‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ்1

இளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட வெண்பட்டு விரிக்கப்பட்ட சிறிய இசைக்கட்டிலில் அமர்ந்து வங்கத்து சூதன் விருச்சிகன் பாடிக்கொண்டிருந்தான். துரியோதனனின் வலப்பக்கம் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் சாய்ந்து வெளியே காற்றில் குலுங்கிய மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். இடதுபக்கம் பானுமதி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

இளைய கௌரவர்கள் நால்வர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். தங்கள் தாழ்ந்த பீடங்களில் பெரிய கைகளை ஊன்றி முகம் தளர அமர்ந்திருந்தனர். பிறர் எல்லைக்காவல் சீரமைப்புக்காக சப்தசிந்துவின் கரைகளுக்குச் சென்றிருந்த துச்சாதனனை தொடர்ந்திருந்தனர். சூதனுக்குப் பின்னால் இரு முதிய சூதர்கள் மரத்தாளமும் ஒற்றைத்தந்தி முழவுமாக நின்றனர். அவன் தன் கையிலிருந்த குடவீணையை பாம்புவிரலால் சுண்டி வண்டென முரளச்செய்து அதன் மென்சுதிக்கு குரலை உலவச்செய்து பாடிக்கொண்டிருந்தான்.

சூதன் பாடிக் கொண்டிருந்ததை துரியோதனன் உளம் கொள்ளவில்லை. உச்சிப்பொழுதின் மிகையுணவுக்குப்பின் அரைத்துயிலில் விழிகள் சரிய பட்டுத்தலையணைகள் மேல் உடலழுத்தி கைகள் தளர அவன் படுத்திருந்தான். கர்ணன் அச்சொற்களிலும் அவை தொட்டு தன் உள்ளே எழுந்த சித்திரங்களிலும் சித்தம் உலாவ விட்டு அங்கிலாதவன் போல் அமர்ந்திருந்தான். கால்முட்டின் மடிப்பில் ஊன்றிய கையில் தாடையை வைத்து சிறிய உதடுகள் ஒட்டியிருக்க, சற்றே தாழ்ந்த இமைகள் கண்களை பிறை வடிவாக மாற்ற, காற்றில் உலையும் குறுஞ்சுருள்கள் சூழ்ந்த வெண்ணிற முகம் சிறிய மூக்குடன் கொழுவிய கன்னங்களுடன் ஏதோ கனவிலென நிலைத்திருக்க, பானுமதி அக்கதைக்குள் இருந்தாள்.

“அரசே, அழகிய அரசியே, அவையே, கேளுங்கள் இப்பிறப்பு வரிசையை! பிரம்மனின் மைந்தன் அங்கிரஸ். அவருக்கு உதத்யர், பிரஹஸ்பதி என்று இரண்டு மைந்தர்கள் பிறந்தனர். அன்றிருந்த வழக்கப்படி தமையனும் இளையவனும் ஒரே மனைவியையே கொண்டிருந்தனர். உதத்யரால் கருவுற்ற மமதை அவரது தவக்குடிலில் இருந்தபோது இளையவர் பிரஹஸ்பதி மமதையை எண்ணி காமம் கொண்டு உள்ளே வந்தார். மதம் கொண்டெழுந்த யானையைப்போல வந்து அவர் அவளை உறவுகொள்ள அழைக்க பதறி எழுந்து கை நீட்டி மமதை அதை தடுத்தாள். “இது முறையல்ல. இவ்வுடலும் உள்ளமும் உங்கள் இருவருக்கும் உரியதே. ஆயினும் வயிறு ஒருமுறை ஒருவர் கருவை ஏற்பதற்கே வாய்த்துள்ளது. இப்போது நான் உங்களுடன் இருப்பதற்கு நூல் ஒப்புதல் உண்டெனினும் என் உடல் ஒப்பவில்லை” என்றாள்.

அந்த இளவேனில்காலம் முழுக்க துணைவியின்றி தனித்து வாழ்ந்த பிரஹஸ்பதி தவத்தில் தன்னை ஒடுக்கி முடிவிலியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கீற்றிளநிலவென ஒரு மைந்தனை அந்த செந்நிறக் குருதிப்பாதையில் கண்டார். அருகே சென்று அவன் விழிகளை நோக்கினார். அவை சிறிய கரிய விதைகளைப்போல ஒளிகொண்டிருந்தன. இதழ்கள் விரிய நகைத்து அவன் “என் தருணம் இது தந்தையே” என்றான். “ஆம்” என்று எண்ணிய அக்கணமே பிரஹஸ்பதி மலைபிளந்து நிலமதிர்வதுபோன்ற பெருங்காமத்தை உணர்ந்தார். அவ்விசையில் விழித்துக்கொண்டு எழுந்து வெளியே வந்து கருவறைமணம் பெற்ற ஆண்விலங்கு போல கிளம்பி வந்தார்.

தவம் என்பது குவிதல். அரசே, தவம் எதில் குவிகிறதோ அது எல்லையற்ற விசை கொள்கிறது. காமமென்றாகிய தவம் கொண்டிருந்த பிரஹஸ்பதி துணைவியின் மன்றாட்டை செவிகொள்ளவில்லை. சித்தத்தை சிதறடித்து ஞானத்தை திரிப்பதில் காமத்திற்கு நிகரென பிறிதொன்றுமில்லை. காமம் கொண்ட களிறு பாறையில் மத்தகத்தை முட்டி உடைத்துக் கொள்கிறது. காமம் கொண்ட குரங்கு முகிலில் பாய்ந்து ஏற எண்ணி மரஉச்சியில் இருந்து தாவுகிறது. காமம் கொண்ட மான் நீர்ப்பாவையை துணையென்றெண்ணி ஆழ்சுனையில் குதிக்கிறது. காமம் கொண்ட பறவை வேடனின் வலையை வயலென்று மயங்குகிறது.

13

“பெண்ணே, இத்தருணத்தில் ஒரு சொல்லும் என் சித்தத்திற்கு ஏறாது. காமமன்றி பிறிதெதுவும் இன்றென்னை செலுத்தாது” என்று சொல்லி அவள் இரு கைகளையும் இறுகப்பற்றி மூங்கில் பட்டைகளாலும் ஈச்ச இலைகளாலும் அமைக்கப்பட்ட அத்தவக்குடிலின் உள்ளறைக்கு இழுத்துச் சென்றார் பிரஹஸ்பதி. இளம்கருவால் குருதி உண்ணப்பட்டு மெலிந்த கழுத்தும் வெளிறிய உதடுகளும் உடலும் தேமல்படர்ந்த தோள்களும் கொண்டிருந்த மமதை அவரை உந்திவிலக்க முடியாதவளாக கண்ணீர் வார அழுதபடி “என்னை விட்டுவிடுங்கள்… என் மேல் கருணை கொள்ளுங்கள். உத்தமரே, என் கருவை அழிக்காதீர்கள்” என்று கெஞ்சி அழுதாள்.

“அறம் பிழைக்கலாகாது இளையவரே. நெறிமணமும் குலமணமும் மட்டுமல்ல, கொடுமணங்கள் அனைத்துமேகூட கருவுறுதல் என்னும் பெருங்கடமைக்காக என்றுணர்க! கருவுற்ற பெண் தன் உடல்மேல் தானே உரிமை கொண்டவள் அல்ல. பார்த்திவப் பரமாணுவாக அவளுடைய குருதியில் இறங்கி உயிர் கொண்டு, உளம் கொண்டு, இங்குளேன் நான் எனும் ஆணவம் கொண்டு எழுந்த பிரம்மம் அவளை தன் பீடமெனக் கொள்கிறது. என் உளமும் உடலும் உங்களுக்கும் உரியதாயினும் அதை உங்களுக்கு அளிக்கும் பொறுப்பு என் கருவாழும் குழந்தைக்குரியது. சொல் கேளுங்கள். ஆணவம் தவிருங்கள்” என்றாள்.

