தொ.ப,ஒரு விவாதம்

தொ.ப. பற்றி நாஞ்சில் நாடனின் பதச்சோறு படித்தேன். உங்கள் குறிப்பையும் வாசித்தேன். தொ.ப. பேருருவாக மாற்றப் பட்ட பின்னணியில் பலர் இருக்கிறார்கள். அவரது சமயங்களின் அரசியல் என்ற சிறு நூல் வந்த போது நான் உயிர்மையில் எழுதிய விமரிசனத்தை நீங்கள் வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த விமரிசனத்திற்காக அ.மார்க்ஸ் , துறைசார்ந்த போட்டிக் கட்டுரை எனக் கூறித் திசை திருப்பினார். பின்னர் உயிர் எழுத்தில் அதற்கு மாற்றாக ஒரு கட்டுரை எழுதிப் பாராட்டப்பட்டார் தொ.ப. இப்போதும் நாஞ்சில் நாடனை இப்படி எழுதத்தூண்டியவர்கள் யார் என்று தான் தேடிக் கொண்டிருக்கிறார். தன் மீதான விமரிசனங்களுக்கு அவர் பதில் எழுத மாட்டார். அடிப்படைகளை வைத்து வசவுகளைப் பதிலாகத் தருவார். இதுதான் வாடிக்கை.

தொ.ப., ஒரு தமிழ் அறிஞர் எனச் சொல்லிப் பாராட்டிய பலரில் நீங்களும், நாஞ்சில் நாடனும் எனப் பலர் உண்டு. இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று எதையும் எழுதாத ஆ.ரா. வேங்கடாசலபதி, சிசு.மணி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் போன்ற பெயர்களின் வழியாகத் தன்னை ஒரு இலக்கியவிமரிசகராக முன்னிறுத்திக் கொண்ட கதைகள் வேறு விதமானவை.

இலக்கிய விமரிசனம், பண்பாட்டு ஆய்வு, இலக்கியவரலாற்றாய்வு, மொழி வரலாற்றாய்வு, சமுதாய வரலாறும் இலக்கியமும் போன்றவை ஒன்றோடொன்று குழம்பிக் கிடக்கின்றன. இதையெல்லாம் சொன்னால் இவர்கள் கல்வியாளர்கள் என்ற கேலி பதிலாகக் கிடைக்கும். அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் கலந்து கட்டி உதிரியாகக் கருத்துக்களைச் சொல்லும் தொ.ப. போன்றவர்களை வேறு வேறு காரணங்களுக்காக ’தமிழறிஞர்’ எனப் பேசும். நீங்கள் கூட முதலில் எழுதி விட்டுப் பின்னர் பின் வாங்க நினைத்திருக்கிறீர்கள். ஓரடி முன்னே; ஈரடி பின்னே நகர்வது முன்னேறிச் செல்வது ஆகுமா?

சரி நான் உயிர்மையில் சமயங்களின் அரசியல் நூலுக்கு எழுதிய மதிப்புரை இதோ. படித்துப் பாருங்கள்..

அ.ராமசாமி

அன்புள்ள அ.ராமசாமி,

அப்பட்டமாக ஒன்று சொல்கிறேனே, தொ.பரமசிவன் முன்வைக்கும் அரசியல் எனக்கு கொஞ்சம்கூட உவப்பானதல்ல. அது முன்முடிவுகளும் காழ்ப்புகளும் கொண்டது என்றே நினைக்கிறேன். ஆகவேதான் இன்னமும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இன்னமும் ஜாக்கிரதையாக இருந்தாகவேண்டியிருக்கிறது. என் குரல் காழ்ப்பாக தொனித்துவிடலாகாது என்ற கவனம் அது. அவரது சாதனைகளை குறைத்துக் காட்டி என் தரப்பை நிறுவி விடக்கூடாது என்ற கவனம். அ.மார்க்ஸ் அல்லது தொ.பரமசிவன் போன்றோர் அதை ஒரு நாளும் செய்ததில்லை என்றாலும் அது அவசியமென்றே எனக்குச் சொல்லிக் கொள்கிகிறேன்

குற்றாலத்தில் ஒருமுறை தொ.பரமசிவனை கண்டபோது இந்த சமயங்களில் அரசியல் என்ற நூலை சொல்லி ‘படிச்சுப்பாருங்க, உங்களுக்கு நெறைய அடிப்படைகள் புரியும்’ என்றார். எனது கருத்துக்களுக்கு மாற்றுத்தரப்பு இருக்கலாம். ஆனால் அதைச் சொல்ல நான் வாசித்த, புரிந்துகொன்ட,பேசும் தளத்துக்கு கொஞ்சமாவது வந்திருக்கவேண்டும். தொ.பரமசிவனின் எளியமேடைப்பேச்சு நூலை நான் ஏற்கனவே வாசித்து மனம்வெறுத்து போயிருந்தேன். ஒரு தமிழறிஞர் தன் அனைத்து அடக்கங்களையும் இழந்து, தன் எல்லைகளை அறியாமல், எழுதிய நூல் என்ற எண்ணமே இருந்தது. உங்கள் கட்டுரையும் அதை உறுதிசெய்தது. அந்நூலின் வழியாக சில எளிய குழு அரசியல் லாபங்களை மட்டுமே அவர் இலக்காக்குகிறார். அதையே என் கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன்

