[இந்த தளத்தில் ஏற்கனவே வெளியான கிளி சொன்ன கதை (கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு) குறுநாவலின் நீட்சி இக்கதை. அதே சமயம் தனியான குறுநாவலும்கூட. ஒரு பெரிய நாவலின் இரண்டாம் அத்தியாயம் என்றும் கொள்ளலாம்]
சிருஷ்டிதேவனாகிய பிரம்மதேவர் வெகுதூரம் காட்டிலும் மேட்டிலும் அலைந்து அலைந்து களைத்து கால்கடுக்க ஒரு சிறிய பாறையில் அமர்ந்தார். வலது கட்டைவிரல் மிகவும் வலிக்கவே அதை பிடித்து இழுத்துவிட்டபடி இன்னும் போகவேண்டிய தூரத்தை எண்ணி ”என் கண்ணல்ல…. என் செல்லம் தானே…. கொஞ்சநேரம் சும்மா இரும்மா”என்று கொஞ்சினார். கட்டைவிரலை அவர் பெண்ணாக நினைத்ததால் உடனே அது ஒரு அழகிய பெண்ணாயிற்று. பிரம்ம மானசம் தானே சிருஷ்டி? விரலில் இருந்து பிறந்த தேவி பிரம்மாவிடம் தன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும்படி கேட்டாள். கர்ப்பமும் குழந்தைப் பிறப்பும்தானே பெண்ணுக்கு ஜன்ம சாபல்யம்? பிரம்ம வரத்தால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பெயர் தக்ஷன். தக்ஷனுக்காக தக்ஷசீலம் என்ற நாட்டை உருவாக்கிய பிரம்மா அவனை அங்கே மன்னனாக ஆக்கினார்.
அலுப்பும் வலியும் தக்ஷனின் விதியுடன் கலந்திருந்தன. பிரம்மதேவர் அவனுக்காக தன் கால்பட்டு குழைந்த சேற்று மண்ணில் ஒருபிடி அள்ளி தரணி என்னும் பெண்ணை படைத்தார். அவளை மணம்செய்த தக்ஷன் நூறு மகன்களைப்பெற்றான். அவர்களை நூறு வருடம் பாலூட்டி சோறூட்டி வளர்த்தான். அவர்களெல்லாம் துறவு பூண்டு ரிஷிகளாக மாறினர். வயதாகி மெலிந்த தக்ஷனும் மனைவியும் ஒவ்வொரு மகனாகச் சென்று பார்த்து அடைக்கலம் கோரினர். துறவு பூணும்போது தர்ப்பைவைத்து பிண்டம் இறைத்து பெற்றோர்களை உதறியிருந்த ரிஷிகள் பெற்றோரை யார் என்றே அடையாளம் கானவில்லை. மனம் உடைந்த தக்ஷன் காட்டில் அமர்ந்து தவம்செய்து பிரம்மாவை வேண்டி கண்முன் வரவழைத்தான். மீண்டும் இளமையையும் பிள்ளைப்பேறையும் வரமாகக் கேட்டான். மர்மமான ஒரு புன்னகையுடன் பிரம்மா வரம் அளித்தார்
இளமையை அடைந்த தக்ஷன் இரண்டாவதாக அஜக்னிதேவியை மனம் செய்தான். இம்முறை பெண்கள் மட்டும் போதும் என்று முடிவுசெய்தான்.அவனுக்கு நூறு பெண்கள் பிறந்தனர். அவர்களை வளர்த்து கன்னிப்பருவத்தில் மணம்புரிந்து கொடுத்தான். தர்மதேவனுக்கு ஐம்பது பெண்களை மணம்புரிந்துகொடுத்தான். காசியப ரிஷிக்கு பதிமூன்று பெண்களையும் சந்திரனுக்கு இருபத்தேழு பேரையும் மணம்புரிந்து கொடுத்தான். பூதர், ஆங்க்ரீசர், கிரீஸ்வரர் ஆகிய தேவரிஷிகளுக்கு இரண்டு பெண்கள் வீதம் மணம் புரிந்துகொடுத்தார். கடைசியில் மிஞ்சிய நான்குபெண்களையும் தாக்ஷயப ரிஷிக்கு மணம்புரிந்துகொடுத்தார்.