ஆனால் பிரஹஸ்பதி கடும் சினம்கொண்டு தன் மார்பிலும் அருகிருந்த தூணிலும் அறைந்து “இப்போது என் உடலில் கனிந்து துளித்து நிற்கும் விந்துவும் பிரம்மத்தின் ஒரு துளியே. அதில் முளைக்கும் உயிரும் இப்புவி காண எழுந்ததுதான். நெறிகளை நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உடல்களும் பிரம்மம் வெளிவரக் காத்திருக்கும் விதைகள் என்று நானும் அறிவேன். காமமென என் உடலில் எழுந்தது முடிவிலியின் பெருவிழைவே. இதைத் தவிர்க்க என்னால் முடியாது” என்றார்.

அழுதபடி கைகூப்பி “என்னை தவிருங்கள். என் உடல் மேல் கருணை கொள்ளுங்கள். பெண்ணென்று பிறந்த பிழைக்காக நான் பெருநிலை அடைய முடியாமல் ஆக்காதீர்கள்” என்று மமதை கண்ணீர் விட்டாள். அவர் அவளை தோள்பற்றி அணைக்க முயல அவள் உடல்சுருக்கி கண்களை மூடி “என் உடல் உங்களுக்காக மலராது” என்றாள். பிரஹஸ்பதி அவளைப்பற்றி இழுத்துச் சென்று அருகிருந்த சுடர்நெருப்பின் அருகே நிறுத்தி “இத்தருணத்தில் எனக்கு நீ காமம் அளிக்கமாட்டாய் என்றால் இச்சுடரைத் தொட்டு அணைத்து நீ என்னை விலக்குவதாகச் சொல். இனி எனக்கு நீ துணைவியல்ல என்றுரைத்து குடில் விட்டு வெளியே செல்கிறேன். செய்க!” என்றார்.

“அதை எங்ஙனம் செய்வேன்? இருவருக்கும் துணைவி என்று கைபற்றி நான் இவ்வில்லத்திற்கு வருகையில் சான்று நின்றது இச்சுடரல்லவா? என் வயிறு திறக்கும் மைந்தர் உங்களுக்கும் நீர்க்கடன் செய்யவேண்டும் என்பது அன்று உருவான மூதாதையரின் ஆணை அல்லவா?” என்றாள். “ஆம். அவ்வாறென்றால் என்னுடன் இரு. இன்று என் உடலில் ததும்பும் என் மைந்தனைப் பெற்று எனக்களி. இல்லையெனில் மூதாதையருக்கு முன் உன் சொல்லை சுருட்டி திரும்ப எடுத்துக் கொள்” என்றார் பிரஹஸ்பதி.

“இச்சுடரை தொட்டணைத்து அச்சொல்லை திரும்ப எடுத்துக்கொள்ள என்னால் முடியும். ஆனால் உளம்கனிந்து உங்களுடன் இருந்த இனியபொழுதுகளின் நினைவுகளை எப்படி எடுத்துக் கொள்வேன்? அவை என்னில் இருக்கையில் நீங்கள் என் கணவர் அல்லவென்று எப்படி சொல்லமுடியும்? இச்சுடரை அணைத்து பின் ஒரு கணமேனும் உங்களை என் கணவர் என்று எண்ணினேன் என்றால் நான் கற்பிழந்தவள் ஆவேன். இல்லை, இப்பிறப்பில் ஒருபோதும் சுடர் தொட்டு அணைத்து உங்களை விலக்க என்னால் இயலாது” என்றாள் மமதை. “வா! அவ்வண்ணமெனில் என்னுடன் இரு. என் அனலுக்கு அகல் ஆகுக உன் உடல். என்னுள் எழும் சுடர் உன்னில் பற்றிக் கொள்ளட்டும்” என்று சொல்லி அவள் கூந்தலை சுற்றிப்பிடித்து இழுத்து மஞ்சத்திற்கு கொண்டு சென்றார் பிரஹஸ்பதி.

