பரப்பிசையை விமரிசித்தல் குறித்து…

சுந்தர ராமசாமி அறையில் இருந்து கூடத்துக்கு நடக்கும்போது தொலைக்காட்சியில் ஒரே ஒரு கீற்று ஒலியைக் கேட்டு ‘போடு போடு…சீனிவாஸ் வாசிக்கிறான். காம்போதி’ என்றார். எப்படி அவர் கண்டுபிடிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியம். ஒரு துளி இசையில் அதை வாசிப்பவனும் அவன் மனமும் இருக்கின்றனவா? எப்போதுமே சங்கீதமும் ஓவியமும் தெரிந்தவர்கள் எனக்கு வியப்புக்குரியவர்கள்.

நான் சுந்தரராமசாமியிடம் மனம் வெதும்பிச் சொன்னேன் ‘சார், எனக்குமட்டும் சங்கீதமே பிடிபடமாட்டேங்குது. நானும் எவ்ளவோ கேட்டுப்பாத்துட்டேன். கேக்கிறப்ப நல்லா இருக்கு. என்னபாட்டு ஏதுன்னு ஞாபகம் நிக்கிறதில்லை. ஏன் பாடுறது ஜேசுதாசா ஜெயச்சந்திரனான்னுகூட தெரியறதில்லை. என்னசார் பண்றது?’

சுந்தர ராமசாமி கொஞ்சம்நேரம் யோசித்தபின் சொன்னார் ‘நீங்க கவலைப்படவேண்டாம்னுதான் படுது. இந்த எழுபது வயசுக்குள்ள சங்கீதம் தெரிஞ்ச நாயரை நான் பாத்ததே இல்லை’

ஆக இன்றுவரை அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறேன். இசைமீது ஆர்வம் உண்டு. எப்போதுமே இசைகேட்கிறேன். ஒன்றுமே ஏறுவதில்லை. இசை சார்ந்த இந்தமேடையில் நின்று உரையாற்றும் தகுதி எனக்கில்லை என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே நான் இசைபற்றிபேசவும் போவதில்லை.

இசைவிமரிசனத்துக்கும் எனக்கும் அதிக தூரம். விவாதங்கள் எனக்கு புரிவதும் இல்லை. என் பார்வையில் எல்லா பாட்டுமே நன்றாகத்தான் இருக்கிறது. சில பாட்டுகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. ஏன் சிலபாட்டுகள் நன்றாக இல்லை, சிலபாட்டுகள் நன்றாக இருக்கின்றன என்கிறார்கள் என்ற மாபெரும் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

இங்கே நான் பேசுவதற்கான முகாந்திரம் இரண்டு. ஒன்று ஷாஜி என்னுடைய நண்பர். மிகநெருக்கமாக வாழ்க்கையில் நான் உணர்ந்த சில நண்பர்களில் ஒருவர். அவருடைய குணச்சித்திரம் ஒருவகையான நேரடித்தீவிரம் கொண்டது. உக்கிரமான உணர்ச்சிகளால் ஆனவர் ஷாஜி. முன்பு இந்த தொகுதியில் உள்ள கட்டுரைகளை அவர் எழுதும்போது முதலில் பலமணிநேரம் கட்டுரையில் அவர் எழுதிய விஷயங்களைப்பற்றிச் சொல்வார். அதன்பின்னர் எழுத ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்களைச் சொல்வார்.

எழுத பல நாட்களாகும் . ஒருவழியாக எழுதியபின் எழுதிய விஷயங்களைச் சொல்வார். அதை எனக்கு அனுப்பித்தருவார். நான் மொழியாக்கம்செய்தபின்னர் அந்த மொழியாக்கத்தில் அவர் செய்த மாற்றங்களைப்பற்றி விரிவாகச் சொல்வார். அச்சுக்குப்போகும். இருங்கள் முடியவில்லை, அந்தக்கட்டுரையை அவரே நேரில்வந்து எனக்கு வார்த்தை வார்த்தையாக வாசித்தும் காட்டுவார். என்னுடைய கருத்தை பிதுக்கி எடுப்பார். மகிழ்ச்சியுடன் அடுத்த இரைக்காக கிளம்பிச்செல்வார்.

ஷாஜிக்கு மாற்றுக்கருத்தாளர்கள்மீது அக்கறை அதிகம். மாற்றுக்கருத்து கொண்ட நண்பர்கள் அக்கருத்தை மாற்றிக்கொள்ளும் வரை அயராது பாடுபடுவார். ஆதாரங்களை அளிப்பார். நகைச்சுவைகளை கொண்டுவந்து கொட்டுவார். பலமுனைத்தாக்குதல். பலநாட்கள் நீளும் கருத்துப்புயல். பலசமயம் நானெல்லாம் கையை தூக்கிவிடுவேன். இசை வாழ்க என்று கூவி சரணடைந்துவிடுவேன்.

இந்தக்கட்டுரைகளை நான் மொழியாக்கம்செய்தேன் என்பது ஒரு ஆச்சரியமாக இதழுலகில் பார்க்கப்படுகிறது. வழக்கம்போல இவற்றையும் முழு சிரத்தை எடுத்துக்கொண்டே செய்தேன். இசைசார்ந்த கலைச்சொற்களை ஆபிரகாம் பண்டிதரின் நூல்களில் தேடிக்கண்டடைந்து சேர்த்துக்கொண்டேன். சில கலைச்சொற்களை நானே உருவாக்கினேன். இப்போது பார்க்கையில் அச்சொற்கள் எல்லாம் நிறுவப்பட்டு சாதாரணமாக புழக்கத்துக்கு வந்து விட்டன. மற்றபடி இவை பேசும் விஷயங்களுக்கும் எனக்கும் பெரிய தொடர்பில்லை.

தில்லானா மோகனாம்பாள் நாவலில் ஒரு நிகழ்ச்சி. சிக்கல் சண்முகசுந்தரம் அற்புதமாக ஊதுகிறார். அவரது நாதஸ்வரத்தை எடுத்துபார்க்கும் ஜில்ஜில் ரமாமணி ‘அந்த சங்கீதம் உள்ற எங்கிட்டு இருக்குன்னு பாக்குறேன்..அதே தொளை அதே ஓட்டைதான்’ என்கிறாள். நானும் அதே நாதஸ்வரம்தான். இந்தக் கட்டுரைகள் என் வழியாக கடந்துசென்றிருக்கின்றன. நான் சுத்தமாக இருக்கிறேன், அதே தொளை, அதே ஓட்டையுடன்.

*

ஷாஜியை நான் தான் இசை குறித்து எழுதச்செய்தேன். அவர் மிகவும் மனம்சோர்ந்திருந்த காலங்கள் அவை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சினைகள். அவரது குழந்தை சார்ந்தவை, அவரே எழுதியிருக்கிறார். அன்றெல்லாம் சாதாரணமான பேச்சிலேயே அவரது குரல் சட்டென்று மனசோர்வில் தழைவதை காணமுடியும். சட்டென்று அவர் கொந்தளிப்பும் கொள்வார்.

