பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 3
“குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு இடத்தையும் அவர் நன்கறிந்தார். “மானுடரே, என்னை கரையேற்றுங்கள். நான் வாழவேண்டும். நான் உணவுண்ணவேண்டும். காமம் கொண்டாடவேண்டும். இங்கு இருந்தாகவேண்டும்…” என நெஞ்சிலறைந்து கூவினார். மானுடரில்லாத காடுகளுக்குள் நுழைந்ததும் “நான் வாழ்வேன். தெய்வங்களே, எது நாணல்களை வளைய வைக்கிறதோ எது ஆலமரங்களை விரிய வைக்கிறதோ எது அசோகமரங்களை எழ வைக்கிறதோ அது என்னிலும் நிறைந்துள்ளது. நான் வாழ்வேன்” என்று கூவினார்.
துரியோதனன் எழுந்து அமர்ந்து சால்வையை சுற்றிக்கொண்டு கர்ணனை நோக்கினான். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டு மீண்டன. கர்ணன் தன் இடக்கையால் மீசையை நீவியபடி உடலை அசைத்து எழுந்து அமர்ந்தான். சூதன் அவர்களின் அசைவுகளை நோக்கியதாக தெரியவில்லை. குடவீணையை பாம்பு விரலால் மீட்டி, அவ்விம்மலுக்கு ஏற்ப தன் குரலை செலுத்தி தனக்குள் என அக்கதையை அவன் பாடிக்கொண்டிருந்தான். விழிகளால் அவனுக்கு மிக அருகே வந்து அமர்ந்திருந்தாள் பானுமதி.
“அரசர்க்கு அரசே, அவையே, அன்றெல்லாம் கங்கையின் கீழ்க்கரைகளில் எங்கும் நாடுகள் என ஏதுமிருக்கவில்லை. பசுமை அலைபாயும் அடர்காடுகளும் நாணல் திரையிளகும் சதுப்புகளும் மட்டுமே இருந்தன. வேளிர் ஊர்களும் ஆயர் குடிகளும் அமையவில்லை. சதுப்புக் காடுகளுக்குள் திரட்டியுண்டு வாழும் அசுரர் குலங்களும் அடர் காடுகளுக்குள் வேட்டுண்டு வாழும் அரக்கர் குலங்களும் சிற்றூர்களை அமைத்து வாழ்ந்தன. அந்நாளில் மகாபலர் என்னும் அரக்கர் குலத்தைச் சேர்ந்த வாலி என்னும் மன்னன் தன் குடிப்படையினருக்கு நீரிலிறங்கி தக்கை மரங்களினூடாக சதுப்புகளில் செல்லும் கலையை கற்பித்தான். அவ்வழியே சென்று அசுரரின் பன்னிரண்டு சிறு குடிகளை வென்றான். கங்கையின் இரு கரைகளிலுமாக அவனுடைய அரக்கர் அரசு ஒன்று அமைந்தது.”
குலங்களை வென்று அவன் கொண்ட செல்வத்தால் முதன்மை அரசனானான். காட்டுக்குள் பெருமரங்களுக்கு மேலே தன் மிதக்கும் மாளிகையை அவன் அமைத்துக் கொண்டான். ஐந்து மனைவியரும் ஐம்பது சேடியருமாக அங்கே அவன் வாழ்ந்தான். ஆயினும் அவனால் அந்நிலப்பகுதியை முற்றாக ஆள இயலவில்லை. வென்ற நிலப்பகுதியிலிருந்து அவன் படைகள் கிளம்பிச்சென்ற மறுநாளே அங்கு குடிகள் கிளர்ந்தெழுந்தனர். திறை கொள்ளவோ வரி கொள்ளவோ இயலாது அப்பெருநிலம் அவனை சூழ்ந்து கிடப்பதை உச்சி மரக்கிளையில் அமர்ந்து நாற்திசையை நோக்கி அறிந்து அவன் நீள் மூச்சு விட்டான்.
கங்கையின் வடக்குக் கரைகளில் அரசுகள் எழுந்து கொண்டிருந்ததை அவன் அறிந்தான். அவர்கள் நீர்ப்பெருக்கில் கொக்குச்சிறகென பாய்விரித்த பெரும்படகுகளில் கீழ்நிலம் நோக்கி சென்றனர். அங்கு நீலநாக்குகள் கொண்ட பெருநீர்வெளி இருப்பதை பாடல்களினூடாக அறிந்தான். அப்படகுகளில் அள்ளக்குறையாத செல்வம் இருந்தது. ஆனால் அணுகவியலாத பெரும்படையும் அவற்றைச் சூழ்ந்து சென்றது. கரைமரங்களில் அமர்ந்து அப்படகுகளைக் கண்டு அவன் ஏங்கினான். குடிபெருகாது தன் கோல்நிலைக்காதென்று உணர்ந்தான். ஆனால் குடிபெருகுகையில் அவர்கள் ஊடிப்பிரிந்து புதுநிலம்நோக்கி சென்றதையே கண்டான். வளரும்தோறும் உடைந்தனர் அரக்கரும் அசுரரும். உடையும்தோறும் போரிட்டனர். போருக்குப்பின் மாறாப் பகைமையை மிச்சமாக்கிக் கொண்டனர். அரக்கரும் அசுரரும் தங்கள் குடில்களில் நெருப்புக்கு இணையாக வஞ்சத்தையும் பேணி வளர்த்தனர்.
குடிகள் பெருகி குலமென ஒருங்கி அரசனை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர். ஒவ்வொரு அரக்கர்குலத்திலும் தோளெழுந்த இளைஞர்கள் அனைவரும் அரசராக ஆகும் கனவு கொண்டிருந்தனர். அவர்களின் குடிநெறிகளின்படி அரசனை அறைகூவி போருக்கு அழைக்கும் உரிமை அத்தனை ஆண்களுக்கும் இருந்தது. அறைகூவும் இளைஞனை களத்தில் கொன்றால் ஒழிய அரசன் அந்நிலையில் நீடிக்க முடியாதென்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாளும் திறன் கொண்ட வீரர்களிடம் தோள்பொருதி போரிட்டு அவர்களை கொல்வதே வாலியின் வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு கொலைக்குப் பின்னும் திரண்டுருண்ட உடல் உறுப்புகளுடன் இறந்து கிடக்கும் அவ்விளைஞனைக் கண்டு அவன் கண்ணீர் வடித்தான். தன் குலத்து முத்துகள் ஒவ்வொன்றும் உதிர்கின்றன என்று துணைவியரிடம் சொல்லி வருந்தினான். ஆனால் ஆவதொன்றுமில்லை என்றும் அவன் அறிந்திருந்தான்.
தன் குலத்துப் பெருவீரன் ஒருவனைக் கொன்று அவ்வெண்ணத்தால் வருந்தி அவன் கங்கைக் கரையின் பாறை ஒன்றில் அமர்ந்திருந்தபோது முதிய அந்தணர் ஒருவரை கண்டான். சென்றுகொண்டிருந்த சிறுபடகு துளைவிழுந்தமையால் கரையணைந்த அவர் அவனைக் கண்டு நடுங்கி கைகூப்பி “நான் அந்தணன். அரசத்தோற்றம் கண்டு உன்னை விஷ்ணுவென எண்ணி வணங்குகிறேன். எனக்கு தீங்கிழைக்காதே. நான் உனக்கு வாழ்த்துரைப்பேன். பிறருக்கு ஒருபோதும் தீங்கெண்ணாத அந்தணன் சொல் உன்னையும் உன் குலத்தையும் காக்குமென்று உணர்க!” என்றார்.
“என் நல்லூழால் தங்களை இன்று கண்டேன் அந்தணரே. என் தலை உங்கள் கால்புழுதியை சூடுகிறது” என்று சொல்லி வாலி அவரை வணங்கினான். “என் இல்லத்திற்கு வந்து அறச்சொல் உரைத்து என் காணிக்கைகளைப் பெற்று தாங்கள் மீளவேண்டுமென்று வேண்டுகிறேன்” என்றான். அவன் அளித்த கனியையும் தேனையும் பெற்றுக்கொண்டு அவ்வந்தணர் அவன் விருந்தினராக வந்தார். அவன் குடிமூத்தாருக்கு வணக்கத்தையும் மைந்தருக்கு வாழ்த்துக்களையும் அளித்து அவனுடன் அமர்ந்து உரையாடினார். “உத்தமரே, என் குடியினர் என்னை அரசனென ஏற்க நான் என்ன செய்யவேண்டும்?” என்று வாலி கேட்டான்.
“ஏன் இவர்கள் ஒவ்வொரு கணமும் என்னுடன் போரில் இருக்கிறார்கள்? நன்றேயாயினும் என் குலத்து இளையோர்கூட எனது ஆணைகளை ஏற்க ஏன் மறுக்கிறார்கள்?” என்றான் வாலி. “நீங்கள் அரக்கர் குலம். அரக்கர்கள் அடர்காட்டின் தனிப்புலிகள்” என்றார் கல்மாஷர் என்னும் அந்த அந்தணர். “அரக்கர் அரசாண்டதில்லையா?” என்றான் வாலி. “அரக்கர்களின் அரசுகளே பாரதவர்ஷத்தில் தொன்மையானவை என்று அறிக! தொல்லரக்கர் குலத்தலைவர்கள் அமைத்த பெருநகர்கள் இம்மண்ணின் அடியில் உறங்குகின்றன. அரக்கர்கோன் ராவணனும் அசுரர்தலைவர் மாவலியும் ஆண்ட புகழ் இன்றும் சூதர்நாவில் திகழ்கிறது” என்றார் கல்மாஷர். தென்னிலங்கை நகரின் ஒளிபுகழ் கேட்டு வாலி நீள்மூச்செறிந்தான்.
“நான் செய்யவேண்டியதென்ன அந்தணரே? எவர்க்காயினும் நல்லுரை சொல்வது உங்கள் குலக்கடன். அதை செய்யுங்கள்” என்றான் வாலி. “அரசே, இங்கிருப்பது அரசு அல்ல. குலத்தொகுதி. இங்கு திகழ்வது அரக்கர்களின் குடி நீதி. அது இணைந்து வாழும் விலங்குகளில் இருந்து அவர்கள் கற்றுக் கொண்டது. வல்லமை கொண்டதே தலைமையென்று அமைந்திருக்க வேண்டும் என்பது அது. அவ்வல்லமையை ஒவ்வொரு நாளும் உரைத்தறிய வேண்டும் என்பதும் அந்நெறிகளில் ஒன்றே. வேட்டைக்கூட்டமென நீங்கள் இங்கு வாழ்ந்திருக்கும் வரை அந்நெறியே உகந்ததாகும்” என்றார் அந்தணர்.
“ஆனால் அரசமைக்க அந்நெறி எவ்வகையிலும் உகந்ததல்ல. அரசுகள் குலங்கள் கரைவதன் வழியாகவே உருவாகின்றன என்றுணர்க!” என்றார் அந்தணர். “ஒருவருக்கொருவர் நிகரான மக்களால் அரசுகளை அமைக்க முடியாது. ஒன்றன் மேல் ஒன்றென ஏறியமரும் கற்களே கட்டடங்களாகின்றன. அதன் உச்சியிலமையும் கலக்கல்லே அரசன். அரசன் என்பவன் குடிகளால் தேர்வு செய்யப்பட்டவனாக இருக்கலாகாது. குடிகளால் எந்நிலையிலும் அவன் விலக்கப்படக்கூடியவனாகவும் இருக்கலாகாது.”
“குடிகள் மண்ணில் வாழ்கிறார்கள். அரசர்கள் விண்ணிலிருந்தே இறங்கி வருகிறார்கள். அரசன் இறப்பான் என்றால் அவன் முதல் மைந்தன் மட்டுமே அவன் கோலை ஏந்த வேண்டும். கை மாறி பிறர்கொள்ளா கோலே நிலையான அரசுகளை உருவாக்குகிறது என்று உணர்க!” என்றார் அந்தணர். “உத்தமரே, அத்தகைய நிலைமாறா கோல்கொள்ளும் உரிமையை நான் எங்ஙனம் அடைவேன்?” என்றான் வாலி. “விண்ணிலிருந்து அதற்கு ஆணை பெறுக!” என்றார் அந்தணர். “அவ்வாணையை நான் பெற என்ன செய்ய வேண்டும்?” என்றான் வாலி.
“அரக்கர்க்கரசே, வேதங்கள் விண்ணிலிருந்து இழிந்தவை. அவ்விண்ணகக் குரல்கள் உன்னை அரசன் என்று அரிமலரிட்டு அரியணையில் அமைக்குமென்றால் இக்குடிகளும் குலங்களும் உன்னை தங்கள் தலைவன் என ஏற்கும். மறுப்பு இலா கோல் கொண்டு நீ இதனை ஆள்வாய். இதுவே இதுவரை அரசமைத்த அனைவரும் சென்ற வழி. உன் முன்னோன் இலங்கையர்கோன் கொண்ட கோல்நின்றது செவியினிக்கும் சாமவேதத்தினாலேயாகும்.” அந்தணர் வணங்கி எழுந்து “வேதம் முற்றோதிய முனிவர் ஒருவரின் வாழ்த்து உன் குலத்திற்கு அமையவேண்டும். உன் அரியணையில் அவர் உன்னை வாழ்த்தி அமரச்செய்ய வேண்டும். அதற்காக காத்திரு. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று உரைத்து விடை கொண்டார்.
வாலி ஒவ்வொரு நாளும் உளம் நிறைந்து ஏங்கி காத்திருந்தான். விண் ஒழிந்த வேதச் சொல்லுடன் ஒரு முனிவர் தன் நிலத்தில் வந்தணைவார் என்று உள்ளுணர்வொன்றால் அவன் அறிந்திருந்தான். பன்னிரு ஆண்டுகாலம் அவன் அவ்வண்ணம் காத்திருந்தபோது ஒரு நாள் காலையில் கங்கைக்கரையில் நின்றிருக்கையில் ஒழுக்குநீர் சுழித்து ஒரு பரிசல் அவனைநோக்கி வரக்கண்டான். சுழன்று அலையிலேறி அமைந்து வந்த பரிசலில் அமர்ந்து வந்த முனிவர் அவன் நிற்பதை உணர்ந்து “எவராயினும் என்னை காக்கும்படி நான் ஆணையிடுகிறேன். இது வேதச்சொல்” என்று கூவினார்.
கரையிலியிருந்த கொடியைப் பறித்து கொக்கியிட்டு வீசி அந்தப் பரிசலைப் பற்றி இழுத்து அருகே கொண்டு வந்தான் வாலி. நீரிலிறங்கி அணுகி தலை வணங்கி “உத்தமரே, தாங்கள் யார்?” என்றான். உரத்த குரலில் “நீ அரக்கன் என எண்ணுகிறேன். பண்பறியாக் குலமென்றாலும் பணிவறிந்திருக்கிறாய். என் பெயர் தீர்க்கதமஸ். விழியிழந்தவன் என எளிதாக எண்ணாதே. இப்புவியில் ஒரு சொல் மிச்சமின்றி ஒரு சந்தம் பிழையின்றி வேதச் சொல்லறிந்த சிலரில் ஒருவன் நான். என்னை வணங்கு. உனக்கு நலம் பயப்பேன்” என்றார் தீர்க்கதமஸ்.
“அருகிலிருந்த வாழையிலையை வெட்டி அதை மண்ணில் விரித்து அதன் மேல் தீர்க்கதமஸை இறங்கி நிற்கச்செய்து அவர் கால்களைக் கழுவி தன் தலையில் தெளித்துக் கொண்டு அவர் கையைப்பற்றி தன் மாளிகைக்கு அழைத்து வந்தான் வாலி” என தொடர்ந்தான் சூதன். “அவனிடம் அக்காட்டை, அவன் குலத்தை அவர் கேட்டு தெரிந்துகொண்டார். எனக்கு உணவுகொடு என்று கூவினார். கனிகளையும் கிழங்குகளையும் அவன் பறித்து அளிக்க அவற்றை உண்டபடியே அவர் நடந்தார்.”
கங்கையில் அவர் கிளம்பி இருபத்தாறுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. அந்தப் பரிசல் மூன்றுமுறை ஆற்றிடைக்குறையின் நாணல்களிலும் பாறைகளிலும் முட்டி அசைவற்று நின்றிருந்தது. உணவு நான்கு நாட்களிலேயே இல்லாதாகியது. மேலுமிருநாளில் குடிநீர் தீர்ந்தது. தன் மேலாடையை நீரிலிட்டு நனைத்து இழுத்து பிழிந்து பருகினார் தீர்க்கதமஸ். ஆடையை வலையாக்கி மீன்களைப் பிடித்து பச்சையாகவே உண்டார். கரைநாணல்களை பிடுங்கி அவற்றை பல்லால் கடித்து கூராக்கி சிறகடியோசை கேட்டு பறவைகளை வீழ்த்தி அலைகளில் கைவைத்து அவை அணுகுவதை அறிந்து ஆடைவீசிப் பற்றி பச்சை ஊனை உண்டு உயிர்பேணினார். கரையணைந்தபோது அவர் பசித்து வெறிகொண்டிருந்தாலும் உடலாற்றல் குறைந்திருக்கவில்லை.
விழியிழந்த மனிதரைப் பார்க்க அரக்கர் குடிகள் சூழ்ந்தன. “யார் இவர்?” என்றார் குலமூத்தார். “வேதச் சொல் முழுமையும் பயின்றவர். என் பன்னிரண்டு ஆண்டுகால தவம் கனிந்து இங்கு வந்துளார். வாழ்த்தி என்னை இம்மக்களின் தலைமையில் அமர்த்தும் பணி கொண்டவர்” என்றான் வாலி. குடிமூத்தார் ஐயத்துடன் அவரை பார்த்தனர். “தங்கள் வேதம் எதை இயற்றும்?” என்று கேட்டனர். தீர்க்கதமஸ் “எண்ணுபவற்றை” என்றார். “அது பறவைகளை உணவாக்கும் அம்பா? விதைகளை கனியாக்கும் மழையா? நெல்லை சோறாக்கும் எரியா?” என்றார் ஒருவர். “அது வெறும் எண்ணம். சொல்லென்று ஒருமுகம் காட்டுகிறது. விழைவென்றும் தேடலென்றும் விடையென்றும் ஆகி நிற்கிறது” என்றார்.
“வெறும் சொல்லா?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “மூத்தவரே, வெறும் சொல்லா உங்கள் ஆற்றல்?” தீர்க்கதமஸ் “இங்குள்ளவை எல்லாம் சொல்லே” என்றார். “அப்படியென்றால் சொல்லை உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாமே. எதற்காக ஊனுண்டீர்? இப்போது கனியுண்கிறீர்?” கூடி நின்றவர்கள் வாய் பொத்தி நகைத்தனர். சினந்து தரையை கைகளால் ஓங்கி அறைந்து “தீச்சொல்லிடுவேன். இக்காட்டை எரித்தழிப்பேன்” என்றார் தீர்க்கதமஸ். அஞ்சி அவர்கள் பின்னடைந்தனர். வாலி “விலகுங்கள்… முதியவரை விட்டு விலகிச்செல்லுங்கள்… இதோ உணவு வந்துகொண்டிருக்கிறது உத்தமரே” என்றான்.
ஆறாப்பசி கொண்டிருந்தார் தீர்க்கதமஸ். அவர்கள் அளித்த உணவனைத்தையும் இரு கைகளாலும் அள்ளி உண்டார். “சுவையறியா பெரும்பசி” என்றாள் மூதன்னை. “பசியே முதற்சுவை” என்றாள் இன்னொருத்தி. குழந்தைகள் அவரை அணுக அஞ்சி அப்பால் நின்றன. குலமகள்கள் கைகொண்டு வாய்பொத்தி அகலநின்று நோக்கினர். பெண்களின் மணத்தை தொலைவிலிருந்தே அறிந்து அவர்களை நோக்கி கையசைத்து தன் அருகே வரும்படி அழைத்தார். அவர்கள் அஞ்சி குடில்களுக்குள் ஒளிந்து கொள்ள சினந்து அருகிருந்த மரத்தை அறைந்து ஓலமிட்டார். “பெண்கள் அருகே வருக! இல்லையேல் தீச்சொல்லிடுவேன்” என்றார்.
வாலியின் முதல்துணைவி கரிணி அவனிடம் “இவர் வேதம் கற்றவர் போல் இல்லை. விழியிழந்தவர் எதை கற்க முடியும்? பெருவிழைவே உடல் என ஆனவர் போலிருக்கிறார். இது சிறிய காடு. இங்குள்ள வளங்களும் சிறியவை. இது அனலெழும் பெருங்கோடை. நம் மக்களுக்கே உணவில்லை. மைந்தர் பசிதாளாது சிற்றுயிர்களை வேட்டையாடி உண்கிறார்கள். முதியவர் சொல்லின்றி பசி பொறுக்கிறார்கள். இங்குள்ள சிற்றுலகை எரித்தழிக்கும் தழல்துளி போல் இருக்கிறார். இவரை அஞ்சி வெறுத்து எவரோ பரிசலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் இவரை பரிசலில் ஏற்றி கங்கையில் அனுப்புவோம். நமக்கு பழி சேராது. இவரை இத்தனை நாள் வைத்து இங்கு உணவளித்த நற்பயனே நம்மைச்சாரும்” என்றாள்.
வாலி “இல்லை, வேதம் முழுதும் அறிந்த ஒருவர் இங்கு வருவார் என்பது என் உள்ளுணர்வு. இவரே அவர் என்று காட்டுகிறது. இங்கிருப்பார். எவர் என்ன சொன்னாலும் சரி” என்றான். அவள் மேலும் ஏதோ சொல்லப்போக “என்னை எதிர்த்து சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லையும் இனி என் வாளாலேயே எதிர்கொள்வேன், அறிக” என்றான். அவள் அவனிடம் வந்திருந்த மாற்றத்தைக் கண்டு திகைத்து சொல்லவிந்தாள்.
மறுநாள் உச்சிப்பொழுதில் தொலைவில் பறவைப்பேரொலி கேட்டு குடிக்காவலன் ஒருவன் உச்சி மரக்கிளை ஏறி நோக்கி திகைத்து அலறி குறுமுழவை ஒலித்து செய்தி சொன்னான். தென்காற்றில் எழுந்த காட்டு நெருப்பு நூறு சிம்மங்கள் என உறுமியபடி பல்லாயிரம் செம்பருந்துகள் என சிறகுகளை அலைத்து மலையேறி வரக்கண்டார்கள். யானைக்கூட்டங்களைப்போல் கரும்புகை சுருண்டு எழுந்தது. பசுமரக்கூட்டங்களை நக்கி வளைத்து பொசுக்கி உண்டபடி அவர்களை நோக்கி வந்தது எரி. வாலி ஓடிச்சென்று பிறிதொரு மரத்தில் ஏறி நோக்கியபோது சதுப்பு நிலங்கள் அனல்வெளியாகக் கிடப்பதை கண்டான். காடு பறவைகள் பதற பொசுங்கிக் கொண்டிருந்தது.
இறங்கி ஓடிவந்து “கிளம்புங்கள்! அனைவரும் கிளம்புங்கள்!” என்று கூவினான். குழந்தைகளையும் எஞ்சிய உணவுக்கலங்களையும் பெண்கள் தூக்கிக் கொள்ள மீன்பிடிக்கும் கருவிகளையும் வேட்டைக் கருவிகளையும் ஆண்கள் எடுத்துக் கொள்ள அவர்கள் தோள்முட்டி கால்சிக்கி அங்குமிங்கும் ஓடியபோது “இவரை என்ன செய்வது?” என்றாள் கரிணி. “இவரையும் அழைத்துச் செல்வோம்” என்று சொல்லி அருகணைந்து “உத்தமரே, காட்டு நெருப்பு அணுகுகிறது. விலகிச் செல்வோம், வாருங்கள்” என்றான் வாலி.
விழியெனும் தசைத் துண்டுகளால் அவனை நோக்கியபின் “காட்டு நெருப்பா?” என்றார் தீர்க்கதமஸ். தன் வலக்கையைத் தூக்கி உரத்த குரலில் வேதத்தின் வருண மந்திரத்தை சொல்லலானார். அது தவளைக் குரலென ஒலிப்பதைக் கேட்டு திகைத்து தன் குடிமூத்தாரை நோக்கியபின் கைகூப்பி நின்றான் வாலி. குலமூத்தோர் “தவளைக்குரல் எழுப்புகிறார். இதைக் கேட்டு நிற்கிறாயா? மூடா, செல்! இன்னும் சற்று நேரத்தில் மூண்டெழும் நெருப்பு இங்கு வந்துவிடும். உன் எலும்புகளும் சாம்பலாகும்” என்று கூறினார்கள்.
அவர்களை திரும்பி நோக்காமல் கைகூப்பி கண் மூடி தீர்க்கதமஸ் அருகே நின்றிருந்தான் வாலி. தவளைக்குரல் மேலும் மேலும் விரைவு கொண்டது. விண்ணை நோக்கி அது மன்றாடியது, பின் ஆணையிட்டது. சற்று கழித்து அவரைச் சுற்றி மேலும் பல தவளைக்குரல்கள் கேட்பதை வாலி அறிந்தான். சிறிது நேரத்தில் காடெங்கும் பல்லாயிரம் கோடி தவளைகள் ஒற்றைப் பெருங்குரலில் விண்ணை நோக்கி “மழை! மழை! மழை!” என்று கூவத்தொடங்கின. கரும்பாறைகள் உருண்டிறங்குவது போல வடக்கிலிருந்து கார்முகில்கள் விண்ணை நிறைத்தன. இடியோசை ஒன்று எழுந்து தொலைவை அதிரச் செய்தது. மின்னல் இலைகள் அனைத்தையும் ஒளி பெறச்செய்து அணைந்தது.
தோல்பை என நீர் தேக்கி நின்ற வான்பரப்பை மின்னல் கிழித்துச் சென்றது. பல்லாயிரம் அருவிகளென மழை கொட்டத்தொடங்கியது. சற்று நேரத்தில் மறைந்து போயிருந்த அனைத்து ஓடைகளும் உயிர்கொண்டன. சருகுகளை அள்ளிச்சுழற்றியபடி அவை பாறைகளினூடாக வழிந்து சலசலத்து ஓடின. மலைச்சரிவுகளில் அருவிகள் இழியத்தொடங்கின. நிலமடிப்பின் ஆழத்தில் செந்நீர் வளைந்து விழுந்த காட்டாறுகள் சென்று கங்கையை அடைந்தன. புகைந்து அணைந்த காடு கரிநீரென வழிந்தது. உள்காடுகளுக்குள் ஓடிச் சென்றிருந்த குடியினர் திரும்பி வந்தனர். குடி மூத்தார் தலைக்கு மேல் கைகூப்பி கண்ணீர் விட்டபடி வந்து தீர்க்கதமஸின் கால்களை பணிந்தனர்.
“எந்தையே, முழுதுணர்ந்த மூத்தோரே, எங்களை பொறுத்தருளுங்கள். உங்களுக்கு அடிமை செய்கிறோம்” என்று வணங்கினர். “உணவு கொடுங்கள்! மேலும் உணவு கொடுங்கள்!” என்று தீர்க்கதமஸ் கூவினார். சில நாட்களுக்குள் அரக்கர் குலங்களும் அசுரர் குலங்களும் அவர் காலடியில் முழுமையாக பணிந்தனர். வேதச் சொல் உரைத்து பச்சை மரத்தை அவரால் எரியச் செய்ய முடியும் என்று அவர்கள் கண்டு கொண்டனர். கூர்கொண்ட சொல்லென்பது எரியும் ஒளியும் ஆகுமென அறிந்தனர்.
பெருகும் கங்கைக் கரையில் அமர்ந்து வேதத்தால் மீன் பெருகச் செய்தார் தீர்க்கதமஸ். காய்ப்பு மறந்த பாழ்மரத்தை கிளை தாழ கனி பொலியச் செய்தார். ஒவ்வொரு நாளும் அரக்கர் குடியினரும் அசுரர் குடியினரும் அவரை தேனும் தினையும் கனியும் கிழங்கும் ஊனும் மீனுமாக தேடி வந்தனர். தாள் பணிந்து தங்கள் மைந்தரை அவர் காலடியில் வைத்து வாழ்த்து கொண்டு மீண்டனர்.
அவரை தன் குலகுருவாக அமர்த்தினார் வாலி. கங்கை நீரும் அரிமலரும் இட்டு அவரை கல் அரியணையில் அமர்த்தி அரக்கர்களுக்கும் அசுரர்களுக்கும் அரசனாக்கினார் தீர்க்கதமஸ். இளம் பனைக்குருத்தால் செய்த முடியை அவர் தலையில் அணிவித்தார். முதுபனை ஓலையில் செய்த வெண்குடையால் அவருக்கு அணி செய்தார். மருத மரக்கிளையை செங்கோலென ஏந்தி அமர்ந்து அவர் குடி புரந்தார். வேதத்தால் வாழ்த்தப்பட்டவர் என்னும் பொருளில் தன்னை சுருதசேனர் என்று அழைத்துக்கொண்டார். தன் முதல்துணைவி கரிணியின் பெயரை சுதேஷ்ணை என்று மாற்றினார்.
ஆனால் அவரை அப்போதும் தங்களுக்கு நிகரான அரக்கர்தலைவன் என்றே அசுரரும் பிறரும் எண்ணினர். அவர் முடிசூடியதைப்போல் தாங்களும் சூட விழைந்தனர். அசுரகுடிகளும் அரக்கர் குடிகளும் தீர்க்கதமஸை தங்களுக்கும் உரியவர் என உரிமைகோரின. படை கொண்டு வந்து அவரை கவர்ந்து சென்றால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. குடிமன்றுகளில் மூத்தவர் எழுந்து இங்கு “வேதமெய்யறிந்த முனிவர் அவர். ஆனால் அவர் நம் நிலத்துக்கு வந்தபோது முதலில் கண்டவர் வாலி என்பதால் அவருக்கு முற்றுரிமை கொண்டவராக ஆவாரா என்ன? விண்ணிறங்கிய வேதம் அனைவருக்கும் உரியது. அவர் எங்களுக்கும் முறை கொண்டவரே” என்று கூவினர்.
“இங்கு எவருக்கும் அவர் குருதி உறவில்லை. அந்தணர் நம்முடன் அவர்களின் அழியாச்சொல்லாலேயே தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்றார் குலப்பூசகர் ஒருவர். வாலி “அவர் என்னையே அரசன் என்று அரியிட்டு அமரச்செய்தார்” என்றார். “ஆம், ஆனால் பிறரை அப்படி வாழ்த்தியமரச் செய்ய அவர் மறுக்கவுமில்லை. அவர் இங்கு அவைக்கு வரட்டும். எங்களில் எவரையெல்லாம் அவர் அரசராக்குவார் என்று அவரிடமே கேட்போம்.” சுதேஷ்ணையிடம் “உணவும் காமப்பெண்ணும் அளிக்கும் எவரையும் இவ்விழியிழந்த முதியவர் அரசராக்குவார் என்பதில் ஐயமில்லை. இவரை அவர்கள் சந்திப்பதையே தவிர்க்கவேண்டும்” என்றார்.
ஆனால் நாளும் அக்கோரிக்கை வளர்ந்து வருவதை வாலி கண்டார். குழம்பி அலைந்துகொண்டிருந்தபோது ஒருநாள் முன்பு வருங்குறி உரைத்த அதே அந்தணரை கங்கை வழிப்பாதையில் கண்டார். பணிந்து அவரை அழைத்து வந்து “அந்தணரே, தங்கள் சொல் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவ்வண்ணமொரு இக்கட்டும் வந்தது. நான் செய்யத் தக்கதென்ன?” என்றார். “உன் குடியினர் சொல்வதே சரி. குருதி முறையன்றி பிறிதெதுவும் மாறாததல்ல” என்றார் அந்தணர். “என்ன செய்வேன்?” என்றார் வாலி.
“குருதிமுறை உருவாகட்டும்” என்று அந்தணர் சொன்னார். “உன் மனைவியரின் வயிற்றில் அவரது மைந்தர் பிறக்கட்டும். அதன்பின் இவ்வரசும் குடிகளும் அம்மைந்தருடையவை அல்ல என்று அவர்கள் மறுக்கவியலாது. அவர் சொல் நிற்கும் இடமெல்லாம் உன் மைந்தருக்கும் உரியதாகும்.” வாலி “ஆம், அதைச்செய்கிறேன். அரக்கர் குலத்திற்கு அத்தகைய உறவுகள் அயலவையும் அல்ல” என்றார். அந்தணர் “பெண்கள் விரும்பி அவரை ஏற்றாக வேண்டும். காமத்தில் மகிழ்ந்து கருவுறும் மைந்தரே முற்றிலும் தகுதிகொண்டவர்கள் என்றுணர்க!” என்றார். வாலி தலை வணங்கி “அவ்வண்ணமே ஆகுக!” என்றார்.