விஷ்ணுபுரம் விழா முடிந்து மறுநாளும் கோவையிலேயே தங்கியிருந்தேன். விஜயபார்க் ஓட்டலில். தேவதச்சனும் அங்குதான் இருந்தார். பட்டீஸ்வரம் ஆலயத்திற்கும் அங்கிருந்து ஜக்கி வாசுதேவ் குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தார். செல்வேந்திரனும் அன்றுதான் நெல்லை கிளம்பினார். அனைவரும் ஒன்றாக எட்டரை மணிக்கு நாகர்கோயில் எக்ஸ்பிரஸில்தான் கிளம்பினோம்
கோயில்பட்டி ஒரு சிக்கலான இக்கட்டு கொண்ட ஊர். அங்கே அத்தனை ரயில்களும் நள்ளிரவில் அல்லது விடியற்காலையில்தான் வரும். தேவதச்சன் சொன்னபோது பரிதாபமாகத்தான் இருந்தது. நாகர்கோயில் அற்புதமான ஊர். எந்த ஊருக்குப்போனாலும் 12 மணிநேரத்தூக்கத்துக்கு உத்தரவாதித்தம் உண்டு
நண்பர்கள் அறைக்கு வந்துபேசிக்கொண்டிருந்தார்கள். மதிய உணவுக்கு ராம்நகர் காளிங்கராயர் தெருவில் உள்ள பிரியாணி மண்டி என்னும் உணவகத்திற்குச் செல்லலாம் என்று நடராஜன் சொன்னார். இயகாகோ சுப்ரமணியம் அவர்கள் அழைத்துச்செல்ல வந்தார். நான் உணவுகளில் பெரிய நாட்டமுடையவன் அல்ல. ஆனால் விழா முடிந்த வெறுமைக்கு உற்சாகமாக இருக்குமே என்று கிளம்பிச்சென்றேன்
வித்தியாசமான உள்வரைவமைப்பு கொண்ட உணவகம். கரிக்கோட்டுச் சித்திரங்கள் கொண்ட உட்சுவர்கள். சிறிய வசதியான இருக்கைகள். அதை நடத்தும் பிரியா திருமூர்த்தி நல்ல இலக்கியவாசகர் என அறிந்தேன். என் அறம் தொகுப்பால் பெரிதும் கவரப்பட்டவர். மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார்.
வசதியான தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்து உயர்கல்வி கற்றவர் பிரியா. இயற்கைவேளாண்மை மேல் ஆர்வத்தால் ஒரு பண்ணையை பொள்ளாச்சி அருகே நடத்துகிறார். முற்றிலும் இயற்கையான காய்கறிகள், தானியங்கள், பால். அத்துடன் சமையலிலும் ஆர்வம். ஆகவே இயற்கையான உணவு அளிக்கப்படும் ஒரு உணவகத்தை கோவையில் ஆரம்பித்தார். அவரே பெரும்பாலும் சமையலைச் செய்கிறார் என்றபோது அதிர்ச்சியாகவே இருந்தது
“சமைக்கிறதனால என் கையே சொரசொரப்பாகத்தான் இருக்கும். விவசாய வேலையெல்லாம் செய்வேன். பால்கறப்பேன். களைபறிப்பேன்” என்றார். அசாதாரணமான தேடல் கொண்ட வாழ்க்கை. மானசரோவருக்கு இருமுறை சென்றிருக்கிறார். இமையமலையில் அலைந்திருக்கிறார்.
சமீபத்தில் நான் சாப்பிட்ட மிகச்சிறந்த அசைவ உணவு. சிக்கன் மட்டன் பிரியாணிகள். மட்டன் சுக்கா. இனிப்பு வகைகள். சுவை என் கவனக்குறைவையும் மீறி என்னை நிறைத்தது. பொதுவாக பிரியாணி சாப்பிட்டால் ஒரு வகை அசௌகரியத்தை நாள் முழுக்க உணர்வேன். அது அசைவ உணவால் அல்ல, அதனுடன் சேர்க்கப்படும் செயற்கைப்பொருட்களால் என்று தெரிந்தது. வயிறு இதமாக இருந்தது
உண்மையில் மிகவும் நிறைவூட்டிய ஓர் உணவனுபவம். பிரியாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது நெஞ்சுணர்ந்து ‘நன்றி” என்றேன்