“அரசே, அரசமர்ந்த இனியவளே, நால்வகை முறைகளும், முறைசெலுத்தும் அறமும், அறமுணர்ந்த முனிவரும், அம்முனிவர் எடுக்கும் சொற்களும், அச்சொற்களில் அனலென அமைந்த பிரம்மமும் ஆகிய இப்புவி என்றும் பெண்களின் விழிநீரால் நனைந்து விதைமுளைத்து பசுமைகொள்வது என்பார்கள் காவியம் கற்றவர்கள். வேதநூலுணர்ந்தவரோ, நூலுக்கு அப்பால் உறையும் முடிவிலியை தொட்டறிந்தவரோகூட பெண்ணின் பெருந்துயரை அறியாதிருக்கும் மாயத்தால் நம்மை ஆட்டுவிக்கின்றது ஊழ். பெண்ணுக்கிழைக்கும் பெருந்தீங்குகளாலேயே ஆண் மீண்டும் மீண்டும் அவள் மைந்தன் என பிறக்கிறான். ஆண்மேல் கொண்ட பிரேமையாலேயே அவள் மீண்டும் மீண்டும் அவனை கருவுறுகிறாள்” என்றான் சூதன். ஆம் ஆம் ஆம் என்றது ஒற்றைத்தந்தி.

கண்ணீருடன் பிரஹஸ்பதியுடன் இருந்த மமதை தன்னுள் கருவடிவாய் எழுந்தருளிய தேவன் இருளாழத்தில் குரலெழுப்புவதை கண்டாள். இருண்ட பாதைகளில் நுரைக்கும் வெய்யநீரில் சுழித்தோடி அவள் சென்று சேர்ந்த செந்நிறப் பெருங்கூடம் நீளுருளை வடிவமாக இருந்தது. அதன் உள்ளே நுரைக்குமிழிகள் மிதந்த செவ்வொளி நிறைந்திருக்க நடுவே கருநிறப் பேருடலுடன் மிதந்தவன் போல் நின்றிருந்த மைந்தன் நீலமணியென சுடரும் அழகிய விழிகள் கொண்டிருந்தான். அவன் கைகளும் கால்களும் மீன்சிறகுகள் என துழாவிக்கொண்டிருந்தன.

“அன்னையே என்ன இது? நான் இப்புவி ஆள விழையும் பேராற்றல் கொண்டவன் என்பதை அறிய மாட்டீர்களா நீங்கள்? இங்குள்ளவை எனக்கே அரிதானவை அல்லவா?” என்றான். செவ்வொளிக்கு அப்பால் நீலச்சுடரென எரிந்த அவ்விழிகளை நோக்கி மண்டியிட்டு கைகூப்பி அவள் சொன்னாள் “நான் எளியவள். என் உடலை பகிர்ந்து அளித்தவள். உள்ளத்தால் அந்த அடிமைநீட்டில் கைச்சாத்திட்டவள். என் பிழையன்று. பொறுத்தருள்க!”

கடும்சினம் கொண்டு அங்கு ஆலமர விழுதுகளைப் போன்று நிரைபரவி நின்று நெளிந்த தூண்களையும் சுருங்கி விரிந்தது போல் அசைந்த சுவர்களையும் ஓங்கி அறைந்து பெருங்குரலெடுத்து அம்மைந்தன் கூவினான் “இது என் தவக்குடில். இங்கு சென்ற பதினான்கு பிறவிகளில் நான் அடைந்த தவப்பயன்கள் அனைத்தையும் துளித்துளியென ஊறிச் சுரந்து எடுத்துக் கொண்டு என்னை நிரப்புகிறேன். என் அகம் மண் நிகழ்ந்து தொட்டு எழுப்பப்போகும் அனைத்தையும் இங்கே தொடக்கங்கள் என சமைத்துக் கொள்கிறேன். அன்னையே! இங்கு நான் இயற்றும் தவத்தில் எனைச்சூழ்ந்து ஒலிக்க வேண்டியவை என் மூதாதையர் இம்மண்ணில் விட்டுச் சென்ற நுண்சொற்கள் மட்டுமே. பிறிதொரு உயிரின் துயரும் விழைவும் அல்ல. தவமென்பது தனிமையே என்றறியாதவரா நீங்கள்?”

