அப்பா கையில் ஒரு கம்புடன் மூச்சிரைக்க ஓடிவந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அனந்தன் உரக்க கத்தியபடி போத்தியின் பிடிவிட்டு இறங்க முயன்றான். அவர் கைகள் இரும்பாலானவை போல இருந்தன. நிறைய முடியுள்ள மார்பில் அவனுடைய கன்னம் உரசி புல்லில் முகம்பட்டதுபோல கூசி அரித்தது. அப்பா வந்த வாக்கிலேயே கம்பை ஓங்கியபடி ”சீ வாய பொத்துடா எரப்பாளிக் கூதற..”என்று கூவினார்.
”தங்கப்பா சொல்லுவதை கேளுடே…வேண்டாம்…”என்று போத்தி சொன்னார். ”நீ மிண்டாம வாடே ..அவன் இப்பம் செரியாயிருவான்…” ”நல்ல அடிக்க குறவு அவனுக்கு… மோங்கிறத பாத்தேரா நாய் மோங்குதது மாதிரி… டேய் நிறுத்து… பொத்து பொத்துடா…”.
போத்தி அவனைக் கொண்டுவந்து முற்றத்தில் இறக்கிவிட்டு இருகைகளையும் பிடித்துக் கொண்டார். அனந்தன் எம்பி எம்பிக் குதித்து ”அம்மாக்கிட்ட போறேன்!” என்று கதறினான். போத்தி ”சொன்னா கேக்கணும். நீ நல்ல பிள்ளையில்லா? காறில எடமில்லை. நாளைக்கு பஸ்ஸில ஏறி நட்டாலம் போலாம். கொச்சனந்தனும் அண்ணனும் ரெண்டாளும் சேந்து சட்டையெல்லாம் போட்டுட்டு போலாம்” என்றார்.
அனந்தன் அவரை நம்ப முடியாமல் பார்த்து ”இல்ல…” என்றான். ”நான்ல சொல்லுகேன்…போலாம்டே” என்றார் போத்தி. அனந்தன் விசும்பியபடி அமைதியானான்.
”செல்லம் குடுத்து செல்லம் குடுத்து மக்கு மண்ணாந்தையாட்டு வளத்து வச்சிருக்கா… பாத்தேரா?”என்றா அப்பா. போத்தி ”நீ கொஞ்சம் சும்மா இருடே”என்றபடி திரும்பியவர் அனந்தனின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டார். ”வாடே மக்கா …நல்ல நாயருண்ணாக்க பிராமணன் சொன்னாக் கேக்கணும்… மிண்டாத வா…உன்னை நான் நாளைக்கு தெற்றிகோட்டு பகவதி கோயிலுக்கு கூட்டிட்டுப்போறன்” என்றார்.
அனந்தன் சட்டென்று அப்பாவை நோக்கி கைநீட்டியபடி கிர்ரீச்சிட்ட குரலில் ”நீதான் மக்கு. சொத்துக்காட்டு எங்க அம்மாவை அடிச்சு கொல்லுதே” அப்பா அப்படியே வாய் திறந்து நின்றுவிட்டார். போத்தி ”டே டே”என்று கூவியபடி அருகே வந்தார். ”நீதான் மக்கு மண்ணாந்தை. தப்பு தப்பாட்டு எழுதுதே… ” என்று கூவினான். அனந்தன் ” •பௌண்டன் பேனா வச்சு எழுத தெரியாத்த மக்கு… ஜோசியர் போத்திதான் புத்திமான். நீதான் மக்கு .போடா”என்றான்.
அப்பா அப்படியே பாய்ந்து வந்து சுளீர் சுளீர் என்று அடிக்க ஆரம்பித்தார். அனந்தன் ஓடாமல் அப்படியே நின்றபடி ”போடா மக்கு! போடா மக்கு!”என்று கூவினான். அப்பா அவனை அடித்த கம்பு உடைந்ததும் அவனை தரதரவென இழுத்துக் கொண்டுசென்று வைப்புமுறிக்குள் தள்ளி கதவை இழுத்து வெளியே தாளிட்டார்.
அனந்தன் அழுகையை நிறுத்திவிட்டு அப்படியே இருட்டில் அமர்ந்தான். தேம்பல் மட்டும் அவனை மீறி ஒலித்துக் கொண்டிருந்தது. பிறகு உடலெங்கும் அடிகள் எரிவதை உணர்ந்தான். முழங்கையில் அடிபட்ட இடத்தை எச்சில் தொட்டு தடவி ஊதினான். அறைக்குள் ஒளியே இல்லை. ஆனால் மெல்ல பத்தாயம் பெட்டி எல்லாவற்றையும் கண்ணால் உணர முடிந்தது.
அனந்தன் சற்று நேரம் அப்படியே கூர்ந்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். மெல்ல எழுந்து போய் அப்பாவின் ஆதாரப்பெட்டியை திறக்க முயன்றான். அது பூட்டியிருந்தது. பக்கத்தில் இருந்த அவரது உடுப்புபெட்டியைத் திறந்தான். ஈட்டி மரத்தாலான பெட்டியின் மூடி மிகவும் கனமாக இருந்தது உள்ளே அப்பாவின் கோட்டு சூட்டும் பட்டுவேட்டியும் சட்டையும் தனியாக இருந்தது. சில பழைய வேட்டிகள். அப்பாவின் துணிகள் எல்லாம் அலக்குகாரியிடமிருந்து வாங்கி நேராக அலமாராவில்தான் கொண்டுபோய் வைப்பாள் அம்மா.
