அன்புள்ள ஜெமோ ஜடாயுவுக்கு நீங்கள் அளித்த பதிலின் மாற்று சாத்தியங்களைச் சிந்தித்திருப்பீர்கள் எனினும் எனக்கென்னவோ பூசலை நிறுத்த ஒரு கரம் தரப்பட்டால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வதில் எந்தவித தவறும் இருப்பதாக தோன்றவில்லை.இதற்கான தர்க்கத்தை நீங்கள் எழுதிய காந்தி கட்டுரைகளிலிருந்தே நான் பெற்றேன்.எவ்வளவு கீழ்மையான வெறுப்புடனும் உரையாட முனைவதுதான் காந்திய அணுகுமுறை அல்லவா.பகையைவிட பகையாகத் திரிந்த நட்பு மிக அபாயகரமானது என்பது கண்டிருக்கிறேன்,ஏனெனில் எதிரிகளை விட அவர்கள் நம்மை நன்கு அறிவார்கள்.நமது மென்மையான இடங்களை நோக்கி அம்புகள் எய்து கொண்டே இருப்பார்கள்.பின்னர் அதன் காயத்திலிருந்து கசப்பு பெருகி வந்து கொண்டே இருக்கும்.நான் அவர்கள் வசைகளைப் பொருட்படுத்தப் போவதில்லை என்று நீங்கள் சொல்லலாம்.ஆனால் உங்கள் புறக்கணிப்பு அவர்களை மேலும் மேலும் ஆவேசப் படுத்தவே செய்யும்.புறக்கணிக்க முடியாத ஒரு தரப்பாக அவர்கள் ஆகும்வரை முயன்று கொண்டே இருப்பார்கள்.இல்லையா..’பகை முடித்து ‘ என்ற வினைக்கு காந்திய அணுகுமுறை வேறல்லவா ..பி.கு.-இது உங்களுக்கு அறிவுரை கூறும் கடிதமல்ல
BOGAN [GOMATHI SANKAR]
அன்புள்ள கோமதிசங்கர்
உண்மைதான். ஆனால் அது அரசியல் சமூக தளங்களில் செயல் படுபவர்களுக்கான வழி. இலக்கியம் போன்ற துறைகளில் நம் நுண்ணுணர்வை இழக்க நேரும் இடங்களில் அறவுணர்வை சமரசம் செய்ய நேரும்போது உறவுகளை விட்டு விலகுவதே மேல். இல்லையேல் வேறுவகை அக இழப்புகள் ஏற்படும்
என்னைப் பொறுத்தவரை எதிர்ப்பு, அவதூறு போன்றவை ஒரு பொருட்டே அல்ல. அவற்றினூடாகவே நான் வந்திருக்கிறேன்
ஜெ