விழா, சந்திப்பு, மீட்பு

WP_20151227_15_54_47_Pro(1)
திருஜெயமோகன்அவர்களுக்கு
வணக்கம்…
கிளம்புவதற்கு மனமில்லாமலே நான் புதுக்கோட்டைக்கு திரும்பினேன். விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ளவது இது மூன்றாவது வருடம். இம்முறைதான் நான் உங்களிடம் நெருங்கிவிட்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் தான்  தயங்கி நின்றேன். எல்லோரையும் அரவணைத்து போவதும்,ஒவ்வொரு புது நண்பர்களையும் அறிமுகப்படுத்தியதும் கை பிடித்து பேசி பழகிவிடுவதும்  ஒரு மிகப்பெரிய எழுத்தாளரின் பண்பு வியக்கச் செய்கிறது. இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷம் போல அலைந்து திரிந்து வேலை செய்வதை பார்க்கையில் உன்னதமான இலக்கியத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது.
 இரண்டாம் நாள் இலக்கிய அமர்வில் தான் என்னால் கலந்து கொள்ள முடிந்தது. வந்ததுமே முதல் நாள் தவறவிட்டதை நினைத்து வருந்தினேன். தேவதச்சனின் கவிதைகள் குறித்த விவாதம் அவருடைய கவிதைகளுக்கு மட்டுமன்று தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதைகள் அனைத்துக்குமே சேர்ந்த ஒரு சரியான மதிப்பீடாக இருந்தது. தேவதச்சன் குறித்த ஆவணப்படம் மட்டுமில்லாமல் அவரின் கவிதை குறித்த கட்டுரை கொண்ட தொகுப்பும் வெளிவந்திருந்தது பிடித்திருந்தது.
மதியம் யுவன் சந்திரசேகருடனான அமர்வு ‘நாவலில்’ உங்களுக்கும் யுவனுக்கும் இருக்கின்ற கருத்துப் பரிமாறுதல் போல அமைந்திருந்தது. எனக்குள் நெடுநாட்களாக இருந்த ஒரு ஐயம் “வாசகன் படைப்பில் எழுதாளனை தேடலாமா? எழுத்தாளனை ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றிணைப்பதா?”…
மிக அற்புதமான விவாதம் ஜெ சார். ‘ஜேஜே சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி, காதித மலர்கள்- ஆதவன், போரும் அமைதியும்-டால்ஸ்டாய்” என இந்த விவாதம் முழுவதும் தீவிர வாசிப்பில் இருப்பவர்களுக்கு நல்ல தீனி… உங்களுடைய பதில் என்னைப்போன்று புதிதாக எழுத வந்தவர்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை தருகிறது. நான்  யுவன் சந்திரசேகரிடம் அவரின் ‘கதைக்குள் கதை பாணி’ வடிவத்தை ஒட்டி எழுப்பிய கேள்விக்கு யுவனின் பதில் மிக நுட்பமாக இருந்தது.
 மாலை கூட்டமாக நடந்து சென்று  சாலையோரக் கடையில் தேநீர் அருந்தச் சென்றது, பின் தேநீர் கடையிலேயே ஒரு ‘மினி இலக்கிய அமர்வு’ உருவானது. நாஞ்சில் நாடன், லெட்சுமி மணிவண்ணன், நிர்மால்யா, எம்.ஏ. சுசிலா, அலெக்ஸ் என திரும்புகிற இடமெல்லாம் நிறைந்து நின்ற முக்கிய ஆளுமைகளிடம் இலக்கியம் குறித்து நாங்கள் விவாதித்த வண்ணமிருந்தோம்.
அஜிதனிடம் பேசினேன். எளிமையாக, பகட்டில்லாமல் தெளிவாக பேசினார்.  திரைப்படத்துறை குறித்தும், இயக்குநர் மணிரத்னம் பற்றியும் கேட்டறிந்தேன். தேவதச்சனின் ஆவணப்படம் பற்றியும், குறும்படம் பற்றியும் பேசினார்.
அக்டோபர் 24 தேதியிட்ட  கடிதத்தில் நான் உங்களிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.. எழுத்தாளனின் குடும்பம், சமுதாயம் சிக்கல்கள் குறித்து…விழா சுமை காரணமாக நீங்கள் பதில் அனுப்பவில்லை.. காலம் இதழில் ‘இயல் விருதுக்கான உங்கள் ஏற்புரையில்’ மிகத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள்…அது தான் உண்மை… வாங்கி படித்துவிட்டு சிலாகித்தேன்.
விழாவில் மிகச்சுருக்கமாக பேசினாலும் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு கச்சிதமாக அமைந்திருந்தது. லெட்சுமி மணிவண்ணன் அவர்களின் பேச்சு தான் மனதளவில் கொஞ்சம் சோர்வை கொடுத்தது. அதன் பிறகு உங்களின் கவிதை குறித்த பேச்சு மிக அழகாக ரீங்கரித்தது. ஒரு அறிவியல் புணை கதை கொடுத்திருந்தீர்கள். கவிதைக்கான வடிவமும் கவிதைகளின் நிலைப்பாடும் அதுதான். கவிதை வாசிப்பில் ஏற்படும் தரிசனத்தை அடைவதே சரியான வாசிப்பு..
மணி ஒன்பதுக்கு நெருங்கியதும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால் கிளம்ப வேண்டியிருந்தது. வெளியே என்னுடன் எம்.ஏ சுசிலா அவர்களும் வந்தார்கள். அப்போது அவர், “உடல் நிலை சரியில்லை…ஜெயமோகன் ஸ்பீச் கேட்கத்தான்  இவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது” என்றார். இந்தவயதிலும் உங்களுடன் பேசுவதற்கு  அவர்களைப் போன்றவர்களும், எங்களைப் போன்றவர்களும், வானவன் மாதவி வல்லபி போன்றவர்களும் உன்னதமான இலக்கியத்திற்காக வந்து சேர்வது மனதில் பரிபூரணமான சந்தோசத்தை தருகிறது..
தூரத்தில் நின்று பார்த்தேன்..விஷ்ணுபுரம் மாபெரும் கோவில் கோபுரம் போல எழுந்து நிற்கிறது..ஒரு தரிசனத்தை அது வாசகனுக்கும் எழுதுபவர்களுக்கும் தருகிறது…இளம் படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், பெரும் சவாலையும் அது கொடுக்கும்…..
 நன்றி
மு.தூயன்
 புதுக்கோட்டை