அனந்தன் அந்தபெட்டிக்குள் மூத்திரம் அடித்தான். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தான். நல்ல இருட்டு. பிடரி சிலிர்த்தது. உடல் உலுக்கியதில் இரு கடைசிச் சொட்டுகள் உதிர்ந்தன.
பெருமூச்சுடன் மீண்டும் வந்து கதவை ஒட்டி அமர்ந்துகொண்டான். கைகால்களில் வீங்கி இருப்பதைப் பார்த்தபோது அவனுக்கு ஆங்காரம் பொங்கி பொங்கி வந்தது. ”போடா நாயி போடா பண்ணி ” என்று பல்லைக் கடித்தபடி தலையை ஆட்டி ஆட்டி தண்ட்டினான். பின்பு அவன் எத்தனை இறுக்கமாகப் பல்லைக் கடித்திருக்கிறான் என்று அவனே உணர்ந்தான். மெல்ல உடல் இறுக்கம் இழந்தபோது சூழ்ந்திருந்த இருட்டின் கனமும் நெடியும் அவனை மூச்சடைக்கச் செய்தன.
அனந்தனுக்கு திடீரென்று மண்ணுக்குள் இருப்பதுபோல இருந்தது. மேலே அவனுடைய வீட்டை சிதல் மூடிவிட்டது. ஆழத்தில் அவன் மட்டும் மிஞ்சியிருக்கிறான். சிதல்களின் மனம் அடிக்கிறதா என்று அனந்தன் பார்த்தான். பாச்சா உருண்டை எலிப்புழுக்கை வீச்சம் மட்டும்தான். வெளியே அப்பா மிக மங்கலான குரலில் குழறிக் குழறி பேசுவதும் போத்தி நிதானமான குரலில் ஏதோ சொல்வதும் கேட்டது. அந்த அறைக்குள் ப்படி தனியாக இருப்பதில் ஒருவிதமான இன்பத்தை உணர்ந்தான். அவனை யாருமே பார்க்கவில்லை. கதவிடுக்குவழியாக பார்க்க முடியாது. யாருமே இல்லை. அவன் மனதில் கிருஷ்ணவேணியின் நினைவு எழுந்தது. கரிய மார்பின் பிளவை அப்போது மிக அருகே தெளிவாக பார்க்கமுடியும்போல. கன்னங்களின் வழவழப்பு. உதடுகளின் நாகப்பழ நிறம், அவற்றின் உட்புறம் நாகப்பழத்தின் சதைபோன்ற சிவப்புக்கருமை…. ஒளிரும் வெண்பற்கள். வெண்பளிங்குக்கல் வரிசை போல. பாலையன் ஒருமுறை மலையில் பொறுக்கிய உருண்டையான வெண்பளிங்குக் கற்களை அம்மாவுக்கு தாயம் விளையாடக் கொடுவந்து கொடுத்தான். எட்டணாவுக்கு . அம்மா அவனிடம் பலாமரத்தில் ஏறி உச்சிக்கிளையில் இருந்த ஒற்றைப் பலாக்காயை பறிக்கச் சொன்னாள். பலாமரத்துக்கு மிகப்பெரிய தடி. ஏறவே முடியாது.ஆனால் பாலையனால் செய்ய முடியாத எதுவும் இல்லை. அவன் ஒரு வடத்தை கிளைக்கவர் வழியாக எறிந்து கட்டி அதைப்பற்றியபடி மரத்தின்மீது சாய்வாக நடந்தே ஏறினான். அவன் பாளைத்தார் பாய்ச்சிய தொடைகளின் தசைகள் தெறித்து நின்றன. பலாக்காய் கயிறில் கட்டப்பட்டு மெல்ல கீழே இறங்கி வந்தது. ”பாலையா சாயை குடிக்கியாடே?”என்றாள் அம்மா. ”கருப்பட்டி சாயை குடிச்ச வேற ஆளைப்பாக்கணும் அம்மிங்கிரே, நான் சீனியில்லாம சாயைய கையாலத் தொடமாட்டேன்..”என்றான் அவன். பாலையனும் கறுப்புதான். வியர்வையில் மின்னும் தோல். ஆனால் கிருஷ்ணவேணி இன்னும் கறுப்பு. எண்ணை பூசப்பட்ட கற்சிலைபோல கறுப்பு. சிலைபோல நீளமான பெரிய கண்கள்…
அனந்தன் மீண்டும் அவனை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். கால்களை நீட்டிக்கொண்டு தளர்ந்து தலைசாய்த்து அமர்ந்தான். அப்பா தூங்கும்போது அம்மிக்குழவியை தூக்கி தலையில் போட்டுவிடவேண்டும். அவர் செத்ததும் ஒரே ஓட்டமாக ஆற்றில் இறங்கி மறுபக்கம் ஏறி அருமனை போய் அப்படியே பஸ் ஏறி திருவனந்தபுரம் போனால் யாருமே பிடிக்க முடியாது. திருவனந்தபுரத்தில் பையன்களை ஓட்டலில் வேலைக்கு எடுப்பார்கள். இலைவியாபாரி சங்கரனின் மகன் வக்காடு கோவிந்தன் ஓட்டலில் போய் நின்று விட்டு திரும்பும்போது குண்டாக பளபளவென்று இருந்தான்.
