பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 5
அஸ்தினபுரியின் கோட்டை முகப்பின் காவல் மாடங்களில் பறந்த கொடிகள் தொலைவில் தெரிந்ததுமே உளக்கிளர்ச்சியுடன் தேர்த்தட்டில் எழுந்த கர்ணன் இரு கைகளையும் பறக்க விழையும் சிறகுகள் போல் விரித்தான். தேர்விரைவில் அவனது ஆடைகளும் குழலும் எழுந்து பறக்க அவன் பருந்து போல அக்கோட்டை நோக்கி மிதந்து செல்வதாக தோன்றியது. தேரோட்டி திரும்பி “இன்னும் தொலைவிருக்கிறது அரசே” என்றான். “ஆம், விரைந்து செல்” என்றான் கர்ணன்.
அவனுக்குப் பின்னால் பிறிதொரு தேரில் விரைந்து வந்த சுஜாதன் உரத்த குரலில் “அஸ்தினபுரி! அஸ்தினபுரி!” என்று கூவினான். கர்ணன் திரும்பி சிரித்தபடி “முதன் முறையாக பார்க்கிறாய் போல் உள்ளதே?” என்றான். அந்தப் பகடியை புரிந்து கொள்ளாமல் அவன் கை நீட்டி “ஆம் மூத்தவரே, முதன்முறையாக இந்நகரைவிட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்குச் சென்று திரும்பி வருகிறேன். பிறிது எந்த ஊருக்குள் நுழைவதைவிடவும் உள்ளம் கிளர்கிறது. என் நகரம் !என் மூதாதையர் நகரம்!” என்றான்.
கர்ணன் சிரித்தபடி “மறுமுறையும் இந்நகரைவிட்டு நீ விலகப் போவதில்லையா?” என்றான். “இவ்வாறு திரும்பி வரும் உவகைக்காகவே இனி ஒவ்வொரு மாதமும் வெளியேறிச் செல்லலாம் என்று தோன்றுகிறது” என்றான் சுஜாதன். “அஸ்தினபுரியின் கோட்டை ஓர் அன்னைப்பன்றி போலிருக்கிறது. நாமெல்லாம் அதன் பிள்ளைகள்…” என்றான். “நல்ல ஒப்புமை. ஆனால் முன்னரே சூதர்கள் பாடிவிட்டார்கள்” என்றான். “பாடிவிட்டார்களா? நான் சொல்லப்போவதை முன்னரே அறிந்த ஞானிகள் அவர்கள்.”
இருபுறமும் குறுங்கிளை படர்மரங்கள் நிரைவகுத்து பின்னால் சென்றன. சகடங்கள் பட்டுத் தெறித்த சிறுகூழாங்கற்கள் பின்னால் வந்த தேரின் சகடங்களிலும் குடங்களிலும் பட்டு ஓசையெழுப்பின. குதிரை க்குளம்படிகளின் தாளம் இருபுறமும் கிளைகோத்துச் செறிந்திருந்த குறுங்காட்டின் மரங்களுக்குள் இருந்த இருண்ட ஆழத்தில் எதிரொலித்து வந்து சூழ்ந்தது. புலரியின் குளிர்க்காற்று மெல்லிய நீர்த்துளிகளுடன் வந்து உடலை சிலிர்க்க வைத்தது. அதில் இரவெல்லாம் இலைகள் மூச்சுவிட்டமையின் நீராவி இருந்தது.
அஸ்தினபுரியின் கோட்டைவிளிம்புக்கு அப்பால் வானத்தில் உள்ளொளி பரவத் தொடங்கியது. பறவைகள் முகில்கள் மீது ஏறி துழாவின. குறுங்காடுகளுக்குள் துயில் எழுந்த பறவைகள் தேனடையிலிருந்து தேனீக்கள் போல் எழுந்து வானில் சேர்ந்தோசையிட்டு சுழன்று இறங்கி மேலே எழுந்தமைந்தன. தொலைவில் எங்கோ இரு யானைகள் மாறி மாறி பிளிறிக் கொண்டன. சாலையை குறுநரி ஒன்று கடக்க முயன்று ஓசைகளைக் கேட்டு உடல்குறுக்கி பின்வாங்கியது. அஸ்தினபுரியின் கோட்டை மிதந்து அணுகி வந்தது.