அத்தனை பெண்களையும் மணம் செய்துகொடுத்து முடித்தபோது தக்ஷனின் கால்கள் நடந்து நடந்து தேய்ந்து குட்டையாக மாறின. கைகள் கொடுத்துக் கொடுத்து வளைந்தன. அதனால் அவன் குரூபியும் நோயாளியுமாக மாறினான். ஆகவே தன் பெண்களிடம் சென்று உதவிகேட்டான். தர்மதேவனின் பத்தினிகள் அவனுடைய விதிக் கயிறால் கட்டப்பட்டிருந்தனர். ரிஷிபத்தினிகளிடம் புல்லரிசி மட்டுமே இருந்தது. சந்திரனோ ரோகிணி ,கிருத்திகா என்ற இரு மனைவியரை மட்டுமே விரும்பி அவர்களுடன் மட்டுமே வாழ்ந்து வந்தான். தக்ஷனின் மகள்கள் வாழாவெட்டிகளாக புல்லரிசி உணவு உண்டு புல்மீது படுத்து உறங்கினர். அதைக்கண்ட தக்ஷன் சந்திரன் உடல் பதினைந்து நாளில் குறைந்து தேயும்படி சாபம் போட்டான். சந்திரன் அலறி அழுதபடி சிவபெருமானின் காலடியில் சென்றுவிழ சிவன் குறைந்த உடல் பதினைந்து நாளில் மீண்டும் முழுமைபெற்று ஒளிரும்படி சாப மோட்சம் கொடுத்தார். அதன்பின் சந்திரன் தக்ஷனின் மகள்களைப் பொருட்படுத்தவேயில்லை.
அழுதபடி தக்ஷன் மீண்டும் பிரம்மதேவனை நோக்கி தவமிருந்தான். தன் முன் வந்த பிரம்மனிடம் எல்லா குணங்களும் பெற்றவளும், மூன்று முதல் தெய்வங்களுக்கும் நிகரான சக்தி கொண்டவளுமான மகளை தான் பெற வேண்டுமென வரம் கேட்டான். பிரம்மா புன்னகை புரிந்தபடி வரமளித்து சென்றார். அதன்பொருட்டு அம்பிகையான உமாதேவியே குழந்தையாகி தக்ஷனின் மகளானாள். அவளுக்கு தாக்ஷாயணி என்று பெயரிட்டு மார்பிலும் தோளிலும் போட்டு அவன் வளர்த்தான். அத்தனை குழந்தைகளை வளர்த்தபின்னும் ஒரு கைக்குழந்தை எப்படி தன் தோளையும் மனதையும் நிரப்புகிறது என்று என்ணி அவன் உள்ளம் மகிழ்ந்து வியந்துகொண்டான். தாக்ஷாயணி அனைத்து சாஸ்திரங்களையும் கற்றாள். அனைத்து கலைகளிலும் முழுமைபெற்றாள்.
தாக்ஷாயணி கன்னியானபோது அவளுக்கு ஏற்ற கணவன் கிடைக்கவேண்டுமென்று தக்ஷன் மீண்டும் தவம்செய்தான். அவ்வாறே ஆகுக என அவன் தந்தை பிரம்மா அருள்செய்தார். தீ போல நிகரற்ற ஒளி கொண்ட அழகனும், லட்சம் வண்டி பொன்னுக்கு உரிமையாளனும் லட்சம் ரிஷிகளால் ஞானி என்று துதிக்கப்படுபவனும் உலகத்து வீரர்கள் அனைவராலும் அஞ்சப்படுபவனுமாகிய ஒருவனுக்கே மகளை கொடுப்பேன் என்றான் தக்ஷன். அவனே உன்னைதேடிவருவான் என்று பிரம்மா அருளிச்செய்தார். அவ்வண்னமே ஒரு கிருத்திகை மாத கிருத்திகை நாளில் லட்சம் வண்டி பொன்னை ஏற்றி லட்சம் ரிஷிகள் பின்னால் துதி பாடிவர, வெல்லமுடியாத சூலாயுதத்தை ஏந்தி புலித்தோலாடையும் சாம்பலும் அணிந்த தீவண்ணன் ஒருவன் அவனைத்தேடிவந்தான். தன்னை அவன் ருத்ரன் என்று அடையாளம் சொன்னான். தக்ஷன் மகிழ்ந்து ஏழடுக்கு பொன்விதானத்தில் ரிஷிகளும் தேவரும் அசுரரும் வந்து மலர்தூவ மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.
