குரு, ஒரு கடிதம்

அன்பு ஜெ.

தொ. பரமசிவன் புத்தகங்கள் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையையும் அதன் பின் குறிப்பையும் வாசித்தேன்.

சுஜாதாவின் அறிவியல் மீது கண்டனங்களை முன்வைத்து பின்னூட்டத்தையும் அதன் நீட்சியாக மேலும் சில பதிவுகளையும் எழுதியபின் அதை வலைப்பூவில் தொகுப்பாகப் படித்த போது கடுமையான மனச்சோர்வுக்கும் வாதைக்கும் ஆளானேன். கடுமையாக வி்மர்சித்து எழுதிவிட்டதில் எனக்கு வருத்தமே. சுஜாதா எனக்கு மிகவும் பிரியத்துக்குரிய எழுத்தாளர் என்ற உண்மையையும் தொடர்ந்து பதிவு செய்தே வந்திருக்கிறேன் என்றாலும்.

அவர் எழுதியிருப்பதைப்பதில் உள்ள தகவல் பிழைகளும் கருத்துப் பிழைகளும் பற்றி எனக்கு கடுமையான மனக்குறை உண்டு என்பதும் உண்மையே. குறையையும் ஒரு வாசகன் சுட்டிக்காட்டத்தானே வேண்டும். சிறந்த படைப்புகள் எதிர்காலத்தில் தோன்றுவதற்கு இதைப் போன்ற விமர்சனங்கள் மிகவும் அவசியம் அல்லவா.

விளையும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, நம் பிரியத்துக்குரிய ஒருவர் (ஆசிரியராகவே இருந்தாலும்) நாமே குறைகளைச் சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன். அதுவும் சுட்டிக் காட்ட வேறு எவரும் இல்லாத போது. சுஜாதாவின் புத்தகங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் ஒரு சுஜாதா வாசகனின் வளர்ச்சியில் சுஜாதாவுக்கும் பெரும் பங்கு உண்டு தானே?

’தீட்டிய மரத்தில் பதம் பார்ப்பது’ என்ற ஒரு சொலவடை குரு நிந்தனையைத்தான் குறிக்கிறதோ என்று ஐயம். இந்த முரணியக்கத்தின் இயங்கியலில் தான் வளர்ச்சி நிகழும் என்றாலும் இதை சரியான கோணத்தில் எப்படிப் புரிந்து கொள்வது என்று விளக்குவீர்களா.

அன்புடன்,
வேணு

அன்புள்ள வேணு

நீங்கள் கேட்பது முக்கியமான கேள்வி. இக்கேள்விக்கு எப்படி தெளிவான பதில் சொல்வதென எனக்கு தெரியவில்லை. சிக்கலான ஒன்று.

ஒருவன் தன் ஆசிரியர்களின் எல்லையை தாண்டிசெல்லும்போது அவர்களை மீற, கண்டிக்க வேன்டியிருக்கும். அதை தவிர்க்கவே முடியாது. ஒரு மாணவனின் கடப்பாடு என்பது அவனுடைய குருவிடம் மட்டும் அல்ல, அந்தகுருவுக்கும் குருக்களாக நின்ற ஒரு பரம்பரையிடம். அந்த பரம்பரை முன்வைத்த அறிவுமதிப்பீடுகளிடம். அதற்கே அவன் விசுவாசமாக இருக்கவேண்டும். அதுவே அவன் தன் குருவுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

ஆனால் சிலசமயம் அகந்தை அந்த மீறலையும் சுயமுனைப்பையும் ஒன்றாகக் காட்டுகிறது. சிலசமயம் உணர்ச்சிப்பலவீனம் உண்மையான எதிர்நிலையை எடுக்கமுடியாமல் செய்கிறது

கல்வி நம் பலவீனங்களை அறுக்கவேண்டும். நம்மை அறத்திலும் கல்வியிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக ஆகக்வேண்டும். மானுச எல்லைகளை மீறி அவற்றைக்காண நமக்கு கண்திறக்கவேண்டும்.அவ்வள்வுதான் சொல்லமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்
அடுத்த கட்டுரைதீ அறியும் (குறுநாவல்) : 1