சந்திப்புகள் : கடிதங்கள்

1-DSC_8011

 

வணக்கம்.

கோவையிலுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நெல்லையில் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். சரிதான். 2015இல் புத்தகத் திருவிழா நடக்காதததிலிருந்தே கண்டாயிற்று. விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவும் நெல்லையில் நடக்க வாய்ப்பில்லையா? தேவதேவனுடன் திற்பரப்பில் நடந்த நிகழ்வில் பங்குபெறாததற்காக வருந்துகிறேன். மீண்டும் அப்படியொரு நிகழ்வில் தேவதேவனுடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா?

ஸ்ரீநிவாச கோபாலன்

அன்புள்ள ஸ்ரீநிவாச கோபாலன்

இன்றிருக்கும் நிலையில் நான் மேலதிகமாகச் சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் ஒருங்கமைக்க இயலாது

வேறு சில சந்திப்புகளை அமைக்கலாமென நினைக்கிறேன். மதுரை மேலூரில் ஒரு சந்திப்பு அமைக்கலாம் என விஜயா வேலாயுதம் சொல்கிறார்

பார்ப்போம்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2016 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தாங்கள் வருகை தர எதாவது திட்டம் உண்டா ?

தங்களை நேரில் சந்திக்க ஆவலாய் உள்ளேன். தாங்கள் உட்பட பல இலக்கிய முன்னோடிகளை சந்திக்கக் காத்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டில் என்னை ஒரு நல்ல ரசனை உள்ள இலக்கிய வாசகனாக பக்குவப் படுத்திக்கொள்ள என்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வேன்…

தங்களின் இலக்கியப் பணி மேலும் சிறப்புடன் தொடர என் வாழ்த்துக்கள்..
அன்புடன்

ப்ரவீன்.

 

அன்புள்ள பிரவீன்

புத்தகக் கண்காட்சிக்கு வரமுடியுமா எனத்தெரியவில்லை. அது ஏப்ரலில் வருகிறது என்றார்கள். ஏப்ரலில் ஊட்டி வருடாந்தர சந்திப்பான ‘குருநித்யா கருத்தரங்கு’ நிகழும்

அதற்கு முன் ஒரு புதியவர்களின் சந்திப்பு அமைத்தாலென்ன என்னும் எண்ணம் உள்ளது

ஜெ
அன்புள்ள அண்ணன்

5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து உங்கள் எழுத்துகளை வாசித்து வருகிறேன் அவற்றால் விரிந்த என் உலகம் அதிகம்.
சென்னையில் 2 வருடங்களுக்கு முன் சிவகாமி இ ஆ ப புத்தக வெளியிட்டு விழாவில் உங்களை நேரில் சந்தித்து பேசினேன் , பிறகு ஓரிரு கடிதங்கள்

நேரில் அதிகம் பேசியது இல்லை, புதியவர்கள் சந்திப்பு அறிவிப்பு வெளியிடுவீர்கள் என்று ஆவலாக உள்ளேன், அதன் பிறகு பயணத்திலோ அல்லது ஊட்டி குருகுல சந்திப்பிலோ பங்கு கொள்ள விருப்பம்.

அன்புடன்

விஜய்
அன்புள்ள விஜய்,

பிப்ரவரி மாதம் ஊட்டியில் முற்றிலும் புதியவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு இரண்டுநாள் சந்திப்பை அமைத்தாலென்ன என்று எண்ணுகிறேன். ஊட்டி பலவகையிலும் வசதி. . சனி ஞாயிறுகளில் சந்தித்தால் ஒரு விடுபட்ட தனித்த மனநிலையில் நல்ல உரையாடல்கள் அமையும்.

பத்து புதியவர்கள் விரும்பினால் நிகழ்த்தலாம்

ஜெ

 

மதிற்பிற்குரிய ஜெயமோகன்,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.

தங்கள் எழுத்துக்களை சமீப காலமாக வாசித்து வருகிறேன். நான் சிங்கப்பூர் வாழ் தமிழன். தங்களின் சிங்கப்பூர் வருகையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன். தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் பணி சுமை காரணங்களால் பார்க்க முடிய வில்லை. பிறகு தங்களின் இரு தீவுகள் பயணக்குறிப்புகளின் மூலம் உங்கள் அனுபவங்களை தெரிந்துகொண்டேன்.

தங்களின் வெண்முரசு நாவலை நானும் எனது நண்பரும் வாசித்து வருகின்றோம். ஆனால் தாங்கள் எழுதும் வேகத்திற்கு எங்களால் வாசிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல உங்கள் வலைத்தளத்தில் அனைத்து கட்டுரைகளும் ஓவொன்றும் வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு விடையளிக்க வல்லவை (மன்னிக்கவும் சரியாக சொல்ல தெரியவில்லை).  இது போன்ற பல படைப்புகள் எங்களை போன்ற நிறைய இளைஞர்களுக்கும் மற்றும் நம் சமூகத்திற்கும் தேவை.

