அனந்தன் மீண்டும் தூக்கத்தில் அழுந்தினான். புதைந்து போகும்போது அந்த கிருகிரு ஒலி வலுத்து பேச்சொலி மெலிதாகிக் கேட்டது. அவ்வொலி அனந்தனின் தட்டுபடியின் கால்களில் கேட்டது. சிதல்கள். வெள்ளை உடல்கள் இருட்டில் நன்றாகவே தெரிந்தன. மிக அவசரமாக அவை அரித்து அரித்து மரக்கால்களையும் தூண்களையும் தின்று முன்னேறின. அவை போகும் இடமெங்கும் ஒவ்வொன்றும் இல்லாமலாயின. அனந்தனின் தட்டுபடி தாழ்ந்து தாழ்ந்து சென்றது. அவன் வீட்டையே அவை தின்கின்றன. அஸ்திவாரம் முழுக்க இல்லமலாகிவிட்டது…நீரில் மூழ்குவதுபோல எல்லாமே மூழ்கி…
”எனக்க நாயி போகும் அங்க!” அப்பாவின் உரத்த குரல் கேட்டது. அனந்தன் திடுக்கிட்டு எழுந்தான். எந்த இடமென்று அவனுக்குப் புரியவில்லை. இருட்டுக்குள் ஊடுருவிப்பார்த்தபோது மச்சின்மீது தென்னை ஓலை நிழல்கள் ஆடுவது அவன் தண்ணீருக்குள் மூழ்கிக்கிடப்பதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு மேலே ஒரு நதி சுழித்தோடிக்கொண்டிருந்தது. அவன் பார்த்த எல்லாமே நெளிந்தாடின.
”நீ நான் சொல்லுகதை கொஞ்சம் சமாதானமாட்டு கேளு…”என்றார் போத்தி. ” ஒரு நிமிஷம் மனசிருத்திப் பாத்தேண்ணா தெரியும்டே இதெல்லாம் மண்ணாப்போற காரியங்களாக்கும்ணுட்டு. நீ பெண்ணைக் கெட்டிக்கிடுவந்து இப்பம் வருஷம் பதிநாலு ஆச்சு. இண்ணைக்குவரை ஒரு மனசமாதானம் உண்டா சொல்லு. கல்யாணம் கெட்டின நாலாம் நாளு குமார கோவிலில வச்சு அவளப்போட்டு அடிச்சவன் நீ. அடிபிடி இல்லாதத நாளு இந்த வீட்டில இலல். செரி , அவளுக்க காரியம் விடு, உனக்கொரு மனசமாதானம் உண்டா? சொல்லுடே…”
”நான் ஆணாப் பிறந்திட்டுண்டெங்கில் ஆணாட்டு ஜீவிப்பேன். இல்லேண்னா செத்து மண்ணாப்போவேன்”
”செரிடே… ஜீவிச்சுக்கோ… அதுக்காட்டு கெட்டினவளை போட்டு சவிட்டி தாழ்த்தணுமா? நீ செய்யியது நல்லதுக்கில்ல…”
”உமக்கு என்னவே தெரியும்? பருப்பும் பாட்டுமாட்டு இருக்க உம்ம பிராமணத்திகளை மாதிரி இல்ல இவளுக…” அப்பா சொன்னார். ”இது துளுநாடு இல்ல போத்தி, பெண்மலையாண்மையாக்கும். ஆயிரம் வருஷம் ஆம்பிளைகளை காலில போட்டு சவிட்டி தேச்ச வம்சமாக்கும் நாயரச்சிகள்னாக்க. ஒரு தலநாரிடைக்கு பிடி விட்டோம்னா பின்ன நாம இவளுகளுக்க செருப்பு துடைச்சு குடுக்கணும்…. நான் குறெ கண்டிட்டுண்டு. உமக்குதெரியுமே…. எனக்க அம்மை , அந்தத் தேவிடிச்சி… அவளைப்பத்தி நினைக்காண்டாம்ணா நினைப்பு வந்திடும்… ”
”செரி , விடு. நான் ஒண்ணையும் தூண்டுயதுக்காகச் சொல்லல்லா”