மகளின் மணவாழ்க்கையைக் காண தக்ஷன் பொன்னும் பட்டும் மலரும் இனிப்பும் எடுத்துக்கொண்டு மணமகன் இல்லத்துக்குச் சென்றான். பொன் போல ஒளிரும் மேருமலைமீது அவன் வீடு இருந்தது. மகிழ்ந்து சென்ற தக்ஷனை அங்கே வாசல்காத்த பெரும்பூதம் ஒன்று தடுத்து நிறுத்தியது. தக்ஷன் தான் யாரென்று சொல்லியும் அது அவனை அனுமதிக்கவில்லை. ஆயிரம் வேள்வி செய்த மன்னனும் ,அறிவைக்கடந்த ஞானியும் மட்டுமே உள்ளே செல்லமுடியும் , நீயோ கர்மபந்தத்தில் கட்டுண்டு மாயையில் உழன்று வாழ்க்கையை இழந்த வெறும் சக்கை என்றது பூதம். மண்ணில் இதுநாள் வரைக்கும் நீ செய்தவற்றுக்கெல்லாம் விண்ணில் எந்தப்பயனும் இல்லை என்றது
மனம் உடைந்த தக்ஷன் மண்ணுக்கு திரும்பி தன் இல்லத்தில் அமர்ந்து அழுதான். பின்னர் கடும் சினம் கொண்டு தன் நாட்டையும் சகல சொத்துக்களையும் பணயம் வைத்து பெரும் யாகம் ஒன்று செய்தான். அந்த யாகத்துக்கு தேவையான நெய்யை மட்டும் பிரம்மாவே தரவேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவின் களஞ்சியத்தில் நெய்க்கு முடிவேயில்லை. முடிவில்லாப் பெருங்கடல்போல நெய்யைக் கண்ட தேவர்களெல்லாம் யாகத்துக்கு வந்து குவிந்தனர். தன் மகளையும் மருமகனையும் மட்டும் தக்ஷன் யாகத்துக்கு அழைக்கவில்லை. கடும்சினம் கொண்டு கொதிக்கும் தங்கம்போல சிவந்த ருத்ரன் தன் மனைவி தாக்ஷாயணியிடம் ”உன் தந்தை என்னை அவமானப்படுத்திவிட்டார். அவருக்கு தக்க தண்டனையை நான் வழங்குவேன். அவனை நான் வேருடன் அழிப்பேன், இதற்கு நீ தடைசொல்லக்கூடாது”என்று சீறினார்.
அவரது வெம்மையால் கைலாயமே உருகியது. ஆனால் தாக்ஷாயணியின் கழுத்தில்கிடந்த தாமரைமாலையும் வாடவில்லை.கோடிகோடி கைகளுடன் சூரியன் எரிந்தாலும் சூரியனை நோக்கி விரிந்திருக்கும் தாமரைக்குளம் குளிர்ச்சியாகத்தானே இருக்கும்? ஆனால் தாக்ஷாயணியின் மாலைவாடாததைக் கண்ட ருத்ரமூர்த்தி தன்னை அவள் அவமானம் செய்ததாக என்ணி மேலும் கோபாவேசம் அடைந்தார். அவரது உடுக்கில் ஊழிநாதம் ஒலிக்கத் தொடங்கியது. அவ்வொலி பூமியில் கொடுங்காற்றாகவும் இடிமுழக்கமாவும் ஒலித்தது.
தாக்ஷாயணி கணவனை சமாதானபடுத்தினாள். அவர் கைகளைப் பற்றிக்கொண்டு சிரித்து கொஞ்சி விளையாடி தன் தந்தையை மன்னிக்கும்படி கேட்டாள். அவர் விட்டுக்கொடுக்காதது கண்டு அழுதபடி அவர் காலில் விழுந்து பாதங்களைப் பற்றிக் கொண்டு மன்றாடினாள். ருத்ர கோபம் சற்று தணிந்தது. ”நீ உன் தந்தையுடன் இங்கே வந்து என் கால்களைப் பணிந்து மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படியானால் உன்னையும் உன் குலத்தையும் நான் மன்னிப்பேன். இல்லாவிட்டால் உன் குலமே அழியும்”என்றார் ருத்ரமூர்த்தி
தாக்ஷாயணி கண்களில் வழிந்த கண்ணீருடன் அவிழ்ந்து பறக்கும் கூந்தலுடன் ஓடியும் நடந்தும் வந்து தன் தந்தையின் நாட்டை அடைந்தாள். அங்கே மகாருத்ர யாகம் நடந்துகொண்டிருந்தது. யாகப்பந்தலில் புகுந்த தாக்ஷாயணி தன் தந்தையிடம் யாகத்தை நிறுத்திவிட்டு தன் கணவனிடம் வந்து மன்னிப்பு கோரும்படிச் சொன்னாள்.”என்னை உன் கணவனின் காவலாளி அவமானப்படுத்தியதனாலேயே இந்த யாகத்தைச் செய்கிறேன். அவனை நேரில் சந்திக்கும் தகுதி பெற்ற பின் பார்க்கவருகிறேன், தொடங்கிய யாகத்தை நிறுத்த மாட்டேன்” என்றான் தக்ஷன்.
