வெள்ளையானை -கடிதங்கள்

1

சென்னையில் மழை – வார்த்தைகளில் விவரிக்க முடியாத தளத்தில் எல்லோரையும் பாதித்த நிகழ்வு.. ஒரு தளத்தில் பெருங்கருணை. பெரும்செல்வம் – மழை . நாம் தயார் நிலையில் இல்லாததால், அந்த நிகழ்வே ஒரு இயற்கைப் பேரழிவு என்கிற உருக்கொண்டது.

வீட்டினுள் மழை நீர். மின்சாரம் இல்லாததால் – முகர்ந்து வெளியேற்ற வேண்டும். கடைசியில், துணியில் நனைத்து பிழிந்து என. மீண்டும் மீண்டும் இதனை செய்ய வேண்டும். ஈரத்தில் உலாவல்.வீட்டில் கீழே சமையல் செய்து விட்டு, மாடிக்கு சென்று விட்டோம். அருகில் இருந்த ஓரிரு குடும்பங்கள் எங்களுடன் தங்கின. எதோ ஒரு மானுட நெருக்கம் மெல்ல நிகழ்ந்தது.

நான்கு நாட்கள் ஆன பின்பு – ஒருபுறம் அச்சம். குழந்தைகள் கேள்விகள் – மழை எப்போது நிற்கும்? – தண்ணீர் வீட்டில் இன்னும் ஏறுமா? என்கிற கேள்விகளுக்கு சுமாரான பதில்கள் கூட இல்லாத நிலையில், மறுபுறம், இப்படியே வாழ கற்றுக் கொள்ள தாயராக வேண்டுமோ என்கிற எண்ணம் – ஜப்பானிய திரைப் படத்தை நினைவூட்டியது. மணல் குழியில் ஒரு பெண் – http://www.imdb.com/title/tt0058625/

சென்னை மக்கள் பலர் ஆழமாக பாதிக்கப் பட்ட நிலையினில், எங்கள் நிலை பரவாயில்லை என்பது, மன சோகத்தை அதிகமாக்கியது. எங்களில் சிலர் மணப்பாக்கம் அருகில் உள்ள கூவமருகே உள்ள குடி இருப்புகளுக்கு உணவு கொண்டு சென்றோம். முக்கிய சாலைகளுக்கு உள்ளே இருப்பன. எவரும் செல்லவில்லை என்று அறிந்தோம். சூழ்நிலையும் இருப்பும் மனதை உணர்வற செய்தன.

நாம் தயார் நிலைக்கு இருக்க வேண்டியதையும், நாம் செய்ய வேண்டியதையும் மிக அவசர நிலையில் உணர்த்தின.நேரம் நிறைய கிடைத்த தருணத்தில் புதுமை பித்தன் கதைகள். கடந்து செல்ல அரிய எழுத்தாளர் – புதுமை பித்தன். வெள்ளை யானை – மீண்டும் படித்தேன்.

வெள்ளை யானைக்குள் பல தளங்கள் இருப்பதை கண்டேன். அமெரிக்க வணிகமும் பிரிட்டனின் உலகமயமாதலின் கருவை கண்டது போல. நியூ இங்கிலாந்தின் பனிக் கட்டிகள் உலகமெங்கும் பிரயாணித்த கதை – வெள்ளை யானையை தொடர்ந்த போது கண்டு கொண்டேன். ஒரு சில துல்லியமான தகவல்கள் – ஆச்சரியமாக விரிந்தன. எப்படி அந்த பெரும் பனிக்கட்டிகளை உலகெங்கும் வியாபாரம் செய்தனர்? கொண்டு சென்றனர் – இவை அனைத்தும் நடந்தது – இங்கா? மைலாப்பூரிலா? ஐஸ் ஹௌசிலா? – என்பது ஒருபுறம். நமது நகரை போலவே – மற்ற உலக நகரங்களிலும் – கடுமையான உடல் பணி செய்தவர்களை மையாமாக கொண்ட நிறுவனங்கள் – அவர்களின் உழைப்பை ஒரு புறம் குறைத்து மதிப்பிட்டு – உழைப்பாளர்களுக்கு. மறு புறம் அதனை அதிக மதிப்பிட்டு – மற்ற நிறுவனங்களிடம். மெல்ல தற்போதுள்ள நிறுவனங்களின் அணுகு முறையின் கரு – பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சி. பிறகு திடீரென இந்த வியாபாரம் சரிந்தது. அதன் சரிவு முனை (tipping point) என்னவென்று ஆராயலாம்.