புலரியில் கோட்டை முகவாயில் திறந்ததும் உள்ளே செல்வதற்காக நின்றிருந்த பொதிகலங்களின் நீண்ட நிரை சற்று முன்புதான் தலைபுகத் தொடங்கியிருந்தது. வால்நுனி நெளிந்தது. வண்டிக்காரர்கள் சவுக்கைச் சுழற்ற காளைகள் தலையசைத்தன. வண்டிகள் மணி குலுங்க குடங்களில் சகடங்கள் அறைபட உயிர்கொண்டு முனகி இழுபட்டு குளம்புகள் மிதிபடும் ஓசை சூழ கோட்டையின் திறந்த வாய்க்குள் நுழைந்தன. அத்திரிகள் பெருமூச்சுவிட்டு பிடரி சிலிர்த்தன. சாலையில் புதுச்சாணியும் சிறுநீரும் கலந்த தழைப்புமணம் நிறைந்திருந்தது.
கோட்டைவாயிலுக்குமேல் இருபுறமும் எழுந்த காவல்மாடங்களில் ஒன்றின் உச்சியில் இருந்த தொலைநோக்குக் காவலன் கர்ணனின் கொடியைக் கண்டு தன் கையிலிருந்த கொம்பை முழக்க கோட்டைக் காவல் முகடுகள் அனைத்தும் உயிர்கொண்டன. வலப்பக்கம் இருந்த பெருமுரசம் விம்மத்தொடங்கியது. கோட்டையின் கொடிமரங்களில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடிக்கு இருபக்கமும் முன்னரே இருந்த திருதராஷ்டிரரின் யானைக்கொடிக்கும் துரியோதனனின் படவரவுக் கொடிக்கும் துச்சாதனனின் காகக்கொடிக்கும் அருகே கர்ணனின் யானைச்சங்கிலிக் கொடி படபடத்து மேலேறியது.
கூடிநின்றவர்கள் அனைவரும் அதைக் கண்டதுமே கர்ணன் வருவதை உணர்ந்துகொள்ள எட்டு நிரைகளாக நின்ற பொதிவண்டிகளும் அத்திரிகளும் பால்குடங்கள் ஏந்திய ஆயர்சிறுசாகாடுகளும் காவலர் புரவிநிரைகளும் பரபரப்பு கொண்டன. கர்ணன் அணுகுவதற்குள்ளாகவே கோட்டைமுகப்பெங்கும் வாழ்த்தொலிகள் பெருகிச் சூழ்ந்தன. “வெய்யோன் திருமகன் வாழ்க! வறனுறல் அறியா வார்தடக்கை வாழ்க! செந்திரு பொலிந்த செய்யோன் வாழ்க! மாமுனிவர் தொழும் மணிமுடியன் வாழ்க! அவன் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் வாழ்க!” என்று குரல்கள் எழுந்து அலைந்த காற்றில் பட்டுத்திரை என நெளிந்தன.
இருபுறமும் சகடங்கள் விலகி வழிவிட நடுவே கர்ணனின் தேர் நுழைந்ததும் அவ்வாழ்த்தோசை பெருகி கோட்டைகளில் அறைபட்டு திரும்பி வந்தது. “கோட்டையே வாழ்த்துகிறது போலுள்ளது மூத்தவரே” என்று சுஜாதன் கூவினான். தேர்த்தட்டில் நிற்க அவனால் முடியவில்லை. இருகைகளையும் விரித்து குதித்து “வாழ்க! அங்க நாட்டரசர் வாழ்க! கௌரவமூத்தோன் வாழ்க!” என்று கூவினான். கர்ணன் திரும்பி “மூடா, நீ இளவரசன். நீ அவ்வண்ணம் வாழ்த்துரைக்கலாகாது” என்றான்.
“வாழ்த்துரைப்பேன். நான் இளவரசன் அல்ல, அஸ்தினபுரியின் குடிகளில் ஒருவன்” என்று கூவிய சுஜாதன் மேலும் பேரொலியுடன் “மூத்தவர் வாழ்க! அங்க நாட்டரசர் வாழ்க! கர்ணன் வாழ்க!” என்றான். கர்ணன் சலிப்புடன் தலையசைத்தபடி திரும்பிக் கொண்டான். சுஜாதன் சாலையோரமாக நின்றவர்களை நோக்கி கைவீசி “அங்கம் ஆளும் அரசர் வாழ்க! கலிங்கம்கொண்ட காவலன் வாழ்க!” என்று கூவி மேலும் கூவும்படி அவர்களிடம் கைகாட்டி துள்ளிக்குதித்தான்.
கோட்டையிலிருந்து முதன்மைக் காவலர் பத்ரசேனர் ஏழு படைவீரர்களுடன் வரவேற்கும் பொருட்டு வெண்புரவிகளில் ஏறி அவனை நோக்கி வந்தார். அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடியேந்தி முதலில் வந்த வீரன் கர்ணனின் தேரை அணுகியதும் நின்று, கொடியை மண்நோக்கித் தாழ்த்தி தலைவணங்கி உரத்த குரலில் “அங்கநாட்டரசை அஸ்தினபுரி வணங்கி வரவேற்கிறது!” என்றான். கர்ணன் தலைவணங்க பின்னால் வந்த இரு வீரர்களும் கொம்புகளை முழக்கி அவனுக்கு வரவேற்பளித்தனர். பத்ரசேனர் “தங்கள் வருகை நகரை மகிழ்விக்கிறது. தங்களை இந்நகரின் கொடிகள் வாழ்த்துகின்றன” என்றார்.
இருபுறமும் அஸ்தினபுரியின் வீரர்கள் புரவிகளில் பெருநடையிட்டு வர கர்ணனின் தேர் அஸ்தினபுரியின் கோட்டைக்குள் நுழைந்தது. கோட்டை வீரர் அனைவரும் இருபுறமும் செறிந்து சிறு உப்பரிகைகளிலும் காவல் மாடங்களிலும் நெரித்து முண்டியடித்தனர். கைவீசி துள்ளி உரத்த குரலில் அவனை வாழ்த்தி ஆர்ப்பரித்தனர். மேலாடைகளை வீசியும் படைக்கலங்களை தூக்கி எறிந்து பற்றியும் களிக் குதித்தாடினர்.
அவன் நகருக்குள் நுழைந்ததும் பெரு முரசின் ஒலியாலேயே அவன் வருகையை அறிந்துகொண்டிருந்த நகர் மக்கள் சாலையின் இருபுறங்களிலும் கூடி அவனை வாழ்த்தி கூவினர். “கதிர்முகம் கொண்ட காவலன் வாழ்க! வெய்யோன் மைந்தன் வாழ்க! வெற்றித்திரு அமைந்த வில்லவன் வாழ்க! கொள்வதறியா கொடையன் வாழ்க! வெல்வோர் இல்லா வெம்மையன் வாழ்க!” வாழ்த்தொலிகளும் இருபுறமிருந்து அள்ளி வீசப்பட்ட மலர்களும் செம்மஞ்சள் அரிசியும் கலந்து உருவான மங்கலத்திரை ஒன்றை உடலால் கிழித்தபடி கர்ணன் முன் சென்றான்.
சுஜாதன் தேரை அருகே செலுத்தி திரும்பி கைவீசி பற்கள் ஒளிர கூச்சலிட்டான். “இந்நகரில் இத்தனை பெரிய வரவேற்பு எவருக்கும் அளிக்கப்படுவதில்லை மூத்தவரே. அரசர் கூட அடுத்தபடியாகவே மகிழ்ந்து ஏற்கப்படுகிறார்.” கர்ணன் “அது என் நல்லூழ் இளவலே” என்றான். இருபுறமும் நோக்கி மூத்தவரையும் முதுபெண்டிரையும் தலைவணங்கியும் இளையோரை நோக்கி புன்னகைத்து கைவீசியும் தேரில் சென்றான். எதிரே உப்பரிகை ஒன்றில் செறிந்து நின்ற முதியவர்களில் ஒருத்தி கைசுட்டி “பொற்கவசம்! பொலிமணிக் குண்டலம்!” என்றாள்.
அனைத்து விழிகளிலும் கண்ணீரும் பேருவகையும் நிறைந்திருந்தன. “மார்பணிக்கவசம்! மணியொளிக் குண்டலங்கள்! மண்ணில் இறங்கிய கதிரவன் மைந்தன்! தெய்வங்களே, விரிவான் போதாதென்று விழிகொண்டு மானுடனாக வந்தீர்கள்!” ஒரு முதியவர் “வீதியில் குலதெய்வமெழுந்தது போல்!” என்று கைவீசி கூவினார். அத்தனைபேரும் களியுவகையில் தெய்வமெழுந்தவர்கள் போலிருந்தனர். “வெய்யோனொளி அவன் மேனியின் விரிசோதியில் மறையக் கண்டேன். மையோ மரகதமோ மழைமுகிலோ அய்யோ இவன் உடல் என நின்று கலுழ்ந்தேன்.”
சாலை முகப்பில் நின்ற இளம்சூதன் மேலும் பாடினான் “அருணன் ஓட்டும் தேரில் நாளவன் எழுகின்றான்! இதோ ஒரு மானுடன் உடலொளியால் ஒளி கொள்கின்றது காலை. பொலிவுற்றன நமது பொல்லென்ற தெருக்கள்” அவனும் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தான்.. “நாட்டோரே நலத்தோரே கேளுங்கள் இதை! அவன் நகர்நுழைந்த நாள் கருக்கிருட்டுக்கு முன்னரே எழுந்தது கதிர். கண்ணிலாத இளம்சூதன் அவன் கவசகுண்டலங்களை கண்டான். அவன் காலடிபட்ட இடங்களில் மலர்கள் விரிந்தன. அவன் நிழல்கொண்டு சுனைகள் ஒளிகொண்டன.”
