விவாதங்களைப் பதிவுசெய்தல்

1

 

அன்புள்ள ஜெ

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சொல்புதிது குழுமத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது வந்தனங்கள்.

தங்கள் தளத்தை இயன்ற அளவு நேரம் கிட்டும் பொழுதெல்லாம் வாசித்துவருகிறேன் மேற்படிப்பிற்கு இடையில். கம்பனும் குழந்தையும் பற்றிய பதிவு மிக முக்கியமானது. அதனை வாசித்தேன். கம்பராமாயணம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. எனது 80 வயது பாட்டியும் அதனை படித்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருது விழாவில் நான் அடைந்த வாசிப்பு திறப்புகள், நண்பர்கள் அதிகம். இவ்வாண்டு விருது நடந்த பொழுதும் கடிதங்களை பார்க்கும் பொழுதும் மனம் விஷ்ணுபுரம் விருது விழா சந்திப்புகளுக்கு சென்று வருகிறது.

எனக்கு ஒரு கோரிக்கை. இதற்கு முன் ஒரு 1873 பேர் ஆவது உங்களிடம் மடல் எழுதி கோரியிருப்பார்கள். அதே தான். ஏன் இவ்விழா சந்திப்புகளின் ஒலி வடிவங்களையாவது இத்தளத்தில் ஏற்றக்கூடாது? இதற்கு நீங்கள் முன்னர் ஒப்புக்கொள்ளும் நியாயமான பதில்களை கூறியுள்ளீர்கள் 1) பதிவு செய்யப்பட்டால் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டே வரும். அது இயல்பான பேச்சு சுதந்திரத்தை பறித்துவிடும் 2) பதிவு செய்யப்படும் கருத்துக்களை தணிக்கை செய்யும் பொறுப்பும் கூடி விடும். இரண்டும் உண்மை.

இருப்பினும், இன்றைய காலங்களில் பல மென்பொருட்கள் (mute செய்ய) இதற்காக உள்ளன. ஒரு முறை இதனை சோதனையாக (வெண்முரசு விவாதங்கள், ஊட்டி விவாதங்கள், விஷ்ணுபுரம் விருது விழாக்கள்)செய்து பார்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. தங்களின் சமீபத்திய கீதை மற்றும் சங்கரர் உரைகளின் தரவிறக்கங்களும் கடிதங்களும் சான்று என நினைக்கிறேன். இது போன்ற தொழில்நுட்பப் பாலங்கள் அண்டை மாநிலங்களிலும் நாடுகளிலும் இருக்கும் ஆயிரக்கணக்கானோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

கோரிக்கை கருத்தில்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

 

அன்புடன்

ராஜேஷ்

 

அன்புள்ள ராஜேஷ் பாலசுப்ரமணியம்

தெளிவான பதில் இதுதான். பயனுள்ளதாக அமையாது))

விவாதம் என்பது விவாதிக்கப்படுகையிலேயே பொருள் கொண்டது. கடல் அலையை புகைப்படம் எடுத்தால் அது அலை அல்ல

விவாதம் எதற்காக என்றால் கருத்துக்களை தெரிந்துகொள்வதற்காக அல்ல. உடன் விவாதிப்பதற்காக. மௌனமாகவேனும்

விவாதங்களைப் பதிவுசெய்து கேட்பதனால் எந்தப்பயனும் இல்லை என்பதே என் எண்ணம். அதன் ஒலித்தரத்தை பேணுவதும் சரி, அதை சிக்கலில்லாமல் வெட்டித்தொகுப்பதும்சரி பெரிய வேலை

அந்நேரத்தில் அதைவிடத் தீவிரமாக பலவற்றை செய்யமுடியும் என நினைக்கிறேன். நீங்கள் மிக இளையவராகத் தெரிகிறீர்கள். விவாதங்களில் நேரில் கலந்துகொள்ளுங்கள்.

விவாதிக்க எழும்போதுதான் நாம் எந்த அளவுக்கு தெளிவில்லாமல் சிந்திக்கிறோம், எந்த அளவுக்குக் கருத்துக்களைப் புரிந்து தொகுத்துக்கொள்ளாமலிருக்கிறோம் என்று தெரியும்

ஆனால் கொஞ்சம் விவாதிக்க ஆரம்பித்தால் நாம் எந்த அளவுக்கு ஆழ்மனதில் சிந்தித்திருக்கிறோம், நம் வாய்ப்புகள் என்ன எல்லாம் தெரிய ஆரம்பிக்கும்

ஜெ

 

முந்தைய கட்டுரைவெள்ளையானை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை