சங்கரர் உரை கடிதங்கள் 6

1

அன்புள்ள ஜெ

சங்கரர் உரையை இதற்குள் சவுண்ட் கிளவுடில் நாலைந்துதடவை கேட்டுவிட்டேன். முதலில் அதன் கட்டுக்கோப்பு எனக்குப்புரிபடவில்லை. சங்கரர் 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவான ஒரு சரித்திரத்தேவைக்காக விஸ்வரூபம் எடுத்ததைப்பற்றிச் சொல்கிறீர்கள். அதற்குமுன் அவர் ஒரு துறவியர் அமைப்பாகவும் ஒரு தத்துவத்தரப்பாகவும்தான் இருந்தார் என்கிறீர்கள்.

விஸ்வரூபம் எடுத்தபோது உருவானதே அவரைப்பற்றிய கதைகள் என்கிறீர்கள். அந்தக்கதைகளில் எல்லாம் அவர் பின்னாளில் இந்துமதத்தின் மாபெரும் தொகுப்பாளராக உருவாகியபின்னர் உருவான பிம்பத்துக்காக அவரை பக்தியுடன் சேர்க்கும் தன்மை உள்ளது என்கிறீர்கள்

கவசம் கழற்றுவதுபோல சங்கரவேதாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தன்னுடைய எல்லா பக்தி, வேள்வி சார்புகளையும் களைந்து மீண்டும் உருவானது. அதுவே இன்றிருக்கும் ராமகிருஷ்ண மடம் போன்றவை. ஆகவே இரண்டுவகையான அத்வைதங்கள் இன்றுள்ளன. ஒன்று சங்கர மடங்களின் சடங்குடன் கலந்த அத்வைதம். நவீன மடங்களின் நவீன அத்வைதம்.
அந்த வரலாற்றுச்சித்திரத்துக்குப்பின்னர்தான் நீங்கள் அத்வைதம் வேதாந்தத்தில் இருந்து எதை மேலதிகமாகச் சேர்தது என்று சொல்கிறீர்கள். அப்படி மேலதிகமாகச் சேர்த்தது கவித்துவமாக உள்ளது என்று சொன்னீர்கள். அதன்பின் அத்வைத அனுபவத்தின் அன்றாடத்தன்மையை கொண்டுவந்துகாட்டி முடித்தீர்கள்

இப்படி நான் தொகுத்துக்கொண்டபின்னர் எனக்கு இந்த உரை மிகமிக முக்கியமான ஒரு தொகுப்பாக இன்றைக்கு உள்ளது. இதிலிருந்து நான் முன்னால் செல்லமுடியும் என நினைக்கிறேன்

சரவணன்

 

அன்புள்ள சரவணன்

நன்றாகவே தொகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். இது நம் சூழலுக்கு ஏற்ப அளிக்கப்பட்ட ஒரு முதல்வடிவ அறிமுகமே

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் கோவையில் ஆற்றிய கீதைப்பேருரை பற்றிய செய்தித்தாள் அறிவிப்பு தங்களின் பேசு பொருளை நேர்மையாக அறிவித்தது. இது ஒரு சீரிய செயல். நானும் இருபது வயதில் கீதையை (சித்பவானந்தர் உரை) வாங்கினேன். ஆனால் படிக்கவில்லை அல்லது படிக்க முயன்று தோற்றேன். அதன் சாரம் தெரிந்து கொள்ளவில்லை என்ற குறை இருந்து கொண்டே இருந்தது.

தங்களது உரை ஒரு வாழ்நாள் கால பேராராய்ச்சியின் உச்சம் போல் தோன்றியது. தங்கள் மனதில் பல்லாண்டு காலம் தியானித்து, தேக்கி வைத்த ஆன்மிகப் புதையலை முன் வைத்தீர்கள். இந்து மதத்தைப் பற்றிய தங்கள் அறிவும் தெளிவும் அசாதாரணமானது. மீண்டும் ஒருமுறை நானும் என் கணவரும் கோவையில் இருந்து சாத்தூர் செல்லும் வரை காரில் CD யிலும் கேட்டுக்கொண்டே சென்றோம். வீடு நெருங்கும் போது உரையும் சரியாக நிறைவடைந்தது ஆச்சரியமாக இருந்தது.இன்னொரு முறை கேட்டாலும் நல்லது தான்.

எனக்கு ஒன்று சொல்ல வேண்டும். நான் ஆறாண்டு காலம் Nadine Gordimer என்ற தென் ஆப்பிரிக்க நாவலாசிரியர் பற்றி “The Dialectics of Apartheid” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தேன். Apartheid rule என்பது thesis. நெல்சன் மண்டேலா போன்றோரின் போராட்டம் antithesis. போராட்டத்தில் வெற்றி பெற்று ANC ஆட்சியில் அமர்வது synthesis. எனினும் புது ஆட்சியின் corruption போன்ற issues புதிய thesis ஐ உருவாக்கி அதற்கு எதிர்ப்பு உருவாகி அப்படியே இது ஒரு தொடர் நிகழ்வாகி உலகம் betterment ஐ நோக்கி ஒரு spiral இல் செல்வதாக apply செய்திருந்தேன்.