“நான் எளியவள். சிறியவள். ஏதும் செய்ய இயலாதவள்” என்பதற்கப்பால் மமதையால் ஒன்றும் சொல்வதற்கு இயலவில்லை. கைகளை விரித்து தன் உடலையும் சூழ்ந்துள்ள அனைத்தையும் அறைந்து உறுமியும் அமறியும் அம்மைந்தன் சுற்றிவந்தான். “ஒப்பமாட்டேன். இங்கு பிறிதொருவன் நுழைய ஒப்பமாட்டேன்” என்றான். அவ்வறையின் சிறுவாயிலை முட்டும் ஒலி கேட்டு நின்று செவிகூர்ந்து “யாரது?” என்றான். அவள் உதடுகளை அழுத்தி அமைதியாக நின்றாள். “யாரது? யாரது?” என்றான் இளமைந்தன் சிம்மக்குரலில். சிறுவாயில் சொல்லெழுந்த உதடுகளென திறக்க வெண்ணிற சிறு மகவு ஒன்று உள்ளே தவழ்ந்து வந்தது. இனிய விழிகளால் அவனை நோக்கி இதழ்விரியச் சிரித்து “மூத்தவரே, என்னிடம் கனிவுகொள்க! நான் உங்கள் அடிபணிந்து இப்புவியில் வாழவிழையும் இளையோன்” என்றது.

இரைமேல் பாயும் சிம்மம் என கைவிரித்து அவனை நோக்கிச் சென்று “இது என் தவக்குடில். என் தனிமையில் இக்கறை படிய ஒருபோதும் ஒப்பேன்” என்றான் மைந்தன். “செல்! விலகிச்செல்!” என்று கூவியபடி தன் வலக்காலால் ஓங்கி உதைத்து அவ்வெண்ணிறத் தவழ்குழந்தையை வெளியே தள்ளினான். மழலைக் குரல் எடுத்து அழுதபடி இளையவன் அவ்வறையின் சிறிய செந்நிற வாயிலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டான். “மூத்தவரே, மூத்தவரே, என் ஊழ் என்னை இங்கனுப்பியது… என்னிடம் கனிவுகொள்க!” என்றான். “விலகிச் செல் மூடா! இப்புவியில் நீ நிகழப்போவதில்லை” என்றபடி அம்மைந்தன் இளமகவின் புன்தலையை ஓங்கி மிதித்து வெளியே தள்ளி வாயிலை மூடினான்.

சினம் மேலும் எரிந்த முகத்துடன் பற்களைக் கடித்தபடி திரும்பி “செல்க! சென்று சொல் உன் இளைய கணவனிடம். என் தவம் கலைத்த அவன் அதற்காக வருந்துவான்” என்றான். அவள் “இரு மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறு என என்னை உணர்கிறேன். எனது வழியே வேறு. உங்கள் தனிமையின் உயரங்களும் கனிவுறைந்த குளிரும் நான் அறியாதவை. அவ்வண்ணமே ஆகுக!” என்றபடி பின் நடந்து மீண்டும் வெய்ய நீரோடும் இருண்ட ஓடைகளில் மிதந்து திரும்பி வந்தாள்.

