அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
நேற்று கோவையில் சங்கரரைப் பற்றிய உரை மிகப் பயனுள்ளதாக இருந்தது.[சங்கரர் உரை]
நீங்கள் கேட்டுக் கொண்டபடியே, அவை ஒத்துழைத்தது என நினைக்கிறேன் (ஒரே ஒரு முறை குறுக்கிட்டு படம் எடுக்க முயன்ற படப்பிடிப்பாளரைத் தவிர). மாபெரும் அறிவுப்பரப்பாக உள்ள அத்வைதத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் திறனுள்ள இளைஞர்கள் உருவாகாமல், பணம் சம்பாதிக்கும் பிராய்லர் கோழிகளாக ஆக்கிவிட்டோம் என்று சொல்கையில் உங்களைப்போலவே அரங்கும் நெஞ்சு விம்மி பதைப்புடன் அமர்ந்திருந்தது.
சங்கரரைவிட வித்யாரண்யரே அதிகம் அலசப் பட்டார். புதையல் மீது அமர்ந்து பட்டினி கிடந்து ஊழ்கம் புரிந்த அந்தப் பெருமுனிதான் தன் குருமரபின் மூத்தோரான சங்கரரை முன்னிறுத்திப் பல புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கிறார். மர்மமான புதையல்களாக பிரமிப்பூட்டும் இரகசியங்களை அழுத்தி வைத்து நமுட்டுச் சிரிப்பு புரிகின்ற இந்தியவியல் அதன் வரலாற்று மந்தணங்களால் மயக்கூட்டி வருகிறது. நபர்கள், சம்பவங்கள் முக்கியமில்லை, உண்மைகளே, அறிவுத் தேடலே முக்கியம் என்பதாலோ;
சாமானியர்களுக்கு, ஒடுக்கப் பட்டவர்களுக்கு எழுச்சி பெற உதவும் தத்துவம் அத்வைதம் என்றுணரும் போது பெருமிதம் ஏற்பட்டது.
வற்றாத இவ்வறிவொழுக்குத் தொடரின் சமகால பிரதிநிதியாக, தங்கள் பணி சிறக்கவும், சோர்வுகள் மனத்தை மூடும்போது, உள்ளொளி உமிழவும் பிரம்மத்தை யாசிக்கிறேன்
அன்புடன்
ஆர் இராகவேந்திரன், கோவை
அன்புள்ள ஜெ
கோவை சங்கரர் உரைக்கு வந்திருந்தேன். நீங்கள் சிறந்த பேச்சாளர் அல்ல என்று சொன்னீர்கள். ஆனால் எனக்கு நான் கேட்டதிலேயே மிகச்சிறந்த பேச்சு அன்று நீங்கள் பேசியதுதான் என்றே தோன்றியது. நல்லபேச்சுக்குத்தேவையானது என நான் நினைக்கும் தகுதிகள் மூன்று. நிறையசெய்திகள். உணர்ச்சிகரம். ஆன்மிகமான கவித்துவமான நிறைய தருணங்கள். இது மூன்றுமே உரையில் நிறைந்திருந்தன
உரை சாதாரண பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளித்ததைக் கண்டேன்.சங்கரரின் வரலாறு என்று சொல்லப்படுபவை எல்லாமே அவர் மறைந்து ஐநூறு வருடங்களுக்குப்பிறகு உருவானவை என்று சொன்னீர்கள். சங்கரர் பெயரில் உள்ள பஜகோவிந்தம் சௌந்தரிய லஹரி போன்ற நூல்கள் அவரால் எழுதப்பட்டவை அல்ல என்று சொன்னீர்கள். இதெல்லாம் புதிய சங்கரரை வெளிப்படுத்தின. பக்தர்களுக்கு அவர் என்ன வேதாந்தம் சொன்னாலும் கடைசியில் பக்தியில் வந்துதானே சரண் ஆனார் என்று சொல்வதில் ஒரு திரில் இருக்கிறது. அதைத்தகர்த்துவிட்டீர்கள்.
ஆனால் வேதாந்தத்தில் இருந்து அத்வைதம் எப்படி வேறுபடுகிறது, சங்கரரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன என்று விளக்கிய இடம் முக்கியமானது. வழக்கமாக விவாதங்களில் மறுதரப்பை கேவலப்படுத்துவார்கள். எதிர்தரப்பினர் சங்கரருக்கு விஷம் வைத்தார்கள், அவர் தப்பினார் என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் இல்லாமல் பௌத்தம் சங்கரவேதாந்தம் அளவுக்கே மகத்தான ஞானதரிசனம் என்று சொன்னீர்கள். அதுவும் எனக்கு ப்பிடித்திருந்தது.
எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது ரிச்சர்ட் கிங் போன்றவர்களை மேற்கோள் காட்டி சங்கரர் அவர் காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை பெரும்பாலான இந்துஞானநூல்களிலும் எதிர்தரப்பாக இருந்த பௌத்த நூல்களிலும் பெரிதாகக்குறிப்பிடப்படவில்லை என்பதுதான். அது சங்கரர் முன்வைத்த ஆறுமதம் என்னும் அமைப்புக்கு சரித்திரபூர்வமான ஒரு தேவை வந்தபோது அந்த தரிசனம் விஸ்வரூபம் கொண்டதனால்தான் என்று விளக்கியது மிக முக்கியமானது. சங்கரர் இத்தனைபெரிய ஆளுமையாக ஆனது அவரது ஏகதண்டி சம்பிரதாயத்தின் உள்ளடக்கமாக இருந்த ஒருமைஞானத்தால்தான்
நானும் ஒரு ஸ்மார்த்தன் என்ற வகையில் ஸ்மார்த்த சம்பிரதாயம் என்பது ஒரு சாதி எல்ல ஒரு காலகட்டத்தில் இந்துமதத்தை பாதுகாப்பதற்காக உருவான மாபெரும் நிலைச்சக்தி என்றும் அவர்கள் ஆறுமதங்களையும் ஒன்றாக்கி ஒரே வழிபாட்டுமுறையாக ஆக்கி ஐநூறாண்டுக்காலம் நீட்டித்தனர் என்றும் இந்துக்கள் அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னது எனக்கு உத்வேகத்தை அளித்தது. ஒரு சாதியாக இன்றைக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அது உருவானது ஒரு பெரிய நோக்கத்துக்காக என்றபோது இதைத்தெரிந்துகொள்ளாமலிருந்ததை நினைத்து வருந்தினேன்
நன்றி
சந்திரமௌலி