பின்வாங்கினர். அவர்கள் அனைவர் விழிகளிலும் துச்சளைக்கான சிரிப்பு இருந்தது. துச்சளை அவர்களை ஒவ்வொருத்தியாக அடையாளம் கண்டு நகைத்தாள்.
நறுமணத்தூமம் காட்ட வந்த ஏழுசேடியரில் ஒருத்தி மெல்ல உதட்டசைத்து துச்சளையிடம் ஏதோ சொல்ல அவள் “போடி” என்றாள். “என்ன?” என்றான் கர்ணன். “பருத்துவிட்டேன் என்கிறாள். அவள்கூடத்தான் பருத்திருக்கிறாள்” என்றாள் துச்சளை. அவள் மீண்டும் உதட்டைக்குவித்து ஏதோ சொல்லிவிட்டுச் சென்றாள். “போடி…” என்று துச்சளை மீண்டும் சீறினாள். “என்ன?” என்றான் கர்ணன். “உங்களுக்கு புரியாது… இது பெண்களின் பேச்சு” என்றாள்.