என் நோக்கில் படைப்புச்செயல் எப்போதுமே ஒருவரை துயரத்தில் இருந்து மீட்கக்கூடியது. அவரை எழுதச் செய்தேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒருகட்டுரையை மொழியாக்கம்செய்து உயிர்மைக்கு அனுப்பினேன். சலீல் சௌதுரி பற்றிய அக்கட்டுரை அவருக்கு அளித்த புகழும் பாராட்டும் அவரை மேலும் எழுதச்செய்தது. அவர் தன்னை மீட்டுக்கொள்ள உதவியது

அதைவிட முக்கியமாக எனக்கு ஒரு நோக்கம் இருந்தது. ஷாஜி தனிப்பேச்சில் இசைகுறித்து நிறைய பேசுவார். பெரும்பாலும் பரப்பிசை குறித்து. அதுதான் அவரது உலகம். இருபதாண்டுக்காலமாக இசைவெளியீடு, இசைப்பதிவு துறைகளில் அவர் பணியாற்றியிருக்கிறார். இசைக்கலைஞர்களிடம் நேரடி உறவுகொண்டவராக இருக்கிறார். பரப்பிசைசார்ந்த ஒரு துறையை தொழிலாகவும் கொண்டிருக்கிறார். ஆகவே அவர் பரப்பிசை குறித்து எழுதலாமென நினைத்தேன்.

குறிப்பாக பரப்பிசை என ஏன் சொல்கிறேன் என்றால் நம்முடைய பரப்புக்கலைகளைப் [Pop arts] பற்றி நாம் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்பதனாலேயே. நம் கண்ணெதிரே கடந்த நூறு வருடங்களில் அவை வளர்ந்து பேருருவம் கொண்டு நிற்கின்றன. நம்முடைய சமூக வாழ்க்கையை, நம்முடைய அரசியலை, நம்முடைய வெகுஜன சிந்தனையை அவை தீர்மானிக்கின்றன. ஆனால் அவற்றைப்பற்றிய ஆய்வுகளோ விமரிசனங்களோ நம் சூழலில் மிகமிகக் குறைவு

ஆறு பரப்புக்கலைகள் நம் முன் உள்ளன. 1, பரப்பிசை. 2, திரைப்படம். 3, பரப்பிலக்கியம்,4, செய்திஎழுத்து. 5, விளம்பரக்கலை. 6, மேடைப்பேச்சு இவற்றில் பரப்பிசை திரைப்படத்தின் ஒருபகுதியாக திரையிசையாகவே உள்ளது.

பரப்பிலக்கியம் பற்றி சில அவதானிப்புகள் உள்ளன என்றாலும் தமிழில் ஆய்வுகளேதும் பெரிதாக ஏதும் எழுதப்பட்டதில்லை. பரப்பிலக்கியத்தை நவீன இலக்கியமாக கண்டு மயங்கும் எழுத்துக்களைப்பற்றிச் சொல்லவில்லை. அவற்றுக்கு எதிர்வினையாக பரப்பிலக்கியம் இலக்கியமல்ல என்று சொல்லி இலக்கியத்தை முன்வைத்து க.நா.சு வழிவந்தவர்கள் எழுதிய கட்டுரைகளையும் சொல்லவில்லை. பரப்பிலக்கியத்தை பரப்பிலக்கியம் என்ற நோக்கில் அணுகி அதன் சமூக – சிந்தனைத்தள பங்களிப்புகளை ஆராயும் கட்டுரைகளை சொல்கிறேன்.

அவ்வகையில் நான் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், அவையே முன்னோடியானவை என்று நினைக்கிறேன். நம் பரப்பிலக்கியத்தின் வரலாறு இன்னமும் எழுதப்படவில்லை. அதை இலக்கியத்துடன் சேர்க்காமல் தனியாக எழுதவேண்டும். அதன் அரசியல் சமூகப்பின்புலங்கள் தனியாக ஆராயப்படவும் வேண்டும். ஆர்வமும் விரிவான வாசிப்பும் உள்ளவன் என்ற முறையில் எனக்கு அந்த நோக்கம் இருந்தது. ஆனால் இலக்கியவிமர்சனமே இன்னமும் முழுமையாக நிகழாத தமிழ்ச்சூழலில் வணிக எழுத்துக்கு நேரம் ஒதுக்கவேண்டுமா என்ற வினா என்னுள் எழுந்தது.

சினிமாவைப்பற்றி 1986ல் வெளிவந்த எஸ்.வி.ராஜதுரையின் ’இனி’ சிற்றிதழில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி முன்னோடியான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அ.ராமசாமி, யமுனா ராஜேந்திரன், ராஜன்குறை, சுந்தர்காளி, அம்ஷன்குமார்,விஸ்வாமித்திரன் போன்றவர்கள் ஆய்வுநோக்கில் எழுதிவருகிறார்கள். ராண்டார்கை, அறந்தை நாராயணன், சு.தியடோர் பாஸ்கரன், போன்றவர்கள் சினிமாவின் பலதளத்திலான வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். ஆனால் சினிமாவின் பிரம்மாண்டமான பங்களிப்பை வைத்துப்பார்க்கும்போது இன்னமும் விரிவான நூல்கள் பல வரவேண்டியிருக்கிறது.

திரையிசையின் வரலாற்றை பொறுப்புடன் எழுதும் முயற்சி என்றால் ’இனி’ சிற்றிதழில் சிலுவைப்பிச்சை என்ற பேரில் சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகளை சொல்லலாம். வாமனன்,சோழநாடன் ஆகியோர் முக்கியமான வரலாற்றுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். திரையிசை மீது விமர்சன நோக்கில் எழுதப்பட்ட ஆய்வுகள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

செய்திஎழுத்துக்கலை குறித்து ராணி ஆசிரியராக இருந்த அ.மா.சாமி முக்கியமான முன்னோடி வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.  அ.மா.சாமியின் இதழியல் ஆய்வுநூல்கள் சீராக தகவல்களை தொகுத்து அளிப்பவை.தமிழில் செய்தி இதழ்களின் தொடக்கம் பற்றிய பல அரிய செய்திகளை அவை அளிக்கின்றன. இங்கே ஆங்கிலச் செய்தி இதழ்கள்தான் முதலில் வெளிவந்தன. அவற்றின் மொழியாக்கமாக தமிழ் செய்தி இதழ்கள் வெளிவந்தன.