”நான் இவளுக்கு புடவகொடுத்து எறங்கி நிண்ணப்பம் மஞ்சாலுமூட்டு கடுத்தா அம்மாவன் எனக்க கையைப்பிடிச்சு ஓரமாட்டு கொண்டு போய் சொன்ன சொல்லை எண்ணைக்குமே மறக்க மாட்டேன். ‘டேய் தங்கப்பா பிடி என்ணைக்கும் உனக்க கையில இருக்கணும்டே. பிடி இருந்தா நீ மனுஷன் , இல்லேண்ணா நீ நாயி ‘ . சொல்லிமுடிக்கச்சில கண்ணில தண்ணி முட்டி நிக்குது. ‘எனக்க கதை தெரியுமேடே உனக்கு. புத்தியா இருந்துக்க’ண்ணு சொல்லிட்டுத்திரும்பி நேராட்டு போனார். ஒரு வாய் சோறு உண்ணல்ல. அதாக்கும் கதை. செரி ,பழைய கதைய விடும்வே. இப்பம் இந்த நாட்டில என்ன நடக்குது? குஞ்சுவீட்டு தம்பி நூறு தேங்காய எடுத்து மறிச்சு வித்துபோட்டார். செரி, ஆம்பிளைண்ணா செலவுகள் இருக்கும். ஆனா பெண்ணாப்பிறந்தவ வீட்டிலே கேற்றல்லை. ஒண்ணுரெண்டுல்ல, நாப்பது நாளாக்கும் வீட்டில கேற முடியாம ஸ்ரீகண்டனுக்க சாயைக்கடையில பெஞ்சில கெடந்து ஒறங்கினாரு. காலயம் வீட்டு கத என்ன?சொல்லும்வே உமக்கு தெரியாத ஒண்ணுமில்லியே…”
”அது உள்ளதாக்கும். ஆனா ஓரோ பெண்ணுக்கும் ஓரோ சுபாவம்ணு இருக்கே…”
”ஒண்ணும் இல்ல. ஒரு மயிரும் இல்ல. எல்லாம் ஒரே எனம் ஒரே ரத்தம். மூக்கணாம்கயிறை போட்டு தொழுத்தில கெட்டி வச்சா கறக்கும். தும்பு அறுந்தா சவிட்டும்…. உம்ம வேதாந்தமெல்லாம் இந்த நல்ல பாம்புகளிட்ட செலவாகாது. இவளுகளுக்கு ஆம்பிளைண்ணா நல்ல ஆறிஞ்சு கம்பு. பின்ன போற வார எடத்தில வாளையும் தூக்கீட்டு முன்னால போற ஆணாளு. சொல்பம் மந்தனாட்டு இருந்தா மஞ்சலில வச்சு தூக்குடே நான் தம்புராட்டியிலாண்ணு சொல்லிடுவாளுக…. இவளுக இண்னைக்கு சொல்லுபேச்சு கேட்டு நிக்காளுகண்ணா ஏன்? கையெல்லுக்கு உறப்புள்ள ஆணாப்பிறந்தவன்மாரு அடிச்சு இருத்தினதனால. முன்ன மகாராஜா காலம்ணாக்க பெண்ணடிய தொட முடியாது. பெண்பாவம்னு ராஜகிங்கரன்மாரு வந்து வலிச்சு கொண்டு சென்ணு முக்காலியில கெட்டி அடிப்பாவ. ராஜ வாழ்ச்சை ஒழிஞ்ச பிறகாக்கும்வே இங்க ஆம்பிளைக ஆம்பிளைகளானது. மானம் மரியாதையாட்டு மேல்துண்டை தோளில போட்டது. நீரு என்னவேணுமானாலும் சொல்லும்வே, நான் கண்ட சத்தியம் இதாக்கும் நல்ல சுட்ட அடியில்லாம ஒண்ணுக்கும் இவளுக அடங்க மாட்டாளுக…”
”டேய் தங்கப்பா ஒரு கணக்குண்டு கேட்டுக்க. நம்ம சிற்றப்பன் போத்திக்க சித்தாந்தமாக்கும். நீ திருப்பி அடிக்கமுடியாத்த ஒராளை அடிச்சேண்ணாக்க அவன் மனசால ஒனக்கு நாலிரட்டி அடி போடுவான். அந்த அடி அப்பம் நம்ம மேல பெடாது, சேந்து சேந்து ஒரு வலிய அடியாட்டு வந்து பெடும். அப்பம் அதுக்க கணக்கு துல்யமாகும் பாத்துக்க. டே, பூலோக கர்மம்ணா ஒரு திராசாக்கும். இந்த தட்டில ஒண்ணை வச்சா அதுக்கு துல்யமான ஒண்ணு அந்த தட்டில வரும்டே…”
அப்பா பொறுமையில்லாமல் ” செரி விடும்வே, உமக்கு அனுபவமில்ல. உம்ம வேதாந்தத்த நீரு சலம்பிட்டுதான் இருப்பேரு”என்றார்
போத்தி ” ஒரு காரியம் மட்டும் சொல்லுகேன் தங்கப்பா, நான் நாலுநாடும் நாலாயிரம் வீடும் பாக்குத போத்தி. நானறிஞ்சதைச் சொல்லுகேன். உனக்க வீட்டுக்காரிய மாதிரி ஒரு ஐஸ்வரியமுள்ள பெண்ணை நான் இந்த சுத்துவட்டத்தில பாத்தது இல்லை. நெறைஞ்ச பெண்ணாக்கும். அதுக்க அருமை உனக்கு தெரியல்ல… பாத்து நடந்தா உனக்கு கொள்ளாம். டேய், கையில கிட்டின மானிக்கமாக்கும்டே….”