 

அன்புள்ள தூயன்

உங்கள் கடிதம் இந்தப்புத்தாண்டின் முக்கியமான பரிசு. நான் சற்றுச் சோர்வில் இருந்தேன். விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றாலும் தவிர்க்கமுடியாமல் இத்தகைய சோர்வுகள் வந்து சேர்கின்றன.

நாகர்கோயில் வந்தபின் நான் தொண்ணூறுகளில் நிகழ்த்திய இலக்கியச் சந்திப்புகளில் பங்கெடுத்தவர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தேன். அன்று வந்தவர்களில் யுவன் சந்திரசேகர், க.மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், லட்சுமி மணிவண்ணன் செங்கதிர் போன்ற சிலர் இப்போதும் பங்கெடுத்தனர் பலர் பலவகையிலும் இலக்கியத்திலிருந்து அல்லது என்னிடமிருந்து விலகிவிட்டனர். எதிரிகளாகி காழ்ப்பைக் கொட்டும் சிலரும் இல்லாமலில்லை.

இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஓர் ஆர்வத்தில் உள்ளே வருபவர்களில் கணிசமானவர்களுக்கு இலக்கியம் சலிப்பூட்டுகிறது..சந்திப்புகள்  வெறும் கேளிக்கையாக ஆகிவிடுகிறது. இந்தச் செயலே பொருளற்றதாக, கேலிக்குரியதாகத் தெரிகிறது. அப்படி எப்போதும் சிலர் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

சென்ற காலங்களில் விலகிச்சென்றவர்களை எண்ணியபோது வந்த சோர்வு என்னை மூடியது. அது இத்தகைய விழாக்கள் முடியும்போது இயல்பாக எழுவதும்கூட. மீண்டும் வெண்முரசில் பொருந்துவது வரை இது நீடிக்கும்

இந்தச்செயல்பாட்டில் இருப்பது ஒருவகையான இலட்சியவாதம் அன்றி வேறேதும் இல்லை. தமிழ்நாட்டின் பத்துகோடி மக்களில் சில ஆயிரம்பேர் படிக்கும் இலக்கியமும் சிலநூறுபேர் கூடும் விழாவும் ஒரு லௌகீகநோக்கில் பொருளற்றவை. அதை எங்காவது ஐயப்பட்டால், கொஞ்சம் லௌகீகமாக விலகிநோக்கத்தொடங்கினால் அவ்வளவுதான். மாயக்காரனின் மாயவலையத்திலிருந்து வெளியே போனதுபோல ஆகிவிடும்.

விழாவில் லட்சுமி மணிவண்ணன் சொன்ன ஒரு சொற்றொடரில் இருந்தே ஆரம்பம். நானும் கோணங்கியும் மட்டுமே சென்ற கால்நூற்றாண்டாக சற்றும் சோர்வுறாமல் முழுநம்பிக்கையுடன் இலக்கியத்தில் இருக்கிறோம் என்று அவர் சொன்னார். அதைக் கேட்டதுமே ஒரு திகைப்பும், நான் சோர்வுறுவதற்கான காரணங்களும் நினைவில் தோன்றத்தொடங்கின. மனம் செய்யும் மாயம்.

உங்கள் கடிதம் ஒரு கணத்தில் என்னை மலரச்செய்து மீட்டது. இந்த சந்திப்புநிகழ்ச்சியின் மிகப்பெரிய சிறப்பே பாதிக்கும் மேலானவர்கள் புதியவர்கள் என்பதுதான். இப்புதியவர்களை நம்பி முன்னால்செல்லவேண்டும் என்னும் பெரிய உத்வேகத்தை அடைந்தேன். இதில் என்ன கிடைக்கும் இதனால் என்ன நிகழும் என்று எண்ணவேண்டியதில்லை. இதைச்செய்ய இங்கு வந்தோம், செய்துவிட்டுச் செல்வோம் அவ்வளவுதான் என எண்ணிக்கொண்டேன். பத்துபேர் அளிக்கும் சோர்வை ஒருவர் மீட்கமுடியும் என்பதில்தான் இலக்கியத்தின் அடிப்படையே உறைகிறது

இத்தருணத்தில் உங்களை ஆரத்தழுவிக்கொள்கிறேன்

 

அன்புடன்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13
அடுத்த கட்டுரைவிழா 2015 கடிதங்கள் 6