தாக்ஷாயணி தந்தையை நோக்கி வாதாடினாள். அழுதபடி தன் பொருட்டு தன் கணவனை காண வந்து விடும்படி மன்றாடினாள். ”மூன்று மூர்த்திகளுக்கும் அன்னை போன்றவள் நீ என்று பிரம்மா சொன்னாரே, நீயா இப்படி நின்று அழுவது?” என்று தக்ஷன் அதிர்ச்சியுடன் கேட்டான். அப்போது யாகத்துக்காக அங்கே வந்து இருந்த பிரம்மதேவர் ”கற்புடன் இருக்கும்போதே பெண்ணுக்கு வலிமை இருக்கிறது. அவள் கற்போ கணவனுக்கு கட்டுப்படுவதில்தான் உள்ளது” என்றார். ” நான் அவளை வளர்த்ததெல்லாம் இதற்காகவா?”என்று தக்ஷன் மனமுடைந்தான். ”நெல்மணி விளைந்ததும் கற்றை சாய்ந்துவிடுகிறது. பெண்மணி விளைந்ததும் நீ சாய்தலே நீதி ”என்றார்கள் ரிஷிகள். ”என் உயிரே போனாலும் நான் யாகத்தை நிறுத்தமாட்டேன்” என்றான் தக்ஷன்
ஆற்றாது அழுதபடி தாக்ஷாயணி மீண்டும் கைலாசமலைக்கு சென்றாள். அங்கே கோபத்தில் கொதித்தபடி இருந்த ருத்ரமூர்த்தியிடம் தன் தந்தை வரமறுத்ததைச் சொல்லி அவர் காலில் விழுந்து அழுது தன் தந்தையை மன்னிக்கும்படி வேண்டினாள். அவளை காலால் உதறி எறிந்தபின் ருத்ரமூர்த்தி ஆவேசம்கொண்டு எழுந்து தன் சடைமுடிச்சுருளை பிடுங்கி வீசினார். அதிலிருந்து பதினாறு கரங்களுடன் கோர ரூபிகளான வீரபத்ரனும் பத்ரகாளியும் உதித்தனர். வீரபத்ரன் நெருப்பே உருவமாக கொதித்தான். பத்ரகாளி விஷக்குளிருடன் நின்றாள். இருவரிடமும் சென்று தக்ஷனைக் கொன்று அவன் தலையைக் கொண்டுவரும்படி ருத்ரமூர்த்தி ஆணையிட்டார். அவர்கள் புயல் ஒலிபோலக் கூச்சலிட்டபடி தங்கள் பதினாறு தோள்களையும் தட்டியபடி கிளம்பினர்.
ஆவேசமாக அவர்கள் நடுவே கைநீட்டியபடி நின்ற தாக்ஷாயணி அவர்களைத் தடுத்தாள். அவர்கள் அவளுடைய குழந்தைகளானதனால் அவர்கள் சக்தியெல்லாம் இல்லாமலாயிற்று. வீரபத்ரன் ஒரு ஆண் கைக்குழந்தையாகவும் பத்ர காளி ஒரு பெண் குழந்தையாகவும் மாறி அவள் இரு இடுப்பிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு அவள் தன் இருமுலைகளையும் ஊட்டினாள்.
கோபவெறி கொண்ட ருத்ரமூர்த்தி தன் சூலத்தை ஓங்கியபடி தானே கிளம்பினார். வழிமறித்த மனைவியிடம் வழிவிடும்படி கூவினார். அவள் கதறியபடி தன் தந்தையை விட்டுவிடும்படி மன்றாடினாள். ருத்ரமூர்த்தி அதை கேட்க மறுத்தார். தாக்ஷாயணி வழிவிடாததனால் ருத்ரமூர்த்தி தன் நெற்றிக்கண்னைத் திறந்தார். ஆனால் அந்த நெருப்பு அவளை ஒன்றுமே செய்யவில்லை. அவள் நெற்றியில் ஒரு சிவந்த குங்குமமாக அது சென்று அமர்ந்தது. செயலிழந்த ருத்ரமூர்த்தி கடைசி முயற்சியாக ”உன் தாலிமீது ஆணையாகச் சொல்கிறேன், வழி விடு”என்ரார். தாக்ஷாயணி வழிவிலகவில்லை. மீண்டும் ருத்ரன் நெற்றிக்கண்னைத் திறந்தார். இம்முறை கணவன் சொல்லை மீறி கற்பிழந்த காரணத்தால் தீ தாக்ஷாயணியை சுட்டெரித்தது. அவள் எரிந்து எரிந்து ஒருபிடிச் சாம்பலாக மாறினாள்.