தொ.பரமசிவன் போன்றவர்களை என்னைப்போன்றோர் அணுகும் முறை பற்றி சொல்லவேண்டும். நான் தமிழறிஞன் அல்ல, அப்படிச் சொல்லிக்கொள்ள கொஞ்சம் தயங்குவேன். நான் இலக்கியவாதி. அவ்வண்னமே இலக்கியத்தையும் வரலாற்றையும் வாசிப்பவன். ஆகவே பொதுவாக நம் சூழலில் தமிழறிஞர்களாகவோ அல்லது வரலாற்றறிஞர்களாகவோ முன்வைக்கப்படுபவர்களை அவ்வாறே ஏற்று மேலே பேசுவதுதான் என் வழக்கம். நாஞ்சில்நாடனும் அவ்வாறே. பலசமயம் இவர்களின் நூல்களை அப்படியே நம்பி அப்படியே மேற்கோள் காட்டுவதும் உண்டு- உங்கள் நூலில் ஒரு தகவல் இருந்தால் நான் அப்படியே மேற்கோள் காட்டுவேன். நீங்கள் கல்வியாளர் என்பதனால் அது சரியாக இருந்தாகவேண்டும் என எதிர்பார்ப்பேன்.

அந்த நம்பிக்கை நாஞ்சில்நாடனுக்கு நிகழ்ந்தது போல சட்டென்று கலையும்போதுதான் அதிர்ச்சியும் வருத்தமும் உருவாகிறது. அந்த வருத்ததின் விளையே என் கட்டுரை. ஆனால் என் சொற்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் அவரை தனிப்பட்ட முறையில் காயபப்டுத்துமோ என்றும் உடனே பட்டது. அறிவுலகில் இந்த தடுமாற்றம் இருக்கக் கூடாதென்றே நினைக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு அடிக்கடி அது வருகிறது. விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளும் இடத்தை நோக்கிச் செல்கிறேன் போல

ஜெ

அலைப்பரப்பில் தவிக்கும் கப்பல் அ.ராமசாமி

பேராசிரியர் வீ.அரசு ஒருங்கிணைப்பில், கங்கு வெளியீடாகத் தமிழில் சில ‘அரசியல்’ நூல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. எல்லாமே அரசியலிருந்து தொடங்குகிறது அல்லது அரசியலை நோக்கிப் போகிறது [Everything must be from politics or towards politics ] என நம்பும் கங்கு தொடர்ந்து எட்டுச் சிறு வெளியீடுகளுக்கான திட்டத்தையும் அவற்றை எழுதுவதற்குக் கைவசம் அறிஞர்களையும் வைத்திருக்கிறது. ராஜ்கௌதமனின் தலித்திய அரசியல், ந.முத்துமோகனின் இந்திய தத்துவங்களின் அரசியல் என்ற இரண்டு நூல்களை அடுத்து அந்த வரிசையில் இப்பொழுது வந்துள்ள சமயங்களின் அரசியல் நான்காவது நூல். இந்நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியர்¢. தமிழ் நாட்டின் சமுதாய வரலாற்றை வாய்மொழி வழக்காறுகளின் வழியாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர்.அரசியல் என்ற பின்னொட்டோடு நூல்கள் வெளியிடும் கங்குவின் தொடக்கம் எஸ்.வி.ராஜதுரையின் பூர்தியவும் மார்க்சியமும்¢ . நிகழ்கால வாழ்வில் தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் இயங்குநிலை,ஊடகச் செயல்பாடுகளைத் தாண்டி அரசியல் செயல்பாடுகளாக இருக்கின்றன எனத் தனது ஆய்வுகளில் பேசியுள்ள பிரெஞ்ச் தேச ஊடக ஆய்வாளர் பூர்தியவினைத் தமிழுக்கு அறிமுகம் செய்யும் நூல் அது. அந்நூலின் தலைப்பில் நேரடியாக அரசியல் இல்லை என்பது ஒரு தகவல்.

சமகால நிகழ்வுகள், அணிச்சேர்க்கைகள், கருத்து மற்றும் வெகுமக்கள் போராட்டங்கள் போன்ற அனைத்தையும் அரசியல் நிலைபாட்டுடன் கணித்துத் தங்களின் ஆதரவு / எதிர்ப்பு அல்லது கண்டு கொள்ளாமை எனச் சார்பை வெளிப்படுத்துவது சிந்திப்பவர்களாகக் கருதிக் கொள்ளும் வாசகர்களின்¢ நிலை. நிகழ்காலத் தமிழ் நாட்டில் அப்படியான வாசகர்கள் கூட்டம் கணிசமாக உள்ளது. பெரும் பத்திரிகைகளை வாசிக்கும் பெருங்கூட்டத்தை அடுத்து ஒரு பெரிய கூட்டமாக இந்த வாசகர்களையே சொல்லலாம். எண்ணிக்கையைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும் பல ஆயிரங்களைத் தாண்டக கூடும். பொருளாதார நிலையில் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கம் என அந்தக் கூட்டத்தைச் சொல்லலாம்.பொருளாதார அடையாளம் தாண்டி இந்தக் கூட்டத்திற்கு இன்னொரு அடையாளத்தைத் தர வேண்டும் என்றால் இப்படிச்சொல்லலாம்; இடதுசாரி முற்போக்குக் கருத்துக்களிலும், பெரியாரின் அறிவு வாதத்திலும் நம்பிக்கை கொண்டதாகப் பாவனை செய்யும் அக்கூட்டத்தினை இந்தியச் சாதியச் சமூக அடுக்கில் இடைநிலைச் சாதிகள் என்றும் கூறலாம். அந்தக் கூட்டத்தை நோக்கி எழுதப்பட்ட நூலே தொ.பரமசிவனின் இச்சிறுநூல். இந்தக் கூற்றுக்கான ஆதாரம் தேடி வேறெங்கும் அலைய வேண்டியதில்லை. நூலின் முடிவுரையாகத் தரப்பட்டுள்ள இந்தப் பகுதியை வாசித்தாலே போதும்