ஆனால் உண்மையில் அச்சுவசதியைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமாக வெளிவந்த அச்சிதழ்கள் சாதி,மத அமைப்புக்களால் வெளியிடப்பட்டவையே. பிரம்மசமாஜத்தவரான சே.ப நரசிம்மலு நாயிடுவையே இதழியலின் முன்னோடியாக அ.மா.சாமி குறிப்பிடுகிறார்.அ.மா.சாமியை ஆதாரமாகக் கொள்வோமென்றால் தமிழ் இதழியலில் எப்போதுமே ஓங்கி நின்றவை சாதியும் மதமும்தான்.ஆரம்பகால கிறித்தவ,சைவ இதழ்களின் நீண்ட பட்டியலை அவருடைய நூல்களில் நாம் காணலாம்

தமிழ் பரப்பியலின் மைய ஓட்டமாக இன்றிருப்பதும் சாதிமதம் சார்ந்த எழுத்துக்கள்தான். அவையே வரலாறு, ஆன்மீகம்,சோதிடம் என்றெல்லாம் உருமாறி நம் புத்தகக் கண்காட்சிகளை நிரப்பியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட அறிவியக்கம் தோன்றும்போது என்னென்ன கூறுகள் இருந்தனவோ அவை பெரும்பாலும் அவ்வண்ணமே இறுதிவரை நீடிப்பதையே நாம் எப்போதும் காண்கிறோம்.

ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் செய்தி -எழுத்துக்கலை குறித்தும் அதன் அழகியல் மற்றும் சமூகவியல் தளங்களைப்பற்றியும் இன்னும் ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. தமிழகத்தின் விளம்பரக்கலை பற்றி எந்த எழுத்தும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

000

இச்சூழலில்தான் நான் ஷாஜி பரப்பிசை பற்றிய கட்டுரைகளை எழுதவேண்டுமென ஆசைப்பட்டேன். அதற்கு ஒரு நிகழ்ச்சி காரணம். ஒருமுறை தமிழ் மரபிசையை மிக நன்றாக அறிந்த நாலைந்து நண்பர்களுடன் அறைக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். சிறந்த பாடல்களை அவர்கள் நினைவை சலித்துச் சலித்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள். நான் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலை எனக்குப்பிடித்த பாடலாகச் சொன்னேன். சட்டென்று என் நண்பர் ‘அது சரியில்லை.பல கொழப்பங்கள் அதிலே இருக்கு. ஒரு தந்திரம்தான் அது’ என்று சொல்லிவிட்டு அதேபடத்தில் உள்ள இன்னொரு பாட்டுதான் ‘சரியான பாட்டு’ என்றார்.

அது எனக்கு குழப்பத்தை அளித்தது. இப்படி விமர்சனபூர்வமாக தீர்மானிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் அளவுகோல் என்பது தமிழ் மரபிசையால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதைவைத்து அந்தப்பாடலை அளக்க முடியுமா? பரப்பிசையை அளக்க மரபிசை அளவுகோல்கள் பொருந்துமா?

எனக்கு அப்பாடல் மிக அந்தரங்கமானது. ஒன்று அதில் என் இளமைநினைவுகள் கலந்துள்ளன. இரண்டாவதாக கவிக்குயில் என்ற அந்தப்படத்தில் ஸ்ரீதேவி தன் கனவில் ஒலிக்கும் ஓர் ராகத்தை சிவகுமார் பாடினால்தான் தன் கனவில் வந்த கணவன் அவர்தான் என ஏற்பேன் என்பார். அதற்காக சிவகுமார் பாடும் அந்தப்பாட்டு அபாரமான அந்தரங்கத்தன்மை கொண்டது. அதில் ஒரு கொஞ்சலும் கெஞ்சலும் உண்டு. நான்காவதாக அதில் நான் கேட்டுப்பழகிய சர்ச் இசையின் ஞாபகங்கள் உள்ளன. அந்தப்பாடலே ஏதோ முகம் தெரியாத பெண்ணை நோக்கி காற்றில் ஒலிப்பதாக எனக்கொரு மனப்பிரமை. இந்த அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் வெறும் இலக்கணம் மூலம் அப்பாடலை மதிப்பிட முடியுமா என்ன?

பின்னர் ஷாஜியிடம்கேட்டேன். ‘அது ராஜாசாரின் ஒரு மாஸ்டர்பீஸ். அவரோட பெஸ்ட் •ப்யூஷன்களிலே ஒண்ணு அது’ என்றார். அது ஏதோ கர்நாடகசங்கீத ராகத்தின் சிலகூறுகளை மேலையிசையுடன் கலந்து அமைக்கப்பட்டது. அப்போது எனக்குப் பட்டது, நமது மரபிசை இலக்கணப்படி ‘தப்பாக’ இருப்பவை எல்லாமே ராஜா அதில் சேர்த்த அந்த அன்னிய இசைக்கூறுகள்தான் என்று. மரபிசை இலக்கணத்தைக்கொண்டு பரப்பிசையை அளப்பது அபாயகரமானது என நான் உள்ளூர உறுதிசெய்துகொண்டேன்.

பரப்பிசையை விமர்சனம்செய்ய தேவையான அடிப்படைகள் என்ன? தமிழில் நாம் இன்றுவரை அப்படி ஒரு விமர்சனத்தை தொடங்கவில்லை. ஆகவே அளவுகோல்களே நம்மிடம் இல்லை. அளவுகோல்களை உருவாக்குவதற்கான சிக்கல்கள் சந்திக்கப்படவே இல்லை.இசை அல்லாத பரப்புக்கலைகளை விமர்சனம் செய்யும் போக்குகள், மற்றும் நவீன பரப்பிய [poppulism] ஆய்வுச் சிந்தனைகள் ஆகியவற்றை வைத்து என் மனதில் சில எண்ணங்கள் உருவாயின. அவற்றை நான் ஷாஜியிடம் விவாதித்தேன். அக்கட்டுரைகளின் பல அம்சங்களை அவர் உருவாக்கிக்கொள்ள என் விவாதங்கள் அவருக்கு உதவின என்று அவர் சொன்னார்.

தமிழ்பரப்பிசையைப் பற்றிபேசுவதற்கு முன்னர் நாம் பரப்பிசையைப்பற்றிய நம்முடைய அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதை உருவாக்க மேலைபரப்பிசையையும் நமது பரப்பிசையையும் ஒரேதளத்தில் வைத்து ஆராயவேண்டும்.தமிழ் பரப்பிசை என்பது சர்வதேச பரப்பிசையின் அத்தனை பொதுப்போக்குகளையும் ஒன்றிணைத்து உருவாகிக்கொண்டு இருக்கும் ஒன்று. அதைமட்டும் தனியாக ஆராய முடியாது. அதேசமயம் அதற்கு மட்டுமே உரிய பண்பாட்டுத்தனித்தன்மையையும் அதற்கு மட்டுமே உள்ள சந்தர்ப்பசூழல்களையும் கருத்தில்கொள்ளவும் வேண்டும்.