ஆனால் மனதை நிலை கொள்ளாமல் ஒரு துயரில் ஆழ்த்தியது. பஞ்சம். ‘தொர.. தொர ‘ என்ற குரல் கனவிலும் வந்தது.மீள முடியவில்லை :(. எல்லா கதா பாத்திரங்களும் ஆழ்ந்து சிந்திக்கின்றன. சூழலோடு இணைகின்றன. மெல்லிய எதிர்ப்பை ஆழமாக தெரிவிக்கின்றனர். இது அதிகம் படிக்கப் பட வேண்டிய நாவலோ என தோன்றுகிறது. ஊடகத்தில் (நான் கண்ட வரை), இது தலித் நாவலாக சித்தரிக்கப் படுகிறது. அது இந்த நாவலின் மதிப்பை சற்று குறைப்பது போல தோன்றுகிறது. இதில் நீங்கள் சொல்லாமல் விட்ட இடங்கள் பல. அவை அனைத்தும் விரியலாம். அந்த விதத்திலும் ஒரு நுண் கட்டமைப்பு கொண்ட நாவல் என்று கருதுகிறேன்.

முரளி

 

அன்புள்ள ஜெ

வெள்ளையானை நீண்ட இடைவேளைக்குப்பின் இப்போதுதான் வாசித்தேன். ‘பஞ்சமோ பஞ்சம் என்று சாகின்றனரே’ என்று பாரதி பதைபதைத்து எழுதிய வரிகளை நினைத்தேன். அத்தனை பெரிய பஞ்சத்திற்கு பொறுப்பான வெள்ளைய ஆட்சியை இன்றைக்கும்கூட விதந்தோதும் ஒரு கூட்டம் நம்மிடம் உள்ளது. அந்தப்பஞ்சத்தைக் கண்டு பாரதி ‘நம் மடாதிபதிகள் வயிறு வளர்க்கிறார்கள்’ என்று எழுதினார். விவேகானந்தர் குமுறி எழுதினார். அந்த நிலைமையும் நீடிக்கத்தான் செய்கிறது.

அந்த ஆட்சியின் குரூரம் நம்முடைய மொண்ணைத்தனம் மட்டுமல்லாமல் அதை எதிர்கொள்ளும் கதாநாயகனின் கையாலாகாத தனமும் நாவலில் உள்ளது. அதுவும் ஐரிஷ் விடுதலை இயக்கத்தின் கையாலாகத்தனமாகவே தெரிகிறது. வரலாற்றை இப்படிச் சுருக்கிப்பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்நாவலுக்கு இனிமேல்தான் ஒரு நல்ல வாசிப்போ விமர்சனக்கட்டுரையோ வரவேண்டும் என்று தோன்றுகிறது.

இதன் நுட்பங்களை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஷெல்லி பிரிட்டனில் நடந்த குதிரைத்தாக்குதலை கண்டு கொதித்து எழுதிய கவிதையை மிக நுட்பமாக கையாண்டிருக்கிறீர்கள். அந்தக்கவிதையைச் சொல்லும் கறுப்பன் வரும் காட்சி மெய்சிலிர்க்கவைப்பது. நாவல் முழுக்க வரும் பிரிட்டிஷ் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக உக்கிரமான மனநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்கு நினைவுக்கு வந்த வகையில் உள்ளன என நினைக்கிறேன். ஒருபக்கம் ஷெல்லியின் ஹ்யூமனிஸம் என்றால் மறுபக்கம் பைரனின் மனிதமறுப்புத்தத்துவம். இரண்டும் மாறிமாறி வருகிறது

பிரிட்டிஷ்கவிதை என்பது மனிதநாகரீகம் அடைந்த ஒரு பெரிய உச்சம். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் அந்த நாகரீகம்தான் இந்தியாவில் நாலில் ஒருபங்கினரைக் கொன்றது. இந்த முரன்பாட்டை அந்தக்கவிதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. எந்த பனிக்கட்டி வெள்ளையானையாக மக்களைக் கொல்கிறதோ அதே பனிக்கட்டிதான் சுதந்திரத்தின் கொடியடையாளமாகிய வால்டனில் இருந்து வந்தது. இந்த சிக்கலைச் சொல்லுவதுதான் வெள்ளையானையின் வெற்றி

கெ.ஆர்.செல்வராஜ்

வெள்ளையானை விமர்சனங்கள் அனைத்தும்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25
அடுத்த கட்டுரைவிவாதங்களைப் பதிவுசெய்தல்