ஒட்டு மொத்தமாக இந்தச் சிறு நூல் சொல்ல வருவதெல்லாம் இதுதான். இந்து மதம் என்றொரு மதமோ, கொள்கையோ, ஒரு தத்துவமோ அந்த மதத்திற்கென்று தத்துவ நூலோ கிடையாது. வடமொழி வேதத்தினை மட்டும் ஏற்றுக் கொண்டு சாதி அடுக்கினைச் சரிந்து விடாமல் பேணிக்கொண்டு தங்கள் சாதி மேலாண்மையினைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிப்பதே வைதீகமாகும். கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் தனி ஒரு தத்துவ நூலும் ஆகமங்களும் உடைய சைவ, வைணவ மதங்களை விழுங்கிச் செரித்துக் கொண்டு அரசதிகாரத்தின் துணையோடு வைதீகம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எழுதா எழுத்தான வேதம், புராணங்கள், வடமொழி மந்திரங்கள், அச்சு ஊடகங்கள், மின்னியல் ஊடகங்கள் ஆகியவற்றை இதற்கான கருவிகளாகக் காலந்தோறும் பயன்படுத்திக் கொண்டு வைதீகம் தன்னை மறு உயிர்ப்புச் செய்து கொள்கின்றது. இதுவே நேற்றைய வரலாறும் இன்றைய நிகழ்வுமாகும்

தொ.பரமசிவனின் நூலுக்கு ,சமயங்களின் அரசியல் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும். நூல் முழுக்கப் பேசுவது வைதீக சமயத்தின் அரசியலையும் அதன் வெற்றியையும் தான் என்பதை இந்த சாராம்சமான முடிவுரை சொல் கிறது. இந்தச் சாராம்சமான முடிவுரைதான் இந்த நூலின் நோக்கம். இந்த முடிவுரை மட்டுமே போதும் என்று விரும்பும் வாசகர் கூட்டம் இந்த நூலை வெகுவாகப் பாராட்டக்கூடும். நிகழ்காலக் கருத்தியல் போராட்டத்திற்குத் தக்கதொரு கேடயமும் கூர்மையான ஆயுதமும் கிடைத்து விட்டதாக நம்பி கொண்டாடவும் வாய்ப்புண்டு. இப்படி நம்பப்படுவதற்கும் கொண்டாடப் படுவதற்குமான காரணங்கள் நூலின் உள்ளே இல்லை என்பதை ஒரு வாசகர்¢ மிகச் சுலபமாகக் கண்டுபிடித்து விட முடியும். இதற்கு அவர் மிகத் தேர்ந்த வாசகராக இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. தான் வாசிக்க எடுத்த ஒரு நூலை ‘ வாசித்து முடிப்பேன் ’ என்ற பிடிவாதம் மட்டும் அவருக்கு இருந்தால் போதிலும். அப்படியொரு பிடிவாதம் இல்லை என்றால் இந்த 64 பக்க சிறு நூலை வாசிக்க நாட்கள் பல ஆகக் கூடும். பல தடவை ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பச் சென்று வரவேண்டியதிருக்கும். இந்த மேட்டைத் தாண்ட முடியுமா..? என்ற மலைப்புக் கூடத் தோன்றலாம். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. எனக்குத் தோன்றியது. தெளிவான நோக்கத்தை அல்லது முன்முடிவை உருவாக்கிக் கொண்டு பயணம் செய்யும் இந்த நூல் , அந்த நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்தும் உத்திகளும் ஆதாரங்களும் பலவீனமானவைகளாக இருப்பதோடு போதுமானவைகளாகவும் இல்லை என்பது மலைப்புத் தோன்றக் காரணமாக இருக்கலாம்.ஆம். பற்பலவான வேகத் தடைகள் தாண்டித் தான்இலக்கை அடைய வேண்டியுள்ளது

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் , போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் முதலில் ‘வட இந்தியாவில் இருந்த பூர்வகுடிகளின் தலைவர்களை அரசர்களாக்கித் தங்களின் கருத்தியல் தலைமையைச் சடங்குகளின்வழி உருவாக்கிக் கொண்டார்கள்; அதற்குப் பயன்பட்டவைகளே எழுதப்படாத வேதங்களும் அவை சொல்லப்படும்போது செய்யப்படும் சடங்குகளும்’ என்பது இந்திய வரலாற்றாசிரியர்கள்¢ பலரிடம் இருக்கும் ஒரு கருத்தோட்டம்.அந்தக் கருத்தோட்டத்தின் நீட்சியாகவே, ‘தமிழ் நாட்டிற்குள்ளும் ஆரியர்களின் வருகை நிகழ்ந்தது; இங்கும் அவர்களது கருத்தியல் மற்றும் சடங்கியல் தலைமை உருவாக்கப்பட்டது’ என்று தமிழக வரலாற்றை வாசிக்கிறோம். வைதீக சமயத்தின் சடங்குகள் மற்றும் கருத்தியலுக்கெதிராகப் பேசிய சார்வாகன், வர்த்தமானன், கௌதமன் , போன்றவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் சில வெற்றிகளை அடைந்ததும் உண்டு.பல தோல்விகளை அடைந்ததும் உண்டு. அசோகன் போன்றவர்களின் வழியாகப் புதுவகை ஆட்சியதிகாரமுறைகளைக் கொண்டு வந்த சமண பௌத்தக் கருத்துக்கள் ¢தமிழ் நாட்டில் களப்பிரர்கள் காலத்திலும் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் பல இருக்கின்றன. இவை யெல்லாம் நிகழ்ந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு என்பதாக வரலாற்றாசிரியர்கள் இந்திய வரலாற்றையும் தமிழக வரலாற்றையும் வாசிக்கிறார்கள். இந்த வாசிப்பில் ஏராளமான உண்மைகளும் அதே அளவுக்கு யூகங்களும் உள்ளன. தொ.பரமசிவனின் இச்சிறு நூல் அத்தகைய யூகங்களின் மேல்தான் தனது முடிவை நோக்கிப் பயணம் செய்துள்ளது. நூல் முழுவதும் காணப்படும் யூகங்களைப் பட்டியலிடுவது தேவையற்றது என்றாலும் ஒன்றி ரண்டைப் பின்னர் சுட்டிக் காட்டலாம். அதற்கு முன்பு இந்த நூல் எழுதப்பட்டுள்ள முறையினைக் காணலாம்.

தமிழ் நாட்டில் சமயங்களின் அரசியல் பற்றிப் பேசும் ஒருவர் தமிழ் நிலப்பரப்பிற்குள் மட்டும் நின்று பேசமுடியாது என்பது வெளிப்படையான உண்மை. இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும் தொடக்க காலத் திலிருந்தே சமயச் செயல்பாடு என்பது இந்தியத் தன்மையோடும், 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்திய வெளிக்கு அப்பாற்பட்ட தேசங்களோடும் உறவு கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்த நூல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய பக்தி இயக்கத்தோடு வைதீக சமயம் கொண்ட உறவையும் முரணையும் மையமாக்கியே தொடங்குகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் நிலவிய சமய நம்பிக்கைகள் எத்தகையவை..? இந்நூலில் தொல் சமயக்காலம் எனக்குறிக்கப்படும் காலம் [ப.21] பற்றிய ஆதாரங்கள் எவையேனும் உண்டா..? அவை சங்க நூல்களின் காலமா..? அவைகளுக்கும் முந்திய காலமா..? அத்தொல் சமயங்கள் நிறுவனத் தன்மை யற்றவைகளாக இருந்தனவா..? அல்லது அத்தொல் சமயங்களின் நிறுவன வடிவமே தமிழ் பக்தி இயக்கத்தின் வெளிப்பாடுகளான சைவ, வைணவ சமயங்களா..? போன்ற வினாக்கள் இந்நூலை வாசித்தபோது எழுகின்றன. இந்த வினாக்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்க விடைகள் கிடைக்காத நிலையில் சொல்லப்படும் வாதங்களின் மேல் நம்பிக்கைகள் தோன்றாமல் போய் விடுகின்றன.

தமிழ் நாட்டில் அரசுருவாக்கம் கி.பி ஏழாம் நூற்றாண்டினை ஒட்டியே நிகழ்ந்ததாக இந்நூல் பல இடங்களில் சொல்கிறது. சங்க காலத்திலேயே குறுநில மன்னர்களை அடக்கி, அவர்களின் ஆட்சிப்பரப்பையும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் தங்களின் போக்கில் மாற்றிய மூவேந்தர்கள் தோன்றிவிட்டார்கள் என்று க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், போன்றவர்களின் நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. சங்க காலத்தில் அரசுகள் உருவாகி விட்டன என்றும், அவை சோழர்கள் காலத்தில் பேரரசாக உருவாக்கம் பெற்றன என்றும் கல்வியாளர்கள் மத்தியில் நிலவும் கருத்தை மாற்றப் போதுமான விவாதங்களையோ ஆதாரங்களையோ முன்வைக்காமல் இந்நூல் அரசுருவாக்கத்தின் காலம் பல்லவர்களின் காலம் என்கிறது. அதே போல் அரசுருவாக்கத்தின் பின்னின்ற சமயங்கள் மற்றும் தத்துவங்கள் எவை என்பதைப் பற்றிய கூற்றிலும் முரண்பாடுகள் உள்ளன.