நமக்கு மரபிசையை மதிப்பிட சில புறவய அளவுகோல்கள் உள்ளன. அவை தொன்மையானவை. காலப்போக்கில் உருவாகி வந்தவை. அவை பெரும்பாலும் இலக்கணம் சார்ந்தவை. காரணம் மரபிசைக்கு புறவயமான இலக்கணம் உள்ளது. பரப்பிசைக்கு அப்படி இலக்கணம் இருக்கமுடியாது. அது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் இருந்து தன் மூலங்களை எடுத்துக்கொண்டு தன் விருப்பப்படி கலக்கிறது.

இந்நிலையில் எந்த மூலத்தில் இருந்து பரப்பிசை ஒன்றை எடுத்துக்கொண்டதோ அதை அந்த மூலத்தின் இலக்கணத்தை பயன்படுத்தி ஓரளவு மதிப்பிடலாம். உதாரணமாக கர்நாடகசங்கீதத்தில் உள்ள ஒரு ராகத்தை திரைப்பாடல் பயன்படுத்தும் என்றால் அந்த ராக இலக்கணத்தை பயன்படுத்தி ஆராயலாம், மதிப்பிடலாம். ஆனால் ஓரளவுதான். பரப்பிசை அந்த இலக்கணத்தை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லமுடியாது. கேதாரம் சேதாரமாகியிருக்கிறது என்றெல்லாம் சொல்வதில் பொருள் இல்லை. அதேபாடலில் ஆப்ரிக்க சங்கீதமும் அமெரிக்க பரப்பிசைக்கூறுகளும் கலந்திருக்கலாம். அந்தபபடலை அறிவதற்கு அந்த மரபிசையின் இலக்கணங்களை கவனமாக, குறைந்தபட்ச எல்லைக்குள் நின்று பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான் என்று படுகிறது.

ஆனால் இன்றுவரை நம் திரையிசை பற்றிய ஆய்வுகள் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணத்தை வைத்தே சிலரால் செய்யப்படுகின்றன. சொல்லப்போனால் நமக்கு கிடைக்கும் ஒரே இசைவிமர்சனமாக அதுதான் இருக்கிறது. அது கண்டிப்பாக முழுமையானதல்ல. பலசமயம் பரப்பிசை மீதான வன்முறையாக அமையலாம். ஏனென்றால் பரப்பிசை ஓடிக்கொண்டே இருப்பது. மரபிசை நிலையானது. அதன் இலக்கணமும் நிலையானது. பரப்பிசைக்கு மரபிசை இலக்கணம் நிபந்தனையாக ஆகுமென்றால் அது அங்கே சாகும்.

ஆகவேதான் மரபிசை பயின்று தேர்ந்து அதைக்கொண்டு பரப்பிசையை மதிப்பிடுபவர்கள் பரப்பிசையின் பெரும்பரப்பை தவற விடுகிறார்கள். அவர்களின் இலக்கணத்துக்குள் வரக்கூடிய பாடல்களை மட்டுமே பொறுக்கி முன்வைக்கிறார்கள். எந்த அடையாளமும் இல்லாமல் உயிர்துடிப்பான குழந்தைபோலக் கிடக்கும் பரப்பிசைப்பாடலை நிராகரித்துவிடுகிறார்கள். மரபிசையில் தேர்ந்த என் நண்பர்களிடம் இதையே காண்கிறேன். அத்துடன் எனக்குத்தான் மரபிசை தெரியுமே, அதில் இலக்கியத்தின் சாவியே இருக்கிறதே, அதைவைத்து நான் இறுதி முடிவை எடுப்பேனே என்று அவர்கள் தன்னம்பிக்கையும் கொள்கிரார்கள்.

ஆகவே மரபிசை அறிஞனின் நிலையில் நின்று கொண்டு ஒருபோதும் பரப்பிசையை ஆராயக்கூடாது என நான் ஷாஜியிடம் சொன்னேன். என்னைப்போன்ற ஒரு எளிய ரசிகனுக்காகவே பரப்பிசை உருவாக்கப்படுகிறது. என்னருகே நின்றுதான் நீங்கள் பரப்பிசையை விமர்சிக்கவும் மதிப்பிடவும் வேண்டும் சொன்னேன்.பரப்பிசையை சரியாக மதிப்பிடுவதற்கான வழி என்பது அது யாருக்காக உருவாக்கப்படுகிரதோ அவர்களின் சரியான பிரதிநிதியாக நின்று அதைப்பார்ப்பதே. இசைஞானம் என்பது ரகசியத்துணையாக கூடவரவேண்டும், அவ்வளவுதான்.

00

பரப்பிசையை நாம் ஒருபோதும் நிலையான அளவுகோலைக்கொண்டு அளந்துவிடமுடியாது. காரணம் அதன் அடிப்படைகளே காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு பெரும் பண்பாட்டு அலைமோதலாக அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உலகமே நம்முடன் உரையாடும்போது உருவாகும் ஒரு கலைப்பரப்பு என அதைச் சொல்லலாம். அத்துடன் அது வேறு பல கலைகளுடன் இணைந்ததாக உருவாகிறது. அரசியல் சமூக அலைகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு விரிகிறது. அவையனைத்தையும் கணக்கில்கொண்டுதான் அக்கலையை அளவிட முடியும். அதை தனி ஒரு படைப்பாக பிரித்தெடுத்து அதன் அமைப்பை வைத்து விமர்சனம்செய்தால் அது முழுமையாக அமையாது.

பரப்புக்கலை செவ்வியல்கலை போல தன்னியல்பான பரிணாமம் உடையதல்ல. செவ்வியல்கலை அதன் கலைஞர்களும் ரசிகர்களும் அடங்கிய ஓர் உலகில் தன் விதிகளுக்குள் இயங்கிக்கொண்டு தன்னியல்பாக வளரக்கூடியது. பரப்புக்கலை அப்படி அல்ல. அது பிரம்மாண்டமான ரசிகச்சூழலுள் வளரக்கூடியது. ரசிகர்களின் எதிர்வினைகளால் அது முன்னெடுக்கப்படுகிறது. ரசிகர்களின் அந்தரங்க உணர்ச்சிகளில் இருந்து அதை பிரிக்க முடியாது. அது ஓர் வரலாற்று அலையாகவே நம்மை வந்து மோதுகிறது.

உதாரணம் நம் திரையிசைதான். அது உலகமெங்கும் இருந்து இசைகளை பெற்றிருக்கிறது. அதில் கூத்தும் நாடகமும் சினிமாவும் உள்ளன. அந்த இசைக்குரிய சினிமாவில் இருந்து அதைப்பிரிக்க முடிவதில்லை. அது உருவான அரசியல் மற்றும் சமூகச்சூழலில் இருந்துதான் அதன் பாதிப்பே உருவாகிறது.

