விழா 2015 கடிதங்கள் 5

1

ஜெ

மிகச்சிறப்பான விழா. மிகச்செறிவான உரையாடல்கள். நான் அனைத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லை. கலந்துகொண்ட அரங்குகள் எல்லாமே அபாரமாக இருந்தன. கே.என்.செந்தில் பேசிய அரங்கும் சரி யுவன் சந்திரசேகர் பேசிய அரங்கும் சரி ஆச்சரியப்படுமளவுக்குக் கூர்மையாக இருந்தன. பல விஷயங்களைக் கிரஹித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உள்வாங்கியவை இந்த வருடம் முழுக்க நினைத்துப்பார்க்கப் போதுமானவையாக இருந்தன

ஒரு கவிஞர் அற்புதமாகப் பாடினார். அவர் பெயரை மறந்துவிட்டேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்
முத்துக்குமார்

அன்புள்ள முத்துக்குமார்

அவர் பெயர் ஜான் சுந்தர். கோவையைச்சேர்ந்தவர், ஒரு மெல்லிசைக்குழு வைத்திருந்தார். பாடகர். கவிஞரும் கூட.  ’சொந்தரயில்காரி’என்னும் பேரில் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது

ஜெ

அன்புள்ள ஜெ சார்

மிகச்சிறப்பான விழாவாக இருந்தது. நான் இலக்கியக் கூட்டங்களுக்குப்போய் கடிவாங்கி வந்ததுதான் அறிந்தது. வாசகர்களுக்கு நடுவே அமர்ந்து எழுத்தாளர்களைச் சந்திப்பதெல்லாம் உற்சாகமான அனுபவம். கனவு போல. ஆனால் என்ன எவரிடமும் போய்ப்பேசத் தைரியம் வரவில்லை. நான் இன்னார் என்று சொல்லும்படியாக எதையாவது செய்தபின்னர் போய்ச்சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அத்தனைபேரையும் அருகே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஜோ டி குரூஸின் பேச்சும் தோரணையும் அற்புதமாக இருந்தன. கம்பீரமான வெள்ளந்தியான மனுஷன் என்று தோன்றியது. அவரது நாவல்களை வாசித்ததில்லை. வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

செல்வராஜன்


அன்புள்ள ஜெ சார்

விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தேன். எளிமையாக விழா நடந்தது. நீங்கள் ஆற்றிய சொற்பொழிவு சிறப்பாக இருந்தது. தேவதச்சனை மேடையில் ரசித்துப்பார்த்தேன். குழந்தைபோல காலை ஆட்டியபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். உங்கள் புத்தகங்கள் வாங்கினேன். விவாதங்கள் சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். நான் பங்கெடுக்கமுடியவில்லை

எஸ்.கார்த்திக் ராஜா

முந்தைய கட்டுரைவிழா 2015 கடிதங்கள் 4
அடுத்த கட்டுரைபிரியாணி மண்டி