ஜெ
வணக்கம். சங்கரர் உரை கேட்டேன். மிக சிறப்பானொதொரு அனுபவம். நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தமாக இருக்கின்றது.
அத்வைத அனுபவங்களில் தென்னிந்தியாவை தொகுக்க அத்வைதம் பயன்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அத்வைதம் முன்வைத்த பெரும் இந்திய ஆளுமைகளை பற்றி பேசி இருந்தீர்கள். ஒரு நெடிய பாரம்பரியத்தின் தொடர் சங்கிலி தெரிந்தது.
மிஸ்டிக்கான அனுபவங்களான கைலாய பார்வை, விவசாயயியின் வயல் அனுபவம் போன்றவை ரொம்ப பர்சனலான அனுபவங்கள். உங்கள் யோகா பற்றிய பார்வைகளை சொல்லும் பொழுது இது போன்ற பர்சனல் அனுபவங்கள் பார்வையாளர்களில் உண்டாக்கும் விளைவுகளை அங்கதமாக சொல்லி இருந்தீர்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்தேகம் வருகிறது.
இந்த மிஸ்டிக் அனுபவங்கள் இது போன்ற மாற்று பார்வை முன் வைக்கும் உரைகளுக்குள் புரிதல் குழப்பத்தை உண்டாக்காதா? ஒரு சந்தேகமாகவே கேட்கிறேன். கோபப்பட வேண்டாம்.
நன்மை தீமை என பார்க்கக் கூடிய டிக்காடமி பார்வையை பற்றி சொல்லி இருந்தீர்கள். சமூகத்தின் தீமை அல்லது போதாமை அல்லது அறியாமை என்பதை மறுக்கும் தத்துவம் சமூகம் தன்னை மேம் படுத்தும் பார்வையை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?
கர்ம வினை என்பதை திருவிதாங்கூரில் நடக்கும் உரையாடலில் காந்தியுடன் பேசும் கோவில் ஊழியர் பயன்படுத்தும் விதம் மாதவ் தேசாய் எழுதிய புத்தகத்தை படிக்கும் பொழுது பதட்டத்தை உண்டாக்குகின்றது.
ஏதேனும் தவறாக கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும். தெளிவு செய்து கொள்ளவே கேட்க நினைத்தேன.
கடிதத்தை தளத்தில் பிரசுரிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
என்
அன்புள்ள என்,
ஏன் நல்ல கடிதம் தானே? பெயரில்லாமல் பிரசுரிக்கிறேன் ,சரிதானே?
வயலைப்பார்த்தல், கைலாயம் நோக்குதல் ஆக்கியவை அரிய யோக அனுபவங்கள் அல்ல. அனைவருக்கும் அன்றாடவாழ்க்கையில் ஓரிரு முறையேனும் அனுபவமாகியிருக்கும் அனுபவங்கள். அங்கே அத்வைத அனுபவத்தின் எளிய தொடக்கம், அது ஒரு உண்மை அன்றி உருவகநிலை அல்ல என்பதற்கான சான்று, உள்ளது என்பது என் உரையில் இருந்தது.
யோக அனுபவங்களை அடைந்ததாக மிகையாகவும் எளிதாகவும் சொல்லிக்கொண்டிருப்பது ஒரு சமூகத்தை கூட்டாகவே ஒரு சுய ஏமாற்றுநிலைக்கு கொண்டு செல்கிறது. அதுவேறு இது வேறு
அத்வைதம் சாமான்யம் விஷேஷம் என்னும் இரு நிலைகளை உருவாக்கிக்கொள்கிறது. நன்று தீது, அறிவு அறியாமை போன்ற இருநிலை எல்லாம் சாமான்யநிலையில் தேவையானவை. நஞ்சும் அமுதும் ஒன்றாகிவிடுமா என்ன? அத்வைதத்தின் ஒற்றைப்பெருநிலை என்பது உயர்நிலையில்தான். அத்தகைய இருதளம் இன்று எந்த ஒரு அறிவுத்துறைக்கும் உண்டு
உண்மையில் எந்த ஒரு உயர்தத்துவமும் எளிய ஒழுக்கவியலை ஒரு பயன்பாடாகவோ முன்நிபந்தனையாகவோ கொண்டிருக்காது. அதன் நோக்கு உண்மை என்பது மட்டுமே. அது பயன்படு உண்மை அல்ல, எனவே சார்புண்மை அல்ல, உண்மை என்பதனாலேயே முக்கியத்துவம் கொண்ட உண்மை மட்டுமே
ஆகவே எந்த ஒரு மெய்யியல்கருதுகோளும் சாமானியர்களால் பிழையாகப்புரிந்துகொள்ளப்படும். அப்படி புரிந்துகொள்ளப்படாத ஒரே ஒரு உயர்தத்துவம்கூட இவ்வுலகில் இல்லை. ஆகவே உயர்தத்துவமே தேவையில்லை என்றாகிவிடாது. அதை மீண்டும் மீண்டும் சரியாக விளக்கவேண்டியதுதான்
ஜெ
பேரன்புமிக்க ஜெயமோகன்,
இன்று போல என்றும் உயர்பேராற்றல் உங்களில் நிறையட்டும்.
கோவையில் நீங்கள் பேசிய பகவத் கீதை பேருரையை கேட்டேன். என்னை போன்ற இளைஞர்கள் கீதையை எப்படி அணுகவேண்டும் என சுட்டி காட்டி இருந்தீர்கள். சங்கரர் உரையும் அறிவுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
கோவையில் வசிக்கும் எனக்கு, இரண்டு உரை சமயத்திலும் நான் கோவையில் இருக்கும் சூழல் அமையவில்லை.