ஆகவே செவ்வியல் கலைக்குரிய நிலையான அளவுகோல்கள் ஒருபோதும் பரப்பிசைக்குச் சாத்தியமல்ல. அக்கலையின் பலதளங்களை ஒரேசமயம் கணக்கில் கொண்டுதான் அளவுகோல்களை உருவாக்கவேண்டும்.ஆகவே பரப்பிசை குறித்த விவாதத்தில் சீரான மாறாத புறவய அளவுகோலை, அதுவும் ஆரம்பத்திலேயே போடவேண்டும் என்ற கோரிக்கைக்கு பொருளே இல்லை. அந்த குரல் மரபிசை சார்ந்த ஒரு மனநிலையையே காட்டுகிறது. பரப்பிசைக்கு நாம் அதைப்போன்றே தொடர்ந்து உருமாறக்கூடிய dynamic ஆன மதிப்பீடுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது.

பரப்பிசை என்பது ஓர் உரையாடல். பரப்புக்கலையை அது எவரைநோக்கி பேசுகிறதோ அவர்களையும் கணக்கில்கொண்டே அளவிடவேண்டும் .இத்துறையின் முன்னோடிகளான டில்யூஸ்-கத்தாரி ஆகிய ஊடகவியல் ஆய்வாளர்களின் கருத்து. இதை contextual criticism எனலாம். இந்த நோக்கு இன்று இலக்கிய விமர்சனத்திலும் வலுவாக உள்ளது. ஆகவே பரப்புக்கலை அது நின்றுபேசும் காலச்சூழலில் வைத்தே விவாதிக்கப்படவேண்டும். ஒவ்வொருமுறையும் அதன்வரலாறும் சேர்த்தே பேசப்படவேண்டும்.

context என்பது மூன்று. ஒன்று அந்த இசைக்கலைஞனின் தனியாளுமை அல்லது படிமம் சார்ந்தது. இரண்டு அந்த இசை உருவான சூழல் மற்றும் அது ரசிக்கப்பட்ட சூழல் சார்ந்தது. மூன்று அந்த இசையை விமர்சகனின் அந்தரங்கம் எதிர்கொள்ளும் விதம் சார்ந்தது.

ஓர் உதாரணமே சொல்கிறேன். கதகளி நடிகர் கலாமண்டலம் கிருஷ்ணன் நாயரை மதிப்பிட தெளிவான அளவுகோல்கள் உள்ளன. கதகளியின் இலக்கணங்களான சலனம், முத்ர, பாவம், மனோதர்மம் என பல விஷயங்கள். அத்துடன் அக்கலையின் முன்னோடியான பெரிய நடிகர்கள் உள்ளனர். அவர்களிடம் அவரை ஒப்பிட்டு மதிப்பிடலாம்.

ஆனால் ஜெமினிகணேசனை எப்படி மதிப்பிடுவது? நமது மரபான நாடகம் அல்லது தெருக்கூத்தில் உள்ள நடிப்பிலக்கணங்களைப் போட்டால் சுடச்சுட அவரை நிராகரித்துவிடலாம். நிராகரிக்கிரார்கள். ஆனால் பரப்புக்கலையின் நாயகர்களில் ஒருவரை அவ்வாறு நிராகரித்துவிட முடியுமா என்ன? அவரை மதிப்பிட அவருக்கான அளவுகோல்கள் தேவை. அதை எப்படி உருவாக்கிக் கொள்வது?

எனக்கு ஒரு வாசகி இருக்கிறார்கள். வயது எழுபதுக்கும் மேல். உற்சாகமான மிக நுண்மையான வாசகி. அடிக்கடி கடிதம் போடுவார். அவர் சொன்னார் அவரது இளமையில் ஜெமினி உருவாக்கிய பாதிப்பைப்பற்றி. ஜெமினி கதாநாயகியின் முந்தானையை பிடித்து இழுப்பார். கதாநாயகியை அலாக்காக தூக்குவார். அவ்விரு செயல்களும் அன்று மிகப்பெரிய சமூகப்பாதிப்பை, மனக்கிளர்ச்சியை உருவாக்கிய நிகழ்வுகள். ஒவ்வொரு பெண்ணும் கல்யாணமானவுடன் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் காதல் செயலாக அது இருந்தது

இந்த அம்சத்தை கணக்கில் கொள்ளாமல் ஜெமினியின் படங்களை ஒரு தனிப்படைப்பாக துண்டு படுத்தி எடுத்து இன்றைய சூழலில் நின்றுகொண்டு மாறாத அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடலாமா? ஜெமினி ஏன் அன்றைய பெண்களுக்கு அத்தனை பெரிய அந்தரங்க எழுச்சியை அளித்தா? அவரது தோற்றத்தில் இருந்த உயர்குடித்தன்மை. அவரிடம் இருந்த படித்த தன்மை. அனைத்துக்கும் மேலாக அவரிடம் இருந்த மென்மை. அன்றைய ஆணுக்கு ஆண்மை என்ற ஒரு தோரணை அவசியம் தேவை என வகுத்தது நம் மரபு. முரைப்பாகவும் விரைப்பாகவும் இருப்பதே ஆணுக்கு இயல்பு என கற்றுக்கொண்டு அப்படி இருந்தார்கள் நம் ஆண்கள். என் அப்பாவை போன்றவர்கள். ஜெமினி அப்படி இருக்கவில்லை. அதுவே அவரது கவர்ச்சி

இன்னொரு கோணத்தில் ஜெமினி பல மேலைநாட்டு நடிகர்களின் பாதிப்பில் உருவானவர். அவரது உடைகள் முகபாவனைகளும்கூட. அத்துடன் அன்றைய எழுத்தாளர்கள் உருவாக்கிய பல கதாபாத்திரங்கள் அவரது பிம்பத்தை கட்டமைத்தன. இலட்சியவாதத்தன்மை கொண்ட உணர்ச்சிகரமான ஆண்கள் அவர்கல். அந்த கதாபாத்திரம் சுதந்திரப்போராட்ட காலத்தில் சரத் சந்திரர் போன்ற வங்க எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டு இந்தியா முழுக்க பரவிய ஒன்று

ஜெமினியை கனவுநாயகனாக ஆக்கிய இந்த அம்சங்கள் அனைத்தையும் கருத்தில்கொண்டு மதிப்பிட்டால் மட்டுமே பரப்புக்கலை நாயகராகிய அவரை உண்மையாக மதிப்பிடமுடியும். அதற்கு அவரது ஊற்றுமுகங்களை தேடவேண்டும். வங்க இலக்கியத்தில்,மேலைநாட்டு நடிகர்களில். அவர் நடித்த பட்ங்கள் உருவான சூழலை ரசிக்கப்பட்ட விதத்தை அறிய வேண்டும். அவரது தனி ஆளுமையை மதிப்பிடவேண்டும். அவருக்கு புஷ்பவல்லி சாவித்ரி போன்றவர்களுடன் இருந்த உறவை தவிர்த்து அவரை அணுக முடியாது. அனைத்துக்கும் மேலாக அவரை நாம் எப்படி பார்த்தோம்,என்ன பாதிப்பை அவர் நமக்கு உருவாக்கினார் என நம் வாழ்க்கையை முன்வைத்து நாம் யோசிக்க வேண்டும்.

ஷாஜி எப்போதுமே பரப்பிசையை அதன் கலைஞனின் பிம்பத்துடனும் வாழ்க்கையுடனும் சேர்த்து விவாதிக்கிறார். அந்த இசை உருவான காலத்துடன் இணைத்து அதன் முழுவரலாற்றுடன் சேர்த்து பேசுகிறார். அந்த இசை உருவான விதம், பெற்ற வரவேற்பு அல்லது நிராகரிப்பு ஆகியவற்றுடன் பொதுவான வரலாற்றுச்சந்தர்ப்பத்தையும் அவர் இணைத்துக்கொள்கிறார். இவற்றுடன் தன்னுடைய தனிவாழ்க்கையில் அந்த இசை உருவாக்கிய பதிவின் சித்திரத்தையும் இணைக்கிரார். இவற்றின் வழியாக அவர் ஒரு முடிவை நோக்கி நகர்கிறார். இதுவே அவரது இசைவிமர்சனத்தின் பாணி.

வெறுமே இசைரசனையோ அல்லது ஆளுமைச்சித்திரமோ அல்ல இது. பரப்பிசைக்கான விமர்சனம் ஒன்றை தொடங்கிவைக்கும் முறை. மரபிசையை விமர்சிப்பதுபோன்ற தொழில்நுட்ப விமர்சனம் இங்கே சாத்தியமில்லை. இது விமர்சனமா என்றால் ஆம், இந்தவகை கலைக்கான விமர்சன முறை ஒன்றின் தொடக்கம் என்று இதை நான் சொல்வேன்

ஷாஜி பேசிய பல கலைஞர்களைப்பற்றி முதன்முதலாக அவரே எழுதியிருக்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ராய் ஆர்பிசன் போன்ற விமர்சகர்களைப்பற்றி மட்டும் அல்ல எஸ்.ஜானகி அல்லது எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றிக்கூட ஒட்டுமொத்தமாக மதிப்பிட முயலும் ஒரு கட்டுரையை அவர்தான் எழுதியிருக்கிறார். பரப்பிசை சார்ந்த ஒரு தொடக்கக் கட்டுரை இவ்வடிவிலேயே அமைய முடியும். அதன் மீதான விவாதங்களின் விரிவு பல திசைகளுக்கு நுட்பமாக வளரமுடியும் என்பது வேறு விஷயம்

இந்த இடத்தில்தான் தனிப்பட்ட ரசனை முக்கியமானதாக ஆகிறது. தன்னுடைய தனிவாழ்க்கை, தன் தனிப்பட்ட மனநிலைகள் ஆகியவை சார்ந்து ஒரு பாடல் என்ன பாதிப்பை உருவாக்கியது என்று மட்டுமே சொல்லமுடியும். ஷாஜியின் கட்டுரைகளில் தனிவாழ்க்கை சார்ந்த குறிப்புகள் ஊடாடி வருவது அதனால்தான். இந்தக் குறிப்புகளில் அவர் தன்னை விசேஷமான ரசனையும் இசைக்கல்வியும் கொண்டவராகச் சொல்லவில்லை. மாறாக சராசரியானவராக, வெகுஜனங்களில் ஒருவராகச் சொல்கிறார். தான் சந்தித்த சாதாரண மனிதர்களின் ரசனைகளையும் சேர்த்துக்கொள்கிறார். வெகுஜனக்கலையை மதிப்பிடுவதற்கான அந்தரங்கநிலை என்பது இதுவே.

ஷாஜியின் கட்டுரைகளை அவர் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் அந்தரங்க தளத்தில் நின்று மட்டுமே பேசவேண்டும் என்று கோரினேன். அதுவே பரப்பிசையை அணுகுவதற்கான சரியான வழி. தனிப்பட்ட அனுபவங்களில் இசை வந்து இணையும் விதம் மிக முக்கியமான அளவுகோல். ஏனென்றால் அந்தரங்கமாக பரப்பிசை செயல்படும் விதம் அது. விமர்சகன் அந்த இசை ஒரு காலச்சூழலில் உருவாக்கிய உணர்ச்சிகரமான பதிவின் ஒரு துளியாக தன்னை முன்வைக்கிறன். ஒரு சாட்சியமாக ஆகிறான்.

செவ்வியல் கலையின் விமர்சகன் எப்படி தன்னை ஒரு தூய அளவுக்கருவியாக முன்வைத்துக்கொள்கிறானோ அதற்கு நேர் எதிரான நிலை இது. ஏனென்றால் இங்கே புறவயமான இலக்கண அளவுகோல்கள் இல்லை. தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாக முன்வைத்தால் அவற்றுக்கு இயல்பாகவே ஒரு பொதுத்தன்மை உருவாகும். அது ஒரு தனிமனிதனின் அனுபவமாக மட்டும் இருககது, அச்ச்சமூகத்தின் அனுபவத்தின் ஒரு துளியாக இருக்கும்.

உதரணமாக முப்பது வருடம் முன்பு நான் கல்லூரி செல்லும்போது வழியில் ஒரு டீகக்டையில் ஒரு பாட்டைக் கேட்டேன். மச்சானைப்பாத்தீங்களா? என்னவென்றே தெரியவில்லை. அங்கேயே இறங்கி அந்தபபட்டை முழுக்க கேட்டேன். மற்ற பாட்டுகளையும் கேட்டேன். அந்தப் பாட்டு எங்கே கேட்டாலும் அங்கே பேருந்தில் இருந்து இறங்கிவிடுவேன். என் வாழ்க்கையை ஆக்ரமித்த எனக்கேயான பெருங்கலைஞனை நான் அவ்வாறு கண்டு கொண்டேன். அதை நான் எழுதினால் அது என் அனுபவம் மட்டுமாக இருக்காது, தமிழ்நாட்டில் அப்படி ஒருகோடிப்பேராவது அன்று டீக்கடை வாசல்களில் நின்றிருப்பார்கள். அது பரப்பிசையை அளவிடுவதற்கான ஒரு கருவிதான்.