‘’ அரசுருவாக்கத்துக்குத் துணை நின்ற சைவ, வைணவ நெறிகள் கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னரே சமண, பௌத்த மதங்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிவிட்டன.’’ என்ற வாக்கியம்

சைவ, வைணவ சமயங்கள் தான் அரசுருவாக்கத்தின் பின்னிருந்தன என்கிறது[ப.25]. ஆனால் ,

’’ அரசதிகாரம் உருவாகின்றபோது பண்பாட்டுத் தளத்தில் அதற்குத் தேவையான தத்துவார்த்தத்தை வைதீகம் உருவாக்கித் தந்தது’’ என்ற வாக்கியம் வைதீக சமயம் தான் அரசுருவாக்கத்தின் பின்நின்றது

என்கிறது[ப.22]. இத்தகைய முரண்பாடுகள் பல பல்வேறு வாதங்களிலும் காணப்படுகின்றன.

வைதீக சமயத்துடன் பக்தி இயக்கம் முரண்பட்டது என்பதை விட சிற்சில வேறுபாடுகளைத் தக்க வைக்க முயன்றதுடன் கடைசியில் அதனுடன் கைகோர்த்துக் கொண்டது என்பதாக வாசிப்பதில் நம்பகத்தன்மை கூடுதலாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அதற்கான காரணங்களும் நிர்ப்பந்தங்களும் அக்கால கட்டத்தில் இருந்துள்ளன.வைதீக சமயத்தின் வட இந்திய எதிர்க்குரல்கள் சமணமும் பௌத்தமும். சமணத்திற்கும் பௌத்தத்திற்கும தமிழ்நிலப்பரப்பில் எதிர்நிலை எடுத்தவர்கள் தமிழ்ச் சைவர்களும் வைணவர்களும். ஆகவே எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாகக் கைகோர்த்த பக்தி இயக்கம் வைதீக சமயமாக மாறியது வரலாற்றில் நிகழ்ந்திருக்கக் கூடிய ஒன்று தான்.தமிழ் நாட்டுச் சைவ , வைணவ சமயங்களுக்கும் இந்திய வைதீக சமயத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பலப்பல என்றாலும் ஒற்றுமைகளும் அதே அளவுக்கு உண்டு.சாதி அடுக்கை ஏற்றுக் கொள்ளுதல்,வலிமையான அரசதிகாரத்திற்குத் துணை நிற்றல்¢, பால் அடிப்படையிலும் பிறப்பு அடிப்படையிலும் தீட்டைக் கடைப்பிடித்தல் போன்றன ஒற்றுமைகளுள் முக்கியமானவை.பொது எதிரியை வீழ்த்திட அல்லது அதிகாரத்தைக் கைப்பற்ற, தனித்தன்மைகளை விட்டுவிட்டுக் குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் வட இந்திய ஆதிக்கவாதிகளும் தமிழ்நாட்டு ஆதிக்கவாதிகளும் ஒன்றிணைவது இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல் மட்டுமல்ல; ஏழாம் நூற்றாண்டு அரசியலும் கூட அதுதான். இந்தக் கோணத்தில் வரலாற்றை வாசித்துப் பார்க்காமல் தமிழ் நாட்டு அறிவாளிகளைத் தடுக்கின்ற நிகழ்காலக் காரணங்கள் சில உள்ளன.[ இந்த இடத்தில் இந்திய/ தமிழ்நாட்டு வரலாறுகளுக்கு-சமயவரலாறு உள்பட்ட பண்பாட்டு நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் மாற்று ஊகங்களையும் உண்மைகளையும் முன்வைத்த அயோத்திதாசரின் வாசிப்பு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. இச்சிறு நூல் அவரின் வாசிப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது]

பின்காலனியத் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் , பண்பாட்டுச் சீரழிவுக்குக் கூடுதல் பொறுப்பேற்க வேண்டியது இன்று அதிகாரத்தில் இருக்கும் திராவிட அரசியல். அத்திராவிட இயக்க அரசியலையும் அதனால் பலன் அடைந்த இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ அல்லது வைதீகச் சார்பு நிலைபாட்டையும் விமரிசிக்கும் வேலையைத் தவிர்த்துவிட்டு, வைதீக சமய எதிர்ப்பு மற்றும் பிராமண எதிர்ப்பு பற்றியே கவனத்தைக் குவிக்கும் தொ.பரமசிவன் போன்ற அறிவாளிகள் திராவிட அரசியலை என்னென்ன காரணங்களுக்காக ஆதரிக்கிறார்களோ அதே காரணங்களுக்காக சைவ வைணவ சமயங்களையும் ஆதரிக்கிறார்கள் என்பதுதான் முதன்மையான காரணம். ‘இன்று திராவிட அரசியல் கொஞ்சம் இசகுபிசகாகத் திசை திரும்பிப் போயிருந்தாலும் அது ஜனநாயகத் தன்மையுடையது; பாலினச் சமத்துவத்தைப் பேணுவது; கலகக் குரலுக்கு அனுமதியளிப்பது; முற்போக்கானது; சமூக நீதியைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிறுவிட விரும்புவது’ என்பனவெல்லாம் அவர்கள் தரும் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் எல்லாம் நிகழ்கால இருப்பில் இல்லையென்றாலும் திராவிட இயக்க அரசியலுக்கு இருந்தன என்பதற்கான ஆதாரங்களையாவது காட்ட முடியும். எழுத்தாகவும் பேச்சாகவும் அந்த அரசியல் சேமித்து வைத்துள்ள தரவுகள் அதனை உறுதி செய்கின்றன. ஈ.வெ.ராமசாமியின் பேச்சுக்களும் எழுத்துக்களும் தான் அந்த ஆதாரங்கள்.[ஆனால் அவரின் பேச்சுக்களும் எழுத்துகளும் தான் வன்மம் சார்ந்த அணுகுமுறையை- தன்னிலையை விமரிசனப் படுத்திக் கொள்ளாமல் எதிரியை மட்டும் காரணமாகக் காட்டும் மனநிலையைத் தமிழர்களிடம் கொண்டு வந்து சேர்த்தன என்பது தனியாக விவாதிக்கப் பட வேண்டியவை.] ஆனால் இந்த அடையாளங்களையெல்லாம் தமிழ் பக்தி இயக்கத்திற்கும் உரியன என வாதிடுவது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல; அவர்கள் வைதீகசமயத்தையும் வடமொழியையும் எதிர்நிலையில் வைத்துப் பார்த்தார்கள் என்பதைத் தவிர. தமிழ்ப் பக்தி இயக்கம் எந்த அதிகாரப் பரவலுக்கும் சமத்துவத்திற்கும் தயாராக இல்லாத நிறுவனத்தை விரும்பிய இயக்கம் என்பதைப் பல சான்றுகள் மூலம் நிரூபிக்க முடியும். பலர் அந்த முயற்சிகளையும் செய்திருக்கிறார்கள். பக்தி இயக்கத்தின் தளபதிகளிடம் -நாயன்மார்கள், ஆழ்வார்கள்-கருத்தியல் சார்ந்த வன்முறையும் ஆயுதம் தாங்கிய வன்முறையும் இணைந்தே இருந்தன என்பதற்குப் புனல் வாதங்களும் அனல் வாதங்களும் மட்டுமல்ல, கழுவேற்றங்களும் சாட்சிகளாக இருக்கின்றன.

