ஓர் இரவு

(ஒரு பழைய கட்டுரை.  Sep 21, 2010 ல் வெளியானது. பதிமூன்றாண்டுகளில் ஒவ்வொருவரும் என்னென்ன ஆக ஆகியிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக அனைவரும் அப்படியேதான் இருக்கிறார்கள். இக்கட்டுரை வெளியான அக்காலத்தில் எழுந்த பரவலான கேள்வி ‘அது என்ன பிராண்ட்?’ என்பதுதான்)

ஷாஜி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வழக்கம் போல அமெரிக்க கறுப்பர்களுக்கு உரிய ஆடும் நடையில் வந்து என் பெட்டியை சுழற்றித்தூக்கி காருக்குள் போட்டார். நான் உள்ளே அமர்ந்ததும் ‘எப்டி போய்ட்டிருக்கு?’ என்றேன்.

‘என்ன போறது? விமரிசனத்துக்கே விமர்சனம். மவனே இசை விமர்சகன்னு மட்டும் சொன்னே கீசிடுவேன்னு சொல்றாங்க’ என்றார்.

நான் பீதியுடன் ‘இல்ல, நான்கூட நாளைக்கு சாயங்காலம் இசைய பற்றிபேசணுமே’ என்றேன்.

‘ஏன்? என்ன பிரச்சினை?’ என்றார்.

‘எனக்கு இசையைப்பற்றி ஒண்ணுமே தெரியாதே’ ‘அது உங்கள் வாசகர்களுக்கு எல்லாம் தெரியுமே…’ என்றார்.

தெரியாத விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு எழுத்தாளர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது என நம்புகிறவன் நான். தெரியாத விஷயங்களைப்பற்றி தெரிந்தது போல பேசுபவன் இலக்கியவாதி, தெரியாத மாதிரியே பேசுபவன் அரசியல்வாதி. இசை தமிழகத்துக்கு அவசியத் தேவை என்று ஒரே போடாகப் போட்டு விட்டால் என்ன? ஆனால் கிட்டத்தட்ட அதே கருத்தை எஸ். ராமகிருஷ்ணனும் சொல்லக் கூடும். இசை என்றால் ‘இந்த ரேடியோ பெட்டியிலே காலையிலே கேக்குமே அதானே’ என்ற அளவில் அவரும்தான் சிறுவயதிலேயே இசையை அறிந்து வைத்திருக்கிறார். இளவயது நினைவுகளில் அலைவதற்கு அவருக்கு புனைவுலக உரிமைப் பதிவு வேறு இருக்கிறது.

ஏதாவது ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நான் ஷாஜியுடன் ஓட்டல் துளசி பார்க்குக்கு வந்தேன். ஷாஜி பதற்றமாக இருந்தார், சும்மாவே பதற்றமாக இருப்பது வழக்கம். இப்போது உரிய காரணங்களுடன். இதோ வருகிறேன் என்று கிளம்பிச் சென்றார். நான் என் மடிக்கணினியை விரித்தேன். இப்படியே போனால் இரும்பு உருக்குவது, கோழி வளர்ப்பது பற்றியெல்லாம் பேச அழைத்து விடுவார்கள் என அச்சமாக இருந்தது. இதை ஒப்பேற்றி விட்டால் இசைத் தெய்வத்துக்கு ஒரு தேங்காய் உடைத்து விடலாம் என்று வேண்டிக் கொண்டேன்.

ஏற்கனவே இசை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்திருந்தேன். அதை திரும்பவும் வாசித்துப் பார்த்தேன். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக இசைப்பது, கேட்பது இரு அம்சங்களும் இல்லாமல் இசை பற்றி எழுதப்பட்ட கட்டுரை. பாப்புலர் இசை என்பதை பரப்பிசை என்று மொழியாக்கம் செய்திருந்தேன். சோவியத் கலைச்சொல். அவர்களுக்கு இம்மாதிரி விஷயங்களில் பொதுவாக துணிவு அதிகம். அதை திரும்ப ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பார்த்தால் சரியாக வரவேண்டும் என்பது ஒரு விதி. பார்த்தேன். அகல இசை என்றோ தட்டை இசை என்றோ வந்தது. தமிழைப் பொறுத்தவரை மொழியாக்கம் சரிதான் என்ற நிறைவு உருவானது

ஆனால் நல்ல உரையில் பொன்மொழிகள் தேவை. வள்ளுவர் இசை கேட்கும் வழக்கம் இல்லாதவரென்று நினைக்கிறேன். ‘என்னத்தை குழலும் யாழும்? என் புள்ளை பேசுறான்பாரு’ என்ற தோதில் ஏதோ அவர் எழுதியிருக்கிறார். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ ஆனால் அது இசைபற்றித்தானா? பாட்டைக்கேட்டு ஈ என இளிக்கும் என்னைப்போன்றவர்களைப்பற்றியா? ‘நல்ல இசை சோகமானது’ அரிய கருத்து, ஆனால் அதை ஏற்கனவே பாரதி சொல்லிவிட்டார். ‘நல்ல இசை விமர்சனமும் சோகமானது’ என்று சொல்லிப்பார்த்தால் ஷாஜிக்கு நியாயம்செய்வதாக ஆகும். அவரை அறிந்தவன் என்றமுறையில் ‘நல்ல இசை விமர்சகன் சோகமானவன்’ என்றால் என்ன? கொஞ்சம் அதீதமோ?

அருண்மொழியை கூப்பிட்டு வந்து சேர்ந்த விஷயத்தைச் சொன்னேன். ‘பாத்துப்பேசு. நீ என்ன சொன்னாலும் ரெண்டு தரப்பும் தப்பாத்தான் புரிஞ்சுகிடுவாங்க’ என்றாள்.

”அப்ப?” என்றேன்.

‘புரியாமலே பேசிடறது ரொம்ப நல்லது’

அதுவும் சரிதான். ஆனால் நெடுங்காலமாக அது எனக்கு பழக்கம் இல்லை. குறைந்த பட்சம் எனக்குப் புரியக் கூடிய முறையில் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். மேலும் தப்பாக புரிந்து கொள்ளப் படுவதற்கு சரியாக புரிந்து கொள்ளப் பட வேண்டிய தேவை இல்லையே. நானும் கடந்த இருபதாண்டுகளாக தொடர்ந்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பழகிப்போனவன். சரியாக புரிந்து கொண்டவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்.

சிறில் அலெக்ஸ்

சரிதான் என்று அந்த கட்டுரையை மூடிவிட்டு இன்னொரு கட்டுரையை விரித்து வாசித்தேன். ஊரில் இருந்து கிளம்பும் போதுதான் அதை எழுதியிருந்தேன். சொரேர் என்றது, தொ.பரமசிவன் பற்றிய கட்டுரை. அவர் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லாத கருத்துநிலை கொண்டவர். ஆனால் அழகர் கோயில் நூல் வழியாக ஒரு புதிய பாதை காட்டியவர் என்ற முறையில் அவர்மீது ஆழமான அபிமானமும் கொண்டிருந்தேன். கட்டுரை மட்டையடியாக இருந்தது. ஆய்வுசார்ந்த ஒரு புத்தகத்தில் பன்னிரு கட்டுரைகள், பன்னிரண்டும் தகவல்பிழை என்றால் வாசகனுக்கு எழும் வயிற்றெரிச்சல்தான் என்னுடையது. ஆனால் தொ.பரமசிவனை பொருத்தவரை பின்தொப, முன்தொப என இருவர் உள்ளனர். இருவரையுமே காய்தல் உவப்பன்று. குருநிந்தனை ஏற்கனவே நிறையச் செய்தாயிற்று.

கட்டுரையை ஏற்கனவே இணையத்தில் ஏற்றி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும்படி அமைத்திருந்தேன். உடனே வெளியே சென்று இணைய நிலையத்துக்கு போய் கட்டுரையை எடுத்து விஷப்பற்களை பிடுங்கி விடலாம். ஆனால் கதவு தட்டப் பட்டது. பூனைபோல பவ்யமாக திறந்து கொண்டு கெ.பி.வினோத் வந்தார். ஆபீஸில் இருந்து மூன்றுமணிக்கே தப்பி விட்டதாகச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் கோவை அரங்கசாமி முழுக்கை சட்டை முழுக்கால் பாண்ட் போட்டு கோவை சிறுதொழிலதிபர்களுக்கே உரிய அடக்கமான சிரிப்புடன் வந்தார். அதன்பின் சிறில் அலெக்ஸ். வல்லின றி, மறக்காமல் போடவேண்டும். கொஞ்ச நேரத்தில் ஷாஜியும் வந்தார். அதன்பின் தனசேகர்.

அரங்கசாமியிட்ம் அவரது ரிலையன்ஸ் இணைய இணைப்பை வாங்கி என்னுடைய மடிக்கணினியில் பொருத்தி திறந்தேன். வழக்கமாக ரிலையன்ஸ் இணைப்பை ஐஆர்8 அரிசி போல என்பார்கள். என் அம்மாவெல்லாம் அந்தக்காலத்தில் காலையில் எழுந்ததுமே கண்ணைக்கூட திறக்காமல் போய் மதியச்சோற்றுக்கு அரிசியை அடுப்பில் களைந்து போட்டு விடுவார்கள். பன்னிரண்டரை மணிவாக்கில் வடிக்க முடியும். நான் என் ஜிமெயிலை திறந்து வைத்துவிட்டு அவர்களிடம் பேசப்போனால் அது சட்டென்று திறந்தது. மின்னஞ்சல்களை பார்த்தேன். உற்சாகமாக இருந்தது. ஹமீதுடன் என் சண்டை தொடர வேண்டும் என உலகம் முழுக்க பரவலாக கருத்து நிலவுவது தெரிய வந்தது. கோமதி சங்கரின் மாற்றுக்கருத்தை மட்டும் பிரசுரித்து விட்டு என் இணையதளத்தை திறந்தால் ஐஆர்8 குணம் காட்டியது. திறக்கவில்லை.

‘அது அப்டி ஆகும். மெயிண்டெனன்ஸ் பண்ணுவாங்க’ என்று சொன்னார் சிறில். உலகிலேயே சிறப்பாக மெயிண்டெனன்ஸ் பண்ணப்படும் இணையதளம் வேர்ட் பிரஸ், தினம் நான்குமுறை.

சரி என பேச்சில் கலந்துகொண்டேன். விஷயம் ‘ஷாஜி இசை விமர்சகரா?’ . இசையப்பற்றி எழுதினாலே அது இசை விமர்சனம்தானே என்ற கருத்தில் இருந்து ஆரம்பித்தது. ஆனால் ஷாஜி ஏன் அவரைப் பற்றியும் எழுதுகிறார்? அவர் இசை கேட்கிற விஷயம் கட்டுரையில் வரவில்லை என்றால் எப்படி வாசக நம்பிக்கை ஏற்படும்? ஆனால் ஷாஜி இசை விமர்சகரல்ல என்று எப்படிச் சொல்லலாம்? ‘ஆனா அது ஒரு தரப்பு’ என்றார் சிறில். உலகில் நிலவும் எல்லா கருத்துக்களும் ஏதோ ஒரு தரப்பு என்று அடிப்படையில் ஒத்துக்கொள்ளும் பரிபக்குவம் அவருக்கு உண்டு.

தரப்பு என்ற சொல் அரங்கசாமியை மகிழ்வித்தது. ‘சிறில் அலெக்ஸ் சொல்றது அவரோட தரப்பு’ என்றார்.

பீர் அருந்திக்கொண்டே மேலே பேசலாமே என்ற கருத்து ஷாஜியால் முன்வைக்கப்பட்டது. சொந்த செலவில் சூனியம் என நான் நினைத்துக்கொண்டு கவலையுடன் கணினியை பார்த்தேன். இன்னமும் பராமரிப்பு வேலை நிகழ்ந்துகொண்டே இருந்தது. தனசேகர் குடிமறுத்தார். ஷாஜியின் கட்டுரையில் சுதிசேரவில்லை என்று சேதுபதி அருணாச்சலம் சொல்வதைக் கேட்டுத்தான் ஷாஜி அதற்கு  முற்படுகிறரா என்ற ஐயமும் எழுந்தது.

கெ.பி.வினோத் குளிக்காமல் பீர் அருந்துவது விஜய் மல்லய்யாவின் உணர்வுகளை புண்படுத்துவது என்று எண்ணம் கொண்டிருந்தார். ஓடிப்போய் திரும்பும் அருகில்தான் அவர் வீடு. இதோ வருகிறேன் என்று வெளியே பாய்ந்தார்.மற்றவர்கள் பீர் அருந்தினார்கள்.

’அப்ப நாம என்ன பேசிட்டிருந்தோம்?’ இசையைப்பற்றி என்பது எல்லாருக்கும் நினைவில் இருந்தது.

‘பரப்புக்கலைய மதிப்பிடுறதைப்பத்தி என்ன சொல்றேன்னா…’ என்றேன்.

‘பருப்புக்கலைன்னா? நீ என்னடா பெரிய பருப்பான்னு கேப்போமே அதுவா?’ என்றார் ஷாஜி.

நான் கவலையுடன் பார்த்தால் என் இணையதளம் திறக்கவில்லை. உலகில் உள்ள அனைத்து இணையதளங்களும் இனிதே திறந்தன. எனக்கு தொ.பரமசிவன் பற்றி கொஞ்சம் கவலை ஏற்பட்டது. இசை விமர்சனத்தின் அதி நுண்மைகளை நோக்கிச் சென்றது விவாதம். படிப்படியாக அது இசை விமர்சனமே தேவை இல்லை என்ற எல்லையை எட்டியது. கெ.பி.வினோத் வந்து சேர்ந்தார்.

‘இசையிலே பல வகை இருக்கு…எல்லா இசையும் இசைன்னாக்கூட …’ என்று சிறில் பேசிக்கொண்டிருக்க நான் என் தளத்தை பார்த்தேன். ஊப்ஸ், ஒண்ணுமே பண்ண முடியலை என்றது இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்.

திரும்பினால் ‘…எங்க ஊர்ல பாதிரிமார்களைப்பத்தி வேற மாதிரி சொல்வாங்க…’ என்று பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. என்ன ஆயிற்று? கைத்தவறுதலாக ரிமோட்டில் விரல்பட்டு சேனல் மாறுவது போல ஒட்டுமொத்த அறையே வேறு விவாதத்தை நோக்கிச் சென்று விட்டிருந்தது. இத்தனைக்கும் நான் கணினியை மட்டுமே தொட்டிருந்தேன்.

பலவகையான பாதிரிமார்கள். பலவகை சினிமா நடிகர்கள். என்.டி ராமராவின் நடனத்தை ஷாஜி ஆடிக்காட்டினார். நான் சிரித்து குப்புற விழுந்து எழுந்து கணிப்பொறியை பார்த்தேன். ஒன்றும் நிகழவில்லை. மேலும் பீர்புட்டிகள் உறைந்த மீன்கள் போல பனிபடர்ந்து வந்து சேர்ந்தன. ஷாஜி உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று சொல்லி கிளம்பினார். நான் இசைக்கட்டுரையில் ஏதாவது உருப்படியான தகவல்களை சேர்க்கமுடியுமா என்று பார்த்தேன். பொதுவாக ஒரு கட்டுரையில் ஒன்று இரண்டு என்று எண்ணிக்கை போட்டு விஷயங்களைச் சொன்னால் ஒரு கனம் வருகிறது. ஆகவே ஆறு பரப்புக்கலைகளைப்பற்றிச் சொன்னேன். ஆறுக்கும் ஆறு திசைதேவதைகள்.

கெ.பி.வினோத் ‘அப்ப நம்மளோட போஸ்டர் ஒட்டுறது பரப்புக்கலை இல்லியா?’ என்றார். சேர்க்கவேண்டும்தான். ‘வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்’, ‘தமிழே தமிழுக்காக நடத்துகும் தமிழ்மாநாட்டில் தமிழ் அழைக்கிறது’ போன்ற கவித்துவச் சாத்தியங்கள் நிகழும் கலை அது. ஆனால் அதைச் சேர்த்தால் தர்ணா, சாலைமறியல் எல்லாவற்றையும் சேர்க்கவேண்டும். அவற்றை நாட்டுப்புறக்கலை என்றும் சொல்லலாமே.

பரப்புக்கலை குறித்த விவாதம் உக்கிரமாக நடந்தது. மெல்ல விவாத யந்திரத்தின் பற்சக்கரங்கள் நடுவே க்ரீஸ் சாலப்பெய்ய ஆரம்பித்து அவை கொழ கொழ என தங்கள் அச்சுகளில் தாங்களே இனிது சுழல ஆரம்பித்தன. ‘..ஆனா அது ஒரு தரப்புதான்’ என்றார் சிறில்.

மணி பன்னிரண்டு. சிறில் இணையதள உரிமையாளரிடம் பேசியபோது காலையிலாகிவிடும் என்றார்கள். கட்டுரை பிரசுரமான பின்னர் தூக்குவதை அரங்கசாமி ஆட்சேபித்தார். உடனே அதை கப்பென பிடித்து இணையத்தில் ஏற்றி ஹிட்லர் டைரிகளைப்பற்றி பேசும் உற்சாகத்துடன் நுண்விவாதத்தில் ஈடுபட ஒரு கும்பலே இருக்கிறது என்றார். நான் கவலையுடன் கடைசியாக தொ.பரமசிவன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இந்தமட்டுக்கும் நிதானமாகத்தான் இருக்கிறதென ஆறுதல் கொண்டேன். நானெல்லாம் சின்னவயதில் இதை எழுதியிருந்தால் முதல் வரியிலேயே ‘டாய் என்னாடா நெனைச்சுக்கிட்டே? வெளியே வாடா’ ரீதியில் ஆரம்பித்திருப்பேன்

அரங்கசாமி ஒரே விஷயத்தை ரொம்பநேரமாக திரும்பத்திரும்ப சொல்வது போல இருந்தது. கவனித்தேன், அது குறட்டை. கெ.பி.வினோத் ‘நான் என்ன நினைக்கிறேன்னா, அரங்கசாமி தூங்கிட்டார்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்றார்.

சிறில் ‘அது பிரச்சினையே இல்லை. அது ஒரு தரப்பு , நாம எதைப்பற்றி பேசிட்டிருந்தோம்?” என்றார்.

‘ஒரு இசைக்கட்டுரை ஒரு வசைக்கட்டுரை. ரெண்டுமே பிராப்ளம்’ என்றார் கெ.பி.வினோத்.

‘அப்ப நாம கிளம்பலாமா?’ என்று சொல்லி இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

வடபழனி தாண்டிச்செல்லும்போது காரை ஓட்டிய சிறில் திடீரென தன்னருகே கெ.பி.வினோத் இருப்பதை உணர்ந்து ‘நீங்க எங்க போறீங்க வினோத்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘உங்களை டிராப் பண்ணணும்ல?’

சிறில் ‘தேங்க்ஸ்’ என்றபின் இருபது நிமிடம் சிந்தனைசெய்து ‘இல்ல, அமெரிக்காவிலே எல்லாம் டிராப் பண்றவங்கதான் காரை ஓட்டுவாங்க’ என்றார்.

கெ.பி.வினோதும் அதை உணர்ந்து ‘ஆமா, அதைத்தான் நானும் ரொம்ப நேரமா நினைச்சிட்டிருக்கேன். அப்டீன்னா நீங்கதான் என்னை டிராப் பண்ணணும். ஏன்னா நீங்கதான் கார் ஓட்டுறீங்க’

இருவருமாக அதை விரிவாகப் பேசி தெளிவுபடுத்திக்கொண்டபின் சிறில் ‘அப்ப உங்க வீடு எங்க இருக்கு?’

”துளசி பார்க் பக்கத்து கட்டிடம். என்னை துளசி பார்க்கிலே இறக்கி விட்டால் நான் நடந்தே போய்டுவேன்”

”இப்ப நாம எங்க இருக்கோம்?” என்றார் சிறில்.

‘வடபழனின்னு நினைக்கிறேன்”

துளசி பார்க் வாசலுக்கு வந்ததும் கெ.பி.வினோத் அக்கறையுடன் ”சிறில் ரொம்ப நேரமாச்சு, நான் வேணுமானா உங்களை டிராப் பண்ணவா?” என்றார்.

”அதுக்கு உங்க கிட்ட கார் இல்லியே…”

”உங்க காரிலதான்”

”அப்ப எப்டி நீங்க திரும்பி வருவீங்க?”

இருவரும் அதை விவாதித்து தெளிவுபடுத்திக்கொண்ட பின்னர் அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள்.

ஷாஜி கூப்பிட்டார். ‘அவங்க போய்ட்டாங்களா’ என கேட்டார்

‘ஷாஜி, நீங்க கிளம்பினதுமே அவங்க மறுபடியும் பீர் குடிக்க ஆரம்பிச்சாங்க’ என்றேன்

‘என்னது?’ என்று ஷாஜி கூவினார்.’இப்ப எங்க இருக்காங்க?’

என் மெத்தைக்கு பக்கத்து மெத்தையில் அப்படியே எழுந்து ஒரு பிஸினஸ் ஒப்பந்தத்தை கையெழுத்து போடும் உடைகளுடன் அரங்கசாமி தூங்கிக்கொண்டிருந்தார்.

நான் இணையதளத்தை பார்த்தபின் இசைக்கட்டுரையில் சில மாற்றங்கள் செய்தேன். தொ.பரமசிவன் கட்டுரை இனி விதியின் கைகளில். இந்த இருண்ட இரவில் கோடானுகோடி நட்சத்திரங்களில் கோடானுகோடி உலகங்களில் கோடானுகோடி செயல்களை கட்டுப்படுத்தும் விதி இதையும் எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளும். என் மின்னஞ்சலை திறந்து கடைசியாக கடிதங்களை பார்த்தேன். தொ.பரமசிவம் கட்டுரைக்கு சண்முகத்தின் எதிர்வினை. அய்யய்யோ என்று என் இணையதளத்தை திறந்து பார்த்தேன். பிரசுரமாகியிருந்தது.

மணி இரண்டு, வேறுவழியில்லை தூங்கவேண்டியதுதான். ‘தொ.பரமசிவன் சரியான இசை விமர்சகர்தானா?’ என சிந்தனை ஓடியதை நானே உணர்ந்து கொஞ்சம் திடுக்கிட்டேன். விஜய் மல்லய்யா காற்றிலேயே போதையை பரப்பும் பீர் எதையாவது கண்டுபிடித்திருக்கிறாரா என கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.

முந்தைய கட்டுரைஎம்.டி.வாசுதேவன் நாயர்
அடுத்த கட்டுரைசுனில் கிருஷ்ணன் உரையாடல், பதிவு