பரப்பிசைக்கான அளவுகோல்கள் இவ்வாறு அவற்றின் ஊற்றுக்கண்களாக இருக்கும் மரபுகளிளில் இருந்தும் சமகாலச் சூழலில் இருந்தும் தனிப்பட்ட ரசனைகளில் இருந்தும் உருவாக்கப்படவேண்டியவை. அவ்வப்போது அந்தந்தச் சூழலுக்கேற்ப கலந்து கையாளவேண்டியவை. ஆகவே அவை ஒருவகையான தற்காலிகத்தன்மை கொண்டவை. பரப்புக்கலைகளை தற்காலிகத்தன்மைகொண்ட விமர்சனம்மூலமே கையாளமுடியும் என்பது டில்யூஸின் ஒரு மேற்கோள்.

0000

இவ்வாறு சூழலுடனும் சரித்திரத்துடனும் இணைத்து கேட்பவர்களையும் கணக்கில்கொண்டு பரப்பிசையை மதிப்பிடும்போதும் ஷாஜிக்கு தொடர்ந்து சிக்கல்கள் எழுகின்றன. ஒரு பாடல் பெரும்புகழ் பெறுகிறது, ஆனால் அதன் கலைப்பெறுமானம் முக்கியமானதல்ல. இன்னொரு பாடல் வெற்றிபெறவில்லை, ஆனால் அது கலைப்படைப்பு. தேர்ந்த ரசிகர்கள் மற்றும் சககலைஞர்கள் நடுவே அதன் பாதிப்பு நீடித்ததாக இருக்கிறது. இதில் எதை முக்கியமாக கருதுவது? ஜெய்தேவ் , மதன்மோகன் போன்றவர்களைப்பற்றி பேசும்போது ஷாஜி இச்சிக்கலை சந்திக்கிறார்.

செவ்வியல்கலையில் இக்கேள்விக்கே இடமில்லை. பாடலின் வெகுஜனசெல்வாக்கு அங்கே ஒரு பொருட்டே இல்லை. ஆனால் பரப்பிசையில் மக்களின் பங்கேற்பை புறக்கணிக்கவே முடியாது. அதன் நோக்கமே மக்களைச் சென்றடைவதுதான். எது மேல், மக்கள் விரும்புவதா கலைநுட்பம் கொண்டதா? பரப்பிசையில் இந்தக்கேள்விக்கு எளிய பதில்கள் இல்லை.

ஷாஜியும் தடுமாறுகிறார். எழுதி எழுதி அவர் ஒரு நிலையை எடுக்கிறார். ஒரு பாடல் மக்களாலும் விரும்பப்பட்டு கலைவெற்றியும் அடைந்தால் அதை கொண்டாடுகிறார். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு நல்ல பாடல் காலப்போக்கில் தொடர்ந்து பாதிப்பை செலுத்தி வந்தது என்றால் அதை அங்கீகரிக்கிறார். அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு நல்ல பாடலை தன் ரசனையை சொல்லி முன்வைக்கிறார்.

அதேபோல ஒரு கலைஞனை அல்லது பாடலை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மதிப்பிடும் அளவுகோல் இன்னொரு தருணத்தில் மாறுபடுகிறது. சுருதி சுத்தத்துக்காக ஏ எம் ராஜாவையும் டி ஆர் மகாலிங்கத்தையும் பாராட்டுகிறார். ஆனால் சுருதி சுத்தம் இல்லாமல் உணர்ச்சிகரமாக பாடுவதற்காகவே எம் எஸ் விஸ்வநாதனை பாராட்டுகிறார். சூழல்சார்ந்த விமர்சனம் என்பது இத்தகைய முரண்பாடுகள் மூலமே முன்னகர முடியும். அது உருவாக்கும் உணர்ச்சிகளே அதற்கான அளவுகோல். அதற்கே அந்தரங்கத்தன்மையை முன்வைத்து பேசவேண்டும் என்கிறேன்.

இத்தகைய பல விமர்சனங்கள் பல கோணங்களில் வந்து ஒன்றை ஒன்று சமன்செய்யும்போதுதான் மெல்லமெல்ல பரப்பிசைக்கான அளவுகோல்கள் ஒரு சூழலில் உருவாகின்றன. எல்லா விமர்சனங்களும் அவ்வாறே தங்கள் மையங்களை கண்டுகொள்கின்றன. விமர்சனங்கள் என்பவை தீர்ப்புகள் அல்ல, அவை எந்த அளவுக்கு தர்க்கபூர்வமாகச் சொல்லப்பட்டாலும் அபிப்பிராயங்களே. அத்தகைய பல கருத்துக்கள் மோதிக்கொள்ளும்போதே அச்சமூகம் அக்கலைப்படைப்பை எப்படி மதிப்பிடுகிறது என்பது தெளிவாகும்.

ஷாஜியின் கருத்துக்களுக்கு நிகரான பல மறு கருத்துக்கள் வெளிவந்து அவற்றுக்கு நடுவே ஒரு சமநிலைப்புள்ளி உருவாகியிருந்தால் நமக்கு பரப்பிசை குறித்த அளவுகோல்கள் இன்னமும் துலக்கமாக ஆகியிருக்கும். ஆனால் அவரது கருத்துக்கள் மீதான உணர்ச்சிகரமான சில எதிர்வினைகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. தன் ஆதர்ச கலைஞரை அவர் நிராகரித்தால் பதிலுக்கு அவரை நிராகரிக்கமுயலும் கருத்துக்களே வருகின்றன. இது மிக ஏமாற்றம் அளிக்கிறது

உதாரணமாக ஷாஜி சீர்காழி கோவிந்தராஜனை நல்ல பாடகரல்ல என்கிறார். அதற்கான காரணமும் சொல்கிறார். அந்த காரணத்தை நிராகரித்து தன் நோக்கை விளக்கி ஒரு நாலைந்து கட்டுரைகள் வந்திருந்தால் சீர்காழியை மதிப்பிடுவதற்கான ஒரு புறவயமான அளவுகோல் வாசகர்களாகிய நமக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ’சீர்காழி எவ்ளவு பெரிய கலைஞர், எவ்ளவு புகழ்பெற்றவர், அவரை நீ எப்படி மதிப்பிடலாம் , நீ யார் அதற்கு?’ என்ற வகையிலான கொந்தளிப்புகள் நமக்கு இன்னமும் இருட்டையே அளிக்கும். இசை அறிந்தவர்களாக நான் மதிக்கும் இளம் நண்பர்களும் இதே தரத்தில் எழுதக்கண்டு எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் கொஞ்சம் அல்ல.

இதற்கு என்ன காரணம் என்றால் நாம் பரப்புக்கலைகளை இருவகையாகவே காண்கிறோம் என்பதுதான். மிகப்பெரும்பாலானவர்கள் பரப்புக்கலை சார்ந்த பெரும்புகழ்பெற்ற கலைஞர்களை ஆராதிக்கிறோம். அவர்கள்மேல் சிறு விமர்சனங்களைக்கூட நம்மால் தாளமுடியவில்லை. அவர்கள் நமக்கு கடவுளுக்கு நிகரானவர்களாக இருக்கிறார்கள். பரப்புக்கலை உணர்ச்சிகரமானது என்பதனால் அதன்மீதான ஈடுபாடும் உணர்ச்சிகரமாகவெ உள்ளது.