பகவத்கீதை உரையை கேட்ட பின் சில கேள்விகளை முன்வைக்கலாம் என உங்களை தொடர்புகொள்கிறேன். 2009ஆம் ஆண்டுக்கு பிறகு உங்களுக்கு நான் எழுதும் கடிதம் இது.
பகவத் கீதை உரையின் முடிவில் “தற்காலத்தில் கோவில்களை கூட ஜோதிடர்கள் சொல்லி தான் கண்டடைகிறோம்” என குறிப்பிட்டீர்கள். கீதை உரையில் வேடிக்கைக்காக இதை நீங்கள் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்
உங்கள் எழுத்தில் பேச்சிலும் ஜோதிடம் சார்ந்த கருத்தை தொடுவதில்லை. ஜோதிடர்கள் அல்லது ஜோதிட சாஸ்திரம் மேல் ஏன் இந்த பாராமுகம் ?
வேதத்தின் வழி குரு மரபு என்பது உங்கள் வழியானால் கர்ம மீமாம்சையின் பகுதியான ஜோதிஷத்தை இன்றைய இளைஞர்களுக்கு சொல்வீர்களா? ஜெயமினி தன்னை சூத்திரமாக வார்த்த ஜெயமினி சூத்திரங்கள் கொண்ட ஜோதிஷத்தை புறந்தள்ளிவிட்டு இந்து ஞான மரபை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?
கீதை உரையில் நீங்கள் குறிப்பிட்ட வரிகள் வழியே சிந்தித்தால் ஜோதிடர்கள் கோவிலுக்கு அனுப்புவது பரிகாரம் செய்ய சொல்வது என்ன தவறு அதுவும் நம் மரபுதானே? கர்ம மீமாம்சையின் தொடர்ச்சி அல்லது எச்சம் அல்லவா?உண்மையில் தற்காலத்தில் ஜோதிடர்கள், ஜோதிடம் மற்றும் அவர்கள் கூறும் பரிகாரங்கள் இவை தானே கோவிலை நிரப்புகிறது. திருவண்ணாமலை கோவில் மற்றும் கிரிவலம் பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது?
இந்து ஞான மரபு என்ற அரவைக்கல்லில் ஜோதிடர்கள் என்பவர்கள் அரிசியை உள்ளே தள்ளிவிடும் கைகளாக இருந்திருக்கிறார்கள்.
பல்வேறு தரிசனங்களையும் , கீதை போன்ற தத்துவங்களை அணுகவும் வழிகாட்டும் நீங்கள் இனிவரும் காலத்தில் கர்மமீமாம்சையின் கோட்பாடாகவும், வேத நேத்ரமாகவும் உள்ள ஜோதிஷத்தை உங்கள் உரை அல்லது எழுத்தில் தொடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். (உத்ரமீமாம்சை உங்கள் வழி என உங்கள் உரை மூலம் அறிந்தேன். ஞான மரபின் அனைத்து பகுதிகளிலும் சஞ்சரிப்பதால் அவ்வாறு கேட்கிறேன்)
அது ஆதரித்தோ அல்லது மறுதலித்தோ இருந்தால் சந்தோஷிப்பேன். தொடாமல் இருப்பது சரியா என தெரியவில்லை…
உங்கள் பணி தொடர இறையருளை ப்ரார்த்திக்கிறேன்.
நன்றி
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்
வணக்கத்திற்குரிய சுவாமிஜி அவர்களுக்கு
சோதிடம் பற்றி நான் பெரியதாக ஏதும் அறியேன். அதிலுள்ள நாள் கோள் அமைப்பு பற்றி புனைவு எழுதும் தேவைக்காக அறிந்துகொண்டதுடன் சரி. என் வாழ்க்கையில் நான் சோதிடம் பார்த்ததில்லை. என் குடும்பத்திற்காகவும் பார்த்ததில்லை.
சோதிடம் வேதமெய்யியலில் கர்மகாண்டத்தின் ஒருபகுதியாக இருந்துகொண்டிருக்கிறது என்பதையும் அது சூரியதேவரின் பிரஹதாங்கப்பிரதீபம் என்னும் அழிந்துபட்ட தொல்நூலை முதனூலாகக் கொண்டது என்பதையும் அறிவேன். ஆனால் வேதங்களின் ஞானகாண்டம் என்பது கர்மகாண்ட நிராகரிப்பிலிருந்து எழுவதே. முக்குணங்களுடன் எழுந்த வேதங்களைக் கடந்துசெல்லும்படி கீதை சொல்வதும் அதையே.
வேதாந்தம் ஞானமரபு. அதற்கு வேள்விகளிலும் பக்தியிலும் நம்பிக்கை இல்லை. ஆகவே சோதிடத்திலும் இல்லை. சோதிடம்தனை இகழ் என்றவன் வேதாந்தி. என் ஆசிரியர்களும் சோதிடத்தை பொருட்படுத்தாதவர்களே. அது உண்மையோ பொய்யோ அதை ஒட்டி இங்கு வாழ்க்கையை அமைக்க விரும்பவில்லை. எங்குமுளதும் இங்குளதுமான ஒன்றை மையமாக்கியே அறிதலையும் ஆதலையும் அமைக்க விரும்புகிறேன்
சோதிடம் அல்லது சடங்குகளை நான் இகழ்வதோ நிராகரிப்பதோ இல்லை. அதிலுள்ளது முழுமையான சுயநல நோக்கு அல்லது உலகியல் நோக்கு மட்டுமே என்றால் அது மெய்யறிவை எப்படி மறுதலிக்கிறது என்று மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்
ஜெ
சங்கரர் உரை