”போவும்வே. அவளைப்பத்தி கெட்டின எனக்கு தெரியுமா உமக்கு தெரியுமா? இந்த பேச்சு பேசுறீரே இண்ணைக்கு பய்யன் என்ன சொல்லுகான் பாத்தேரா வே? அவன் அம்மைய நான் சொத்துக்காட்டு அடிச்சு கொல்லுதேனாம். அவன் பேசுத பேச்சாவே? சொல்லி உருவேற்றியிருக்கா தேவ்டியா .சொத்தெல்லாம் அவளுக்குள்ளதுண்ணு இந்த பச்சத்தன்ணி சவைச்சு குடிக்க பய்யனுக்கு சொல்லி வச்சிருக்கா. எம்பிடு ஒரு இது இருக்கணும்? அவ ஒரு சொல்லு சொல்லவேண்டம்வே, அவளுக்க ஒரு பார்வை போரும், மனசில என்ன நினைச்சிருக்காண்ணு எனக்கு தெரிஞ்சிரும்… நீ போடா மயிராண்டி, எனக்க சோறையாக்கும் நீ தின்னுதே… அதாக்கும் அவ சொல்லுகது…. நிப்பிலயும் நடப்பிலயும் கெடப்பிலயும் ஓரோ விரலாட்டத்திலயும் அவ சொல்லுகது எனக்கு தெரியும்வே. நான் மத்தவளாக்கும். எனக்கு அறிவுண்டு. படிப்புண்டு. மயிருண்டு, மட்டையுண்டு. நீ சும்பன், திருவட்டாறில மண்ணு சொமந்து அலைஞ்சவன். எனக்க பிள்ளைகளுக்கு நீ அப்பன் ஆனதனால உன்னை நான் சகிக்கேன் … அதாக்கும்… நாறத்தேவ்டிச்சி…. அந்த ஏற்பாடு இங்க நடக்காது..”
”அவ அப்பிடி நினைக்க ஆளு இல்ல. உனக்கு வட்டு…”
”பின்ன இந்த பொட்டன் சொன்ன சொல்லு எங்கேருந்துவே வருது?”
”இங்கபாரு தங்கப்பா, உனக்கு உண் வீட்டுக்காரியப்பத்தி ஒண்ணும் தெரியாது. மக்களைப்பத்தி ஒரு அதைவிட ஒரு மண்ணும் தெரியாது. உன் ரெண்டு பிள்ளையளைப்பத்தியும் நீ நெனைக்கது அம்பிடும் தெற்று, அதை மட்டும் உறைச்சுக்கோ. டே, சின்ன பிள்ளைகளுக்கு ஒண்ணும் தெரியாதுண்ணா நினைக்கே? அதுக நம்மை பாத்திட்டிருவே. மனுஷனை தெய்வம் பாக்குதோ இல்லியோ ஆனா பிள்ளைகள் பாத்திட்டிருக்கு. அதுகளுக்கு எல்லாம் தெரியும். நீயும் நானும் எல்லாம் செத்து மண்ணடிஞ்சு உப்பாட்டு போனபிறவும் அதுக இப்ப நடக்க ஓரோண்ணையும் பேசுத ஓரோ சொல்லையும் நினைச்சிருக்கும்….”