நிகழ்கால அரசியலில் திராவிட இயக்க அரசியல் சார்பு , அதன் நீட்சியாக வைதீக சமய எதிர்ப்பு என்ற நிலைபாடு எடுப்பதன் காரணமாகத் தொடக்ககால அரசியல் வரலாற்றை மட்டும் அல்லாமல் அண்மைக் காலச் சமய அரசியலையும் அந்தக் கோணத்திலிருந்தே பார்க்க நேர்ந்துவிடுவதை ஒரு நெருக்கடி என்றுதான் சொல்ல வேண்டும். காலனியாட்சியாளர்களுக்கும் அவர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறைக்கும் எதிர்ப்பு நிலைபாடு என்பது தொ.பரமசிவனின் ஒரு வெளிப்பாடு. அதே நேரத்தில் காலனியாட்சியாளர்களின் அதிகாரத்திற்கும் சமயநெறிக்கும் விளிம்பு நிலை மக்களைத் தகவமைத்த கிறித்தவ சமயத்திற்கும், அதன் பிரசாரகர்களான பாதிரிகளுக்கும் பாராட்டு என்பது மறுதலையான இன்னொரு வெளிப்பாடு. இந்த முரண் பட்ட வெளிப்பாட்டிற்குக் காரணம் சமயங்களின் அரசியல் என்பதை அறிவுசார் கல்விப்புல முறையியல் சார்ந்த பார்வையால் அணுகாமல் வெகுமக்கள் அரசியல் என்னும் முறையியலோடு பார்ப்பதே எனலாம். இன்றுள்ள சிறுபான்மைச் சமய ஆதரவு என்னும் திராவிட, இடதுசாரி அரசியல் பார்வையால் உண்டான பார்வைக் கோணம் தான் அவரை அத்தகைய முரண்பாடுகளுக்குள் இட்டுச் செல்கிறது.இந்த நூலை எழுதியுள்ள தொ.பரமசிவன் ஒரு குறியீட்டு வெளிப்பாடு தான். தமிழ் நாட்டில் இத்தகைய பார்வையோடு எழுதுபவர்கள் பலருண்டு.அவற்றை விரும்பிப் படித்துச் சொல்லாடல்கள் நடத்துபவர்கள் பற்பலராக உள்ளனர்.

இதே முரண்பட்ட பார்வை தான், இசுலாமிய அரசர்களின் வருகை, இசுலாமிய சமயம் மற்றும் இசுலாமிய சடங்குகள் பற்றிய எதிர்மறை- நேர்மறைக்கூற்றுகளிலும் காணப்படுகின்றன. அறிவுலக எல்லைக்குள் நின்று பேச வேண்டிய அரசியலை தேர்தல் அரசியல் எல்லைக்குள் நின்று பேசுவது பொருத்தமானது தானா..? என்பது யோசிக்க வேண்டிய ஒன்று. அதிலும் பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்து கொண்டு அறிவுலகப் போராளியாக அறியப்படும் பேராசிரியர்கள் இப்படியான பார்வையை முன்வைப்பது சரித்தானா.. ? என்பது கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