அதற்கு பணம் வேண்டுமே. அனந்தன் எழுந்துபோய் பெட்டிகளை திறந்து பார்த்தான்.எதிலும் பணம் ஏதும் இல்லை. அப்பாவின் உடுப்புபெட்டியில் அவனது மூத்திரம் நாறியது. மீண்டும் வந்து அமர்ந்துகொண்டான். அப்பா நாளை பெட்டியை திறந்தால் என்ன ஆகும்? அவனுக்கு பயமாக இருந்தது. ஆனால் அதற்குள் அவன் அப்பாவை கொன்றுவிடுவான். விஷம் எடுத்து சாப்பாட்டில் கலக்கலாம், ஊமத்தைச் செடியில் கிழக்கு நோக்கிப்போகும் வேர் கடுமையான விஷம் .நல்லபாம்பின் நாக்குக்குநேர் என்று மெம்பர் வைத்தியர் சொல்லி அவன் கேட்டதுண்டு.
அனந்தன் சட்டென்று அவனை யாரோ பார்ப்பதுபோல உணர்ந்தான். அறைக்குள் வெறு எவரோ அமர்ந்திருப்பதுபோல இருந்தது. அனந்தன் திடுக்கிட்டு உடல் நடுங்க எழுந்து கண்களைத் திருப்பவும் அவளைப் பார்த்துவிட்டான். அறைமூலையில் கரிய உடல் அப்படியே இருளோடு கரைந்து போயிருக்க கூந்தலை விரித்துபோட்டபடி முழங்காலைக் கட்டிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். வாய் திறந்து பார்த்தபடி சிந்தனை இல்லாமல் அவளை நோக்கி முன்னால் நடந்து சென்றான். அவள் கண்கள் கண்ணாடியாலானவை போல மெல்ல மின்னின. மெல்ல அவனைப்பார்த்து புன்னகை புரிவதை கண்களின் ஒளி அதிகரிப்பதிலேயே உணர முடிந்தது. அவள் அவனை நோக்கி கையை நீட்டும் அசைவு இருளுக்குள் நிகழ்வதைக் கண்டன்.
உடலில் தீ எரிவதைப்போல துடிதுடித்து அலறியபடி அனந்தன் கதவில் மோதி கிழே சரிந்தான். மீண்டும் எழுந்து கைகலாலும் கால்களாலும் கதவை முட்டி அடித்து உதைத்து கதறினான். கதவு படீரென்று திறக்க ஒளி தன் முகத்தில் அடிக்க அவன் கைகளால் முகத்தை மூடியபடி முன்னால் பாய்ந்து போத்தி மீது மோதி றுண்டு விழுந்தான்.
போத்தி அவனை தூக்குவதை அவனால் உணர முடிந்தது. அறைக்குள் கைநீட்டியபடி நெஞ்சில் சொற்கள் இல்லாமல் வாயில் ஒலியே எழாமல் அவன் கூவினான். அவன் இடது காலும் கையும் மட்டும் இழுபட்டு துடித்தன. அப்பா அறைக்குள் எட்டிப்பார்த்தார். டார்ச்சை எடுத்து அடித்தார்.
அனந்தன் போத்தியிடமிருந்து சரிந்து இறங்கி தரையில் நிற்க முயன்றபோது அவனுடைய இடது கால் இல்லாமலாகியிருப்பதை உணர்ந்தான். வலது கால்மட்டுமே மண்னைத் தொட்டது. இடது பக்கமாகச் சரிந்து கீழே விழுந்த போது கையும் இல்லாமலாகியிருப்பதை அறிந்தான். அவன் நினைப்பது எதுவுமே நாக்குக்கு வந்து சேரவில்லை. அவன் எழ முயன்றபோது முதுகுத்தண்டில் ஒரு சூடான அல்லது மிக குளிரான தொடுகை. அவன் உடல் விதிர்த்தது, உடனே அவன் கைகால்கள் எல்லாம் இழுபட்டு துடிக்க ஆரம்பித்தன.
அப்பா, ”மக்களே!”என்று அடித்தொண்டையில் கூவியபடி ஓடிவந்து அவனை அப்படியே தூக்கிக்கொண்டார். அவனைத் தோளில் போட்டபடி ”மக்களே! எனக்க பொன்னு மக்களே!” என்று அலறியபடி படிகளில் இறங்கி ஓடினார். கால்தடுக்கி அவரது வேட்டி உருவ அதை பிடிக்காமல் கோமணம் மட்டும் உடுத்தவராக கோயில் பறம்பில் இறங்கி கிழக்கு நோக்கி கண்ணீருடன் வாய்விட்டு கூவி அரற்றியபடி ஓடினார்.
போத்தி அப்பா பின்னால் ஓடியபடி ”தங்கப்பா ! சொல்லுகதைக் கேளு…டே தங்கப்பா”’ என்று கூவினார். எதிரே அறைப்புரை வீட்டில் கேசவ பிள்ளை வந்தார். போத்தி அவரைப்பார்த்து ”பிடியுங்க பிடியுங்க அவனை ” என்றார். அவர் அப்பாவை பிடித்தார். அப்பா அப்படியே தளர்ந்து அவர் தோளுக்கு அனந்தன்னை மாற்றியபடி ”எனக்க பிள்ளை… போத்தியே எனக்க பிள்ளை!”என்று கண்ணிருடன் அரற்றினார்.