கீதையில் இந்த தருக்க முறை இருப்பது எனக்குப் புதிய செய்தி. அதனால் இன்னும் ஆர்வமாகி விட்டேன். புரிந்துகொள்ள முடிந்தது. தமிழில் முதல் முறையாக historiography, binaries, dialectics போன்றtheoriesஐ கொண்டு இந்திய வரலாற்றுச் சூழலில் கீதையை முன்னிறுத்திப் பேசியது தங்களின் விரிவான ஆய்வுப் பின்புலத்தைத் தெளிவுபடுத்தியது.

கவிஞர் தேவதச்சனுக்கு விருது வழங்கும் விழா அவரைப்பற்றிய அறிமுகத்தையும் நெகிழ்ச்சியையும் அளித்தது. தீவிர தமிழ் எழுத்தாளர்களை அடையாளம் காட்டி அங்கீகாரம் செய்யும் இந்த நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடி அளவளாவும் புதிய ஒரு அர்த்தமுள்ள சடங்காக மாறிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. கோவையில் உள்ளோருக்கு இலக்கிய ஆர்வம் பொதுவாகக் குறைவு என்று நினைத்திருந்த எனக்கு அங்கிருந்த கூட்டம் வேறொரு பிம்பத்தை அளித்தது.

“சங்கரர்” உரையும் நல்ல structured ஆக இருந்தது. இந்து மதத்திற்கு சங்கரரின் பங்கைப் புரிந்து கொள்ள உதவியது. ஆனாலும் எனக்கு இன்னும் சில முறைகள் கேட்டால் தான் புரியும். Terminology கொஞ்சம் புதிதாக இருந்தது. வைணவம் எனக்கு நெருக்கமாக இருப்பதாலோ என்னவோ follow செய்யக் கடினமாக இருந்தது என்று நினைக்கிறன். தங்களின் cognitive powers மீண்டும்awe-inspiring.
ஆங்கில இலக்கியமும் பணியும் அதிக காலம் என்னைத் தமிழில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்து விட்டன. முன்பு தீவிர வாசகியாக இருந்த நான் இந்தக் கூட்டங்களுக்குப்பின் தமிழோடு, தமிழ் இலக்கியத்தோடிருந்த உறவை மீண்டும் புதுப்பித்துகொள்ள வேண்டும் என்று தீவிரமாக நினைக்கிறேன். நன்றி.
.
அன்புடன்
இந்திராணி
இணைப்பேராசிரியர் (ஆங்கிலம்)
அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி
கோவை

 

அன்புள்ள இந்திராணி அவர்களுக்கு,

தமிழிலக்கியத்திற்கு நீங்கள் திரும்பி வருவதற்கு நல்வரவு.

தத்துவக்கல்வியில் ஒரு பிரச்சினை உள்ளது. கவிதையை வாசிக்கும்போது அதன் ‘context’ ஐ நாம் கற்பனை செய்துகொள்ளவேண்டும். அதைப்போல தத்துவத்தில் ஒவ்வொரு கருத்தையும் ஒரு விவாதமையமாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு விவாதச்சூழலில் இருந்தாகவேண்டியிருக்கிறது. தத்துவ விவாதம் நிகழாத சூழலில் நின்றபடி அதை விவாதிக்கமுடியாது

ஜெ

 

http://www.jeyamohan.in/7712#.VjtNa7_e8f8

காலையிலிருந்து நீங்கள் தளத்தில் சங்கரரை பற்றி எழுதியிருந்தவைகளை தேடி படித்து கொண்டிருந்தேன் .

கீழிருக்கும் பதிவு எனக்கு பெருமளவில் உதவியது . அற்புதமாக விளக்குகிறீர்கள் . மாயை , பிரம்மம் பற்றியெல்லாம் ஓரளவு தெளிவான புரிதல் இப்போதுதான் எனக்கு உருவாகிறது .மிகுந்த நன்றி

இப்போது விவேகானந்தர் சங்கரரை பற்றி குறிப்பிட்டிருந்ததை தேடி கொண்டிருந்தேன்  . உங்கள் கருத்தின் ஆரம்ப நிலை என்ணத்தை நான் இவரில் படித்திருக்கிறேன் .

பதிவு நூலில் தேடி கிடைக்கவில்லை , இப்படி இருந்ததாக ஞாபகம் .
” புத்தருக்கு நடந்ததுதான் சங்கரருக்கும் நடந்திருக்கும் ….. ” என

ராதாகிருஷ்ணன்

 

அன்புள்ள ராதாகிருஷ்ணன்

சங்கரர் உரையில் விடுபட்ட ஒன்றுண்டு. பெலவாடியில் கருவறையில் உள்ள வீரநாராயணர் சிலையின் பிரபாவலையத்தில் பத்து அவதாரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்பதாவது அவதாரம் புத்தர்! புத்தருக்கு எதிராக உருவான அத்வைத ஞானமரபின் மடத்தால் பேணப்படும் ஆலயம் அது.

ஜெ

 

சங்கரர் உரை

 

முந்தைய கட்டுரைநட்பும் புதியவர்களும்…கடிதங்கள்
அடுத்த கட்டுரைமுகங்களின் தேசம்: குங்குமத்தில் தொடர்