அரண்மனையின் உள்கோட்டை அருகே தேர்கள் நின்றபோது கர்ணன் இயல்பாக திரும்பிப் பார்க்க சுஜாதன் அழுதுகொண்டிருந்தான். “என்ன? இளையோனே, என்ன ஆயிற்று?” என்றான் கர்ணன். “மூத்தவரே, நாங்கள் எளியவர்கள். எங்கள் தந்தையைப் போலவே எங்கோ ஓர் விழியின்மை கொண்டவர்கள். இத்தனை எளியமாந்தர் எல்லாம் நோக்கும் அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் நாங்கள் காணக்கூடவில்லை. எங்கள் விழியின்மையால் மிகையென ஏதும் செய்து தங்கள் மாண்புக்கு பிழை இயற்றுவோமென்றால் எங்களை பொறுத்தருள்க!” என்றான்.
“மூடா” என்று கர்ணன் கையோங்கினான். “சூதர் பாடல்களால் ஆனது இப்பொதுமக்களின் உள்ளம். மக்களின் மிகையுணர்ச்சிப் பெருக்கு அத்தனை அரசர்களாலும் உருவாக்கி நிலை நிறுத்தப்படுவது. அரியணை அதன் மேல்தான் அமைந்துள்ளது. நீ அரசன். அவர்களில் ஒருவராக நின்று அவ்வுணர்ச்சிகளை நம்பவேண்டியவன் அல்ல.” சுஜாதன் விசும்பினான். “நீ என் இளவல். நாளை உன்னைப் பற்றியும் இதைப் போலவே புகழ்மொழிகள் எடுப்பார்கள். அதை நீயே நம்பத் தொடங்கினால் அங்கே உன் அழிவு தொடங்குகிறது” என்றான் கர்ணன். “மன்னனை மக்கள் தெய்வமென எண்ணவேண்டும். அவனோ தன்னை மானுடன் என்றே கொள்ளவேண்டும் என்பது நூல்நெறி.”
“இல்லை மூத்தவரே, அத்தனை விழிகளையும் மாறி மாறி நோக்கிக் கொண்டிருந்தேன். அவ்விழிகளில் ஒன்றை சில கணங்கள் பெற்றால் அந்தப் பொற்கவசத்தையும் குண்டலத்தையும் நான் பார்த்திருப்பேன் என்று எண்ணினேன். சின்னஞ்சிறுவனாக உங்கள் கால்களைப் பற்றி என்னை உங்கள் தோள்களில் தூக்க வேண்டுமென்று எண்ணியதெல்லாம் எனக்கு நினைவு உள்ளது. அன்று பெற்ற அணுக்கத்தால்தான் உங்களை அறியாதிருக்கிறேனா?” என்றான் சுஜாதன். கர்ணன் கனிந்து “மூடா, உன்னைவிட என்னை அறிந்தவர் யாருளார்?” என்றான். சுஜாதன் அழுகை நிறைந்த உதடுகளை இறுக்கியபடி பார்வையை திருப்பிக் கொண்டான்.
கோட்டை முகப்பில் நின்றிருந்த சிற்றமைச்சர் ஸ்ரீகரர் இரு காவலர் தலைவர்கள் துணைவர வந்து அவனுக்கு தலைவணங்கி “வருக அங்க நாட்டரசே! தங்களுக்கு முழுமைப் படையணி அமைத்து வரவேற்பளிக்க வேண்டுமென்று அரசரின் ஆணை” என்றார். கர்ணன் “என்ன இதெல்லாம்?” என்றான். “இங்கிருந்து செல்கையில் தாங்கள் எங்கள் குடிமூத்தவர். திரும்பி வருகையில் அங்க நாட்டின் அரசர்” என்றார் அமைச்சர். கர்ணன் நகைத்து “இங்கிருந்து செல்லும்போது நீங்கள் அமைச்சர் கனகரின் மைந்தர். திரும்பி வரும்போது கோட்டைக் காவல் சிற்றமைச்சர், இல்லையா?” என்றான்.
ஸ்ரீகரர் இயல்படைந்து உரக்க நகைத்து “ஆமாம். இப்போது நான் மார்பாரமும் தலையணியும் சூடும் அமைச்சர். என்னாலே அதை அவ்வப்போது நம்பமுடியவில்லை மூத்தவரே” என்று தலைவணங்கி “என்னை வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றார். கர்ணன் அவர் தோளைப் பற்றி இழுத்து உலுக்கி “என் அறைக்கு வாரும்! அந்தத் தலைப்பாகையை எடுத்து வீசி தலையில் ஒரு அறைவிடுகிறேன். அதுதான் என் வாழ்த்து” என்றான். “அது என் நல்லூழ். தங்கள் அடிகளை வாங்கித்தான் நான் வளர்ந்தேன்” என்றபின் திரும்பி “இவர்கள் படைத்தலைவர்கள். இவர்களை தெரிகிறதா?” என்றார் ஸ்ரீகரர்.