”யாரு இவன்…? கோழிமுட்டைய போட்டு உருட்டி வெளையாடுதான்வே . நானும் பாத்திட்டே இருக்கேன். ஒருமணிக்கூர் நேரம் வெளயாடுதான். வயசு எட்டுகழிஞ்சு ஒம்பது நடக்குது. வெளங்குமாவே? கொஞ்சி கொஞ்சி பயல மயக்கின மரச்சீனிக்கெழங்கு மாதிரி ஆக்கி வச்சிருக்கா…ஆனா மனசில வெறுப்பு. தந்தையான்ணா ஒரு வெளங்காத பயண்ணு சொல்லி உருவேத்தியாச்சு… பாத்தேராவே என்ன சொல்லுகான்னு? நாய அடிச்சே கொல்லணும்..எனக்க ரெத்தமில்லை அவன்…பொறம்போக்கு ரெத்தம்..”
”டே தங்கப்பா, இண்ணைக்கு இந்த திரிகாலம் சாட்சியாட்டு சொல்லுகேன் நீ ஓர்மையில வச்சுக்க, அவனும் நீயும் எப்டி இருந்தாலும் செரி, அவனுக்க மனசில நீ இருப்பேடே. அவன் இருக்கது வரைக்கும் உனக்கு சாவு இல்ல. தாயளி, அவனாக்கும்டே உனக்க பிள்ள. உனக்கு கொள்ளி போடுகது மூத்தவனாக்கும். ஆனா உனக்காட்டு அம்பதுவருஷம் கழிஞ்சும் ஒரு சொட்டு கன்ணீர் விடுகது இவனாக்கும்டே…. ”
அப்பா சட்டென்று விசும்பும் ஒலி கேட்டது.
போத்தி ”செரி… செரி… விடு. சும்மா ஒரு இதுக்காட்டு சொன்னேன். நீ எளகாதே. எனக்கு உன்னை தெரியும்டே தங்கப்பா. நீ ஒரு பஞ்ச மகா பாவமாக்கும். மக்கமாரிட்ட நீ வச்சிருக்க ஸ்நேகம் எண்ணாண்ணு எனக்கு தெரியும். ஆனா எல்லாத்துக்கும் மீதே ஒரு கரிம்படத்தை எடுத்து மூடியிருக்கே. எல்லாருக்க மேலயும் ஒரு சம்சயம். அதிலேருந்து ஒரு வெறுப்பு. ஒண்ணு சொல்லுகேன் தங்கப்பா, மனுஷனை நம்பு. நம்பினார் கெடுவதில்லைண்ணு மூப்பிலான்மாரு சொல்லுகது இதையாக்கும். எனக்க அப்பா எனக்கு சொன்ன வார்த்தை இதுதான். எல்லாரையும் நம்பு, நம்பினவன் கெட்டதே இல்லைண்ணாரு. நான் இண்ணைக்குவரை ஒரு கஷ்டத்தை கண்டதில்லை…. உள்ளதைச் சொல்லுகேண்டே இப்பம் வயசு நாப்பத்தாறு. இண்ணைக்குவரை நான் கஷ்டப்பட்டு கன்ணீர் விட்டதில்லை…”
அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அவர் கால்களை ஆட்டும்போது ஈசிசேர் கறக் கறக் என்று ஒலி எழுப்புவதை அனந்தன்கேட்டான். அவன் கைகால்கள் கனமாக இருந்தன. கைகளை தூக்க முடியாதென்று எண்ணினான். தூக்கிப்பார்க்க எண்ணி அந்த எண்ணத்தையே நீண்ட நேரம் நீட்டிக்கவிட்டு சலித்து திரும்பி படுத்தான். வெளியே கரிச்சான்குருவி ஒலியெழுப்பியது. அதைக்கேட்டு காக்கைகள் சில எழுந்து கரைந்தன. பல்வேறு சிறகடிப்பொலிகளைக் கேட்டான். தட்டுமீது வௌவால்கள் சில தம்தம் என்று இருட்டை சிறகால் அடித்தபடி நீந்தி சுழன்றன. மீண்டும் கரிச்சான் ஒலி. காக்கைகளின் ஒலியைக் கேட்டபோது அவை சாரையைப் பார்த்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
தம் என்று பெரிய ஒலி கேட்டது. அப்பா ”தேங்கா விழுந்திருக்கு”என்றபடி ஈசிசேரிலிருந்து எழும் ஒலி. ”இரிடே. இந்த இருட்டில போயி ஒரு தேங்காவ எடுக்கல்லண்ணா இப்பம் என்ன? உனக்க மொதலை ஆரும் கொண்டு போக மாட்டாவ..”என்றார் போத்தி. ”அந்த தேங்காவ உமக்கு தெட்சிணையா தாறேண்ணு சொன்னா நீரு ஓடுவேரு, தாறையும் பாய்ச்சிகிட்டு. போவும்வே ”என்றபடி அப்பா கதவை திறந்து வெளியே இறங்கும் ஒலி.