சிவகணங்கள் கோபம் கொண்டுவந்து தக்ஷனின் யாகத்தை அழித்தன. அங்கே வந்த தேவர்கள் எல்லாம் அந்த வீரபத்ரனையும் பத்ரகாளியையும் எதிர்க்க முடியாமல் அலறியபடிச் சிதறி ஓடினர். யாக குண்டத்தை அழித்து யாகத்தீயை அணைத்தபின் வீரபத்ரன் தக்ஷனின் தலையை வெட்டினான். பத்ரகாளி அதை எடுத்து விழுங்கிவிட்டாள். அவர்கள் மீண்டும் கைலாசமலைக்குப் போய் ருத்ரன் காலடியில் அமர்ந்தார்கள்.
பிரம்மா அழுதபடி தன் மைந்தனை மீண்டும் உயிர்பெறச்செய்தார். ஆனால் அவனுக்கு தலை இருக்கவில்லை. ”மகனே உனக்கு என்ன தலை வேண்டும்?” என்று பிரம்மா கேட்டார். ”நான் பட்டதெல்லாம் போதும் தந்தையே, எந்த நினைவும் தங்காத ஒரு தலையை எனக்கு கொடுங்கள்” என்றான் தக்ஷன். பிரம்மா அவனுக்கு ஒரு வெள்ளாட்டின் தலையை அளித்தார். வெள்ளாட்டுத்தலையுடன் அவன் ரிஷியாகி விண்ணுலகில் மகிழ்ச்சியாக இருந்தான்.
பிரம்மா அதன் பின்னர் கைலாசத்துக்குப் போய் ருத்ரனை கண்டு வணங்கி உமாதேவி இல்லாவிட்டால் சிருஷ்டியே நடக்காது, மூவுலகங்களும் திசைமாறி அழிய நேரிடும் என்று சொல்லி அவளுக்குச் சாபமோட்சம் கேட்டு மன்றாடினார். சினம் ஆறிய ருத்ரமூர்த்தி மெல்ல புன்னகை புரிந்தார். உமையை எரித்த சாம்பலை அள்ளி மண்ணுலகு மீது தூவினார்.”இந்த சாம்பல் விழுந்த ஊரிலெல்லாம் நீர் வற்றாத நதிகரைகளில் நான் ருத்ரமூர்த்தியாக எழுந்தருளுவேன். ஒருயுகம் முழுக்க என்னை மானுடர் எரியும் சினம் கொண்ட ருத்ர மூர்த்தியாக வழிபடட்டும். என் மேனி எப்போதும் சினத்தால் கொதித்தபடி இருக்கும். ஆகவே என்னை அவர்கள் தைலதாரையாலும் குளிர்ந்த வில்வநீரினாலும் அபிஷேகம் செய்து வழிபடட்டும். என் சினம் ஆறியதும் உமையை மீண்டும் நான் சாம்பலில் இருந்து எழுந்துவரச்செய்வேன்” என்றார்.
”என் சிருஷ்டிக்கு எனக்கு உமை இன்றி முடியாதே…” என்று பிரம்மா சொன்னார். ”உமை இப்போது என் நெற்றிக்கண் பட்டு எரிந்த தீயின் வடிவில் இருக்கிறாள். எங்கெல்லாம் நமச்சிவாய மந்திரம் சொல்லி சுடர் ஏற்றப்படுகிறதோ அங்கெல்லாம் அவள் சான்னித்தியம் இருக்கும்” என்று ருத்ரன் சொன்னார். ”நான் கோபமூர்த்தியாக கோயில்கொண்ட மண்ணிலெல்லாம் உமையும் நெருப்புவடிவில் கோயில்கொண்டிருக்கட்டும்” என்று வரமளித்தார்.
பிரம்மா தன் பிரம்ம லோகத்துக்குச் சென்று பித்தளை ஓட்டில் ஒருவிளக்கு செய்தார். அதற்கு அம்பிகை விளக்கு என்று பெயர். அதில் நெய் விட்டு நமச்சிவாய மந்திரம் சொல்லி சுடர் ஏற்றினார். அதில் அம்பிகையாகிய உமை வந்து கோயில்கொண்டாள். அவளை சாட்சியாக்கி பிரம்மா சிருஷ்டியை மீண்டும் தொடங்கினார்.
[மேலும்]