”பாப்பம்….ஒண்ணும் ஆகல்ல. என்னமோ கண்டு பயந்து போட்டு….இப்ப எங்க தூக்கிட்டு ஓடுதே” என்றபடி போத்தி அவனை கிழக்குநடை கல் திண்ணையில் படுக்க வைத்தார். கேசவ பிள்ளையிடம் ”ஓடிசெண்ணு வைத்தியர வரச்சொல்லும்வே”என்றார். கேசவ பிள்ளை திரும்பியபோது கண்ணனும் செவத்தானும் ஓடி வருவதைக் கண்டு ”லே செவத்தான்…ஓடிச்செண்ணு மெம்பர் வைத்தியர வரச்சொல்ல்லுடே”என்றார்.
கண்ணன் ”பாம்பு கடிச்சுபோட்டோ… வெட்டி உறிஞ்சணும்” என்றான். போத்திக்கு அப்போதுதான் அந்த எண்ணம் வந்து அனந்தனைப்புரட்டிப்போட்டு தேடினார். அனந்தன் வாய் ஓரத்தில் நுரை கசிந்திருக்க இடது கையை மார்போடு சேர்த்து வளைத்து வைத்திருந்தான். கருவிழிகள் பாதிமூடிய இமைகளுக்குள் மறைந்து கண்வெள்ளை தெரிந்தது. நாக்கு கடிபட்டு நின்றது.
”கண்டா கடியெண்ணே தோணும். ஆனா கடித்தடமில்ல”என்றான் கண்ணன். அப்பா தளர்ந்து அப்படியே தரையில் அமர்ந்து கல்தூணில் தலைசாந்த்து அமர்ந்திருந்தவர் தலையில் மடேர் மடேர்ன்று அறைந்தபடி ” அய்யோஒ அய்யோ எனக்க பிள்ளை” என்று கூவி அழுதார். ”சும்ம இரும்வே….ஒண்ணும் ஆகல்ல..”என்றார் கேசவ பிள்ளை
தோட்டுச்சரிவில் பாலையன் ஏறிவந்தான். ”மாறணும் மாறுங்க…” என்று அனைவரையும் பிடித்து தள்ளி அனந்தன்னைப்பார்த்தான். ”கடி இல்லை”என்று உடனே சொன்னான். ”நெஞ்சடைச்சதாக்கும். வல்லதும் கண்டு பயந்திட்டுண்டு. அல்லெங்கி தலைக்கு அடி பெட்டிட்டுண்டு” அனந்தனின் உள்ளங்காலை சுரண்டிப்பார்த்தான். மேல் காதிலிருந்த பீடியை எடுத்து சட்டென்று தீக்குச்சி உரசி பற்ற வைத்து இரு இழுப்பு இழுத்தபின் அனந்தன் காலில் கனலை வைத்தான். சூடு பட்டதும் அனந்தன் காலை வெடுக் என்று உதறி ஒருமுறை தூக்கி போட்டான். நாக்கு உள்ளே போய் கண்கள் உருள ஆரம்பித்தன.
பாலையன் மீண்டும் அடுத்த காலில் சுட்டதும் அனந்தன் ”ஆ!”என்று அலறியபடி காலை உதறி எழுந்தான். பரபரவென கூடியிருப்பவர்களைப் பார்த்தான். பாலையன் அவன் கன்னங்களில் படீர் படீரென்று அறைந்து ”அப்பி இஞ்ச பாக்கணும்…அப்பி… ”என்றான்
அப்பா”மக்களே”என்று கூவியபடி அவன் கால்களை எட்டிப்பிடித்து உள்ளங்கால்களை மாறி மாறி முத்தினார். கண்ணீர் வழிந்த கன்னங்களை அனந்தனின் கால்வெள்ளையில் வைத்து தேய்த்து பின் கால்களை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டார்.
”இவரக் கொஞ்சம் பிடியுங்க…”என்றான் பாலையன்..”அப்பி இஞ்ச பாக்கணும் இது பாலையனாக்கும். பாலையன் இருக்கும்பம் அப்பி என்னத்துக்கு பயருது? பாத்தேரா கைய, இரும்பாக்கும்..”அவன் தன் முஷ்டியைக் காட்டினான்.