கண்களை மூடியபோது இருட்டுக்குள் விழுந்துகொண்டே இருப்பதுபோன்ற எண்ணம் ஏற்பட்டது அனந்தனுக்கு. தட்டுபடி அலைபாய்ந்தது. ஏதோ தனிச்சொற்கள் அவன் மனதில் நின்று தயங்கி பின் உதிர்ந்தன. எங்கோ யாரோ மெல்லச் சிரித்தார்கள். கலீரென்ற சிரிப்பு. பாலையனின் குரல் தொலைவில் கேட்டது. ”சிரிக்கதைப் பாத்து மயங்காதிய அம்மிணி, அது யட்சியாக்கும்.” யார் யட்சி? யாரோ பின்னால் திரும்பிச் செல்கிறார்கள். நீளமான கூந்தல். கால்கள் மணலில் பதிந்து பதிந்து செல்கின்றன. ஆழமான தடங்கள். சினை எருமை செல்லும்போது தான் மணல் அப்படி அழுந்தும். அத்தனை கனமான யாரோ. யார் அது? முகம் பார்க்க முடியவில்லை. ஆற்றுமணல் மீது காற்று வீசிச்சென்று நீரை அலைபாயசெய்து கைதைப்புதர்களை புரண்டு மடஙகச்செய்து மறுபக்கம் தோப்புக்குள் சென்றது. அது சாமிநாடார் மகள் அக்னீஸ்…
கருப்பட்டி எடுக்கவந்த சாமி நாடார் தலைமீது கைவைத்து கண்களில் கண்ணீர் வழிய திண்னையில் அமர்ந்துவிட்டார். ”எனக்க சங்கு உருகுது அம்மிணியே… அவளைக் கெட்டிக்குடுக்க வாங்கின கடம் பாதி இன்னும் நிக்குது. இன்னும் ரெண்டு கொமரு நெறைச்சு நிக்குது வீட்டில… எனக்க மொவ ஏனுண்ணு ஒரு சொல்லு கேக்க மாட்டாளே… மகர மாசத்து நிலாவு போலல்லா வெளுத்து சோவ பிடிச்சு இருப்பா. இருந்தநாளுல எனக்க தங்கத்துக்கு ஒரு நல்ல சீலை உண்டா? அவ சூடுகஞ்சிவெள்ளம் ஊதிக் குடிச்சநாள் குறவு அம்மிணியே….ஞாறாம்வெளைக்கு சங்கைப் பிடிச்சுகொண்டல்லா ஓடிப்போனேன். எடுத்து கெடத்தியிருந்தாவ அம்மிணியே… எனக்க செல்லத்த பனம்பாயில… ” தலையில் மடேர் மடேரென்று அறைந்துகொண்டு சாமிநாடார் தேம்பி அழுதார்.
அம்மாவும் கண்ணீர் விட்டு அழுதபடி தூணில் சாய்ந்துவிட்டார். ”சங்கடச்சு செத்தாண்ணாக்கும் அவிய சொல்லுகது. பாஸ்டரும் டீக்கனாரும் ஒக்கே சேந்து சொல்லுதாவ. ஏழ சொல்லு கேக்க ஆளில்லா அம்மிணியே…எனக்க குட்டி கெடந்த பாயெல்லாம் பச்ச ரெத்தம்லா. அவ உடுத்த சேலையொக்கே ரெத்தம்…. அங்கிண உள்ள கோயிலிலத்தான் அடக்கணும்ணுட்டு பாஸ்டரு சொல்லுகாரு…. எனக்க செல்லத்துக்க மேல ஒருபிடி செம்மண்ணு வாரிப்போட்டுட்டு ஆண்டவரேண்ணு சங்கில ஓங்கி அடிச்சு ஒரு விளி விளிச்சேன். அம்மிணியே ஆண்டவரு மேல உண்டெங்கி அது அங்க கேட்டிருக்கும். அவருக்க கணக்குபுக்கில சகல பாவபுண்ணியங்களுக்கும் பற்றுவரவுண்டு….”