சுவர்களுக்கு அப்பால் பிரஹஸ்பதியின் சினந்த பேரோசையை அவள் கேட்டாள். மஞ்சம் விட்டு எழுந்து தன் புலித்தோல் ஆடையை அள்ளி உடல் சுற்றி அணிந்தபடி வெகுளி பெருகி உடல் நடுங்க கலைந்த சடைமுடிக்கற்றைகள் தோளில் புரள “என்ன நிகழ்ந்தது? நான் அறிந்தாக வேண்டும். என்ன நிகழ்ந்தது?” என்று அவர் கூவிக் கொண்டிருந்தார். அறைக்குள் ஆடிய சித்திரத் திரைச்சீலையில் விழிகொண்டு எழுந்து அவள் அவ்வறையை நோக்கினாள். மஞ்சத்தில் தன் மரவுரி ஆடையை அள்ளி இடையையும் முலைகளையும் மூடிக்கொண்டு உடல் சுருட்டி தலை குனிந்து விழிநீர் வார அமர்ந்திருந்த மமதையை அவள் கண்டாள்.

நீண்ட கருங்கூந்தல் தோளிலிருந்து இடைவரை சரிந்து மஞ்சத்தில் விழுந்து கிடந்தது. விம்மலில் மெலிந்த சிறுதோள்கள் அதிர்ந்தன. பிரஹஸ்பதி திரும்பி “யார் தட்டியது என் வாயிலை? சொல், இங்கு நான் காமம் ஆடுகையில் என் தோளை தன் குளிர்க்கைகளால் தொட்டது யார்?” என்றார். அவள் “அறியேன்… நானறியேன்” என்றாள். “நீ பிறிதொருவனை உளம் கொண்டாய். காமமாடும் ஆடவனை தொட்டுக் கலைப்பது அப்பெண் நினைக்கும் பிறிதொரு ஆண்மகன் மட்டுமே” என்றார் பிரஹஸ்பதி. “நானறியேன்… நானறியேன்” என்று அவள் அழுதாள்.

“இந்த வாயிலே முட்டப்பட்டது” என்று கூவியபடி சிறிய வாயிலைத் திறந்து “யார்? யாரது?” என்று அலறினார். குனிந்து அங்கே கிடந்த வெண்ணிறமான சிறிய குழந்தைச் சடலத்தை இழுத்து அவள் முன் போட்டார். “இவனைக் கொன்றது யார்? மண் நிகழ்ந்து வேதச்சொல் உணர்ந்து அறம் பெருக்கி விண்ணகம் நிறைக்கவிருந்த முனிவன் இவன். இவனைக் கொன்றது யார்? சொல்” என்றார். அவள் விழிதூக்கி “இது உங்களுக்கும் உங்களுக்கு நிகரான பிறிதொருவருக்குமான போர். நடுவே இருப்பது முலையும் கருப்பையும் குருதிப்பாதையும் கண்ணீர் ஊற்றும் கொண்ட இவ்வுடல் மட்டுமே” என்றாள்.

இடையில் கைவைத்து ஒரு கணம் அவளை நோக்கி நின்ற பிரஹஸ்பதியின் நெஞ்சு நீள் மூச்சுகளால் எழுந்து அதிர்ந்தது. பற்கள் கடிபட்டு அறைபடும் ஒலி கேட்டது. “நானறிவேன். அவனை நானறிவேன்” என்றபடி குனிந்து அவள் வயிற்றில் கையை வைத்து “குருதிக் குகையில் வாழும் சிறியவனே, இதை இயற்றியது நீயா?” என்றார். அறை சூழ பேரொலி எழுந்தது “ஆம். நானே. என் பெயர் தீர்க்கஜோதிஷ். இத்தவக்குடிலில் இப்போது என் விழிகள் மட்டுமே திரண்டுள்ளன. உளம் திரட்டி, உடல் அமைத்து, தசை சிறுத்து, எலும்பு இறுக்கி நான் வெளிவர இன்னும் பத்து மாதங்கள் உள்ளன.”

