எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
விஷ்ணுபுரம் விழாவின் முந்தைய நாள் இலக்கிய விழாவில் கலந்து கொண்டேன்.
சராசரி பெண்களுக்கு இல்லத்தை விட்டு ஒருநாள் பிரிந்து வர வேண்டுமெனில் எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்..? என்னுள் சுவையூறி கிடந்த இலக்கியம் நோக்கிய ஆர்வமே அதை வழிநடத்தியது. கிடைத்த அனுபவங்கள் அதனை சிறிதும் ஏமாற்றவில்லை.
ஆனால் விழா நாளன்று நிகழ்ந்த நிகழ்வுகளாக பதியப்பட்ட தகவல்கள் என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது.
எத்தனையெத்தனை விஷயங்களை தவற விட்டிருக்கிறோம் என்று தவிக்க வைத்தது. இது போன்ற விழாக்கள் கல்லுாரிகளும் அரசும் முன்னெடுத்திருக்க வேண்டியது. ஏதோ ஒரு அல்லுப்புளிக் கணக்குடன் கல்லுாரிகள் இம்மாதிரியான அரங்குகளை முடித்து விடுகின்றன. அரசாங்கத்தின் கவலைகளே வேறு.
முன்னெடுப்பிற்கும் ஒருங்கிணைப்பிற்கும் காலம் தங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. ஏன் இலக்கியமும்தான்..
பொதுவாக எந்தவொரு நற்செயலையும் முன்னெடுப்பதென்பதே நல்ல விஷயம்தான். அதிலும் இலக்கிய முன்னெடுப்பு என்பது வெகு சிலரால் மட்டுமே சாத்தியப்படும். தாங்கள் தொடரும் வெற்றிப் பயணத்தில் நாங்களும் உடனிருப்போம்.
நன்றியுடன்
கலைச்செல்வி.
ஜெ,
கடந்த ஞாயிற்றுக் கிழமை விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் 2015 ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவில் ஒரு பார்வையாளனாய் கலந்து கொண்டேன். அந்நாள் என் வாசக உலக பிரம்மாவின் இரு தலைகளான நாஞ்சில் நாடன் மற்றும் உம்மை சந்தித்தேன். அவ்வளாகத்திலேயே நான் தான் முதன்முதலில் உங்கள் இருவரையும் இரு கரம் கூப்பி கைகுலுக்கி வரவேற்றேன். பின் பேச வார்த்தையிழாது ஓரமாய் நின்றேன். பற்பலவர் அவர்கள் இருவருடனும் selfie எடுத்தனர், பேசி மகிழ்ந்தனர், நான் ஓரமாய் நின்று அவர்களது பேச்சை ரசித்துக் கொண்டிருந்தேன். ( நீர் மறந்திருப்பீர்)
இடையில் டொயோட்டா கரோலோவில் வந்து வெள்ள வெளேறென துள்ளளுடன் இறங்கி நாஞ்சில் நாடனுடன் ஒருவர் பேசலானார். அவரின் முகம் சற்று பரிச்சயப்பட்டிருந்தது ஆனால் யாரென்று புலப்படவில்லை.பின் வெற்றிமாறனும் ( இவருக்கும் வணக்கம் சொன்னேன், பின் selfi கள் பறந்தன அது வேற விடயம்), ஜோடி க்ரூசும் வந்த பிறகு விழா ஆரம்பமாயிற்று.
எல்லோரும் கவிஞர் தேவதச்சனைப் பற்றி பேசினர், பாராட்டினர், அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. அப்படத்தில் தான் நம் துள்ளல் நடைக்காரர் யுவன் சந்திர சேகர் என தெரிந்தது.
அவையினிலே யுவன் தேவதச்சனைப் பற்றி் பேசலனார், அவருக்கும் தேவதச்சனுக்குமிடையேயிருந்த உறவைப் பற்றிப் பேசினார், செ மோ பற்றிப் பேசினார். எல்லோரையும் விட சுவாரசியமாய் பேசினார், கதை சொன்னார். அக்கதையில் ஆண்களைப் பற்றி உயர் திணையில் பேசாலானார். அக்கதையில் வரும் பெண்ணைப் பற்றி மட்டும் ” அது வந்தது, போனது” , என அஃறிணையில் பேசலானார்.
பெண்கள் மட்டும் எவ்வாறு அஃறிணையில் சேர்த்தீர் என அவர் பேச்சினூடே கேள்வியாய் கேட்கலாமென எழுந்த என் உள்ளுணர்வை ஒரு மாபெரும் கவிஞனின் விழாவின் போது ஒரு புதுப் பனையோலை கலகம் விளைவிக்கக் கூடாதென அடக்கி வைத்தேன்.
பெண்களை அஃறிணையில் அழைப்பதுதான் நம் மரபா செ மோ. உன் உன் அவையினிலே?…
ராஜாவெங்கடேஸ்வரன்.