தங்கம்மா புருவத்தை சுருக்கியபடி ”அவளுக்க கெட்டினவன் பாண்டியில பனையேறப்போனவன்லா…பின்ன எப்பம் வந்தான்?” சாமிநாடார் ”எனக்க அருவ ஒண்ணும் கேக்காதே நாடாச்சியே….நான் ஒண்ணுமறியல்ல. கெட்டினபெய அவள விட்டிட்டு செண்ணு ஆறுமாசமாச்சு. வீட்டில அவளுக்க மாமனாரும் மாமியாளும் மாத்திரமாக்கும்…. எனக்கு ஒண்ணும் தெரியல்ல எனக்க ஏசுவே எனக்கு ஒண்ணும் தெரியல்ல கர்த்தாவே… ஆருகிட்ட செண்ணு கேப்பேன். கேக்கணுமானா கூரையில இருக்க பல்லிக்கிட்ட கேக்கணும்… அறையில செய்த பாவத்துக்கு நெறையில பல்லி சாச்சி…. பல்லி சொல்லட்டு…. பல்லி சொல்லட்டு நாடாச்சியே….” சாமிநாடார் மூக்கை பிழிந்தார். ”பல்லிக்கு தெரியும்…பல்லி அறியாத்த காரியங்க இல்லை…” சட்டென்று பல்லியின் இச்கிசிச்கிச் ஒலி கேட்க ”சத்தியம்…அச்சொட்டு சத்தியம்! ஏசுவே கர்த்தாவே” என்றார் நாடார்.
”ஆமா பல்லி சொல்லுகு..போவும்வேய். பல்லி எப்பளும் மேல இருந்து செலைச்சிட்டுதான் இருக்கு…”என்று தங்கம்மை சொல்லி புகையிலையை பிய்த்து வாயில் போட்டாள். ”நல்லோரு குட்டி .அதுக்கு விதியத்துப் போச்சு. அம்பிடுதான்…”
”கர்த்தாவுக்கு எல்லாத்திலயும் கணக்கு உண்டு…”
”கர்த்தாவு மயித்தினாரு… போவும்வேய்… நானும் குறெ கண்டிட்டுண்டு. ”தங்கம்மை எழுந்து கூந்தலை அவிழ்த்து முடிந்தாள்.” அம்மிங்கிரே கருபப்ட்டிக்கு உள்ள காச வாங்கணும்…. மூணுக்கு ரெண்டுரூவா மேனிக்கு போடும்வே…தட்டிப்பாத்தேருல்லா…நல்ல தேக்கு மரக்கட்ட கணக்காக்கும் சத்தம் வாறது…”
அழுந்திய காலடிகளில் எல்லாம் ஒரு சிவந்த தெற்றிப்பூ. அது ரத்தம். கொழுத்த கனத்த ரத்தம்.சற்றே சிவப்பாக மாறிப்போன ரத்தம். சாமிநாடார் மகள் அக்னீஸ் திரும்பிப்பார்த்தாள். வெளிறிய முகம். வெளிறிய சிரிப்பு. அவள் செத்துவிட்டாள் என்பது அந்தச்சிரிப்பிலேயே தெரிந்தது. ஆனால் அதே முகம்தானே அவன் சர்ச்சில் கல்யாணத்திலும் பார்த்தது…
வெகுதொலைவில் சர்ச்மணி அடித்தது. ஆர்சி கோயிலில் அதிகாலை ஜெபம். மணி பிடிவாதமாக எதையோ சொன்னது. கருப்பன் குரைத்தது. அப்பா தொலைவில் ஏதோ சொல்லும் ஒலி. போத்தி கிளம்பிச் செல்கிறார். அனந்தன் புரண்டு படுத்தான். படுத்திருந்த இடம் சூடாக இருந்தது. தலையணையில் எச்சிலின் ஈரம் குளிர்ந்தது. எச்சிலுக்கு வினோதமான நாற்றம். என்ன நாற்றம் அது? அனந்தன் அதையே நினைத்துக் கொண்டிருந்தான். அந்நினைவு முடிவடையவில்லை.