அனந்தன் அவன் முஷ்டியை எட்டிப்பிடித்துக் கொண்டு ”முறியில…. முறிக்குள்ள ஒருத்தி கறுப்பாட்டு…” என்றான். கூட்டம் முழுக்க பலவிதமான வியப்பொலிகள் ஏற்பட்டன. கண்ணன் ”மகாதேவா!”என்றான். பாலையன் ”அவள நான் பாத்துக்கிடுதென்.அப்பி சமாதானமாட்டிருக்கணும். பாலையனில்லா சொல்லுகேன்”’என்றான். அனந்தன் ”அவளுக்க முடி நீளம்…”என்றான்
பாலையன் தன் இடுப்பிலிருந்த சிறிய குப்பியை எடுத்து முருக்குக் கார்க் மூடியை கடித்து துப்பி அதில் எஞ்சிய கலங்கலான திரவத்தை அனந்தனுக்கு ஊட்டினான். அது எரியும் ஆவியுடன் புளித்த நெடியுடன் நாக்கை காந்தவைத்து தொண்டையை சுட்டபடி உள்ளே இறங்கியது. அனந்தன் திமிற பாலையன் அவனை இறுகப் பிடித்து நாலைந்து மிடறு குடிக்கச் செய்தான். ”ஒண்ணும் இல்ல. இப்பம் உறங்கிப்போடுவாரு. ஒறங்கி எழிக்கும்பம் செரியாயிரும்…”
”நல்ல ஒரு ரெட்சை எழுதிக்கெட்டனும்…”என்றார் கேசவ பிள்ளை. கண்ணன் ”அதுக்கு மின்ன அந்த முறியில ஒரு ஒழிப்பிக்கல் கர்மம்நடத்தனும். ”என்றான். அப்பா அனந்தன் கால்களை வருடியபடி முற்றிலும் அமைதியாகி இருந்தார்.
மெம்பர் வைத்தியர் ஓடிவந்தார்.”மாறுங்க…காத்து வேணும்லா… எளவு எங்க போனாலும் கூட்டம்லா இந்தியா மகாராஜ்யத்திலே”என்றபடி அவனை அணுகி கூர்ந்து பார்த்தார். ”ஆரு பாலையனா? உனக்க வைத்தியம் பாத்தாச்சாலே?” என்று அவன் நாடியை பிடித்துப் பார்த்தார்.”கொள்ளாம். பிரயோசனம் இருக்குடே…ஒறங்கட்டு. பிறவு ஒரு மருந்து செய்து பாப்பம்…” என்றபின் எழுந்து ”கொண்டு செண்ணு கெடத்துங்க. எந்திரிச்சா இன்னும் ஒரு ரண்டு மடக்கு குடுங்க… நல்லா ஆறட்டு….ஆருக்க சரக்குடே பாலையா? நம்ம எறும்புகக்ண்ணன் சங்கரனா காச்சினான்?” புட்டியை வாங்கி முகர்ந்து ” நயம் சரக்கு. அவனுக்கு தொளில் தெரியும்… செரி களி முடிஞ்சாச்சு. எல்லாம் வீடுகளுக்கு போங்க…”
பாலையன் எளிதாக அனந்தனைத்தூக்கி அசைக்காமல் வீட்டுக்குக் கொண்டுசென்றான். அனந்தனுக்கு வாந்தி வருவதுபோல இருமுறை உடல் உலுக்கிக் கொண்டது., எச்சில் மட்டும் கொழகொழவென வழிந்து பாலையன் உடலில் சொட்டியது. உள்ளே அவனுடைய தட்டுபடியில் அனந்தனை மெல்ல படுக்க வைத்து தலையணையை எடுத்து வைத்தான் பாலையன்.
தங்கம்மை ”அய்யோ எனக்க பிள்ளை!”என்று அலறியபடி ஓடி வந்தாள். ”செரி இனி உனக்க குறவு மட்டும்தான். சும்மா கெடப்பியா?”என்று பாலையன் அதட்டினான். ”…பறம்பில கெடந்த பாத்திரத்த எடுக்கபோனேன் ஏமானே…”என்றாள் தங்கம்மை.
அனந்தன் நன்றாக வியர்த்து குளிர்ந்து கைகால்கள் இனிமையான குடைச்சலுடன் தளர, மல்லாந்து படுத்தபடி தலையை மட்டும் புரட்டினான். ”தங்கம்மை…நீ அவள …அவ கறுப்பாக்கும்…. அவ கண்ணு…. அம்மா… அம்மா போயாச்சு…”என்று சொன்னான்.
”செரி ஒண்ணுமில்ல… தங்கம்மையே ஒரு கட்டன் சாயை போடுட்டீ எல்லாருக்கும்… தங்கப்பன்நாயருக்கு அதில ஒரு சொட்டு நாரங்கா இருந்தா பிளிஞ்சு குடு…” என்றார் போத்தி. கலைசலான பேச்சொலிகள். வெளியே ஆடிக்காற்று மரங்களைச் சுழற்றி அடித்தது.
பெரிய பெரிய பஞ்சுப்பொதிகளை அவன் எண்ணங்கள் மீது போடுவது போல எடை ஏறி ஏறி ஒவ்வொரு சொல்லையும் யோசிக்கவே நீண்ட நேரம் ஆயிற்று. அவன் ” கண்ணு கண்ணு”என்று அதே சொல்லையே அடுத்த சொல்லுக்கு போக முடியாமல் யோசித்துக் கொண்டிருந்தான். வாயிலிருந்து எச்சில் வழிய உள்ளங்கால்கள் இருபக்கமும் விடுபட்டு விழ மெல்ல தூங்கிவிட்டான்.
தூக்கத்தில் அனந்தன் அண்ணா உரத்த குரலில் திட்டுவதும், அழுவது போலப் பேசுவதும் கேட்டது. அவன் கண்ணைத் திறந்தபோது இருட்டாக இருந்தது. ஜன்னலுக்கு அப்பால் காற்றில் தென்னைஓலிகளின் நிழல்கள் ஆடின. சாரலும் காற்றும் ஆயிரக்கணக்கான விசில்களை சேர்த்து ஒலித்தபடி சுழன்றடித்தன.
அருகே நார்க்காலியில் அப்பா அமர்ந்திருந்தார். ஒரு துண்டுமட்டும் போர்த்தியபடி இருட்டுக்குள். அவரது தலை ஆடி ஆடி விழுந்தது. சட்டென்று அவன் பார்ப்பதை உணர்ந்து எழுந்து கூர்ந்து பார்த்தபின் டார்ச்சை சுவரில் அடித்து வெளிச்சம் உருவாக்கி அவனைப் பார்த்தார். எழுந்து அவனருகே குனிந்து அவன் தலைமயிரை மெல்ல தடவி ”என்ன வேணும் மக்கா? வெள்ளம் வேணுமா?”என்றார். அம்மாவின் கைபோல கடினமாக இல்லாமல் அப்பாவின் கை மென்மையாக இருந்தது. சூடான கனமான கை.
அனந்தன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி கன்னங்களை நனைத்து காதுகளில் நிறைந்தது. தொண்டை அடைத்தது. அப்பா ” என்ன மக்கா? என்ன வேணும் சொல்லு? கொஞ்சம் சூடு வெள்ளம் தரட்டா?”என்றார். அனந்தன் தன் கையை அவரது கைமேல் வைத்தான். முழங்கையின் அடர்ந்த மயிர். கெட்டியான எலும்புகள். அவன் அவர் விரல்களை தன் குளிர்ந்த நடுங்கும் விரல்களால் பிடித்தான். சுட்டுவிரல் நுனியில் பேனா பிடித்த தழும்பு. அவன் நடுவிரலைத் தொட்டான். அதன் பக்கவாட்டிலும் பேனா பிடித்த தழும்பு. விரல்களால் அவற்றி வருடிக் கொண்டு அவன் புன்னகை பூத்தான். அப்படியே மீண்டும் தூங்கி விட்டான்.
கருப்பனின் குரைப்பொலியைக் கேட்டு அவன் மீண்டும் விழித்துக் கொண்டான். காற்று அடங்கி மழைத்துளி சொட்டும் ஒலி மட்டும் கேட்டது.” டேய் தங்கப்பா டே” போத்தியின் குரல். அப்பா எழுந்து டார்ச் அடித்து சென்று கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்து ”ஆரு போத்தியா? வாரும்…என்னவே?”என்றார்
”ஒறக்கம் வரலல்டே.”என்றபடி போத்தி ஏறிவந்தார். ”மூத்தவன் வந்தானா? ” அப்பா ”அவனுக்கு வாழை கொலைச்சிருக்கில்லா?”என்றபடி உள்ளே வந்தார். ”எளவு ஆடிச்சாரல் மகரமாசம் மாதிரில்லா குளிருது…”என்றபடி போத்தி பின்னால் வந்தார். ”எப்பிடி இருக்கான்?” அப்பா, ”ஒறங்குதான்”என்றார். இருவரும் ஓசையில்லாமல் நடந்து அனந்தன் அருகே வந்து நின்றார்கள். போத்தி உடலில் சாம்பிரானிமணமும் தழைமணமும் அடித்தது. ”ஒறங்கட்டு”என்றார் போத்தி
இருவரும் வெளியே போய் அமர்ந்துகொண்டார்கள். வெற்றிலைபோடும் ஒலிகள் கேட்டன. சற்றுநேரம் கழிந்து வெற்றிலை சேரும் மணம் எழுந்தது. ”இண்ணைக்கு ஒரு கண்டமாக்கும் நீ தப்பினே தங்கப்பா” என்றார் போத்தி. ”உனக்க தந்தையான்மாரு செய்த நல்ல காலம்ணு வை.. போட்டு அந்தமட்டுக்கும் ஒரு குறவும் இல்லாம போச்சு” .
அப்பா பெருமூச்சு விட்டார். தொண்டையை ஏதோ அடைப்பதுபோல அவர் காறிக்கொள்வது கேட்டது.சீவிடுகளின் ஒலி. தட்டின்மீது எலிகள் ஆசாரி சீவுளியை சீவும் ஒலியை எழுப்பியபடி மரத்தளத்தை பிராண்டி ஓடும் ஒலி. அனந்தன்னின் தட்டுபடிக்கு அடியில்கூட ஒன்று ஓடியது. அடியில்தான் மரச்சீனி வத்தல் வைத்த பெரிய மரப்பெட்டி இருந்தது.
அனந்தன் மெல்லிய கிரிகிரு ஒலி ஒன்றைக்கேட்டான். மிக மெலிதாக காலுக்கு அடியில் கேட்டது அது. கேட்டதா என்றுகூட அவனால் நிதானிக்க முடியாத ஒலி. அப்பாவும் போத்தியும் பேசும் ஒலியுடன் அவ்வொலியும் இயல்பாக இணைந்துகொண்டது. அவர்கள் அதைக் கேட்கவில்லை. போத்தி ”மணி என்னடே ?” என்றார். அப்பா ” மூணரை.”என்றார். போத்தி பெருமூச்சுவிட்டபடி எழுந்து சென்று துப்பினார்.
”விசாலத்துக்க அண்ணன் வந்து காறில இருந்தான். இவளைக் கண்டதும் வேற பக்கமாட்டு திரும்பிட்டான். இவ அழுதா. அவனும் அழுதாண்ணு நெனைக்கேன்….”
”தாயளி கும்பிடு கள்ளனாக்கும்… நம்பப்படாது” என்றார் அப்பா.
”தங்கப்பா…நீ ஒரு காரியம் மனசிலாக்கணும்.நான் இத இண்ணு நேத்து சொல்லல்ல, உன்னை அறிஞ்ச நாள் முதலா சொல்லிட்டு வாறேன். மனுஷங்க வேனூம்டே நமக்கு. நாம காட்டில இருக்க சிங்கம்புலியொண்ணும் இல்ல. மனுஷனாக்கும். மனுஷன்மாரு பலவிதமாட்டு இருப்பாக. நாம அதையெல்லாம் பொறுத்து நம்ம ஆளுக நமக்கு வேணும்ணுட்டு இருந்தா எல்லாரும் உண்டு… ”
”எனக்கு ஒருமயிரனும் வேண்டாம்…போகச்சொல்லும்வே” அப்பா சொன்னார்.
”அப்டி சொன்னா ஆச்சா? நாளைக்கு உனக்கு ஒண்ணுண்ணா ஆளு வேண்டாமா? பிள்ள குட்டி இருக்கே”
”இங்க பாரும்வேய் போத்தி, நான் இதே திருவைப்பிலயும் திருவட்டாறிலயும் குழித்துறையிலயும் குலசேகரத்திலயும் ஒரு வாய் சோறுக்கா அலைஞ்சிட்டுண்டு. அண்ணைக்கு விளிச்சு இந்தாடே ஒரு சாயகுடீண்ணு அஞ்சு பைசா ஒருத்தனும் தந்தது இல்லை. நாயராப் பொறந்துட்டு நான் பெருவட்டம்மாருக்கு சாணகம் சொமந்திருக்கேன்வே. சொந்தக்காரனொக்கே என்னைப் பாத்தா வேற பக்கம் பாப்பானுக. என்னைய விட எட்டும் பத்தும் வயசும் சின்ன பயக்க என்னை டே தங்கப்பா இந்த குட்டைய எடுத்து அந்தால போடுடேண்ணு சொல்வானுக. எல்லாம் கண்டாச்சுடே. நான் வளந்தது பாண்டிக்காரன் சகாயத்தால. எனக்கொரு நல்லபுத்தி தோணி திர்ணவேலிக்கு பஸ் பிடிச்சேன். பாண்டிக்காரத் தேவன்மாரு இட்ட சோறாக்கும்வே இந்த ரெத்தம். அல்லாம இங்க உள்ள நாறக்கூதிமகனுக குடுத்தது இல்லை…” அப்பா மூச்சிரைத்தார்.
”பாண்டியில நான் சாயைக்கடையில சோலி பாத்திட்டுண்டு. வெள்ளம் கோரி விறகு பொட்டிச்சு… ஆனா படிச்சவன் எண்ணு ஒரு மரியாதை இருந்தது. மாயத்தேவரு கனிஞ்சு என்னை சர்க்கார் ரேஷனில சேத்து விட்டாரு. இண்ணைக்கு இந்தா அலக்கின முண்டும் நேரியதும் போட்டுகிட்டு தறவாட்டு நாயரா இருக்கேன்…. அப்பம் தேடி வந்தானுக, பெண்ணும் பெடைக்கோழியுமாட்டு…. எனக்கு சொந்தக்காரங்க ஒரு மயிரானுக்க ஓசாரமும் வேண்டாம். எனக்குள்ளது கணக்கு கணக்காட்டு எனக்கு கிட்டணும். என்னைய ஒறக்கி கெடத்திட்டு போறதுக்கு எவனையும் விடமாட்டேன்… அது வேற காரியம்…” அப்பாவின் குரல் எழுந்தது.
”நீ வெட்டுபோத்து மாதிரியாக்கும்டே தங்கப்பா உனக்க கிட்ட வேதாந்தம் ஓத முடியாது…. பின்ன ஒண்ணு மட்டும் சொல்லுகேன் முறுக்கிப்பிழியதுக்கு ஒரு கணக்கு உண்டு பாத்துக்க. வலிச்சு பிழிஞ்சா துணி கீறிப்போகும்”
”மயிரே போச்சு…”அப்பா இடை மறித்து கூவினார்.” இருந்தா அந்தசாட்டு இருக்கணும். இந்த நாறிகள் நடுவில வீடும்பறம்பும் மாடும் கண்ணுமா அந்தசுள்ள தறவாட்டுக்காரனாட்டு இருக்கணும். இல்லேண்ணா சாவணும். குனிஞ்சு நிக்க என்னால முடியாது…. வேய் போத்தி, இருபது வருஷம் முன்ன மெட்ரிக் பாஸாயிட்டு நாய்பெடா பாடுபட்டுட்டு இங்கேருந்து போனேன் பாரும் அப்பம் நான் நெஞ்சில உறைச்சதாக்கும்வே இங்க வந்து இந்த மன்ணில அந்தஸாட்டு நிப்பேன்ன்னு. என்னை விரல ஆட்டி விளிச்ச ஓரோ நாயும் என்னைப்பாத்து கக்ஷத்தில துணிய வச்சு நிக்கனும்னுட்டு… அல்லாம நான் இங்க வந்தது சும்மா மூஞ்சறதுக்காட்டு இல்லை…. பாரும்…”
”அதைத்தாண்டே நானும் சொல்லுகேன். என்னைய பாரு, எனக்க ஆளு ஆராக்கும் இங்க எனக்கு உள்ளது? இந்த நாட்டில நான் ஒருத்தன் மட்டுமாக்கும் பிராமணன். இன்னொரு பிராமணனைப் பாக்கனுமானா கோமணத்த இறுக்கீட்டு நடந்து திருவட்டாறுக்கோ திற்ப்பரப்புக்கோ போகணும்…. ஆனா இந்த ஊரில ஓரோருத்தரும் எனக்க சொந்தக்காரனாக்கும்டே. இண்ணைக்கு வரை ஒண்ணுக்கும் ஒரு குறையும் வந்ததில்ல. சிற்றப்பன் போத்திக்கு போனவருஷம் டை•பாயிடு வந்தப்பம் ராப்பகல் வீட்டில வந்து நிண்ணு பாக்கதுக்கு ஆளு வரிவரியாட்டு நிண்ணாங்க… ஏண்டே? அஞ்சு பைசா ஒராளுக்கு குடுக்க என்னால முடியாது. தட்சிணை வாங்கி திங்குத ஜாதி . பின்ன என்னடே? நான் ஒருத்தரையும் நீக்கி நிறுத்தமாட்டேன். நான் தெய்வத்துக்க கிட்ட கும்பிட்டு கேக்கது ஒண்ணுதான், மனுஷனை நல்லவன் கெட்டவன்னு பிரிக்குத பேத புத்தி எனக்கு வரப்பிடாது…. அகங்காரம் அதிலேருந்து பேதபுத்தி, பேதபுத்திதான் நரகம். கீதையில உள்ள சொல்லாக்கும்….”
”ஆமா கீதையும் ஓதையும் ,வேற சோலி இல்ல. போவும்வே ”என்றார் அப்பா.
”நீ அப்டித்தாண்டே சொல்லுவே. உன்னை நான் காண தொடங்கினது இண்ணைக்கு நேத்தைக்கா? ” என்றார் போத்தி ” எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். ஓரோருத்தனுக்கு தர்மமும் கர்மமும் அவனுக்கு மகாதேவர் அளந்து குடுகது. எனக்கு ஆருகிட்டயும் விரோதம் இல்லை பாத்துக்க… போனவருஷம் கேப்பாரு பேச்ச கேட்டுட்டு கொல்லங்காட்டுவீட்டில ராமச்சந்திரன் ஏலா வரம்பில வச்சு என்னை குடையால அடிச்சான். அதறிஞ்சு அடுத்த நாளைக்கு நீ அவனை வெட்டப்போனே. நான் உனக்க கிட்ட என்ன சொன்னேன், எனக்காக நீ அடிக்கப்பிடாது. அடிச்சேண்ணா நான் நாண்டுகிட்டு சாவேன்னேன். சொன்னேனா இல்லியா? அடுத்த மாசம் அவனுக்க தெக்கதுல பலிகொடை. வெளுக்கும்பம் கையில எலைநெறைய தெற்றிப்பூவும் தெங்கும்பூவுமாட்டு செண்ணு கதவ தட்டினேன். என்னைக்கண்டதும் நிண்ணு முழிக்கான். அவனுக்க அம்மை வந்து கண்ணீர் விட்டா. நான் சொன்னேன் ராமச்சந்திரா நீ என்னை அடிச்சே. அதனால நீ நாட்டுகாரனும் நான் உனக்க போத்தியும் இல்லாம ஆவுயதில்ல, ஒரு அடிகொண்டொண்ணும் போற காரியமில்ல மூப்பிலான்மாரு சொல்லிவச்சதுண்ணு… கொடையும் பெலியும் நடக்கும்பம் உம்முண்ணு வச்சிட்டு நிக்கான். தெட்சிணை தாறப்பம் சட்டுண்ணு கண்ணில தண்ணி வந்துபோட்டு…. ரோடுவரை ஒப்பம் வந்து போத்தி ஒண்ணையும் மனசில வச்சுக்கிடப்பிடாதுண்ணு சொல்லுகான். போடே நீயும் உனக்க மூப்பிலான்மாரும் மக்கமாருமாக்கும் எனக்க சோறு . நாளைக்கு எனக்க பிள்ளையளுக்க சோறு.. பிள்ள குட்டிகளோட வயலும் பறம்பும் வெளைஞ்சு நல்லா இருடேண்ணு சொல்லிட்டு எறங்கி வந்தேன்…”
”நீரு நட்டெல்லு இல்லாத்த பிராமணன்லா? உம்ம தலைய வெட்டிப்போட்டுட்டு தட்சணை தந்தா கையநீட்டி அதையும் வாங்கி மடியில வைப்பேரு……அந்த நாயடமோனை அண்ணைக்கே மூத்திரம்வராம பத்துநாள் கெடத்தியிருப்பேன்…”அப்பா சொன்னபடி எழுந்து போய் துப்பிவிட்டு வந்தார்.
”வெளுக்கும்வரெ வேதாந்தம் கேட்டாலும் வெட்டெருது பசுவாகுமோ ” என்றா போத்தி.
”வேய் போத்தீண்ணு பாக்கமாட்டேன் . வச்சு சாம்பிப்போடுவேன்”
போத்தி சிரிக்கும் ஒலி கேட்டது.
[மேலும்]