உதாரணமாக சமீபத்தில் சுஜாதா,பாலகுமாரன் இருவரைப்பற்றியும் நான் எழுதிய விமர்சனக்குறிப்புகளுக்கு வந்த எதிர்வினைகளில் அந்த மனநிலையையே கண்டேன். அவர் எழுத்தாளரல்ல, அவர் மட்டுமே எழுத்தாளர் என்றார்கள். இத்தனைக்கும் இவர்களை அங்கீகரித்து இவர்களின் நிறைகுறைகளை விமரிசித்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. அதேபோன்ற நிறைகுறைகளைச் சொல்லும் கறாரான கட்டுரைகளை நான் லா.ச.ரா, மௌனி, ஜி.நாகராஜன், நகுலன் போன்றோரைப்பற்றி எழுதி எட்டாண்டுகளாகின்றன. இன்றுவரை எந்த உணர்ச்சிகரமான எதிர்வினையும் வந்தது இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த ஆராதனைப்போக்கு வெகுஜனக்கலைஞர்களின் விஷயத்தில் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. அவை பிம்பங்களை உருவாக்கி தொடர்ந்து நீடிக்கசெய்கின்றன. பரப்புக்கலைஞர்களை வழிபடுபவர்கள் பெரும்பாலும் ஊடகங்கள் அளித்த துணுக்குச் செய்திகளை நம்பி பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருப்பதை காணலாம். பெரும்பாலும் அந்தரங்கமான செய்திகள். சிறிய நிகழ்ச்சிக்கதைகள். அவை உண்மையா என்று பரிசீலிக்க அவர்களுக்கு வாய்ப்பே இல்லை. அவை ஒருவகை நவீன புராணங்கள்.

இந்த உக்கிரமான ஆராதனைக்கு மறுபக்கமாக உக்கிரமான வெறுப்புகளும் உருவாக்கப்படுகின்றன. ஒரு கலைஞரின் ரசிகர்கள் இன்னொரு கலைஞரை வெறுப்பார்கள். கேலி செய்வார்கள். அவர்கள் திறனற்றவர்கள், போலிகள், கெட்டவர்கள் என நம்புவார்கள். அதற்கான கதைகளும் ஊடகங்களால் உருவாக்கப்படும். இங்கே உண்மை என்ற பேச்சே இல்லை. இருப்பவை ரசிகர்களின் தேவையும் ஊடகங்களின் சேவையும் மட்டுமே.

ஷாஜிக்கு வந்த எதிர்வினைகள் அதிகமும் அவர் ஒரு இசைகலைஞரை விமர்சிக்கும்போது அவரது ஆதரவாளர்களால் உருவாக்கப்படும் எதிர்ப்புகளாகவே இருந்தன, இருக்கின்றன. தர்க்கபூர்வமாக பதில்களைச் சொல்லி அவரை மறுத்திருந்தார்கள் என்றால் அது இந்த விவாதம் மேலும் விரிய வழிவகுத்து நம் இசையாராய்ச்சி சூழலை மேம்படுத்தியிருக்கும்.

0000

ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.பரப்பியக்கலையை ஆராயும்போது அதன் நகரும்தன்மை, சூழல்சார் தன்மை காரணமாக அந்த ஆய்வு மேலும் மேலும் புறவயத்தன்மையை இழக்க நேர்கிறது. இதை எப்படி தவிர்ப்பதென்பதை எழுதி விவாதித்து மெல்லமெல்லத்தான் கண்டடையமுடியும். அது தமிழில் நிகழட்டும்.

இந்நிலையில் நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நம் கருத்துக்களில் ஊடாட அனுமதித்தோம் என்றால் நாம் உருவாக்கும் விவாதங்கள் பயனற்றுப்போக நேரிடும். வெற்று உணர்ச்சிநிலைகளில் நாம் சிக்கிக்கொள்ள நேரிடும். ஷாஜியின் சில கட்டுரைகளில் அவரது தனிப்பட்ட உணர்ச்சிகள் கலந்திருந்தன என்றும் ஆகவே இசைக்கு அப்பால்சென்று அவர் இசைக்கலைஞர்களின் தனிஆளுமையை விமர்சித்தார் என்றும் நான் நினைக்கிறேன். ஒருமுறை என் கண்டனங்களை நான் பதிவுசெய்தேன்.

இப்போதும் அதையே சொல்ல விரும்புகிறேன். பரப்பிசையை நாம் நம் தனி ரசனையில் இருந்து தொடங்கியே விவாதிக்க முடியும். ஒவ்வொரு பரப்பியக் கலைப்படைப்புக்கும் அதற்கான அளவுகோல்களை தற்காலிகமாக உருவாக்கிக்கொண்டு முன்னகர வேண்டியிருக்கும். நாம் நம் அந்தரங்க மதிப்பீடுகளை முன்வைத்து புறவயமான விவாதத்தை உருவாக்கவேண்டும். அந்த விவாதம் மூலம் மையமாக உருவாகி வரும் அளவுகோல்களே பயனுள்ளவை.

அந்தவகையான விவாதம் நிகழ்ந்து மையங்கள் உருவாகி வருவதற்கு தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் விமர்சனங்களில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டு அளவுக்கு அபாயகரமான வேறு ஒன்று இல்லை. ஷாஜி இதை மனதில் கொள்வார் என நினைக்கிறேன்.

இந்த நூலைமுன்வைத்து ஒரு சாதாரண வாசகனாக, ஒரு சாதாரண இசைரசிகனாக, நான் சொல்லவிரும்புவது ஒன்றே. இது நம் பரப்பிசையை அளந்து மதிப்பிடுவதற்கான ஒரு முன்னோடி முயற்சி. ஷாஜியின் கட்டுரைகள் முக்கியமான தொடக்கப்புள்ளிகல். பலரைப்பற்றி எழுதப்பட்ட முதல் கட்டுரைகள் அவை. ஆம், இப்போது தான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். பலகோணங்களில் பல தளங்களில் வெட்டியும் ஒட்டியும் பேசுவோம். இது உருவாக்கும் எல்லா விவாதங்களும் அந்த அளவுகோல்களை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இது எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களும் இந்த தளத்தில் எந்த விமர்சகரும் எதிர்கொண்டாகவேண்டியவை. இது முன்வைக்கும் எல்லா முரண்பாடுகளும் பரப்பிசை உருவாக்கும் சவால்கள் சார்ந்தவை

மேலும் விவாதிக்க, அதன்மூலம் மேலும் அறிய, மேலும் தெளிய, இது நமக்கு உதவட்டும்

நன்றி

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்