பணிவான வாழ்த்துக்கள்….

அன்புடன்
சைலேந்திரன்

 

அன்புள்ள சைலேந்திரன்

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

ஒர் எழுத்துலகுக்குள் நுழையும்போது பரவசமும் குழப்பமும் மிக்க மனநிலை நிலவும். மெல்ல அதில் நமக்கான ஒரு வாசலைக் கண்டடைவோம். அது ஒரு அற்புதமான மனநிலை

வாழ்த்துக்கள். என் புனைவுலகு உங்களைச் சூழ்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறேன்

ஜெ

 

ஜெயமோகன் அவர்களுக்கு,

26.12.2015 அன்று கோவை ராஜஸ்தான் நிவாஸ், 27-ம் தேதி பரிசளிப்புவிழாவிலும் கலந்து கொண்டு உங்களுடைய சிந்தனையின் தேடுதல்களோடு பயணம்செய்யும் வாய்ப்பு திரு. சுரேஷ் வெங்கடாத்திரி மூலம் கிடைத்தது!

கார்ப்பொரேட் வாழ்க்கை, பொருளீட்டுதல் காரணமாக தாய் மொழி தமிழ், தமிழ்புத்தகங்கள், பேசும்,படிக்கும் வாய்ப்பை 25 வருடமாக இழந்து, இப்போதுதிடீரென்று வீடு விட்டால் வேலை, அலுவலகம் விட்டால் கிளப் என்று நிலையில்இருந்து விலகி தமிழ் புத்தகங்கள், தமிழ் சிந்தனைப் பரிமாற்றங்கள் என என்வேர்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன்!

உங்களுடைய (அறம்) “உண்மை மனிதர்களின் கதைகள்” படித்தபோது முதலில் நீங்கள்சந்தித்த நாயகன் குடந்தை MV. வெங்கடராமன், அவருடைய உதவியாளர் “கரிச்சான்குஞ்சு” என்பதையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது.வணங்கான், யானை டாக்டர்,கெத்தேல் சாகிப்,ஆகியோர் உங்களை நோக்கி என்னை திரும்பச் செய்தனர்!

09.12.2015 அன்று கிக்காணி பள்ளியில் உங்களுடைய கீதைப்  பேருரையின்கடைசிப் பகுதி கேட்க நேர்ந்தது! பெரியவர் ஆற்றூர் ரவிவர்மாஅவர்களுடன் நீங்கள் நடந்து கொண்டிருந்த போதுஉங்களை கடந்த வராகம் வலது காது மடித்து தன்னுடைய குட்டிகளை கூட்டிச்சென்றதும், வாலை சுழித்துக் கொண்டு ஒரு சிறிய குட்டி அட்டகாசம் செய்ததைநேர்த்தியாக நீங்கள் விவரித்ததும், உங்கள் அவதானிப்பும் என்னை உங்களை நோக்கி நகரச் செய்தது.

கீதைப்  பேருரையின் போது உங்களுடைய நிலவும், பாலைவன வர்ணணையும், இராஜஸ்தான் நிவாஸில் நீங்கள் உங்களுடைய வாசிப்பு அனுபவங்களை நினைவு கூர்ந்ததும் என்னை உங்களைத் தொடரச் செய்கிறது!

என்னுடைய மனைவியும், தமிழ் கற்றுக் கொண்ட எனது மகனும் இப்போது நிறையவாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு சொல்லிக் கொள்வேன்!தற்போது புல்வெளி தேசம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்! இந்த ஆங்கில புதுவருடத்திற்கு விஷ்ணுபுரம் வாங்கி இருக்கிறேன், குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good வரை படித்திருக்கும் எனக்கு உங்களுடைய வெண்முரசு படிக்க உங்களுடைய ஆசீர்வாதமும், எல்லாம் வல்ல இறைவனின் அருளும்கிடைக்கட்டும்!

  1. http://vengadapurathan.blogspot.in
    2.http://karanarajan.blogspot.in ஆகிய வலைத்தளங்களில் என்னுடைய நினைவுகளை
    பதிவு செய்து வருகிறேன்!

நன்றியுடன்
சுந்தர்

 

அன்புள்ள சுந்தர்

ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்

பொதுவாக ஒரு நல்ல கதையை நாமே எழுதும் நிறைவை ஒரு புதியவாசகர் அளிக்கிறார். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் மேலும் சந்திப்போம்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 24
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை )