புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வேதசகாயகுமார் கூப்பிட்டிருந்தார். ‘பெரிய விடுதலைல்லா உங்களுக்கு?” என்றார். “ஏன்?” என்றேன். ‘இந்தியாவிலே ஒரு எழுத்தாளனைப்பற்றிச் சொல்ல என்ன உண்டோ எல்லாத்தையும் சொல்லிட்டானுக. இந்துத்துவா,, சாதிவெறியன்,, மதவெறியன்,, பழமைவாதி,, பெண்ணடிமைவாதி, எழுதப்படிக்கவே தெரியாது…எல்லாம் வந்தாச்சு. இனிமே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை. அதனால புதிசா ஒரு வருத்தம் மிச்சமில்லை’
’அதானே’ என ஆச்சரியமாக நினைத்துக்கொண்டேன். எவ்வளவு பெரிய விடுதலை. கிட்டத்தட்ட காந்தி! ஆனால் என்ன சிக்கல் என்றால் எதிர்காலத்தில் ஜெயமோகன் என்பது ஒரு குட்டி ராணுவத்தின் பெயர் என நினைத்துக்கொள்வார்களோ. நான்காம் ஜெயமோகனுக்கும் எட்டாம் ஜெயமோகனுக்குமான சண்டைகளைப்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் வருமோ? தெரியவில்லை.
சென்ற ஆண்டும் வழக்கம்போலத்தான். செயல்செறிந்தது. பயணங்கள். எழுத்து. வெறிகொண்ட வாசிப்பு.இந்த ஒருவருடத்தில் நான் வாசித்த வரலாற்றுநூல்கள், தொல்தத்துவநூல்களை திரும்பிப்பார்க்க பீதி ஏற்படுகிறது. கொஞ்சநாள் கழித்து மூளையை ஹோஸ்பைப்பால் நீர் பீய்ச்சி தூய்மை செய்யவேண்டும் போல என நினைத்துக்கொண்டேன்
இத்தனை வெறியுடனிருக்க என்ன காரணம் என கேட்டுக்கொள்கிறேன். எதையும் செய்யாமல் எங்கோ சென்றுவிடவேண்டும் என உள்ளம் தவிப்பதே என அறிகையில் திகைப்பு எழுகிறது. பேசுவதற்குக் காரணம் பேசாமலிருக்க விழையும் உள்ளத்தை அடக்குவதே. என்றாவது பேச்சை சற்று நிறுத்தினேன் என்றால் மீண்டும் தொடங்கவே முடிவதில்லை. சென்றவருடத்தில் பலநாட்கள் ஒருசொல்லும் பேசாமலிருந்திருக்கிறேன்
பெய்தொழிந்தாலொழிய முகிலுக்கு மீட்பில்லை போலும். இந்த நாட்கள் அவ்வண்ணமே சென்றுகொண்டிருக்கின்றன. ரயிலைப்பிடிக்க நிற்பவனின் பதற்றமும் பணப்பையை மறந்துவைத்துவிட்டவனின் நிலையின்மையும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. எதற்காக எவர்மேல் சினம் கொண்டிருக்கிறேன், எதற்காக மீண்டு வருகிறேன் என்றே தெரியவில்லை.
என்னைச் சகித்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார நன்றி. சகித்துக்கொள்ள மறுத்த நண்பர்கள் அனைவரிடமும் தாழ்ந்து மன்னிப்பும் கோருகிறேன். இங்கு நிகழ்ந்துகொண்டிருப்பது எளிய பணி அல்ல. இது ஒருகணம் தெய்வங்களும் மறுகணம் பேய்களும் மாறிமாறி பற்றிக்கொள்ளும் ஆபத்தான ஆடல். இதன் விளைவு ஒன்றே அனைத்தையும் நியாயப்படுத்துமென நினைக்கிறேன்
இந்த ஆங்கிலப்புத்தாண்டின் மாலையில் வழக்கம்போல என் மெய்ஞானநூல்களில் ஒன்றை கைபோன போக்கில் புரட்டிக்கொண்டிருந்தேன். இவ்வரிகள் இந்த வருடத்திற்கு.
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.
[விவிலியம் திருப்பாடல் 19]
நலம் திகழ்வதாக!
ஜெ