கர்ணன் “ஆம், இவன் படைத்தலைவர் வஜ்ரசேனரின் மைந்தனல்லவா?” என்றான். “உக்ரசேனன்… வளர்ந்துவிட்டாய்.” உக்ரசேனன் “என்னை முன்பு போல் நாசிகன் என்றே அழையுங்கள்” என்றான். கர்ணன் அவன் மூக்கைப் பற்றி இழுத்து அருகே கொண்டு வந்து தன் நீள்கரங்களால் அவன் தோளை வளைத்து உடலுடன் சேர்த்துக் கொண்டான். “சிறு வயதில் இவன் மூக்கை பற்றி இழுக்காமல் ஒரு நாள் கூட சென்றதில்லை” என்றான். “இவன் தாய் கருவுற்றிருக்கையில் பறவைக்கரசர் ஆலயத்தில் அன்றாடம் வழிபட்டாள் என்பது சூதர் மொழி.”
இன்னொரு படைத்தலைவன் “என்னை நீங்கள் காலகன் என்று அழைப்பதுண்டு” என்றான். கர்ணன் நகைத்து “ஆம். ஆனால் ஒன்றரை வருடங்களில் உனது கரிய நிறம் சற்று மட்டுப்பட்டிருக்கிறது” என்றான். அமைச்சர் சிரித்து “மட்டுப்பட்டிருக்கும். ஏனெனில் இவனது துணைவி பொன்னிறம் கொண்டவள். இரும்பையும் பொன்னையும் உரசினால் இரும்பு சற்று ஒளி கொள்ளும் அல்லவா?” என்றார். கர்ணன் “துணைவி சற்று கருமை கொண்டிருக்கிறாளா?” என்றான்.
அவர் நகைத்து “கருவுற்றிருக்கிறாள்” என்றார். “நன்று! இளைய காலகன் ஒருவன் மண்ணுக்கு வரட்டும்” என்றான் கர்ணன். அவர்கள் மூவருமே கர்ணனின் உடலுடன் ஒட்டிக் கொண்டு நிற்க விழைந்தனர். இருவர் தோளில் கைகளை அவன் போட்டுக் கொண்டதும் அமைச்சர் அவன் கை விரல்களை தன் கைகளால் பற்றிக் கொண்டு “வருக, அரண்மனை சித்தமாக உள்ளது மூத்தவரே” என்றார். “ஆம், வரிசைமுறைமைகளை ஏற்றாகவேண்டும்” என்றான் சுஜாதன். “எனக்காகவும் வாள்கள் எழுந்தமையப் போகின்றன.” பேசியபடியே அவன் மிக இயல்பாக நாசிகனின் மேலிருந்த கையை விலக்கி தன்மேல் போட்டுக்கொண்டான்.
அரண்மனையின் விரிந்த முகமுற்றத்தில் பன்னிரு நீள்நிரைகளாக படைக்கலங்களை ஏந்திய அணிவீரர்கள் சீர்கொண்டு நின்றனர். நன்கு தீட்டப்பட்ட வாள்களும் வேல்முனைகளும் புலராத காலை ஒளியில் நீர்த்துளிகள் போல் ஒளிவிட்டன. கர்ணன் முற்றத்தை நோக்கி நடக்கத் தொடங்கியதும் முகப்பிலிருந்து முரசேந்திகளும் முழவுகூவிகளும் முறையிசை எழுப்ப படைவீரர்களின் நிரை ஆயிரங்காலட்டை போல சீராக நடந்து முன்னால் வந்தது.
ஒவ்வொரு நிரையிலும் பதினெட்டு வீரர்கள் இருந்தனர். முரசு எழுந்து உச்சிக்குச் சென்று அமைய அவர்கள் தங்கள் படைக்கலங்களை மண் நோக்கித் தாழ்த்தி கர்ணனை வணங்கினர். முன்னிரைத் தலைமையாக வந்த படைநிமித்திகன் “அங்கநாட்டரசை, அஸ்தினபுரியின் முதன்மைப்படைத்தலைவரை, தலைவணங்கி வரவேற்கிறது படை. வெல்க! வெல்க! வெல்க!” என்றான். படை ஒரே குரலில் “வெற்றி பொலிக!” என்றது.
அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கி புன்னகைத்தபடி கர்ணன் நடுவே நடந்து சென்றான். பெரும்பாலானவர்கள் அவனை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தனர். ஒவ்வொரு விழியை சந்திக்கும்போதும் அவன் புன்னகையால் நலம் உசாவ அவர்கள் தங்கள் உவகையை அறிவித்தனர். அரண்மனைப் படிகளில் ஏறும்போது நாசிகனும் காலகனும் தலைவணங்கி “தாங்கள் ஓய்வெடுங்கள் மூத்தவரே. தாங்கள் ஆணையிட்டால் மாலை தங்கள் அறைக்கு வந்து சில கணங்கள் சொல்லாட விழைகிறோம்” என்றனர். “இதற்கென்ன ஒப்புதல்? எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம்” என்றபின் கர்ணன் காலகனிடம் “அடேய் கரியவனே, உன் துணைவியை அழைத்துக் கொண்டு வா” என்றான்.
“ஆம். அதற்காகத்தான் நான் கேட்டேன்” என்றான் காலகன். “நான் எப்போதும் தங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன் என அவளுக்கு வியப்பு. தங்களைப் பார்த்ததே இல்லை அவள். ஆகவே சற்று அச்சமும் கொண்டிருக்கிறாள். ஒருமுறை வந்து பார், அச்சமே தேவையில்லை. மலர்களில் மிகமென்மையானதுகூட கதிரவனுக்கு முகம்காட்டவே முண்டியடிக்கிறது என்றேன்” என்றான். கர்ணன் “சூதர்சொல் உன்னுள்ளும் புகுந்துவிட்டது…” என்றான். “இப்படியே போனால் நானே எனக்கு வாழ்த்துரை கூவத் தொடங்கிவிடுவேன் என அஞ்சுகிறேன்.” காலகன் “அப்படியில்லை அரசே. அவர்களென்ன அத்தனை பேரையுமா பாடிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான்.
நாசிகன் “எனக்கும் பெண் பார்த்திருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். “உனக்கா? இன்னமும் மீசையே முளைக்கவில்லையே?” என்றான். “அதற்கென்ன? இதோ ஸ்ரீகரர் இருக்கிறார். இப்பிறப்பில் இவருக்கு மீசையெனும் அணி இல்லை என்பது தெளிவு… மணம்கொண்டாரே?” என்றான் நாசிகன். “மூடா, அந்தணருக்கு பாயில் எழுந்தமர்கையிலேயே மணம் பேசிவிடுவார்கள்” என்றான் சுஜாதன். “மீசை நன்கு முளைத்த பின்னும் நான் இன்னும் மணம் புரிந்து கொள்ளவில்லை.”
“அதை நான் உன் தமையனிடம் சொல்கிறேன்” என்றான் கர்ணன். நாசிகன் “என் துணைவி சுதுத்ரியின் கரையை சார்ந்தவள். அங்கு ஊர்க்காவல் செய்யும் ஷத்ரிய குடியாகிய பஞ்சதண்டத்தில் பிறந்தவள். மீனுணவை சமைப்பதில் திறன் கொண்டவள் என்கிறார்கள்” என்றான். “பிறகென்ன? கங்கைக்கரையிலேயே உனக்கொரு காவல் மாடம் அமைக்கவேண்டியதுதான்” என்றபின் கர்ணன் அவன் முன்மயிரைப் பிடித்து தலையை நாலைந்துமுறை உலுக்கிவிட்டு உள்ளே சென்றான்.
சுஜாதன் அவன் பின்னால் ஏறிவந்து “மூத்தவரே, நான் அந்த முகங்களையே எண்ணிக் கொண்டிருக்கிறேன். அஸ்தினபுரியில் தங்கள் கவச குண்டலங்களைக் காணாத ஒரு விழி கூட இல்லை” என்றான். “உளறாதே” என்றான் கர்ணன். “ஆம், நான் பார்க்கிறேன். ஒவ்வொரு விழியும் உங்களைப் பார்த்ததுமே ஒளி கொள்கின்றன” என்றார் ஸ்ரீகரர். “உண்மையிலேயே படை வீரர்கள் தங்கள் கவசகுண்டலங்களை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.” கர்ணன் புன்னகை பூத்தபடி “அது நன்று” என்றான்.
அமைச்சர் கனகர் அமைச்சுமாளிகை முகப்பிலிருந்து அவனை நோக்கி விரைந்து வந்து தலைவணங்கி “பேரமைச்சர் விதுரர் தங்களுக்காக காத்திருக்கிறார் அங்கநாட்டரசே” என்றார். கர்ணன் “ஆம், நான் முதலில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னரே ஓய்வெடுக்க வேண்டும்” என்றான். “தாங்கள் முன்புலரியில் வரக்கூடும் என்று கருக்கிருட்டுக்கு முன்னாலேயே வந்து அமர்ந்திருக்கிறார்” என்றார் கனகர். “நான் வரும் செய்தியை பறவைத் தூதாக அனுப்பினேனே!” கனகர் “ஆம், வந்தது. பின்புலரியில்தான் வருவீர்கள் என்று உறுதியாக தெரியவும் செய்தது. ஆனால் அவரால் அங்கு தன் அறையில் இருக்க முடியவில்லை” என்றார். பேசியபடியே அவர் மகனை நோக்கி முறைக்க அவர் உடல்குன்றி தலைதாழ்த்தி பின்வாங்கி முற்றத்திற்கு சென்றார்.