தனது வாதங்களுக்கு ஆதாரமாக தமிழ் நிலப்பரப்பின் முழுமையிலும் நிலவிய பொதுப்போக்குகளையோ நிகழ்வுகளையோ காட்டாமல், ஓர் ஊரில் அல்லது ஒருசில கோயில்களில் மட்டும் இருந்த சிறப்புக் கூறுகளையே ஆதாரமாகக் காட்டி வாதங்களை முன்வைக்கும், இந்த நூல் கல்விப்புல அறிவுசார் முறையியலைப் பின்பற்றவில்லை என்பதற்கு வேறு சில சான்றுகளும் நூலில் உள்ளன. நூலின் முடிவில் துணை நின்ற நூல்கள் எனப் பட்டியல் ஒன்று உள்ளது.மூன்று தமிழ் நூல்களும் ஐந்து ஆங்கில நூல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல்லவர் வரலாறு என்னும் மா.இராசமாணிக்கனாரின் தமிழ் நூலும் [ப.8]¢,சி.மீனாட்சியின் பல்லவர் காலம் பற்றிய ஆங்கில நூலும் [ C.Minakshi- Administration and Social life under the Pallavas,1956/ இந்த நூலின் முதல் பதிப்பு 1938] மட்டுமே [ப.10] முறையான மேற்கோள்களாக ஒரிரு இடத்தில் நூலுக்குள் உள்ளன. தி.நா.சுப்பிரமணியன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் தமிழ் நூல்களில் இருந்தோ,டேவிட் லாரன்சன், ஐ.கே.சர்மா, ஆர்.சுந்தரலிங்கம், ஈ.சா. விசுவநாதன் போன்றவர்களின் ஆங்கில நூல்களிலிருந்தோ எந்த ஒரு மேற்கோளும் முறையான பக்கக் குறிப்புடன் மேற்கோள் காட்டப்படவில்லை. இவையல்லாமல் துணை நூல் பட்டியலில் இடம்பெறாமலேயே நூலின் போக்கில் கா.சிவத்தம்பி(ப.21), கோ.கேசவன்(ப.22) , எஸ்.ஆர்.பாலசுப்பிரமண்யன்(ப.23), மே.து.ராசுக் குமார் (ப.43) ஆறுமுக நாவலர், காசிவாசி செந்தில் நாத ஐயர் (ப.46) போன்றவர்களின் கூற்றுக்களும் சான்றாகவும் ஆதாரவாதங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆனால் எந்த நூல், எந்தப் பக்கம் என்ற விவரங்கள் எதுவும் இல்லாமலேயே. ஆசிரியர் கருத்தில் உடன்படாத வாசகன் ஒருவன் அந்த நூல்களை எடுத்துச் சரிபார்த்தல் என்பது இயலாது என்பது சொல்ல வேண்டிய ஒன்றல்ல.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலிருந்து முறையான சான்றுகளையும் தர்க்கங்களையும் (கடைசி 10 பக்கத்தில்) அடுக்கி விவாதிக்கும் இந்நூல் அதற்கு முந்திய பகுதிகளில், சொன்னதையே திரும்பவும் சொல்லுதல் கபாலிகர், காளாமுகர் பற்றிய விளக்கங்கள் பக்.9-11மற்றும் பக்.40-42; கிராமம் பற்றிய குறிப்பு ப.14 மற்றும் ப.43; போன்றன சில உதாரணங்கள்] வரலாற்று அடிப்படைகளற்று முன்னும் பின்னுமாகப் பயணம் செய்து வாசிப்பவனைக் குழப்புகிறது. பொருத்தமற்ற உதாரணங்களை ( சிவனின் ஆடையில்லாக் கோலம்,ப.9 ) முன்வைத்து வாதிக்கிறது. இல்லையென்றால் ஊகங்களை முன்வைத்து [ திருவிழாக்களுக்கு பௌத்தமே உந்துதல் .ப.15 / பெண்களின் மீதான உரிமை. தொல்சமயத்தில் பெண்களின் இடம் ப.20 / வணிகம் பற்றிய வாதம் ப.46/ சித்தர்கள்¢= சுபிகள்]வாதங்களைக் கட்டி எழுப்புகிறது. இவை மட்டுமின்றி மிகச்சுலபமாகச் சரி செய்திருக்கக் கூடிய குழப்ப வாக்கியங்களைக் கூட சரி செய்யாமலேயே அச்சிடப்பட்டுள்ளது[29/ 38/ 43] உதாரணம். வைகானசம் ,வைகாசனம்( பக்.34-37) என்னும் இரண்டில் எது சரி..? இந்தப் பிழை அச்சுத் திருத்தத்தில் சரி செய்யப்பட வேண்டியது தான் என்றாலும், வேற்று மொழிச் சொல்லில் எது சரி என்பதை வாசகன் அவ்வளவு சுலபமாக முடிவு செய்ய முடியாது.

இந்தக் மதிப்புரையை எழுதுவதன் மூலம் கெட்ட வார்த்தையால் திட்டுவதற்குச் சமமான வசவுகள் கிடைக்கும் என்பது கூட தெரிந்ததுதான். விமரிசிப்பதற்கு வேறு நோக்கம் கற்பிக்கப்படுதல் தான் இங்கு வாடிக்கை. திட்டுக்களும் கோபமும் நூலாசிரியரிடமிருந்து வராவிட்டாலும் அவர் தரும் முடிவோடு உடன்படுகிறவர் களிடமிருந்து வரத்தான் செய்யும். ஏனெனில் கருத்தைக் கருத்தாக எதிர்கொள்ளும் பக்¢குவத்தை திராவிட அரசியல் தரவில்லை என்பதன் வெளிப்பாடு அது. என்றாலும் முடிப்பதற்கு முன்னால் ஒரு கருத்தைச் சொல்லி விட்டு இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் நூலின் பகுதியைத் தர விரும்புகிறேன். கருத்து இதுதான்;

