அன்புள்ள ஜெ,
வணக்கங்கள் பல.
எழுச்சியூட்டும் உரை. பதிவு செய்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.
சில வருடங்களுக்கு முன், அத்வைதம் எளிய மக்களுக்குக் கைகூடுவதை ஆந்திராவில் வரதையபாளையத்தில் பார்த்தேன். ஓரளவுக்கு இயற்கையோடு தொடர்பு உள்ளவர்களுக்கு அது எளிதாகிறதோ என்று தோன்றுகிறது.
படித்த இளைஞர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி இருமையை வலியுறுத்துகிறது என்பது சரி. அத்வைதம் ஏற்புடையதல்ல என்பது சரியா? அத்வைதம் அனுபவித்து உணர்ந்து, அறியப்பட வேண்டிய ஒன்று. மேற்கு முறை கல்வியுடன், அனுபவமும் சேர்ந்தால் சாத்தியமே.
ஸ்ரீதர் திருச்செந்துறை
அன்புள்ள ஸ்ரீதர் ,
அத்வைதம் ஏற்புடையதல்ல என்று நான் சொல்லவில்லை. அத்வைதம் ஒரு மெய்யியல்தரிசனம். அது அறிவார்ந்த தர்க்கத்துடன் விளக்கப்படும்போது தத்துவம்
அதை ஒரு மதம்போல ‘பரப்ப’ முடியாது. அதன் தேவையை எவ்வகையிலோ முன்னரே சற்றேனும் உணராதவர்களுக்கு அது புரியாது. அதை பாடமாகப் பயில்வது பயனற்றதும்கூட
இவ்வுலகில், இதன் லாபநஷ்டங்கள் இன்பதுன்பங்கள் நன்மைதீமைகள் பாவபுண்ணியங்கள் என்னும் இருமையில் முழுமையாக ஆழ்ந்து வாழ்க்கையை அறிபவர்களுக்கு அதனால் ஆவதொன்றுமில்லை. எங்கோ அதற்கப்பால் மனம் சென்றுவிட்டவர்களுக்குரியது அது.
அது எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். நான் கடும் துயரின் கணம் வழியாக அங்கே சென்றேன். அற்புதமான இயற்கையனுபவங்கள் வழியாகச்சென்றார் நித்ய சைதன்ய யதி
நோயற்றவர்கள் மருந்துண்பதுபோல வெறும் தர்க்கமாக அத்வைதத்தை அறிவது. நான் சொல்வது அதையே
ஜெ
ஜெ
தமிழில் அத்வைதம் :
http://davidgodman.org/gen2/p/books/godman.sorupa-saram.html
இந்த நூலை நான் படித்திருக்கிறேன் . இந்திய சிந்தனை மரபில் வந்த, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் – தமிழில் வந்த அருமையான அத்வைத நூல்.
கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்
இத்தகைய நூல்கள் பல தமிழில் உள்ளன
அத்வைதத்தை வரலாற்றுப்பார்வையுடன் அறிமுகம்செய்யும் நூல், மற்ற தத்துவங்களுடன் சமநிலையில் நின்று ஒத்துநோக்கி எழுதப்படும் நூல் நமக்குத்தேவை
அதன்பின் அத்வைதத்தை விளக்கும் பாடல்நூல் நமக்குவேண்டும். ஆனால் அத்வைதம் ஒருபோதும் நூல்கள் வழியாகக் கற்கப்படமுடியாது. எந்தத் தத்துவமும் நூல்கள் வழியாக பயிலப்படத்தக்கதல்ல. அதற்கு விவாதச்சூழல் கொண்ட கல்விமுறை, ஆசிரியரால் வழிகாட்டப்படும் கல்விமுறை தேவை
நம் மரபான குருகுலங்களில் அம்முறை இருந்தது. இன்று சில மேலைநாட்டுப்பல்கலைகளில் உள்ளது
ஜெ