கர்ணன் இடைநாழியில் நடந்து இரு பெரும் தூண்களால் தாங்கப்பட்ட அமைச்சு மாளிகையின் முகப்புக்கு சென்றான். அலுவல் கூடத்திற்குள் பீதர்களின் பளிங்கு உருளைகளுக்குள் நெய்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. செவ்வொளி மரக்கூரையில் அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது. சுவர்களில் நிழல்கள் நடனமிட்டன. கூடத்தில் அனைத்து இருக்கைகளும் ஒழிந்துகிடந்தன. ஒரு பீடத்தில் மட்டும் கனகரின் பட்டுச்சால்வை பாம்புச்சட்டைபோல பளபளத்துக் கிடந்தது.
தன் பீடத்தில் அமர்ந்து சுவடி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த விதுரர் நிமிர்ந்து அவனை நோக்கி அளவாக புன்னகைத்தார். அவனுடைய காலடிகளை அவர் முன்னரே கேட்டுவிட்டார் என்றும் இயல்பான தோற்றத்துக்காக சுவடிகளில் விழியோட்டுகிறார் என்றும் உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். அருகே சென்று குனிந்து விதுரரின் கால்களை வணங்கி “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். “வெற்றியும் புகழும் சூழ்வதாக!” என்று தாழ்ந்த குரலில் இயல்பாக வாழ்த்திய விதுரர் பீடத்தை அமைக்கும்படி விழிகளால் கனகரிடம் சொன்னார்.
கனகர் சற்று இழுத்து போட்ட பெரிய பீடத்தில் அமர்ந்து கைகளை கட்டியபடி “அஸ்தினபுரிக்கு மீள்வது நிறைவளிக்கிறது. இங்கு நீரில் மீன் போல் உணர்கிறேன்” என்றான் கர்ணன். “நீங்கள் இல்லாததை ஒவ்வொரு கணமும் நான் உணர்ந்தேன்” என்றார் விதுரர். “ஆனால் இங்குள்ளதைப் போலவே ஒவ்வொரு நாளும் தோன்றிக்கொண்டும் இருந்தது” என்றபின் “கலிங்க நாட்டரசியும் மூத்த அரசியும் கருவுற்றிருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இருவரும் சேர்ந்தே கருவுறுவது ஒரு நல்லூழ். நன்று சூழ்க!” என்றார்.
அச்சொற்களில் இருந்து அனைத்தையும் அவர் அறிந்திருப்பதை உணர்ந்த கர்ணன் “ஆம், முறைப்படி செய்ய வேண்டியதை செய்துவிட்டுத்தான் வந்தேன்” என்றான். “அது நன்று. ஆற்ற வேண்டிய அனைத்தையும் ஆற்றுக! ஆற்றுவனவற்றிலிருந்து விலகியும் நிற்க! அதுவே அரசர்வழி” என்றார். கர்ணன் “அதைத்தான் செய்தேன் மூத்தவரே. அங்கு அனைத்தும் முறைப்படி நிகழ ஹரிதர் ஒருவரே போதும்” என்றான். “ஆம், அவர் திறனுடைய அந்தணர். தன்னை முழுதேற்கும் அந்தணரைப் பெற்ற அரசன் தோற்பதில்லை” என்றார்.
இடைநாழியில் எடைமிக்க காலடியோசை கேட்டது. அது யாரென்று உடனே உணர்ந்து கொண்டு கர்ணன் எழுந்தான். பேரோசையுடன் கதவைத் தள்ளி திறந்தபடி துரியோதனன் ஓடிவந்து “வந்துவிட்டீரா? நான் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்” என்றபடி இருகைகளையும் விரித்து அவன் தோள்களை அள்ளி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான். தழுவும் மலைப்பாம்புபோல அவன் தசைகள் இறுக கர்ணனின் உடல் நெரிபட்டது. இருவரின் பெருமூச்சுகளும் விம்மல்களும் கலந்து ஒலித்தன. ஒன்றையொன்று விழுங்க முயலும் இருநாகங்கள்.
பிடியை சற்று விட்டு முகம் தூக்கி “ஒன்றரை வருடங்கள்! நான்…” என்று சொல்ல வந்ததுமே குரல் உடைய விழிகள் நிறைந்து கன்னத்தில் வழிய துரியோதனன் அழத்தொடங்கினான். “என்ன இது? அரசே நீங்கள் இந்நாட்டுக்கு அரசர்” என்றபோது கர்ணனின் குரலும் குழறியது. துச்சாதனன் துரியோதனனைத் தொடர்ந்து உள்ளே வந்து கண்களில் இருந்து நீர் வழிய சுவரோரம் தயங்கி நின்றான். அவனுக்குப் பின்னால் வந்த துச்சலன் கண்ணீருடன் நெஞ்சில் கைவைத்து நின்றான். துச்சகனும், ஜலகந்தனும், சமனும், விந்தனும், அனுவிந்தனும், சித்ரனும், சத்வனும், சலனும் கண்ணீர்வழியும் விழிகளுடன் அறைக்குள் வர அறையே அவர்களின் உடல்கருமையால் இருள்கொண்டது.
விதுரர் எழுந்து புன்னகையுடன் “இனி அங்கர் இங்கிருந்து விலக வேண்டியதில்லை” என்றார். “இல்லை. இனி அவர் எங்கும் செல்லப்போவதில்லை. நான் இருக்கும் காலமெல்லாம் என்னருகேதான் இருப்பார்” என்றான் துரியோதனன். “நான் முடிவுசெய்துவிட்டேன்… இனி மறுஎண்ணமே இல்லை.” கர்ணன் தன் மேலாடையால் கண்களை துடைத்தபடி “ஆம்” என்றான்.
“அங்கு எப்படி இருந்தீர்கள்?” என்றான் துரியோதனன். “இங்கு ஒருநாளும் நான் நிறைவாக உணரவில்லை. ஆனால் அங்கு ஓர் அரசனுக்குரிய குடையும் கோலும் என அமர்ந்திருக்கும் உங்களை இங்கு அழைக்கக்கூடாது என்று இருந்தேன். இப்போது ஒரு தருணம் வந்தது. அது நற்தருணம் என்று எண்ணியபிறகு என்னால் உங்களை அழைக்காமல் இருக்க இயலவில்லை.” “இங்கு வரவேண்டும் என்று எண்ணாத ஒரு நாளும் எனக்கில்லை சுயோதனரே” என்றான் கர்ணன். “ஆனால் என்னை நம்பி அளிக்கப்பட்ட அப்பொறுப்பை முழுமை செய்யாது வரக்கூடாது என்று எண்ணினேன்.”
இருவரும் அச்சொற்களின் வழியாக உள்ளத்தின் விம்மலை கடந்து சென்றனர். ஆனால் தங்கள் முகம் முழுக்க நனைந்திருந்த விழிநீரை துடைக்கவோ மறைக்கவோ முயலவில்லை. கர்ணன் விழிதூக்கி துச்சாதனனைப் பார்த்து “இளையோனே, மேலும் வளர்ந்துவிட்டாய்” என்றான். துச்சாதனன் எடைக்காலடிகள் ஒலிக்க ஓடிவந்து முழந்தாளிட்டு தன் நெற்றியை கர்ணனின் கால்களில் வைத்தான். “அருளுங்கள் மூத்தவரே. இனி ஒரு முறை தங்களை பிரியக்கூடாதென்று வாழ்த்துரை சொல்லுங்கள்” என்றான். கர்ணன் மீண்டும் விம்மியழுதபடி குனிந்து அவன் தோள்களைப்பற்றி தன் நெஞ்சோடணைத்தான்.
“என்ன இது? அரக்கர்கள் போலிருக்கிறீர்கள், இதுதானா உங்கள் ஆண்மை?” என்றான் கர்ணன் கண்ணீருடன் சிரித்தபடி. துச்சலன் வந்து கர்ணனின் முன் மடிந்து நெற்றியால் அவன் காலைத் தொட்டு விசும்பியழுதான். கர்ணன் அவனை குனிந்து தூக்கி மார்போடணைக்க கரியநதி அலைபெருகி வருவதுபோல் கௌரவர்கள் ஒவ்வொருவராக அருகே வந்து அவனை சூழ்ந்தனர். அனைவரும் சிறு விம்மலோசையுடன் அழுது கொண்டிருந்தனர். கர்ணன் “போதும்! இனிமேல் இங்கிருந்தால் நான் சிறுமழலையைப்போல் அழத்தொடங்கிவிடுவேன்” என்றான். விதுரர் “அரசே, அன்பிலூறும் விழிநீரைவிட தூயதென்று ஏதுமில்லை. தெய்வங்களுக்கு அளிப்பதற்கு அதைவிட பெரிய காணிக்கையும் இல்லை” என்றார்.
வெண்முரசு ஓவியங்கள் ஷண்முகவேல்