அதிகாரக் கட்டமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கம் கொண்ட எழுத்தும் கூட முன் முடிவுகளை நோக்கியதாக அமையும் நிலையில் எதிர்விளைவுகளையே உண்டாக்கும் என்பது நம் காலத்தில் பரவலாக உள்ள நம்பிக்கை. முன்முடிவுகள் அடிப்படையில் எழுதப்படும் எழுத்து ஓர் அதிகாரத்திற்குப் பதிலாக இன்னோர் அதிகாரத்தை முன்மொழிவன எனப் பேசும் நவீனத்துவ விமரிசனம், பலதள வாசிப்புக்கான பிரதிகளை முன்மொழியும் காரணம் அதுதான். ஆனால், தீர்மானமான முடிவுகளின்றி ஓர் எழுத்தாளனின் எழுத்தும் இல்லை; ஒரு செயலாளியின் இயக்கமும் இல்லை என்பது இடதுசாரி முற்போக்கு தத்துவத்தின் நிலைபாடு. பெரியாரியத்தைப் பின்பற்றும் இயக்கங்களின் இலக்கியக்கொள்கையும் நிலைபாடும் இதுதான். இந்த அடிப்படையான வேறுபாட்டினால் தான் நவீனத்துவ விமரிசனத்துடன் அவை ஒட்டாமல் விலகி நிற்கின்றன. பொதுவாக ஒருவனுடைய பேச்சு மற்றும் எழுத்தைத் தீர்மானிப்பது அவனது நிலைபாடுகள் தான். அந்த நிலைபாடுகள் அவனது நம்பிக்கைகள் சார்ந்து உருவாகிறது. நம்பிக்கைகள் அவனது வாழ்வனுபவத்திலிருந்து உண்டாகிறதா..? அல்லது தன்னை என்னவாறு இந்த சமூகத்திற்குக் காட்டிக் கொள்ள விரும்புகிறான் என்பதிலிருந்து உருவாகிறதா..? என்பதில் உறுதியான முடிவு எதுவும் இல்லை. நம்புவதை வாழ்க்கையாகக் கொள்வதும், அதையே தனது அடையாளமாகக் காட்டுவதும் பலரின் அடையாளம். அதன் மறுதலையாக எனது அடையாளம் இது; அதிலிருந்து நான் சொல்கிறேன். எனது கருத்துக்கள் இந்தச் சமூகத்தை வழி நடத்தக் கூடியன; விடுதலைக்கான உத்தரவாதங்கள் அதில் உண்டு எனச் சொல்வது சிலரின் பாணி. இப்படியான உத்தரவாதங்களைத் தரவல்லவர்களால் தான் முன்முடிவுகளுடன் இயங்க முடியும். அவர்களுடைய முன்முடிவுகள் சில நேரங்களில் நேர்மறை விளைவுகளையும் பல நேரங்களில் எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்கியுள்ளன என்பதற்கு வரலாற்றில் சான்றுகள் பல உள்ளன.

இனி நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் நூலின்¢ பகுதி:

நான் சென்னையில் இருக்கின்றபோதெல்லாம் மாணவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அங்கு சென்றபின்னர் தான் எனக்குத் தெரியும், நாங்கள் எழுது வதெல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டும் என்பது .நாங்கள் எழுதுவதையெல்லாம் அவர்கள் மிகக் கவனமாக வாசிக்கிறார்கள். என்னுடைய திணை பற்றிய கட்டுரை அவர்களுடைய கண்ணோட்டத்தில் ஒரு முக்கியமான கட்டுரை.அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நான் தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் அக்கட்டுரையை எழுதினேன். அவர்கள் அதற்குமேல் பொருளாதாரக் கட்டமைப்புப் பற்றியெல்லாம் கேட்டார்கள்.

[ பக் 40 -41] கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் என்பது அந்த நூல்.[தமிழினி பதிப்பகம், ஆகஸ்டு,2005] நேர்காணல் வடிவ நூல்,நேர்காணல் செய்தவர் ; தி.ஞானசேகரன்.அயல் தேசத்துப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அனுபவம் பற்றிக் கேட்ட போது சிவத்தம்பி இப்படிச் சொல்கிறார். இந்தக் கூற்று, இரண்டு வார காலம் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வருகை தரு பேராசிரியராக இருந்ததைப் பற்றிய கூற்று . கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி, சமயங்களின் அரசியல் என்னும் நூலின் ஆசிரியர் பேராசிரியர் தொ.பரமசிவனாலும் கங்கு அமைப்பிற்காக ஒருங்கிணைக்கும் பேராசிரியர் வீ.அரசுவினாலும் அதிகம் மதிக்கப்படுபவரும் பின்பற்றப்படுபவரும் என்பது கூடுதல் தகவல்.

சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன், கங்கு வெளியீடு,பரிசல், சென்னை பக்.64.விலை.25 ரூபாய்

கா.சிவத்தம்பி, தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைஷாஜி,சேதுபதி,ஷர்மா…
அடுத்த கட்டுரைஇசை கடிதங்கள்