கைகளைத் தூக்கி “நீ வரப்போவதில்லை மைந்தா! இது என் தீச்சொல்” என்றார் பிரஹஸ்பதி. உரக்க நகைத்து “நான் வருவது முன்னரே வகுக்கப்பட்ட ஊழ். உங்கள் தீச்சொல் பிரம்மனின் நெறியை தடுக்கப்போவதில்லை” என்றான் தீர்க்கஜோதிஷ். பிரஹஸ்பதி “ஆம், நதியை மலையேற்ற எவராலும் முடியாது. ஆனால் திசை மாற்றுவது எளிது. இதோ என் இக்கணம் வரைக்குமான முழுச்சொல்லையும் எடுத்து உன் மேல் தொடுக்கிறேன். நீ விழியிழந்தவனாவாய். இன்று முதல் தீர்க்கதமஸ் என்று அழைக்கப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றபின் தன் வலக்கையை ஓங்கி தொடை மேல் அறைந்து கூர்நகங்களால் அத்தசையைப் பிய்த்து எழுந்த குருதியை கையில் பற்றி தூக்கி நெற்றிப்பொட்டில் அழுத்தி சொல்லனல் ஆக்கி “இங்கு திகழ்க என் சொல்!” என்று அவள் வயிற்றின் மேல் உதறிவிட்டு திரும்பினார்.

அவர் காலடியில் இடறியது அந்தக் குழந்தையின் வெண்ணிறச் சடலம். முழந்தாளிட்டு அதை அள்ளித் தூக்கி “என் மைந்தா” என்றார். அது விழிதிறந்து இறப்பு வெளிறிய ஒளியென பரவிய விழிகளால் அவரை நோக்கியது. “என் மைந்தா” என்று பிரஹஸ்பதி அழுதார். “தந்தையே, இனி நான் மண்நிகழலாகுமா? என் செயற்பெருக்கு இப்புவியில் ஆற்றப்படாது எஞ்சுகையில் மீண்டும் மூதாதையரிடம் சென்று சேர என்னால் இயலாதே” என்றது அக்குழந்தை. “ஆம், இதற்கு விடை என்னிடம் இல்லை. கருவில் கலையும் குழந்தைகள், மழலை மாறாது இறக்கும் மைந்தர்கள் தங்கள் வினை முடிக்க சென்று காத்திருக்கும் விண்ணுலகம் ஒன்றுள்ளது போலும். அதை நான் அறியேன்” என்றார் பிரஹஸ்பதி.

“நான் எங்கு செல்லவேண்டும் தந்தையே? நான் பார்த்திவப் பரமாணுவாக கருவில் ஒருகணம் ஊறியிருந்தேன் என்றால் மட்டுமே மிருத்யூதேவி என்னை அணுக முடியும். இன்று நான் உங்கள் உளம்கொண்ட ஒரு தினவு மட்டுமே அல்லவா?” என்றான் மைந்தன். “நானறியேன். நானறியேன்” என அவர் அழுதார். கையூன்றி எழுந்தமர்ந்த குழவி சினந்த பெருங்குரலில் “மூடா, நான் உன் மூதாதை. என் வழியென்ன? சொல்!” என்றது. “என்னை பொறுத்தருளுங்கள் எந்தையே. காமத்தால் விழியிழந்தேன்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தார். அவரது வெண்ணிற நிழலென தொடர்ந்து சென்றது அவ்வெளிறிய சிற்றுடல் மகவு.

சித்ரகூடத்தின் ஏழுகாடுகளில் தவப்பயணம் முடித்து இல்லம் திரும்பிய முதற்கணவர் உதத்யர் செய்தி அறிந்து சினம் கொண்டார். “என் இளையோனை நான் பழிக்கமாட்டேன். அது ஆணின் இயல்பு. கருவுற்ற பெண்ணை நோக்கி காமம் கொள்வது விலங்குகளின் இயல்பு. அது அப்பெண்ணில் எழும் உயிரின் எழில் விடுக்கும் அழைப்பு. ஆனால் கொண்ட கருவை பேணி பிறப்பு அளிக்காத சிறு விலங்குகள்கூட உலகில் இல்லை. பிழை செய்தவள் நீ” என்றார். “இழிமகளே, என் மைந்தன் விழியற்றவனாக ஆனது உன்னால்தான் என்று உணர்க!”

“நான் என்ன செய்திருக்க முடியும்?” என்றாள் அவள். “சிற்றுயிர்களும் அறிந்த வழி ஒன்றுண்டு கீழ்மகளே. முற்றிலும் ஒவ்வாத ஒன்றின் முன் அவை ஓசையின்றி உயிர்விடுகின்றன” என்றார் உதத்யர். மமதை “எங்கு விலங்கு எங்கு தெய்வம் என்றறியாததுதானே மானுடனின் பிழை? பணிவது பத்தினியின் கடமை என்பதால் அதை செய்தேன்” என்றாள். உதத்யர் திரும்பி அவ்விழிகளை நோக்கி “பெண்ணே, எவருக்கும் அவர் பெயர் தற்செயலாக அமைவது அல்ல. அப்பெயர் சூட்டப்படும் கணத்தை அமைக்கும் தெய்வங்கள் அவர் இயல்பை அறியும். அவர்கள் அப்பெயராக முழுதமையும் கணமும் வரும்” என்றார்.

“மமதை என்னும் பெயர்கொண்ட நீ பெரும்பற்றினால் ஆன உளம் கொண்டவள். சொல்! அவ்வுறவில் ஒரு கணமேனும் நீ மகிழவில்லையா?” அவள் விழி தாழ்த்தி “ஆம், என் உடல் மறுத்தபோதும் உள்ளம் மயங்கியது உண்மை. ஏனெனில் நான் விரும்பும் ஆண்மகன் அவர்” என்றாள். “அதுவே உன் பிழை. அப்பிழையை தன் வாழ்நாள் முழுக்க சுமக்கப்போகிறவன் உன் மைந்தன்” என்றார் உதத்யர்.

அவள் நெஞ்சுடைந்து அழுது உடல் மடிந்தமர நீள்மூச்சுடன் திரும்பிய உதத்யர் “அகம் நடுங்குகிறது. என் மைந்தன் சூரியன் இல்லாத நீளிருள் உலகில் வாழவிருக்கிறான். தீர்க்கதமஸ்! முடிவுறா இருள்!” அச்சொல்லால் அச்சுறுத்தப்பட்டவள் போல மெய்ப்பு கொண்டு அவள் திரும்பி நோக்க “முடிவுறா இருள்! எத்தனை பேருருக் கொள்ளும் சொல்! பிரம்மத்திற்கு நிகரானது” என்றார். அப்போதுதான் அதன் முழுவிரிவை உணர்ந்தவள் போல் தன் நெஞ்சை கைகளால் அள்ளிக் கொண்டாள்.

“மறு கரையற்ற ஒன்று எங்கும் இருக்கலாகாது பெண்ணே. மீட்பற்ற சொல் ஒன்று எங்கும் திகழலாகாது. அவ்வண்ணம் ஒன்று இருக்கும் என்றால் அதுவும் பிரம்மமே” என்ற உதத்யர் இடறிய குரலில் “எந்தையரே, முடிவற்ற இருள் அவனுக்கு பிரம்மம் என தோன்றுவதாக! தந்தையின் நற்சொல்லென இதை உரைக்கிறேன். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றுரைத்து தன் கமண்டலத்தையும் கோலையும் எடுத்துக்கொண்டு குடில் நீங்கி அடர்கானகம் ஏறி மறைந்தார். அவர் காலடிகளை நோக்கியபடி கண்ணீருடன் அவள் அமர்ந்திருந்தாள்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்…. அழகியசிங்கர்
அடுத்த கட்டுரைவிழா, சந்திப்பு, மீட்பு